Friday, December 27, 2019

சேஷத்வம்

ரஹஸ்யம் என்றாலே ஏதோ சீக்ரட் என்ற நினைப்பு வருகிறது அல்லவா? இந்த 'ரஹஸ்யம்' என்ற சொல்லுக்கு அவ்வாறு பொருள் அன்று. சாத்திரக் கருத்துகளின் மிக ஆழமான பொருள் என்பது இந்த 'ரஹஸ்யம்' என்ற சொல்லுக்குப் பொருள், ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயங்களில். அதாவது சாத்திரக் கருத்துகளை ஒருவர் மேம்போக்காகப் படிக்கிறார். ஒரு பொருள் வருகிறது. பிறகு காலம் செல்லச் செல்ல இன்னும் ஆர்வமாக அதனுடைய ஆழ அகலம் எல்லாவற்றிலும் ஆய்ந்து ஒப்பு நோக்கிக் கற்கிறார். ஆழ்பொருட்கள் புலப்படுகின்றன. பின்பு ஸாரமான பொருள் முடிவுகள் என்ன என்று மிகுந்த முனைப்போடு தோய்ந்து அறுதியான பொருள் தேற்றங்களைக் கண்டு கொள்கிறார். அந்த நிலையைத்தான் ரஹஸ்யம் என்று சொல்வது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் ரஹஸ்யங்கள் மொத்தம் மூன்று. அஷ்டாக்ஷரம் என்னும் திருவெட்டெழுத்து, த்வயம் என்னும் மந்திரரத்னம், சரம ச்லோகம் என்னும் பகவத் கீதையின் 18 ஆவது அத்யாயத்தின் ச்லோகம் ஒன்று. நம்பிள்ளையின் ஈடு வியாக்கியானத்தை ஏடுபடுத்திய வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளையின் மூத்த குமாரரான பிள்ளை லோகாசாரியர் அருளியது அஷ்டாதச ரஹஸ்யங்கள் என்னும் நூல். 18 நூல்கள் அடங்கிய அஷ்டாதச ரஹஸ்யங்கள் என்னும் நூலில் முமுக்ஷுப்படி என்னும் நூல் மூன்று ரஹஸ்யங்களையும் உள்ளது உள்ளபடி விளக்கும் சிறந்த நூல். அதற்கு ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளின் மணிப்ரவாள வியாக்கியானமும் அமைந்துள்ளது மேலும் விளக்கம் பொலிய நிற்பதாகும்.

ரஹஸ்யத்ரயத்தையும் அதாவது மூன்று ரஹஸ்யங்களையும் எட்டே சுலோகங்களில் அடக்கி ஸ்ரீபராசர பட்டர் அருளிச்செய்தது அஷ்டச்லோகி. ரஹஸ்யத்ரயஸாரம் என்பது ஸ்ரீவேதாந்த தேசிகர் அருளிச் செய்தது.

தத்வத்ரயம் என்பது மூன்று தத்துவங்களைக் குறிக்கும். தத்வங்கள் மொத்தம் மூன்று. சித், அசித், ஈச்வரன். சித் -- அறிவுசால், அறிவுருவான, அணுவான உயிரிகள். அசித் -- அறிவு சாலாத சடப்பொருள்கள். ஈசவரன் -- பேரறிவு சான்ற, பேரறிவே உருவான, சித், அசித் ஆகியவைகளைத் தன்னுள் உள்ளடக்கிய, விபுவான, பிரபஞ்ச மகா நித்திய பேருயிர்த் தத்துவம். மூன்று தத்வங்களுக்குப் பெயர் தத்வ த்ரயம்.

இந்த தத்வ த்ரயங்களையும் செவ்வையாக விளக்கும் நூல் பிள்ளை லோகாசாரியாரின் தத்வ த்ரயம் என்னும் நூல். அதற்கும் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளது வியாக்கியானம் அமைந்து அந்த நூலையே குட்டி ஸ்ரீபாஷ்யம் என்று சொல்லலாம் அளவிற்குச் சிறப்புடையதாய்த் திகழ்கிறது.

