Saturday, December 21, 2019

ஆத்மாவிற்கான நிழல் அல்லது திருமங்கையாழ்வார்

உலகத்தில் நிழலும் வெயிலும் இருப்பதைப் போல் ஆத்மாவிற்கும் நிழலும் வெய்யிலும் உண்டு. ஆத்மாவிற்கான வெய்யில் ஐம்புலன் இன்பங்களான உலக விஷயங்கள். உலக விஷயங்களில் ஒருவன் நாட்டம் கொண்டு அலையும் வரை அவன் ஆத்மாவை வெய்யிலிலே போட்டவன் ஆகிறான். ஆத்மாவிற்கு எது வெய்யிலோ அது உடலுக்கு நிழல் போல் சுகமாகத் தோற்றுகிறது. ஆத்மாவோ வெய்யிலில் கிடந்து துடிக்கிறது. ஸம்ஸாரமாகிய வெய்யிலில். ஒண்ட நிழல் இன்றி அலையும் ஆத்மா. அப்பொழுது அதற்கு விரிந்த கிளையும், படர்ந்து அடர்ந்த இலைக் கூட்டமும், கதிர் நுழையா தண்ணிழலுமாகக் கனி குலுங்க நிற்கிறது ஒரு தரு. அதுதான் வாசுதேவ தரு. அதன் நிழல் பகவத் விஷயமாகிற வாசுதேவ தருச் சாயா

திருமங்கையாழ்வார் நெடுங்காலம் உடம்பை நிழலிலே வைத்து ஆத்மாவை வெய்யிலிலே போட்டவர். ஆத்மாவை வெய்யிலிலே போடுதல் என்றால் முதலிலேயே பகவத் விஷயத்தில் இழியாமை. பகவத் விஷயமே நிழல். இந்த வாஸுதேவனாகிய தரு நிழல் பார்த்த பார்த்த இடத்தில் எல்லாம் நிழலாய் இருக்கும். எங்கும் ஒக்க வியாபித்துத் தானே ஏக நிழலாய் இருக்கும். வேறு நிழல் காண ஒண்ணாது. (ஸர்வத்ராஸௌ வஸதி, ஸமஸ்தஞ்ச அத்ர வஸதி).

அதி குளிர்த்தியும் இன்றி அதி வெப்பமும் இன்றி இருக்கும். தானே ஏறிட்டுக் கொண்ட நரகமொத்த நெருப்பையும் அவிக்க வல்ல நிழல். ஜீவன் ஒதுங்க வேண்டிய தனக்கு ப்ராப்தமான நிழல். இந்த நிழல் ஜீவனின் துக்கத்தை நிவர்த்திக்கவல்லது. பின் ஏன் ஜீவன் இந்த நிழலில் ஒதுங்குவதில்லை?

விளையாட்டில் மும்முரமாக இருக்கும் குழந்தையைத் தாய் உண்ண வா என்று அழைத்தால் குழந்தை விளையாட்டுத் தீவிரத்தில், தனக்கு நன்றாகப் பசித்தாலும், 'எனக்குப் பசியே இல்லை. வயிறு ஏதோ வலிக்கிறது. அவ்வளவுதான்' என்று சொல்லி ஓடிப்போவதைப் போல, எப்பொழுதும் இந்த நிழல் நீக்கமற எங்கும் நிறைந்து அனைவருக்குமாகப் படர்ந்து இருந்தாலும் 'நான் நிழலில் ஒதுங்க மாட்டேன்' என்பாரை எதுவுமே செய்ய முடியாதே! அதுபோல நெடுங்காலம் விஷயங்களில் ஈடுபாடு என்ற வெய்யிலில் திரிந்த ஆழ்வாரிடம் பகவானின் தண்ணருள் பாய்ந்தது.

'இவர் கண்ணால் காணுகின்ற விஷயங்களுக்கு அவ்வருகு அறியாதவராய் இருக்கிறார். எனவே இவருக்கு நம்மை மற்ற விஷயங்களைப் போலே இவர் கண்ணுக்கு விஷயம் ஆக்கினால் விரும்பேன் என்று சொல்லமாட்டாதவர் இவர்.'

என்று பகவான் நினைத்து உகந்தருளின நிலங்களாகிற திவ்ய தேசங்களில் வந்து சாந்நித்யமாக இருந்தார். இந்த ஆழ்வாராகிய கலியனை ஆட்கொண்டார். தம்முடைய அருமை பெருமைகளைக் காட்டிக்கொடுத்தார். நிழலில் ஒதுங்காமல் இருந்தவரை பகவானாகிய தம்மை விட்டுப் பிரிந்திருக்கவொண்ணாதபடி இவரைப் பண்ணித் தம்மை நன்கு அனுபவிக்கச் செய்தார். அது மட்டுமா? இங்கே இருந்தாலும் ஆழ்வாரின் தனமை பரமபதத்தில் உள்ளவர்களின் தன்மையைப் போன்று ஆக்கினார். அந்த பரமபதத்தையும் இவர் பெறும்படி செய்தார். இதுவே கலியன் ஒலிமாலை அனைத்தாலும் நாம் அறிந்து கொள்ளும் செய்தி.

*
ஒருவரைத் திருத்த வேண்டும் என்றால் அவரிடம் அதற்கான வாய்ப்புகள் சில இருக்க வேண்டும். சிலவற்றுக்காவது அவர் ஈடுபட்டுத் தன்னை அவர் தர வேண்டும். அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவரிடம் சில தன்மைகள் அமைந்திருக்கவேண்டும். திருமங்கையாழ்வாரிடம் அவ்வாறு சில பரிகரங்கள் இருந்தன. என்ன அவை.?

