Monday, December 23, 2019

ஹலாயுதரும் வேதப் பொருள்கோள் மூன்று விதமும்

ஹலாயுதர் என்பவர் பெரும் மரபு சான்ற அறிவுக் கடலாக இருந்திருக்கிறார் போலும் 12 ஆம் நூற்ல். ஏகப்பட்ட ஸர்வஸ்வம் நூல்களே எழுதியிருக்கிறார். ஸர்வஸ்வம் என்பது துறை சார்ந்த அடங்கல் திறத்து விளக்க நூல்கள் எனலாம். ஆங்கிலத்தில் Compendium என்று சொல்வார்கள். இவ்வாறு காம்பெண்டியம் பல துறைகளில் எழுதியுள்ளார் ஹலாயுதர். மீமாம்ஸா ஸர்வஸ்வம், வைஷ்ணவ ஸர்வஸ்வம், சைவ ஸர்வஸ்வம், பண்டித ஸர்வஸ்வம் என்று போகிறது பட்டியல். கிடைத்தவை இவை போலும். அதுவும் கிடைத்து இழந்தது மிமாம்ஸா ஸர்வஸ்வம் போல் தெரிகிறது.

லக்ஷ்மணசேனரின் ஆட்சியில் தர்மாதிகாரி வேலையில் இருந்திருக்கிறார். அதாவது சமயம் சார்ந்த நெறிமுறைகளையும், சமயம் சம்பந்தமாக மன்னர் அளித்த நிதிகள் முறைப்படி பயன்படுத்தப் படுகின்றனவா என்று மேற்பார்வை, அதிகாரம் உள்ள அலுவல் போல் தெரிகிறது தர்மாதிகாரி என்பது. ஸர்வஸ்வங்கள் என்று இல்லாமல் அவருடைய நூல்களில் பொதுவாகவே அருமையான நடை வடமொழியில். தெளிவாகக் கருத்துகளை முன் வைக்கும் நேர்த்தி. ஏகப்பட்ட சமாஸங்களாகப் போட்டு எழுதுவதுதான் பிரபலமான ஸ்டைல் என்று இருந்த காலத்தில், கத்தரித்தால் போல் எழுதும் நடை அபூர்வம். அத்தகைய நடை ஹலாயுதருடையது.

வேதங்களுக்கு, நான்கு வேதங்களுக்கும் வியாக்கியானம் செய்தது சாயனர் என்பவர்தான் இல்லையா. சாயனர் 14 ஆம் நூற் ஆ? விஜயநகரப் பேரரசில் இருந்தவர். அவருக்கும் முன்னால் வியாக்கியானம் செய்தவர்கள் என்றால் சிலர் இருக்கின்றனர். கர்க்கர், உவடர், குணவிஷ்ணு, உத்கீதர், ஸ்கந்தஸ்வாமின், மாதவர், வேங்கட மாதவார் இப்படிச் சிலர். ஆனால் 12 ஆம் நூற் இல் கௌட தேசமாகிய வங்காளத்தில், லக்ஷ்மணசேனரின் ஆட்சியில் இருந்த ஹலாயுதர் அனைவருக்கும் முந்தி இருந்தவராகத் தெரிகிறது. அன்றாடம் வீடுகளில் நடைபெறும் வைதிக யக்ஞங்களில் பயன்படுத்தப்படும் மந்திரங்களுக்கு மிக விரிவாக விளக்க உரைகள் எழுதி, நன்கு பொருள் தெரிந்த அறிவையும், தெளிவையும் ஏற்படுத்த வேண்டி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். அது மட்டுமில்லை. அவரது உரையைப் படித்தால், தம் காலத்தில் இருந்த வைதிகப் படிப்பு என்பதை ஆழ அகலமாகக் கற்றுத் தெளிந்தவராக இருக்கிறார் என்று தெரிய வருகிறது. அவர் காயத்ரி மந்திரத்திற்கு எழுதியிருக்கும் உரை அபாரம். இத்தனைக்கும் வேதங்களுக்குப் பொருள் காணும் வழிமுறைகள் மூன்றனுள், அதியக்ஞம் என்னும் வழிமுறையைக் கைக்கொள்பவர்தான். ஆனாலும் அகமர்ஷண மந்திரத்துக்கும், காயத்ரி மந்திரத்திற்கும் ஹலாயுதர் விளக்கம் மிகவும் சிறப்பு.

அது என்ன அதியக்ஞம் என்று யோசிக்கிறீர்களா? வேதங்களுக்குப் பொருள் சொல்வதில் மூன்று வகைப் பள்ளிகள் இருக்கின்றன. மூன்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. அதியக்ஞம், அதிதைவதம், அத்யாத்மிகம் என்பவை அந்த மூன்று. எல்லா மந்த்ரங்களையும் வேள்விகள் சம்பந்தமாகவே பொருள் காண்பது அதியக்ஞம். அனைத்து மந்த்ரங்களுக்கும் இயற்கை சார்ந்து பொருள் காண்பது அதிதைவதம். ஆத்மிகமான பொருளை அனைத்து மந்த்ரங்களுக்கும் காண்பது அத்யாத்மிகம்.

ஹலாயுதர், பின்னால் சாயனர் எல்லாம் யக்ஞம் சார்ந்தே பொருள் கண்டனர். மேற்கத்திய வேத இயல் அறிஞர்கள் இயற்கை சக்திகள் சார்ந்தே பொருள் காண்கின்றனர். அந்தக் காலத்திலும் இது போல் இயற்கை சார்ந்து பொருள் கண்டவர்கள் உண்டு. யாஸ்கர் சில இடங்களில், குத்ஸர் சில இடங்களில் இவ்விதம் பொருள் காண்கின்றனர். ஸ்ரீஅரவிந்தர் நம் காலத்தில் வேத மந்த்ரங்களுக்கு ஆத்மிகம் சார்ந்து பொருள் கண்டவர். பழங்காலத்தில் சாயனருக்குப் பின் வந்த மஹீதரர் ஓரளவிற்கு இப்படிச் சொல்லலாம்.

டெரிடாவும் இந்திய தத்துவமும் பற்றி ஹரால்டு கொவார்டு ஒரு நூல் எழுதியுள்ளார். அதில் டெரிடாவும், அரவிந்தரும் பற்றிய ஒப்புமையை எழுதும் போது இவ்வண்ணம் எழுதுகிறார் -

‘The poets' task, both East and West, is to keep language alive by engaging the inner levels of the spirit and soul. But this does not diminish the outward material side of life. Like Derrida, Aurobindo protests any one-sided overbalancing. It is in the creative engagement of both its inner and outer aspects that language can be vigorous and creative- open to its full possibility.’

அருமையான வடமொழி நடை. தெளிவான நறுக்கென்னும் கருத்து வெளிப்பாடு. சுமார் 400 மந்திரங்களுக்கு, பல சம்ஹிதைகள், ஆரண்யகங்கள், பிராம்மணங்கள், புராணங்கள், தர்ம சாத்திரங்கள் என்று அனைத்து நூல்பரப்பையும் அங்கங்கே துணைக்கொண்டு தமது நூலைச் செய்திருக்கிறார் ஹலாயுதர்.
நூல் - Brahmana-Sarvasvam, A Pre-Sayana Vedic Commentary by Halayudha, Ed by Durga Mohan Bhattacharyya, Samskrit Sahitya Parishad, Calcutta 1960.

***

No comments:

Post a Comment