Friday, December 27, 2019

பகவத் விஷயத்திற்குக் கூட்டம் தேட்டம்

உயிருக்குயிராய்ப் பழகிய நண்பர்கள். உறவின் உரிமையில் கெழுமிய சொந்தங்கள். ஓருயிருக்கு இரண்டு உடல் என்னலாம்படியான சகோதர பாசங்கள். ஆனால் காமத்துப்பால் ஒவ்வோர் உயிரையும் தன் இன்பத்தை நாடி ஓடும் ஓட்டத்தில் தனிமையாய் ஆக்கி, நட்பு, சொந்தம், உடன்பிறப்பு அனைத்தையுமே தொந்தரவாய்க் கருத வைத்து விடுகிறது. ஆனால் ஏதோ ஒரு நல் வாய்ப்பில், ஜனார்த்தனன் கண்கள் அமலங்களாக விழிக்கும் பார்வையில் படும் கணத்தில் ஒரு ஜீவன் திடீரென பகவானின் நினைவு ஏற்படத் தான் அதுவரை அலைந்தது எல்லாம் திசை மாறிக் கடவுளை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. காமம்தான் பெரிய வேகம் என்று நினைத்தால் அந்த வேகத்தையும் அர்த்தம் அற்றதாக ஆக்கி ஓர் ஆகர்ஷணம் ஆராவமுதன்பால் தள்ளுகிறது.

ஆனால் என்ன ஆச்சரியம்! தான் மட்டும் தனிமையாகப் போய் அனுபவிக்க வேண்டியதுதானே அந்த ஆதிப் பெரும் சுகத்தை !
இல்லையே…..அந்த ஜீவன் உறங்கும் பல ஜீவன்களை எழுப்பி, அவற்றின் கால்களில் விழுந்தாவது அந்தப் பரம சுகத்தின்பால் போகக் கூட்டம் சேர்க்கிறது. ஏங்கி 'வையத்து வாழ்வீர்காள் !' என்று வாழும் ஜீவர்களே என்று அனைவரையும் கூட்டம் சேர்க்கிறது. உத்தம ஆனந்தமோ உயிர்களின் காலில் விழுந்து அவற்றுக்கான நித்ய வாழ்வை அடைய வைக்கத் துடிக்கின்றது.

உயிரை உயிர் அனுபவிக்கும் போது பிற உயிர்கள் பகைகளாய்த் தோன்றுகின்றன. உயிருக்கு உயிரை அனுபவிக்கும் போது அனைத்து உயிர்களும் கூடினாலும் போதாதோ என்று தோன்றுகிறது. உயிர் உடலை அனுபவிக்கும் போது தன் இயல்பு கெட்டுத் தடமாடுகிறது. உயிர் 'தான் உத்தமனுக்கு உடல்' என்பதை உணரும் போது உயிர்க்குல ஒற்றுமையை நாடுகிறது.

'அபிமத விஷயத்திற்குத் தனிமை தேட்டமாக இருக்கும்; பகவத் விஷயத்திற்குக் கூட்டம் தேட்டமாக இருக்குமிறே'

என்பது ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானங்களில் ஆசார்ய புருஷர்களால் காட்டப்படும் ஒரு கருத்து.

***

No comments:

Post a Comment