Wednesday, December 25, 2019

ஸ்ரீஆண்டாளின் அருள்நிலையின் சிறப்பு

ஆன்மிகம் என்னும் பாதையில் பெரும் தடைகள் எவை என்று பார்க்கும் போது காமம், குரோதம், லோபம் முதலிய உணர்ச்சி சார்ந்த மன நிகழ்வுகள் முன்னிற்கின்றன. உலகின் மிஸ்டிக்ஸ் எல்லோருமே விலக்க வேஎண்டிய தடைகள் என்று சொல்லி எச்சரிப்பதும் இவற்றை. அதுவும் யோக முறையில் எடுத்தவுடனே செய்ய வேண்டிய தூய்மை நடைமுறையாய் சமம், தமம் என்னும் புலனடக்கம், மனவடக்கம் முதலியன வந்துவிடுகின்றன.

பக்தியின் பாதையிலும் தொடக்கத்தில் இந்தப் பயங்கள் இருக்கின்றன. ஆனால் பக்தி உணர்ச்சி நிலைத்து திடப்பட்டு அதிகப்படும் பொழுது அந்த பக்திக்கென்று ஓர் அசாத்திய வலிமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் வேகத்திற்கு எதிரே நிற்க முடியாமல் இயற்கை உணர்ச்சிகள் காணாமல் போகின்றன. எது எது எல்லாம் இயற்கை உணர்ச்சிகளைத் தூண்டும் காரணங்களாய் இருந்தனவோ அந்தக் காரணங்கள் எல்லாம் தீவிர பக்தியின் வசத்தில் தம் விடத்தன்மை இழந்து பக்தியையே இன்னும் மேலும் மேலும் அதிகப்படுத்தும் நல் ஏதுக்களாய் மாறி விடுகின்றன. உலகம் என்பது பிரம்மத்தை மறைக்கும் என்பது போய் உலகம் என்பது பிரம்மத்தை மிகத் தெளிவாய்க் காட்டும் கண்ணாடிக் கூடு போல் ஆகிவிடுகிறது பக்தியின் கண்களுக்கு. அதனால்தான் வெறும் ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றி உணர்வது என்றால் பக்தியின் தீவிரம் விஞ்ஞானம் என்று சொல்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். ஸ்ரீராமகிருஷ்ணரின் பார்வையில் யாரேனும் மது அருந்துவோர் கண்ணில் பட்டால் போதும் உடனே அவருக்குப் பரவச நிலையில் சமாதி கூடிவிடும். காரணம் மது அருந்துவோரின் தன் நினைவு இழந்த நிலை அவருக்கு கடவுள்பால் மனம் இழந்த நிலையை ஞாபகம் மூட்டி அத்தகைய பரவசத்தைக் கூட்டிவிடும்.

பக்தி உலகின் அதி உன்னத தீவிர நிலையை நமக்கு உணர்த்தி நிற்பவள் ஸ்ரீஆண்டாள் என்னும் பிராட்டியார். உலகில் ஆன்மிக சாதகர்களால் சாதாரணமாகக் கண்டு பயப்படப்படும் காமதேவன் ஆகிய அநங்கதேவனையே குறித்துப் பிரார்த்திக்கின்றார் என்றால் என்ன சொல்வது! என்ன பிரார்த்திக்கின்றார்? அந்தத் திருவேங்கடவனுக்கு என்னை விதிப்பாயாக. நீதான் இன்னார் இன்னாருக்கு என்று விதிக்கும் தெய்வம் என்று சொல்கிறார்களே அப்படியானால் நீ ஒன்று செய் உன் திறமையெல்லாம் காட்டி என்னை அந்த வேங்கடவர்க்கு என்று விதித்து விடு பார்க்கலாம். - என்று சொல்லும் போது அதின் உட்பொருள் நமக்குப்புரிய வேண்டுமானால் நம் மனம் காமம் குரோதம் ஆகிய குற்றங்கள் அற்று, கடவுளையே வேண்டி, கடவுளுக்கே ஏங்கி நிற்கும் பக்தி நிலைக்கு வரவேண்டாமா?

நாமோ உயர்ந்த நிலைக்கு முன்னேறவும் மாட்டோம். மனக்குற்றங்கள் அற்ற பக்திப் பெருநிலையை நமக்குப் புரிய வைக்க நாம் பழகிய விஷயங்களை உதாரணம் காட்டி யாரேனும் கருணை மிக்க அருளாளர்கள் விளக்க முன்வந்தால் உடனே அவர்கள் சொன்னதை நம் நிலைக்கு இழுத்துவந்து குதர்க்கம் பண்ணுவோம். சகதியில் ஆழ்மடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நிலை நம்முடையது. காக்கும் கரங்களையும் நம் நிலைக்கு இழுப்போமே அன்றி நாம் உய்வடைய வேண்டும் என்ற முனைப்பு நம்மிடம் ஏற்பட்டாலும் அது நமக்குப் பெரும்பாலும் பயன்படாமல் போகும் அபாய நிலை நம்முடையது.

”தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தநங்கதேவா
உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.”

*

No comments:

Post a Comment