Monday, December 16, 2019

சத்சங்க மஹிமை - ஸ்ரீஅரவிந்தர்

தேசிய சுயத்தின் மெய்யுணர்வு நாற்றங்கால் கொண்ட ஆண்டுதான் 1906. வங்காளத்தில் சுதேசிய இயக்கத்தின் தொடக்கம். விவேகாநந்தர் என்ற பெரும் ஆளுமை வழிவழியான பண்பாட்டின் ஆக்க பூர்வமான நலன்களைக் குறித்த ஒரு விழிப்புணர்வைத் தமது சொற்களாலும் எழுத்தாலும் தூண்டிவிட்டதன் விளைவின் ஒரு வடிவம் சுதேசிய எழுச்சி. அஃது மக்கள் அரசியல், சுய ஆட்சி என்ற மக்கள் சமுதாயத்தின் இலட்சிய வடிவாக்கமாய் மாறி அமைய முழங்கிய சங்கம் வாய்மடுத்து ஊத ஆதர்சங்களாய் முன்னின்ற அணியினரில் முதன்மையானவர்கள் ஸ்ரீஅரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோர்.

1910ல் முற்றிலும் ஆன்மிக உலகில்தான் தமது பணி இருக்கிறது என்று பரம சக்தியால் ஏவப்பட்டவராய் பாண்டிச்சேரி வந்து தம் காலம் முழுவதும் அங்கேயே வதிந்த ஸ்ரீஅரவிந்தர் சென்ற பாதை ஆன்மிகத்தில் மிகவும் துணிச்சலான பாதை. அந்தத் துணிச்சலுக்கான வேர்களை அவர் மரபிலிருந்துதான் பெற்றார் என்பதால் மரபுகள் அவர் சென்ற பாதைகளின் துணிச்சலை ஒரு போதும் கனவிலும் கருதியது என்று நாம் சொல்ல முடியாது. மரபுகளுக்கும் தம்முடைய செய்திக்கும் உள்ள பாரதூரத்தை அவரே நன்கு அறிந்திருந்தார்.

The traditions of the past are very great in their own place, in the past, but I do not see why we should merely repeat them and not go farther. In the spiritual development of the consciousness upon earth the great past ought to be followed by a greater future. (pp122)

In the beginning, before I discovered the secret of the Supermind, I myself tried to seek the reconciliation through an association of the spiritual consciousness with the vital, but my experience and all experience show that this leads to nothing definite and final, - it ends where it began, midway between the two poles of human nature. An association is not enough, a transformation is indispensable. (pp 120)
(Sri Aurobindo on Himself)

நான் சிறுவயதில் படித்த அவருடைய நூல்கள் வேதங்களைப் பற்றிய யோக ரீதியான விளக்கங்களாக அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள். அன்றிலிருந்து சுதந்திர தினம் வரும் போதெல்லாம் அவருடைய நினைவும் வரத்தான் செய்கிறது. அவருடைய பிறந்த தேதி ஆகஸ்ட் 15 என்பது ஒரு யதெச்சை ஆயினும், சுதந்திரமாய் மலரும் அரவிந்தம் சுடரும் ஆய்வுப் பரிதியில் காணத்தக்க ஓர் அழகு அன்றோ!

பொதுவாக ஆன்மிகம் கூறுவது மனம் உடல் சார்ந்த சுய அடையாளப் பற்றின் சிக்கல்களால் இந்த ஜீவன் உலக வாழ்க்கையில் முழுகித் தன்னை மறந்து விடாமல், தான் மனம் உடல் என்பதற்கு அப்பாற்பட்ட மெய்மை என்பதை நன்குணர்ந்து இந்த உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு என்றும் நிலைத்த பரம்பொருள் தன்மையோடு ஒன்றுவதுதான் இலக்கு. ஆக இந்த இலக்கை அடைய முயலும் ஜீவனுக்குத் தடையாக ஆகிவிடுவன இந்த உலகியல் வாழ்க்கையும், இதன் அடிப்படைகளான உடல் சார்ந்த பசி, தேவைகள், மனம் சார்ந்த இச்சைகள், வேட்கைகள், அகங்காரம் அடிப்படையாக எழும் தன் முனைப்புகள். இவற்றிலிருந்து தப்ப மனிதருக்கு ஒரே வழி புலனடக்கம், மன அடக்கம், மனத்தை இலட்சியத்தின்பால் ஒருமுக ஆக்கம்.

ஸ்ரீ அரவிந்தரும் இதைச் சொல்லாமல் இல்லை. ஆனால் இந்த நிலைப்பாட்டை ஆரம்பக் கட்டம் என்கிறார். பவக் கடல் என்பது இந்த உலகியல் வாழ்வின் அலைத்தனமான சுழற்சி. இதைக் கண்டு அஞ்சிக் கடவுளிடம் சரண் புக்கு இந்த ஜீவனானது தன் கடைத்தேற்றத்திற்கு முனைவது என்ற சித்திரத்தில் ஒரு பார்வை மாற்றம் என்பதை ஸ்ரீ அரவிந்தர் கொண்டு வர முயற்சி செய்கிறார். தனித்தனி ஜீவன்களுக்கான கடைத்தேற்றம் என்பது பண்டைய நெறிகளின் இலக்காக இருக்க ஏன் இந்த உலகம், ஜீவனின் வாழ்க்கைச் சக்திகள், மனத்தின் இயல்பு ஆற்றல்கள் என்று அனைத்தையும் வேர்முதல் மாற்றம் செய்து இந்தத் தரை மீது இயன்ற வாழ்க்கையையே ஆன்மிகத் தன்மை சார்ந்ததுவாய் ஆக்கினால் என்ன என்பது அவருடைய பார்வை.