உயர்ந்த விஷயங்கள் சொன்னால் அவற்றை உள்வாங்குவாரே அன்றி அவற்றைக் கணடு வெறுத்து ஒதுங்கமாட்டார். அடுத்து உலக விஷயங்கள் நிலைப்பேறு உடையன அல்ல. பெரிய மதிப்புடைய பெருமையும் அவற்றிடம் கிடையாது என்னும் தெளிவுடையவர். விஷய சுகத்தை விரும்பினாலும் கலியன் பெரு மிடுக்கர். ஏதோ கிடைத்ததைக் கொண்டு இன்புறும் இயல்பினர் அல்லர். தாம் அனுபவிக்கும் விஷயங்கள் நிலைப்பேறு உடையனவாக இருக்க வேண்டும் என்று அவாவுபவர். அவை சிறுமையோடு சேராமல் பெருமதிப்பனாக இருக்க விழைபவர். (அதனால்தானே எத்துணையோ அழகிகள் இருக்க ஸ்ரீவைஷ்ணவ ஞானம், சிறந்த பக்தியுள்ள மதி இவற்றைக்கொண்ட குமுதவல்லியாகப் பார்த்து அவர் மயங்கியது!) எனவே அவரிடம் உள்ள இந்த அத்வேஷம், விஷயங்களில் உள்ள குறைகளான அல்பத்வம், அஸ்திரத்வம் ஆகியவற்றை உள்ளவாறு தெளிந்த லாகவம் இவையிரண்டும் பரிகரங்களாய் பகவானுக்கு இவரைத் திருத்திப் பணிகொள்ள வாய்ப்பாக இருந்தன.

சரி இவை இவரிடம் இருந்த எதிர்மறையான அனுகூலங்கள். ஆனால் எந்த விஷயத்திலாவது ஒருவன் தன்னை மறந்து, தன்னை இழந்து, தன்னைக் கொடுத்து ஈடுபாடு கொண்டால்தான் அவன் எந்த உயர்ந்த ஆர்ஜவத்திற்கும் தகுதியானவன் ஆவான். இவரிடம் இருந்த இத்தகைய நேர்முறை அனுகூலம் என்பது ராஸிக்யம். நல்ல ரஸிகர். தேர்ந்த ரஸிகர். அதுமட்டுமன்று. ரஸனை இவரை அப்படியே ஆட்கொண்டு முழுக அடித்துவிடும் அளவிற்கு ரஸிக சிகாமணி. இந்த ரஸிகத்தன்மை பகவானுக்கு இவரிடம் அகப்பட்ட நல்ல பற்றாசு.

ஏதோ புழுக்குறித்தது எழுத்தாமாப் போலே ஜீவன் எதேச்சையாக நினைவில்லாமல் செய்தது நன்மையாக முடிய அதை முதலாகக்கொண்டு இவனுக்கு அருள் செய்வதற்கான ஹேதுக்களாய்க் கணக்கில் எழுதிக்கொள்ளும் பிரானுக்கு இது போதாதா? பெரும் வாய்ப்பாயிற்றே! சரி அநாதிகாலம் இந்த ஜீவன் செய்த பாபத்தை எந்தக் கணக்கில் கொண்டு போட? பார்த்தான் பகவான். அந்த பாபாம்சத்தை நமது கருணைக்கு விஷயம் ஆக்கிவிடுவோம். என்று முடிவு செய்து இவருக்குப் பரம கிருபையைச் செய்தார்.

தனத்தை அள்ளி அள்ளித் தனித்தனியாகத் தருவதற்குப் பதில் கிழிச்சீரையோடே தருவார்களே, கட்டிவைத்த பட்டுறையோடே தருவதைப் போல், திருமந்திரம் ஆகிய உயர்ந்த உறையிட்ட அர்த்தவிசேஷங்களை எல்லாம் பொதிந்து திருமந்திரத்தை முன்னாக உபதேசித்துவிட்டார். அறியும் பொருளின் தன்மை, தராதரம் எல்லாம் அறிந்து அனுபவிக்கும் பெற்றி உடையவர் ஆயிற்றே கலியன்!. திருமந்திரத்தைக் கற்றுக் கற்று அதற்குள்ளேயே பொதிந்திருக்கும் எம்பெருமானின் ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவற்றை அடங்கக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து செய்நன்றியில் நெகிழ்ந்தார். 'அயோக்யனான என்னை அது தானே ஹேதுவாக விஷயீகரித்தான்' என்று நன்றியில் மிக்கார். ஆகையாலே ஒரு தடவை சொன்னால் போதாதென்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கூப்பிடுகிறார்.

பகவத் விஷயமே அத்தகையது. அது நமக்குச் செய்யும் நன்மைக்கு நாம் நேர் கொடு நேர் செய்யலாவதும் ஒன்றும் இல்லை. செய்ய வேண்டுவதும் ஒன்றும் இல்லை. பண்ணின உபகாரத்திற்கு நன்றியில் நிறைந்தோராய் இருக்கவேண்டிய இத்தனையே வேண்டுவது. அதுவும் எதற்காக? நாம் அசித் என்பதைவிட வேறுபட்ட ஒன்று என்பதை நிலைநிறுத்திக் கொள்வதற்காக.

எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்
மங்கையர் கோன்ஈந்த மறையாயிரம் அனைத்தும்
தங்குமனம் நீஎனக்குத் தா.
(எம்பார் அருளிய தனியன்)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment