Monday, December 16, 2019

வேதாந்த தேசிகரும் நெட்கனெக்‌ஷனும்

அவசரமாக ஏர்போர்ட் போய்ச் சேர்ந்தார் ஒருவர். அடடா... டேடா கார்டு மறந்து வைத்து வந்து விட்டோமே என்று நெட் கிடைக்க வழி என்ன என்று பார்த்தார். பக்கத்தில் உள்ளவரிடம் வாய்விட்டும் புலம்பினார். அவரோ இவரைப் பார்த்துச் சிரிக்கிறார். என்ன சார் உங்களுக்குச் சிரிப்பா இருக்கு.. எனக்கோ உடனே நெட் வேண்டும்.

இல்லை சார். நீங்கள் இருப்பது இந்த ஏர்போர்ட். இங்கு எதற்கு நெட் கனக்‌ஷன். அதான் ஓபன் நெட் கிடைக்கிறதே எப்பொழுதும். நீங்கள் பொட்டியைத் திறந்துகொண்டால் போதும் அல்லவா...

ஓ ஆமாம் இல்ல.. என்று அசடு.. சுமார் ஒரு கலம் இருக்கும் வழிந்தார்...

திறந்தால் நெட் வரவில்லை. எனக்கு மட்டும் வரவில்லையே எனக்கு வரலை.. என்று எல்லாரிடமும் குதித்தார். ஆபீசில் சொன்னால் இல்லையே எல்லாருக்கும் ஆல் 24 ஹவர்ஸ் வருமே...

வரல்லியே சார்....

பார்த்தால் இவர் வெளி நெட்டைக் கனக்ட் பண்ணாதபடி ஒரு தடுப்பு போட்டு வைத்திருக்கிறார். அது மறந்து போச்சு. சரி என்று உடனே அதை ரிலீஸ் செய்த பின்பு பிரச்னை சால்வ்டு. இப்பொழுது இவருக்கு யார் கொண்டு வந்து புதுசா நெட்டை மாட்டிவிட்டார்களா? இவர் ஆ ஊ என்று கத்தியதால் கிடைத்ததா? இல்லையே. அது எப்பொழுதும் இருக்கிறது. அந்த நெட்டைச் சூடிக்கொள்ளும் ஏற்புதான் இவரிடம் இல்லை. பாவம்.

ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் பாட்டு ஒன்றிற்கு வருவோம்.

முத்திக்கு அருள்சூட மூன்றைத் தெளிமுன்னம்
இத்திக்கால் ஏற்கும் இதம்.

முத்தி அடையவேண்டுமே? என்ன செய்வது? அருள் வேண்டும். எப்படிச் சம்பாதிப்பது? சம்பாதிக்க முடியாது. சம்மதிக்கத்தான் முடியும். எப்படி இருக்கு கதை! என்ன ஐயா முத்தி வேண்டும் என்றால் அருள் என்கிறீர். அருளுக்கு வழி என்றால் நீ ஏற்க வேண்டியதுதான் பாக்கி என்கிறீர். ஆம். மூன்று தத்துவங்கள் மொத்தம். அசித், சித் ஆகிய உயிர், பகவான். இந்த மூன்று தத்துவங்களையும் அதன் இயல்பு, சிறப்பு என்று அனைத்தையும் என்ன என்று நன்கு தெளிந்துகொள். அந்தத் தெளிவு வந்துவிட்டால் போதும். அருள் எப்பொழுதும் இருக்கிறது என்றும், அதை ஏற்கும் மனப்பக்குவமும் வந்துவிடும். இப்ப காட்டின டயரக்‌ஷன்ல போய்ப்பார். ஹிதம் என்னும் முக்திக்கான வழி சுலபமாக உனக்குள் அமைந்துவிடும்.

முத்திக்கு அருள்சூட

அருள்தேட என்று சொல்லவில்லை. அருள் இருக்கிறது. அதைச் சூடுவதுதான் செய்யவேண்டும். அதற்கு

மூன்றைத் தெளி முன்னம்

அவ்வாறு தெளிந்தால் ?

இத் திக்கால் ஏற்கும் இதம்.

ஒரே குறளில் பெரிய கோலத்தைக் காட்டிவிட்டாரா வேதாந்தாசாரியார்.

***

No comments:

Post a Comment