Monday, December 30, 2019

ஸ்ரீ ஆளவந்தாரும் குருகைக்காவலப்பனும்

ஸ்ரீமந் நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மீட்டதோடு அல்லாமல், அதற்குத் தேவகானம் என்ற வியக்கத் தக்க அதீதமான இசைநெறியில் அமைத்து, தமது மருமகன்களான மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார் என்ற இருவரையும் அதைக் கோவில்கள் எங்கும் பாடி ஆடி அபிநயித்து பக்தர்களிடையே அனுபவத்தில் வளர்த்து வருமாறு ஏற்பாடும் செய்தார். அதனோடும் நிற்காமல், --- 'பரத்வம் தேக வியோகம் ஆனபிற்பாடு திருநாட்டில் பெறும் அனுபவம். வ்யூஹங்கள், விபவம் என்னும் நிலைகளெல்லாம் ஆகமங்கள் பரக்கச் சொல்லுமதாய் இத்தேகம் கொண்டு அனுபவிக்க உரியதாய் இருப்பன அல்ல. அவதாரங்களைச் சொன்னால் அவை சமகாலத்தில் இருந்தோரில் சில கொடுத்துவைத்த புண்ணியாத்மாக்களுக்கு மட்டுமே புரிந்துகொள்ள முடிந்து, மற்றையோரின் அலட்சியத்திற்கு இலக்காகி, என்றோ பெருகி வடிந்து போன வெள்ளம் இன்றைய தாகத்தைத் தீர்க்கவொண்ணாதது போலே என்றோ வந்து போன ராம கிருஷ்ணாதிகள் இன்றுள்ளார் கண்டு பழகி உய்ந்து போக வழியின்றிக் கடந்தகாலத்ததுவாய் இருக்கும். என்றென்றும் மக்கள் புத்தி தெளிந்தால் சென்று கிட்டலாம்படி இருப்பது இரண்டே இரண்டுதான். அவை 'பின்னானார் வணங்கும் சோதி' என்று கொண்டாடத்தக்க அர்ச்சாவதாரம் ஆகிய கோவிலில் எழுந்தருளும் மூர்த்தி. மற்றது 'அடியேன் உள்ளான் உடல் உள்ளான்' என்னும்படி ஆத்மாவுக்கு ஆத்மாவாய் நம் உடலுக்குள்ளேயே அந்தர்யாமியாய் எழுந்தருளும் பரமாத்மாவின் நிலை.

கோவிலில் சென்று கண்காணக்கண்டு, கையாரத்தொழுது, வாயாரப்பாடி, உடலார ஆடி, உள்ளம் சொல் செயல் அனைத்தும் குளிர அடையும் அனுபவத்திற்கு அடைத்த மதிலாக நாம் திருவாய்மொழியைக் காத்து, இசையில் கோத்து காலம் விஞ்சிய நியமமாய் ஆக்கிவைத்து விட்டோம். அந்தர்யாமியை யோகத்தில் நண்ணும் விருப்புடையோருக்கு வாய்ப்பாய் 'யோக ரஹஸ்யம்' என்றொரு நூல் செய்வோம்.' - என்று எண்ணியோ என்னவோ அந்த யோகரஹஸ்யத்தை குருகைக் காவலப்பன் என்னும் சீடரிடம் கொடுத்துத் தமது பேரன் ஆளவந்தார் ஆளான பின்பு அவருக்கு உபதேசிக்கும்படியும் சொல்லிப் போனார்.

ஆளவந்தார் இதைக் கேள்வியுற்று குருகைக் காவலப்பனைக் காணச் சென்றார். அங்கோ குருகைக் காவலப்பன் ஆழ்ந்த சமாதியில் பேச்சு மூச்சின்றி இருக்கிறார். இவரும் சென்றவர் எந்த அரவமும் இன்றி அமைதியாகக் காத்து நிற்கிறார். திடீரென்று கண் விழித்தவர், குருகைக் காவலப்பன் 'இங்கு சொட்டைக் குலத்தில் உதித்தார் எவரேனும் வந்தவர் உண்டோ?' என்று கேட்க யாருக்கும் தெரியவில்லை. ஆளவந்தார் தயங்கியபடியே 'அடியேன் உள்ளேன் சொட்டைக் குலத்தவன்' என்று கூற 'ஆஹா தொழுகுலம் அன்றோ நீவிர்!' என்று கொண்டாடிப் பேசத் தொடங்கினார். ஆளவந்தாருக்கு முதலில் ஆச்சரியத்தை நீக்கிக் கொள்ளத் துடிப்பு. 'ஸ்வாமி! அது எங்ஙனம் சொட்டைக்குலத்தாரைக் குறிப்பாகத் தேடியது?' என்று வினவ, குருகைக் காவலப்பனின் பதில்:

'அதுவா? சமாதியில் ஆழ்ந்து நிலைத்த நிலையில், பெருமாளும் பிராட்டியும் திவ்ய தம்பதிகளாய்க் காட்சியளித்து அடியேனுடைய இதயகமலத்தே வீற்றிருந்தனர். திடுதிப்பென்று பெருமாள் பக்கத்தில் பிராட்டியையும் ஒதுக்கிவிட்டு, முன் 'ஸதா பச்யந்தி' என்று இருக்கும் என்னையும் தலையைப் பிடித்து கீழழுத்தியவாறே எம்பி பின்னால் யாரையோ நோக்கிக் கொண்டிருக்கக் கண்டேன். பெருமாளின் கவனம் இப்படி ஈர்க்கப் படுமானால் அஃது நிச்சயம் சொட்டைக் குலத்து உதித்தார் ஒருவரின் பிரபாவமாகத்தான் இருத்தல் வேண்டும் என்று உணர்ந்து கேட்டேன்' என்றார். நாதமுனிகளின் குலம் சொட்டைக் குலம். (பழமையான அந்தணர் குலங்களில் ஒன்று சொட்டைக் குலம் என்று சொல்கிறது தமிழ்ப் பேரகராதி. சுரோத்திரியர் (வேதம்வல்ல அந்தணர்) என்பது சொட்டை என்று ஆனதா தெரியவில்லை)

என்ன கதைகள் இவையெல்லாம்? நம் கணக்குகளின் தலையில் எல்லாம் கால் வைத்துத் தாண்டி எங்கோ போய் நின்றுகொண்டு ஒய்யாரமாக நம்மை நோக்கும் போது நமக்கு ஒன்றும் புரியவில்லை.

***

No comments:

Post a Comment