யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவெ தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே.
(திருவாசகம்)
இதை எப்படிச் சொன்னார்?
யான் பொய். என் நெஞ்சு பொய். என் அன்பு அதுவும் பொய். எல்லாம் பொய் என்றால்...
வினையின் காரணமாக யான் என்பதும் மாறிக்கொண்டு இருக்கிறது. முழித்துக்கொண்டு எழுதுகிறேன். தூங்கிவிட்டால் இங்கு எழுதினவன் அங்கு இல்லை. அங்கு நான் யார் என்பது இங்கு எனக்குத் தெரியவில்லை. இப்பொழுது ஒன்றில் ஆர்வமாக இருக்கும் நெஞ்சு எங்கு போயிற்று என்று தேட வேண்டியிருக்கிறது. அன்பைப் பற்றிப் பேசுகிறேன். ஆனால் அடுத்த சமயம் அன்பு எங்கே போயிற்று அறிகிலேன். கடவுளை அடைவது என்பது நிச்சயம் என் முயற்சியினால் என்றால் ஒரு போதும் இல்லை என்று முடிவு கட்டிவிடுதல். அதுதான். ஏனெனில் வினை ஆட்டுகின்றபடியெல்லாம் ஆடும் பொம்மையாக என் அனைத்தும் இருக்கின்றன. என்னில் மாறாமல் இருகின்ற ஒன்று என்று நான் சொன்னால் வினை. நான் வினையேன் என்பது சரியான முகவரியாய் இருக்கும். மாறாது. இப்படிப்பட்ட நான் கடவுளாகிய உன்னை அடைய என்றால், என் நிலைமை அத்தனையும் இருக்கின்றபடி உணர்ந்து அழுவது ஒன்றுதான் வழி. அதுவும் ஸ்டாப் வாட்ச் வைத்துக் கொண்டு அழுதுவிட்டு ஆயிற்றா என்று பார்க்கும் பேரமாக அன்று. என் கையறு நிலையை முற்றும் உணர்ந்து உன்னை விட்டால் என்னால் ஆகும் வழி எதுவும் இல்லை என்பதை அறிந்து நான் அழும் போது என்னைத் துறந்து நான் அழும் போது என்னைத் திறந்து நீ உன்னை உள்ளே வைக்கிறாய் என்னும் இது என் சாமர்த்தியம் ஒன்றும் இல்லாத உன் அருளே ஆகும்.
***
No comments:
Post a Comment