அதாவது அறநெறிச்சாரம், நீதிநெறி விளக்கம் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம். மாரல் ஸ்டோரீஸ் என்று ஆங்கிலத்தில் உண்டு. புராணக் கதைகள், இதிகாசக் கதைகள் ஆகியவற்றைக் கொண்டு உதாரணம் காட்டி நீதிச் செய்யுட்களை இயற்றிய நூல்கள் வடமொழியில் பொதுவாக சாருசர்யை, உபதேசசதகம் ஆகியவற்றைச் சொல்வார்கள்.
ஆனால் முழுக்க வேதங்களில், பிராம்மணங்களில், ஆரண்யகங்களில், பிருஹத் தேவதா என்னும் நூலில் வரக் கூடிய வேதக் கதைகளைக் கொண்டு மட்டும் ஒரு 166 நீதிக் கருத்துகளை வடமொழிச் செய்யுட்களாக ஆக்கி, அந்த நீதிகளுக்கு உதாரணக் கதைகளாய் வேதக் கதைகளைக் கொடுத்து இன்று கூட யாரும் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் த்யா த்விவேதர் என்னும் வேத அறிஞர் இவ்வண்ணம் அழகுறச் செய்த நூலுக்குப் பெயர் நீதிமஞ்ஜரீ, அதாவது த்யா த்விவேதரின் நீதி மஞ்ஜரீ.
சரியாக அவர் அந்த நூலை எழுதி முடித்த தேதி, 1494 கி பிக்குச் சரியாக 1550 சம்வத், மாக மாதம், சுக்ல பக்ஷம், பிரதமை திதி அன்று. என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? தேதிவாரியாகச் சொல்கிறானே என்றா? நல்ல வேளையாக அபூர்வமாக இந்த நூலின் ஓலைச் சுவடியில் அவ்வளவு விரிவாக முடித்த தேதியைக் குறிப்பிட்டுள்ளனர்.
1184 கி பி சத்குருசிஷ்யர் எழுதிய வேதார்த்ததீபிகை, 14ஆம் நூற் சாயனர் எழுதிய வேத பாஷ்யம் ஆகியவற்றைப் பயன்கொண்டு த்யா த்விவேதர் தமது நீதிமஞ்ஜரீயைச் செய்துள்ளார். ஆனால் அவர்களின் நூல்களை அப்படியே கையாண்டு விடாமல், வேண்டிய இடத்தில் தமது பொருத்தமான விளக்கங்களையும், யாஸ்கர் நிருக்தம், நிகண்டு, சௌனகரின் பிருஹத் தேவதா ஆகிய நூல்களையும் சார்ந்து வேண்டுவன தேர்ந்தே எழுதியுள்ளார் என்றே பதிப்பித்தவரான திரு சீதாராம் ஜயராம் ஜோஷி, வாரணாசிப் பல்கலைக் கழகம், கூறுகிறார்.
நீதிகளையும், அதற்கான உதாரணக் கதைகளையும் எழுதும் போது த்யா த்விவேதர் நான்கு உறுதிப் பொருள்களான தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் அறம், பொருள், இன்பம் வீடு என்னும் விழுமிய வகையை மனத்தில் கொண்டுள்ளார் என்று பட்டியலிட்டுக் காட்டுகிறார் பதிப்பாசிரியர். க்ஷேமேந்திரரின் சாருசர்யை என்னும் நூலுக்கும், நீதிமஞ்ஜரீக்கும் சில செய்யுட்களின் தொடக்கங்களில் காணப்படும் ஒற்றுமையையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
வேத ரிக்குகளுக்கான பாஷ்யங்களைக் கையாளுமிடத்து, என்னதான் சாயனரைச் சார்ந்தே எழுதினாலும், நீதி போதனைக்குத் தொடர்பான அம்சத்தை மட்டுமே த்யா த்விவேதர் பயன்கொண்டுள்ளார் என்பதைச் சுட்டுகிறார். ஆனால் இந்தத் தேர்வு புரியாத சில அறிஞர்கள், த்யா த்விவேதரை சாயனரைப் பொறுப்பற்ற விதத்தில் பயன் கொண்டாராகப் பேசுவதும் உண்டுபோலும்.