உலகியற்கை இவ்வளவுதான் என்று அஞ்சி ஒதுங்காமல், இந்த உலகின் இயற்கையையே மாற்றாமல் போனால் அப்புறம் ஆன்மிகத்தின் அனைத்தையும் விஞ்சிய சுயத்தின் பெருமை என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்கிறார் அவர். அதைச் செய்வதற்கு நம்முடைய நிலையற்ற உலக வாழ்வின், ஜீவர்களின் ஆற்றல் போதுமா? என்னும் கேள்வியை அவர் எதிர் கொள்ளும் போதுதான் அவருடைய நெடிய கருத்து அமைப்புகளின் கட்டுமானப் பணி தொடங்குகிறது. சாதாரண மனித சக்திகள் போதா மனித வாழ்க்கையின் வேர்முதல் மாற்றம் நிகழ என்பதை அவரும் உணர்கிறார். எனவே நாம் செய்ய வேண்டியன முக்கியமாக தெய்வ சக்திகளை நம் வாழ்வில் இறக்கம் செய்ய வேண்டிய ஆயத்தங்கள் என்கிறார். ஸ்ரீ அரவிந்தரின் கூடப்பழகி அவரது கருத்துகளை உள்வாங்கிய பாரதியார் இந்தக் கருத்தைப் பாடிக் காட்டுகிறார்:

சொல் ஒன்று வேண்டும்
தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்ய
சொல் ஒன்று வேண்டும்

அவ்விதம் மேன்மை நிலையின் சக்திகள் முந்தைய நிலைக்குள் இறக்கம் ஆகி அதுவரை ஒரே வித இயல்புடன் போய்க் கொண்டிருந்த உயிரின வாழ்க்கையை ஒரேயடியாக வேர்முதல் மாற்றம் கொள்ளும்படிச் செய்தது இனித்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. ஏற்கனவே ஒரு முறை நடந்து ள்ளது என்று அவர் சுட்டுவது இயற்கையின் பரிணாம மாற்றத்தை. இந்தக் கருத்தை அவரது ஆங்கிலக் காவியமாகிய சாவித்திரி மிக அழகாகப் படம் பிடிக்கிறது. அந்தக் கருத்தைக் கூறும் பகுதியை யதேச்சையாகத் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருக்கிறார் கவிஞர் திருலோக சீதாராம்..

மானுடர்செவி மாந்திடாததோர்
மதுரகீதம் மிழற்றுவார்
ஆனகாலம் எலாம் அதிர்ந்திட
அடிபெயர்த்திடும் ஓதைகேள்
போன காலம் ஓர் கான் விலங்கினில்
பூத்த மானுடர் போலவே
வானவர் குலம் ஒன்று நம்மினும்
வந்துதிப்பது ஓர் வாய்மையே.

அத்தகைய தெய்வ சக்திகளை வாழ்வில் இறக்கம் செய்யவும், தெய்வத் தன்மை இயன்ற வாழ்க்கையை நன்கு நிலவச் செய்யவும் ஆகின்ற கருத்தாக்கங்களை அவர் தொடர்ந்து பதிய வைத்த நூல்தான் The Life Divine.

வேத ரிஷிகள் செய்ததை விடவும், செய்யாத காரியத்தை நீங்கள் செய்கிறீர்களா? அவ்வாறு கருத்துப்பட நீங்கள் கூறியதற்கான விமரிசனத்தை எப்படி ஏற்கிறீர்கள்? என்று ஒருவர் கேட்க, அவர் சொல்லும் பதில்:

It is not I only who have done what the Vedic Rishis did not do. Chaitanya and others developed an intensity of Bhakthi which is absent in the Veda and many other instances can be given. Why should the past be the limit of spiritual experience? (pp 134)

அவருடைய நோக்கம் உலக இயற்கையையே, மனித குலத்தையே தெய்வத் தன்மையும், தெய்வ சக்திகளும் நிலவும் பூமியாக மாற்றிவிட வேண்டும் என்பது. அதன் அடிப்படையில் அவர் எழுப்பிய கருத்துக் கட்டுமானங்களாய் அவருடைய நூல்களால் ஆன நூலகமே பெருகியுள்ளது.

பொதுபுத்தி மேலும் கீழும் பார்த்தபடி அயிர்க்கலாம். ஆனால் மனித குலத்தையே தழுவிய ஏதாவது ஓர் வேர்முதல் மாற்றம் வந்துதானே தீர வேண்டும், இயற்கையின் பரிணாம மாற்றத்தின் எதிர்காலம் நோக்கிய அம்புக்குறியின் போக்கை உற்று நோக்கினால் என்ற சிந்தனை எழும்போது ஸ்ரீ அரவிந்தரின் இந்தக் கருத்துகளின் காலம் வென்ற துணிச்சலை எப்படி வியக்காமல் இருக்க முடியும்?


No comments:

Post a Comment