Thursday, December 19, 2019

பேராத உள்ளம் பெற

உள்ளம் வேண்டும். எங்கே கிடைக்கும்? அதுவும் ஒரு பெரும்பேறான விஷயம். அதைவிட்டுச் சிறிதும் அப்படி இப்படி நகராத உள்ளம் வேண்டும். எப்படிப்பட்ட செல்வமும் ஒரு நாள் மறையும். எப்படிப்பட்ட அழகும் ஒரு நாள் அழியும். மாறாமல், அழியாமல் இருந்தாலும் அதில் ஊன்றிய உள்ளம் வெறுப்பும், கைப்பும் அடைந்து உதறிப் போவதையும் பார்க்கிறோம். மாறி மாறிப் போகும் உலகில் மாறா உண்மையே மாற்றம்தான். இது கிடைத்தால் போதும் என் வாழ்க்கை கடைத்தேறும் என்று நினைக்கிறோம். அது கிடைக்கிறது. ஆனால் வாழ்க்கையின் கடைத்தேற்றம் வேறு எதற்கோ அதற்குள் தாவி விடுகிறது.

இப்படியெல்லாம் ஆகாமல் ஒன்றை அடைந்து அதிலேயே இலயித்து அதுவே போதும் என்று நின்று விட்டால் அங்கு நிறை வாழ்வு கிட்டுகிறது. அதுவே போதும் என்றால் மற்றவையெல்லாம் நான் அடைந்ததைவிட வேறு சிறப்பு இருக்கிறது என்றால் உள்ளம் கள்ள வாசல் வழியாக நாக்கு நீட்டும். இந்த மாதிரியெல்லாம் இல்லாமல் பேராத உள்ளம் வேண்டும். அதற்கு எனக்குக் கிடைத்தது சிறந்ததாய் இருந்தால் மட்டும் போதாது. அது ஏன் அனைத்தினும் சிறந்தது என்ற தீர்க்கமான அறிவு எனக்கு வேண்டும். வெறுமனே உள்ளம் ஈடுபட விஷயம் கிடைத்தால் போதும். ஆனால் பேராத உள்ளம் பெற அறிவின் விகாசமும், புத்தியின் தீர்க்கமான நிச்சயமும் ஐயம் திரிபு மயக்கம் அற விளக்கும் போதமும் வேண்டும்.

ஒருவருக்கு வேதத்தின் மீது உள்ளம் சென்றது. அந்த ஆழ்பொருட்களைத் தெள்ளத் தெளிவாக உரைக்கும் செந்தமிழ் வேதம் சடகோபன் அருளியது கிடைத்தது. இப்பொழுது கவலை வந்துவிட்டது. மிக உயரிய பொருள் கிடைத்தால் அதைக் காப்பாற்றிக் கொள்ளும் கவலை. மிக உயரிய நிலை அடைந்தால் அதிலேயே நிலைத்து நிற்கும் கவலை. சடகோபன் அருளிய செந்தமிழ் வேதம் மிக்குயர்ந்தது. ஐயமில்லை. ஆனால் அதிலேயே பேராத உள்ளம் பெற என்ன செய்வது? அந்தத் தமிழ் வேதம்தான் மிக்குயர்ந்த விழுமிய விஷயம் என்று தனக்கே நிர்த்தாரணம் பண்ணி எந்த இளிவரவு உடையார்க்கும் புரியும்படி அறிவு கொளுத்தும் ஒருவர் உதவினால் அப்பொழுது அவருடைய உதவியன்றோ சடகோபரின் செந்தமிழ் வேதத்தோடு சேர்த்து முக்கியமாகக் கொள்ள வேண்டிய உதவி. ஏனெனில் இது இருந்தால் அன்றோ அதில் உள்ளம் பேராமல் நிலைக்கும்.

சடகோபரின் செந்தமிழ் வேதமோ அனைத்து உயிருக்கும் பொதுவான கடைத்தேற்றத்தைப் பற்றிச் சொல்ல வருகிறது. அந்த பரம்பொருள் எப்படி அனைத்து உயிருக்கும் பொதுவோ அதுபோல் இதுவும் அனைத்து உயிர்க்கும் பொது என்னும்படி இருப்பது. இவ்வளவு பரந்த உள்ளக் கிடக்கை கொண்ட நூலுக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அனைத்து உயிரையும் தன்னுள் அடக்கிய திருவிக்கிரம அவதாரத்தைச் சொல்ல வேண்டும். அந்த திருவிக்கிரமன் செயலை நினைவு படுத்தும் வண்ணம் அனைவரையும் தன் அக்கறையில் அகவயப் படுத்திய எம்பெருமனாரின் செயல் திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீது நின்று செய்த செயல் அன்றோ ?
அதனால்தானே அன்று திருக்கோட்டியூர் நம்பியே ஸ்ரீராமானுஜரை இத்துணை பரந்த உள்ளம் கொண்ட நீவிர் அந்த எம் பெருமானாரே தாமோ? என்று வியந்தார். அந்த வியப்புதானே ஸ்ரீராமானுஜரின் பெயராகவே நிலைத்துவிட்டது எம்பெருமானார் என்று. திருவிக்கிரமனின் அந்தப் பெருங்கீர்த்திக்கு ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுச முனியின் கீர்த்தி அல்லவா?