நீதி மஞ்ஜரீயால் வேதக் கல்விக்கு என்ன பயன்? இந்தக் கேள்வியை அனைத்து வேத இயல் ஆய்வுகள், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் அகராதி, பல மொழிகளில் மொழிபெயர்ப்புகளும் அலசல்களும் ஆகியவற்றைப் பற்றியும் கேட்க முடியும் என்று வாதாடும் பதிப்பாசிரியர் நீதி மஞ்ஜரீயை வேத ரிக்குகளுக்கான ஒரு வித விளக்கக் குறிப்புகள் என்று கருதுகிறார்.
ஆம். ஆழ்ந்து வேத ரிக்குகளை அலசாமல் ஒருவர் அதனால் அறியக் கூடிய நீதிகளுக்கான பயன்பாட்டைக் காட்ட முடியுமா? அவ்வண்ணம் காட்டும் போதே, அந்த வேதப் பாசுரங்கள் பொருள் விரிக்கவே படுகின்றன அன்றோ! ஆனால் இது போல் ஒருவர் 15 ஆம் நூற் மத்தியில் யோசித்துச் செய்யவும் செய்தார் என்பது விளக்கம் மட்டும் அன்று, அவர் கையாண்ட வேதப் பகுதிகளுக்கான மீள்படிப்பாகவும் கூட த்யா த்விவேதரின் எழுத்துகள் அமைந்து விடுகின்றன. ஆச்சரியம்தான்!
எழுதுபவர் சலித்துக் கொள்கிறார், ஆனால் எழுத்து தனக்கென்று ஓர் ஆயுளும், கதியும் தன்னிச்சையாகக் கொண்டது என்ற நம்பிக்கை வருவது இல்லை லேசில். ஆனாலும் வரலாறு நம்பிக்கைக்குத்தான் சான்று பகர்கிறது.
த்யா த்விவேதரின் அமைப்பு மிகத் தெளிவானது - நீதிச் செய்யுட்கள், அதற்கான விளக்கம், வேத ரிக்குகள், அவற்றுக்கான பாஷ்யம். காவியங்களிலிருந்து ஒப்பீட்டளவில் குறைந்த அளவுதான் விஷயங்களைக் கையாள்கிறார் என்பதால் அவர் முக்கியமாக வேதக் கல்வியில்தான் கவனம் செலுத்தியவர் என்பதும் புலனாகிறது. வடக்கு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அநந்தபுர் என்னும் இடத்தைச் சேர்ந்தவர், லக்ஷ்மி, லக்ஷ்மிதரர் ஆகியோருக்குப் பிறந்தவர், வேதச் சாகையில் சாங்க்யாயன சாகையைச் சேர்ந்தவர். வேத இண்டாலஜி துறைகளிலேயே மிக அபூர்வமான நூல் என்று கருதப்படும் நூல்களில் இதுவும் ஒன்று. 1933ல் அச்சு கண்டது. 350 சொச்சம் பக்கங்கள். மறுஅச்சு - சௌகம்பா சான்ஸ்க்ரிட் சீரீஸ் ஆபீஸ் 1998.
*
உதாரணச் செய்யுள் --
நல்லோர் பெருநிலை எய்தினும் நயக்கும் உதவி மறுப்பதில்லை.
ரிஷிகளின் கன்றை உயிர்ப்பித்தார் ரிபுக்கள் என்போர்
தாம் தேவராய் ஆகிவிட்ட போதிலும் கூட
என்னும் பொருள்பட ஒரு சுலோகம் -
ஸந்த: ப்ரபுத்வம் ஆபந்நா
நோபகாரம் த்யஜந்தி ஹி |
ரிபவ: ப்ராப்ய தேவத்வம்
ரிஷேர் வதஸம் அஜீவயந் || -
இதில் ரிபுக்கள் என்பார் யார்? அவர்கள் எப்படி தேவர்களாக ஆனார்கள்? முன்னால் தேவர்களாக இல்லாதிருந்தார்களா? அப்படி ஆன போதிலும் கூட அவர்கள் ரிஷிகளை மறக்காமல் அவர்கல் கன்றை உயிர்ப்பித்த வரலாறு என்ன? இதையெல்லாம் விரிவாகச் சொல்லி எனவே நல்லோர் பெருநிலை எய்தினும் நயக்கும் உதவி மறுப்பதில்லை என்னும் நீதியை உணர்த்துவதாக வரும்.
*
No comments:
Post a Comment