Sunday, December 15, 2019

ஐந்து கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்

திருமங்கைமன்னன், பராங்குசன், நாதமுனிகள், யாமுனமுனிகள், ஸ்ரீராமானுஜ முனிகள் என்னும் ஐவரைப் பரவி இந்தக் கட்டளைக் கலித்துறைப் பாடல்களை எழுதியுள்ளேன். --
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

1) 
மாமதிள் கட்டிய மங்கைக் கிறைவன் பராங்குசனைச்
சேமம் தருமோர் சரணெனக் காட்டிப் பராவியதால்
நேமம் மிகவே நெறியென நின்றத் தமிழ்விழவில்
நாமும் நலந்திகழ் நாரணன் நாமம் நவின்றுயவே

2) 
உய்யும் வழியாய் உவந்து வருவான் உரைதருவான்
மெய்யும் நமக்கருள் மாதவ னேயாம் மகிதலத்தீர்
எய்தும் வினையும் எதிரும் பலன்களும் எய்ப்பினிலே
பொய்யிலா வைப்பாய் பொருந்துநற் பேறும் பராங்குசனே

3) 
பராங்குசன் தாளைப் பரவும் அடியார் பொலிந்திடவே
தராதலம் எங்கும் இசையொடு தாளம் திகழ்விண் ணப்பம்
பராவிடச் செய்த பரமநல் நாத முனிவனவன்
சராசர மெங்கணும் சார்ங்கனைக் கண்ட தரிசனமே.

4) 
தரிசனம் தந்திடும் மாதவன் யோகிக் குருகையப்பன்
சிரசை அழுத்தியே சொட்டைக் குலத்தர் எவரெனவே
திருமகள் ஏங்கத் துடிப்புடன் பார்க்கும் திருவருளின்
பெருமை பெரிதால் யமுனைத் துறைவர் திருவடிக்கே

5) 
அடிக்கீழ் அமர்ந்து புகுதரும் ஆழ்வார் அருட்பொழிவில்
படிக்கும் அடியவர் பக்குவம் சார்ந்து பொருள்துலங்கும்
தடிக்கும் வினைக்குத் தடையாம் யதிக்கோன் திருவுளத்தால்
நடிக்கும் எனக்கும் நயக்கும் அருளும் பொலிந்திடுமே.

***

No comments:

Post a Comment