ரஹஸ்யங்கள் மூன்றுக்குப் பெயர் ரஹஸ்ய த்ரயம்.
ஸ்ரீ அஷ்ட அக்ஷரம் = ஸ்ரீ அஷ்டாக்ஷரம் = திரு எட்டு எழுத்து. ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்திற்குப் பெயர் திருவெட்டெழுத்து அல்லது அஷ்டாக்ஷர மஹாமந்த்ரம். ஜீவனின் சேஷத்வ இயல்பை அறுதியிட்டுரைக்கும் பொருள் கொண்டது திருமந்த்ரம் என்னும் அஷ்டாக்ஷர மந்தரம்.

த்வயம் = இரட்டை = இரண்டடி கொண்ட மந்திர ரத்னம். இரட்டைத் தத்துவமான பெருமாளையும், பிராட்டியையும் பற்றிய தத்துவத்தை உள்ளடக்கியதாலும் த்வயம் என்று பெயர்.

சரம ச்லோகம் = கடைசி ச்லோகம். சரமம்=கடைசி.
எந்தக் கடைசி? ஸ்ரீமத் பகவத் கீதையின் கடைசி அத்யாயமான 18ஆம் அத்யாயத்தில் ஈற்றுப் பகுதியில் வரும் ச்லோகம். அனைத்து தர்மங்கள், உபாஸனைகள் எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின்பு உண்மையானதும், நேரடியானதுமான, கடைசி உபாயமாகிய ப்ரபத்தி நெறியைக் கூறுவதாலும், சரம உபாயத்தைக் கூறுவதாலும் சரம ச்லோகம் என்று பெயர்.

முதலில் சேஷத்வம் என்றால் என்ன என்று பார்த்தோம். முக்கியப் பொருளுக்குச் சிறப்பினை (அதிசயம்) ஏற்படுத்தும் துணைப்பொருள் எதுவோ அது அந்த முக்கியப்பொருளுக்குச் சேஷமாய் இருப்பது. தனக்குச் சிறப்பினை, அதிசயத்தை ஏற்படுத்தும் துணைப்பொருளைத் தனக்குச் சேஷமாய்க் கொண்டு இருக்கும் முக்கியப் பொருளானது சேஷியாய் இருக்கிறது. எதற்குச் சேஷியாய் இருக்கிறது? தனக்குச் சேஷமாய் உள்ள துணைப்பொருளுக்குத் தான் சேஷியாய் இருக்கிறது. எனவே சேஷமான பொருட்கள் இல்லாத போது ஒரு முக்கியப் பொருளைச் சேஷி என்று குறிப்பிட முடியாது. ஒரு பொருளுக்குச் சேஷத்வம் இருந்தால்தான் அது எதற்குச் சேஷமாய் இருக்கிறதோ அந்த முக்கியப் பொருள் இதைப் பொறுத்தவரையில் சேஷித்வம் கொண்டதாய் இருக்கிறது என்று சொல்ல இயலும்.

அப்பொழுது சேஷத்வமும், சேஷித்வமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது. சேஷத்வத்தின் ப்ரதிஸம்பந்தம் சேஷித்வம். சேஷத்வ ப்ரதிஸம்பந்தியான -- என்றால் சேஷித்வம் உடைய என்று பொருள். ஆக விஷயம் என்னவென்றால்
சேஷத்வ ப்ரதிஸம்பந்தம் சேஷித்வம்.
ஸம்பந்தம் உடையது என்பதற்குப் பெயர் ஸம்பந்தி.
சேஷத்வ ப்ரதிஸம்பந்தம் உடையது சேஷத்வ ப்ரதிஸம்பந்தி. அதாவது சேஷித்வம் உடையது என்று பொருள்.

இந்தச் சேஷத்வம், சேஷித்வம் என்ற சொற்களுக்கு மொழிபெயர்ப்புச் சொற்கள் சொல்லலாம். ஆனால் இந்தப் பதங்கள் பூர்வ மீமாம்ஸை, வியாகரணம் என்று பல்துறைப் பொருட்சாயைகள் உள்ளமையப் பயன்படுத்தப்படும் துறைச் சொற்கள். எனவே இவற்றிற்கு உண்மையான மொழிபெயர்ப்பு செய்வது இயலாத ஒன்று. ஆனால் கருத்துகளை விளக்கிக் கொள்ள மொழிபெயர்த்து, விளக்கி எல்லாம் செய்ய வேண்டும்.

***

No comments:

Post a Comment