ஆன்ம விசார மார்க்கம் உரைத்த ஸ்ரீரமணரும், பஜனைப் பாட்டுகள் ரீதியாக சில பாட்டுகள் இயற்றியதுண்டு. அப்பளப்பாட்டு, உந்தியார் என்று பல இருந்தாலும் எனக்குப் பிடித்த பாட்டு ஸ்ரீரமணர் இயற்றியது:--
ஐயே! அதி சுலபம் -- ஆன்ம வித்தை
ஐயே! அதிசுலபம்.
ஊன் ஆர் உடல் இதுவே நானாம் எனும் நினைவே
நானா நினைவுகள் சேர் ஓர் நார் எனும் அதனால்
நானார் இடம் எது என்று உட்போனால் நினைவுகள் போய்
நான் நான் எனக் குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம
ஞானமே; இதுவே மோனமே; ஏகவானமே;
இன்பத் தானமே.
இது போல் தூய வேதாந்தத்தை மக்களிடை பரப்பும் விதத்தில் பஜனைப் பாடல்கள் ரீதியாகப் பாடியவர்கள் உண்டோ என்று தெரியவில்லை. ஆவுடையக்கா என்று ஓர் அம்மையாரைக் கூறுகின்றார்கள்.
ஆன்மிகத்தின் சாராம்சத்தை எவ்வளவோ விதத்தில் முனிவர்கள் பல வகைகளில் சொல்லியிருப்பதுண்டு. ஆனாலும் ஒவ்வொன்றும் ஓர் அழகு. ஒன்றைப் பற்றித்தான் பேசுகிறார்கள். ஆனாலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இருக்க வேண்டுமா? இருந்தால் ரசிக்குமா? ரசிக்க வேண்டும் என்பதற்காக மாற்றிப் பேச முடியுமா? அப்படிப் பேசினாலும் அதனைத்தும் அந்த ஒன்றில் சென்று கலக்கும்படி உள்ளதாம் ஓர் தத்துவம் என்றும் உலராத, உவர்க்காத, என்றுமே உரைத்து விட முடியாத பரம தத்துவம் அன்றோ!
அதை ஸ்ரீதிரிபுரா ரஹஸ்யம் கூறும் அழகே தனி அலாதி! வழி திகைத்து அலமரும் பரசுராமருக்கு ஸம்வர்த்தர் அருள்கூர்ந்து உரைக்கும் சில வார்த்தைகளில் ஆன்மிகம் என்பதையே சாரப் பிழிவாகத் தந்து விடுகிறார்.
'நான் என்ற உணர்விற்கு ஆதாரமான ஆத்மா என்பது எங்கு இருக்கிறது என்று கேட்பதை விடவும் எங்கு இல்லை எனக் கேட்பதே பொருத்தம். தோன்றும் அனைத்திலும் அதுவே முந்தி நின்று தோன்ற வைக்கிறது. தோன்றும் பொருளனைத்தின் அடிப்படைக் கொழுகொம்பாய் நிற்கும் உணர்வே இந்த ஆத்மாதான். இந்த உடலை 'நான்' எனக் கொள்வது பிழை. ஏனெனில் 'நான்' என்பது அறியும் ஒன்றாய் இருப்பது. உடலோ அறியப்படும் பொருளாக இருப்பது. அறியப்படும் பொருளை அறியும் 'நான்' ஆக மயங்குவது மாறாட்டம். எனவே இந்த மாறாட்ட உணர்வை விட வேண்டும். உடலை 'நான்' என்று மயங்குவதைக் கைவிட வேண்டும். 'அறிபவன்' என்று தன்னை உணர வேண்டும். இவ்வாறு சரியான உணர்வு எழப்பெற்றவனுக்கு இந்த ஸம்ஸார மார்க்கத்தில் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என்பதை உணர்வான். அவனுக்குச் சரியான உணர்வு எழுந்துவிட்டது என்பதற்கு என்ன நிரூபணம்? இந்த உணர்வு எழுந்தவனுக்குக் கூடவே தோன்றுவது வைராக்கியம். உலக வழிகளில், உலகப் பொருட்களில், ஆசைகளில் நாட்டம் இன்மை. இந்த ஸம்ஸார வழியை ஒரு பொருட்டாகவே கருதாத விரக்தி மனப்பான்மை. இதுதான் நல்வழி. இவ்வண்ணம் நல்வழிப்பட்டவன் மேன்மையான ஆனந்தத்தை நிச்சயம் அடைவான். இதுதான் அனைத்தின் ஸாரம்.'
ஸ்வாத்மானம் ஸர்வ பாவஸ்தம்
ஸ்வாத்மஸ்தம் ஸர்வபாவகம் |
பிண்டாஹம் பாவம் உன்மூல்ய
வேத்ரு பாவாஸநஸ்தித: ||
வேத்யம் ஸ்வதேஹம் ஸம்புத்ய
ஸதாவேத்ரபிலக்ஷக: |
யச்சரேத்தஸ்ய நோ கார்யம்
வித்யதே ஸம்ஸ்ருதே: பதி ||
தோஷம் விபாவயேத் ஆதௌ
பூய: ஸம்ஸ்ருதி வர்த்மநி |
தேந தத்ராசு வைராக்யம்
தத: ஸந்மார்க்க லக்ஷணம் ||
என்று கூறிப் பின்பு இதை
ஏதந்மயோக்தம் ஸம்க்ஷேபாத்
ஸாரம் மர்த்ய: ஸதாSப்யஸந் |
அசிரேணைவ ஸம்யாதி
சுபமார்க்கம் பராத்பரம் ||
என்று கூறுகிறார் ஸம்வர்த்தர். (திரிபுரா ரஹஸ்யம், மாகாத்ம்ய 4, 55 -58) இவ்வாறு ஸம்வர்த்தர் பரசுராமருக்கு உபதேசம் செய்தார். ஆயினும் பரசுராமருக்கே கூட இந்த ஸார மயமான உபதேசம் சட்டென்று நெஞ்சில் பதியவில்லை என்று அதிசயம் காட்டுகிறது ஸ்ரீதிரிபுரா ரஹஸ்யம்!.
பிறகு ஸம்வர்த்தர் மிகவும் கருணை பூத்து பரசுராமருக்கு ஞானம் ஸ்ரீதத்தாத்ரேயரிடம்தான் சம்பவிக்கும் என்று அறிந்து அவருக்கு ஸ்ரீதத்த மஹரிஷியிடம் ஆற்றுப் படுத்திச் சென்றார் என்று போகிறது உபாக்கியானம். எனவே தத்துவம் எவ்வளவு எளிமை என்பதையும், அந்த எளிமையே நம்மை அதை அறியவிடாமல் ஏமாற்றி விடுகிறது, இல்லையில்லை, அது எங்கே ஏமாற்றுகிறது, நாம்தான் அந்த எளிமையால் கவனம் கொள்ளாமல் ஏமாறுகிறோம் என்பதைச் சொல்லாமல் நமக்கு உணர்த்திவிடும் முனிவர்களின் சாகசம் ஆன்மிகத்தில் நமக்கு நல்ல அரண் அன்றோ!
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
No comments:
Post a Comment