ஒருவனது கல்வி தனக்கு ஒன்று தெரியவில்லையே என்ற உணர்த்தியில் ஆரம்பம் ஆகிறது. பசித்தவனுக்குத்தான் அது சோறு. பெரும் சாஸ்திரங்களைக் கற்கும் வாழ்க்கை பக்தியாக மலரவேண்டும். பக்தி என்பது ஒரு ஜீவன் தன்னை பகவானின் சொத்து என்ற உண்மையை உணர்ந்து, இவ்வளவு நாள் அவனுடைய சொத்தைக் களவாடித் திரிந்த குற்றத்தை நினைத்து வெட்கமும் கவிழ்ந்த தலையுமாய் 'என் நான் செய்கேன்? ஏதே களைகண்?' என்று நிற்றல். திருட்டிலேயே பெரும் திருட்டு அவனுடையதான இந்த ஆத்மாவை நம்முடையது என்று நினைத்த 'ஆத்மாபஹாரம்' என்ற திருட்டு என்பர் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள்.
அந்த அபஹார நினைவைக் கழிப்பதற்குத்தான் ஸ்வரூப ஞானம் ஏற்படாத மாந்தரையும் 'அடியேன்' என்று சொல்லப் பழக்கினர்.
மேல்கோட் பிராந்தியத்தில் பெரும் வித்வானாகவும், ஆறு தர்சனங்களுக்கும் ஆறு ஆசனங்கள் இட்டு அமர்ந்த மஹா பண்டிதராகவும் இருந்த மாதவ வேதாந்தி என்பார் பராசர பட்டரால் ஆட்கொள்ளப்பட்டு ஸ்ரீவைஷ்ணவத்திற்கு வந்து சேர்ந்தார். அவரே நஞ்ஜீயர் என்னும் மஹாசார்யர். பகவத் விஷயத்தில் ஒன்பதினாயிரப்படி என்னும் வடிவில் நயந்திகழ் உரைவளம் தந்தவர். எல்லோரும் அறுபது வயது பூர்த்தி, எண்பது வயது பூர்த்தி, நூறு வயது பூர்த்தி ஆகியவற்றிற்கு விசேஷம், ஹோமம் என்று கொண்டாட்டம் செய்துகொள்வர். இந்த மாஹாசார்யரோவென்னில், திருவாய்மொழிக்குத் தாம் நூறு முறை காலக்ஷேபம் அர்த்தம் உபந்யாஸம் செய்து, அந்த நூறு எண்ணிக்கையே தம் அகவையாகக் கொண்டு சதாபிஷேகம் கொண்டாடிக்கொண்டார். 'அன்று நான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்திலேன்' என்ற ஸம்பிரதாயக் கருத்தைத் தம் வாழ்வில் கல்வெட்டாக்கி வைத்த மஹாபுருஷர். அவரை ஒருவர் கேட்டார், 'நாம் அறிந்த வைஷ்ணவம் வைஷ்ணவமா? அல்லது ஊரார் அறிந்த வைஷ்ணவம் வைஷ்ணவமா?' என்று.
கேள்வி என்னவென்றால் நாம் நம்மை ஸ்ரீவைஷ்ணவர்கள் என்று அறிந்திருக்கிறோம். நம் மனசாட்சி பொதுவாகத் தெரிந்திருக்கிறது. நாம் வைணவரே என்று. அதுதான் நாம் ஸ்ரீவைஷ்ணவர் என்பதற்குப் போதிய சான்றா? அல்லது ஊரார் எல்லாம் நம்மை ஸ்ரீவைஷ்ணவர் என்று ஏற்றுக் கொண்டால்தான் நமது ஸ்ரீவைஷ்ணவ பூர்த்தி உண்டாகுமா? அதாவது புறத்தில் நமது வேஷம், நடவடிக்கை, அனுஷ்டானம் இவையனைத்தும் மற்றவர்க்கு நம்மை ஸ்ரீவைஷ்ணவர் என்று காட்டி, அதன்மூலம் ஊரார் நம்மை ஸ்ரீவைஷ்ணவர் என்று மதிப்பதாலும், ஸ்ரீவைஷ்ணவத்தைக் கண்டு, பிடிக்காதவர்கள், இவன் ஸ்ரீவைஷ்ணவன் என்று இகழ்வதாலும், இந்த மதிப்பு, இகழ்வு ஆகியவற்றை நாம் நம் ஸம்ப்ரதாயத்திற்காகத் தாங்கிக் கொள்வதாலும் நமது ஸ்ரீவைஷ்ணவத்வம் உறுதியாகிறதா? என்பது கேள்வி.
அதற்கு நஞ்ஜீயரின் பதில் --
நாம் அறிந்ததும் ஸ்ரீவைஷ்ணவத்வம் இல்லை; ஊரார் அறிந்ததும் ஸ்ரீவைஷ்ணவத்வம் இல்லை; அவன் அறிந்ததுவே ஸ்ரீவைஷ்ணவத்வம்.
பதில் என்னவென்றால், நமக்குள் இருக்கும் அஹங்கார மமகாரங்கள் எளிதில் நம்மை விட்டு அகலாதாகையாலே, நம்மைப்பற்றி இல்லாததையும் இருப்பதாக எண்ணி நாம் மகிழக்கூடும். பிறரோவென்னில், வெறும் வெளியாடம்பரங்களையும், புறச்செய்கைகளையுமே பார்த்து மயங்குவர். ஆகையாலே அவர்கள் நம்மைப் பற்றி ஸ்ரீவைஷ்ணவர் என்று கொள்ளும் உயர்வான எண்ணமோ, அல்லது இகழ்ச்சியோ நம்மிடம் உண்மையான ஸ்ரீவைஷ்ணவம் இருக்கிறது என்பதற்கான போதிய சான்றாகாது. பின் யார் கணிப்பு உண்மையான கணிப்பு?
நம்முள்ளும், பிறருள்ளும், நாம் சுய நினைவோடு இருந்தாலும், நினைவற்று இருந்தாலும் அந்தர்யாமியாய் நின்று அனைத்தையும் நோக்கிக் கொண்டிருக்கும் மூர்த்தியான ஸ்ரீமந்நாராயணன் யாரை ஸ்ரீவைஷ்ணவன் என்று கருதுகிறானோ அவனே உண்மையில் ஸ்ரீவைஷ்ணவன் ஆவான். மற்றவையெல்லாம் ஏதோ அவரவர் அபிப்ராயம் என்ற அளவிற்கே நிற்கும். நாரணன் சொத்து இந்த உலகம். இந்த உயிர்களை எல்லாம், உலகங்களை எல்லாம் அவன் தன்னுள் வைத்தும், காத்தும், வெளிநாடு காண உமிழ்ந்தும், அவை முக்தியடைய ஆவன செய்தும் போருகிறான் என்னும் போது அவன் உகக்கும் படியாக நம் கைங்கர்யம் அமைந்தால் அதுவே பயனும், நலனும் ஆம்.
***
No comments:
Post a Comment