Friday, December 27, 2019

எம்பெருமானார் வியந்ததும், எம்பெருமானாரை வியந்ததும்!

எம்பெருமானாராகிய ஸ்ரீராமாநுஜர் ஆழ்வார் திருநகரி சென்ற போது வியந்து பாடிய வெண்பா ஒன்றை இராமாநுஜாசார்ய திவ்யசரிதை கூறுகிறது. இதுவோ பரமபதத்தெல்லை ! என்று வியக்கும் இடமும், வேதம் தமிழ் செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய் என்று விவரிக்கும் இடமும் மிக அழகு.

இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத் தெல்லை - இதுவோதான்
வேதந் தமிழ்செய்து மெய்ப்பொருட்கு முட்பொருளாய்
ஓதுஞ் சடகோப னூர்.

ஸ்ரீஆண்டாளைப் பற்றி எம்பெருமானார் அருளிய பாக்கள் -- (எம்பெருமானார்க்கே திருப்பாவை ஜீயர் என்று பெயர் வந்ததும் உண்டு)

மெல்லிய பஞ்சடி யுந்துவ
ராடையு மேகலையும்
வல்லியை வென்ற மருங்குமுத்
தார வனமுலையும்
சொல்லியல் வன்மையும் வில்லிபுத்
தூரம்மை தோளழகும்
முல்லையை வென்ற நகையுமெல்
லாமென்றன் முன்னிற்குமே.

வாழி திருப்பாவை பாடு மடப்பாவை
வாழி யரங்க மணவாளர் - வாழியவன்
மாடுநிற்கும் புள்ளரையன் வாழி பெரியாழ்வார்
பாடுநிற்கும் வேதாந்தப் பா.

பாடு மடப்பாவை -- அழகான சொல்கட்டு. என்ன மடம்? தன் நாதனை அன்றி வேறு எதுவும் அறியா மடம். மாதவர்க்கு என்றே உணர்வாக எழும் உன்னத பக்தி. அற்புதமான வரி ‘வாழி பெரியாழ்வார் பாடுநிற்கும் வேதாந்தப் பா’. அவர் எதுவும் முயலவே வேண்டாம். வேதாந்தம் தேடிச் சென்று அவர்பாடு நிற்கும் அவருடைய பாடல்களில்.

எம்பெருமானார் மேல்நாட்டினின்று (கர்நாடகா) திரும்பியதும் திருவரங்கம் பெரியகோயிலார் பாடியது --

வையம் குருடன்றோ மாமறையும் பொய்யன்றோ
ஐய னுரைத்ததமி ழாரறிவார் - வையத்துக்கு
ஊன்றுகோ லெந்தை யெதிராசர் உத்தரித்த
மூன்றுகோல் காண்பதற்கு முன்.

ஐயன் ஆகிய நம்மாழ்வார் உரைத்த தமிழை அறியவைத்தார் எம்பெருமானார். ஐயன் உரைத்த தமிழ் அறிந்ததால் மாமறையும் உண்மை என்று வையம் ஆகிய கற்றோர் உலகம் உணர்ந்தது. மாமறை உண்மை என்று உணரவே வையத்தின் குருடும் நீங்கியது. எப்பொழுது? முக்கோல் முனிவேழமாகிய எம்பெருமானர் அவதரித்த பின்னர். நம் குருடும் ஒரு நாள் நீங்காமலா போகும்...!

***

No comments:

Post a Comment