Wednesday, December 18, 2019

திருக்கோவையார் - கருத்து

மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் அகத்திணைக் கோட்பாடுகளில் அமைத்து பாடப்பட்ட பேரின்பம் உணர்த்தும் நூல். திருக்கோவையார் உண்மைவிளக்கம் என்று திருவாவடுதுறை ஆதீனம், இரண்டாவது திருவாசக மாநாட்டு மலராய் 1965ல் வெளியிட்ட நூலின் முன்னுரையில் ஆதீன வித்வான் ச தண்டபாணி தேசிகர் கூறுவது ‘அநுபவநிலையிலே நுகர்வான் உயிராகிய தானும், நுகரப்படுகின்ற பொருள் சிவமாகிய பேரின்பமுமாக இருக்கும் பெற்றியைத் திருவுளத்தெண்ணி உயிராகிய தான் ஆணாகச் சிவம் பெண்ணாகச் சிந்திக்க வைக்கின்ற அநுபவத்திருநூல் திருக்கோவையார்.’ திருக்கோவையார் உண்மை விளக்கம் என்னும் உரையில், முதன்முறையாகப் பேரின்பம் கருதிய உரையாக, முன்னரே திருக்கோவையாருக்கு ஏற்பட்ட ஞானக் கொளு என்பதைத் துணைகொண்டு, ஆதீன வித்வான் ச தண்டபாணி தேசிகர் அவர்கள் உரை எழுதத் தொடங்கும் முன், முன்னுரையில் கூறும் வார்த்தைகள் சிந்திக்கப் பாற்று.

“திருக்கோவையார் சிற்றின்ப நோக்குடையாருக்குச் சிற்றின்பநூலாகத் தோன்றும்; கணக்கு அறிஞருக்கு கணக்கு நூலாகக் காணப்படும்; அந்தணர்க்கு வேதமாம்; யோகியர்க்கு ஆகமத்தின் காரணமாம்’ என்னும் கருத்தை நூற்சிறப்புப் பாடலை ஒட்டி எழுதுகிறார்.

ஆரணங்காண் என்பர் அந்தணர்
யோகியர் ஆகமத்தின்
காரணங்காண் என்பர் காமுகர்
காமநன்னூலது என்பர்
ஏரணங்காண் என்பர் எண்ணர்
எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங்காய சிற்றம்பலக்
கோவையைச் செப்பிடினே.

முதல் பாடலே இயற்கைப் புணர்ச்சியில் தொடங்குகிறது. இயற்கைப் புணர்ச்சி என்னும் அகத்திணைக் கோட்பாட்டின் ஆன்மிகப் பொருள் என்ன என்பதை விளக்கும் கொளு -

’இயற்கைப் புணர்ச்சித் துறையீ ரொன்பதும்
சத்தி நிபாதம் ஒத்திடும் காலத்து
உத்தம சற்குரு தரிசனமாகும்’

இதற்கு உரையெழுதும் ஆதீன வித்வான் ச தண்டபாணி தேசிகர் வரைவது - ’இங்ஙனம் இருவினையொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் பெற்ற உயிர் சற்குருவை நாடிச்சென்று அடைதலே ஈண்டு இயற்கைப் புணர்ச்சி எனப்பட்டது. இது காட்சி முதல் பாங்கியை அறிதல் ஈறான பதினெட்டுத் துறைகளை உடையதாம்.’

முதல் பாட்டிற்குக் காட்சி என்னும் தலைப்பீந்து, அதை விளக்குமுகத்தான் ’குருவின் திருமேனி காண்டல்’ என்னும் தலைப்பில் தேசிகர் மேலும் வரைவது: 

‘இது கைக்கிளையாமாறு யாங்ஙனம் எனின், திருவருட்பதிவு பெற்ற உயிர் பேரின்பவாயிலான சற்குருவை நாடிக்கண்டு இன்பந்துய்க்க விரையுமாதலின் உயிரொன்றன்மாட்டே நிகழும் காமமாகக் கைக்கிளையாகிய ஒருமருங்கு பற்றிய விருப்பாயிற்று என்க.’ 

அந்தப் பாட்டு -

திருவளர் தாமரை சீர்வளர்
காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி
னொல்கி யனநடைவாய்ந்த்(து)
உருவளர் காமன்றன் வென்றிக்
கொடிபோன் றொளிர்கின்றதே.

சத்தி நிபாதம் என்பது யாது? ஆதீன வித்வான் அவர்களின் விளக்கம் --

“சத்திநிபாதமாவது மலம் பரிபாகம் எய்துதற்பொருட்டு அதற்கு அனுகூலமாய்நின்று நடத்திய திரோதானசத்தி, மலம் பரிபாகம் எய்திய வழி அக்கருணை மறமாகிய செய்கைமாறிக் கருணை யெனப்படும் முன்னைப் பராசத்தி ரூபமேயாய், ஆன்மாக்கள்மாட்டுப் பதிதலாம். இது சோபானமுறையான் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் எனா நாலவகைப்பட்டு நிகழும் என்க.”

***

No comments:

Post a Comment