Thursday, December 19, 2019

நெஞ்சம் இருக்க நீலமயில் எதற்கு

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் ஒருவர் முருகனைப் பற்றிப் பாடுகிறார் பாருங்கள்! அருணகிரியார் பாடாத பாட்டா? நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. பாரதி பாடலையா? நியாயம்தான். ஆனால் இந்தப் பாட்டிலும் ஏதோ ஒரு மெய்மை, ஓர் எளிய ஆனால் அரிய ஏக்கம் முருகனையும், மயிலையும், நம்மையும் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறது. பாடலைத் தருகிறேன் படித்துவிட்டுச் சொல்லுங்கள். ஆயாசத்தில் வந்து தடவிய தென்றலாய் இருந்தது இந்தக் கவிதை.

’நெஞ்சம் உனக்கே இடமாய் அமைத்தேன்
நீல மயில் எதற்கோ? ’

’செஞ்சொற் சிறுமி குறத்தி மணாளனே,
செந்தில் முருகனே, தேவர்க் கதிபனே --- நெஞ்சம்’

என்னது? நெஞ்சம் எங்கே? நீலமயில் எங்கே? எதற்கு அதற்குப் பதிலாக இது? என்றுதானே தோன்றுகிறது !
‘ஆடுவதில் என் மனத்தை உந்தன்
ஆடுமயில் வென்றிடுமோ?’

கவிதை எழுதியவர் எதற்கு அடி போடுகிறார் தெரிகிறதா?

‘ஓடி வினைத்தோகை விரித்து என்னைப்போல்
உந்தன் மயில் ஓடிடுமோ?’

உன் மயில் வெறுந்தோகைதானே விரிக்கும் என் மனம் வினைத் தோகையே விரிக்குமே!

‘பாடிஉன்னை எனைப்போல உனது
பஞ்சை மயில் பரவிடுமோ?
பர்க்கப் பார்க்கப்
பொறாமை விஞ்சுதடா! -- உளம்
பாதத் தவ மலர்
ஏற்கக் கெஞ்சுதடா! ’

ஏன்? ஏன் முடியாது? ஏக்கம் கோபமாய் மாறியது. கோபத்திற்குக் கண் ஏது.?

‘சூரனை என்றோ சொர்ணமயில் ஆக்கிய
சுடர் வேல் துரு ஏறியதோ?
பாரினை என்றும் ஏந்தும் அருள்
பழுதாய் உரு மாறியதோ?
நேராய் எந்தன் நெஞ்சில் வரத் தடுத்துன்
நீல மயில் சீறியதோ?’

அன்பின் கோபத்துக்கு எதிர் நிற்க முடியாதே! மயிலில் மெதுவாக நழுவுகிறான் கந்தன். அன்பு வளைத்து வாங்குகிறது. கவிதை வடமாகிக் கட்டி வளைக்கிறது.

‘நில்லாய் ஒரு விடை
சொல்லாய் மனமிலையோ? -- இனி
நேர்மைக்கு இடமிலையோ? வரும்
நேரம் வரவிலையோ?’ --- நெஞ்சம்’

யார் இந்தப் பாடலை எழுதியது? ‘நாணல்’ என்ற புனைப்பெயரில் எழுதிவந்த ஆங்கிலப் பேராசிரியர் திரு அ ஸ்ரீநிவாசராகவன் அவர்கள்தான். மேற்கின் சுவை மெருகைக் கன்னித் தமிழில் ஒரு சிட்டிகை கலந்து எழுதிய நயமிக்க பாடல்கள் அவருடையது.
சொற்களில் ஒரு maturity, வழக்கத் தனம் இல்லாத ஒரு வெகுளித்தனம், ஆனால் இவற்றுக்குப் பின் ஓர் உலக மொழியின் சாரத்தில் தோய்ந்த அனுபவம் அனைத்தும் இவரது பாடல்களில் குங்குமப் பூவாய்க் கலந்திருக்கும். இவரது கவிதை நூல், வெள்ளைப் பறவை, மெர்க்குரி புத்தகக் கம்பெனி போட்டது.

***

No comments:

Post a Comment