அத்தகைய பரந்த மனமும், பரமனை ஒத்த கீர்த்தியும் படைத்ததனாலன்றோ அவரால் சடகோபனின் செந்தமிழ் வேதத்திற்கு புத்தியின் நிச்சயமும், அறிவின் விகாசமும், போதமும் நிறைந்த விளக்கமும், நிர்ணயமும் தரமுடிந்தது. வடமொழிக் கல்வித் துறைகள் பலவும் கொண்டு ஆய்ந்து உரைக்கும் அளவிற்கு ஸ்ரீராமானுஜருக்குப் போதிய ஆழமும், அகலமும், நுட்பமும், திட்பமும் கொண்டு ஆய்ந்த பெரும் சீர் பொருந்தித் திகழ்ந்தது அன்றோ சடகோபனின் செந்தமிழ் வேதமும்!. சடகோபனின் செந்தமிழ் வேதத்தைத் தரித்து நிற்கப் போதிய பாத்திரமாகப் பேராத உள்ளம் பெற வேண்டுமானால் ஆய்ந்த பெருங்கீர்த்தி இராமானுச முனியினுடைய கருணை வேண்டும். நளினமான அரும்பொருள் உடைய சடகோபனின் செந்தமிழ் வேதம் நன்கு காப்பாற்றப் படுவது ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாஷ்ய விளக்கங்களால். இன்றும் மிக உயர்ந்த நளினமான வஸ்துக்களைப் பார்த்தால் அதன் காப்புப் பெட்டிகள் மிக கடினமான பாதுகாவலான அமைப்புகளால் ஆன கட்டிடங்களாக இருக்கும். அதுபோல் சீரிய அருந்தனம் உடைய நளினமான சடகோபனின் செந்தமிழ் வேதம் நன்கு போற்றிப் பாதுகாக்கப் படுவது எம்பெருமானாரின் நூல்களில். .

அவருடைய கருணையை ஒருவர் தேவை உணர்ந்து தேடித் தேடி அடைவதில் இருக்கும் வருத்தம் எப்படி? அதுவே அந்தக் கருணை தானாகவே ஒருவருக்கு வாய்ப்பது எப்படி? அப்படித் தானாகவே வாய்த்த கருணைதான் சமயத்தில் மிக அலட்சியமாக இருந்துவிடச் செய்யும். அதனால் பெற்றும் இழந்தான் கணக்காக ஆகிவிடும். எனவே வாய்ந்த மலர்ப் பாதம் ஆகிய கருணையைப் போற்றிக் கொள்ளத் தெரிந்தால், பிறகு ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுச முனியின் அருளாகிய ஸ்ரீபாஷ்யத்தால் ஆய்ந்த பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதத்தைத் தரிப்பதற்கேற்ற பேராத உள்ளம் தன்னைப் போல் பெறலாகும். எனவே முதலில் தொடங்கிய இடத்திற்கு வருவோம். அநந்தாழ்வான் கூறுகிற உபாயம்

பேராத உள்ளம் பெற ---

எதற்கு பேராத உள்ளம்?

ஆய்ந்த பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிப்பதற்காக

எப்படிப் பெறலாகும் பேராத உள்ளம்?

இராமானுச முனிதன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குவதால்.

இராமானுச முனியின் சிறப்பு என்ன?

சடகோபன் செந்தமிழ் வேதத்தை ஆயத்தக்க ஏய்ந்த பெருங் கீர்த்தி.

இப்பொழுது அநந்தாழ்வான் அருளிய தனியன் கூறும் வழி விளங்கும் அன்றோ?

ஏய்ந்த பெருங் கீர்த்தி இராமா னுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்தபெருஞ்
சீரார் சடகோபன் செந்தமிழ்வே தந்தரிக்கும்
பேராத உள்ளம் பெற.

***

No comments:

Post a Comment