Wednesday, December 18, 2019

A.V. Subramanian பற்றிய நினைவு

அன்றெல்லாம் மயிலாப்பூர் போனால் எனக்கு வேண்டப்பட்டவர்கள் சிலரைப் பார்த்துவிட்டு வருவது வழக்கம். தாகுர் (ஸ்ரீராமகிருஷ்ணர்), கபாலி இந்த மாதிரி சிலர். மானிடர்களாகச் சிலரைப் பார்ப்பது என்றால் உதாரணத்திற்கு திரு ஏ வி சுப்பிரமணியன். மானிடத்திற்கு அப்பாற்பட்ட அந்தச் சிலர் என்னை நொந்துகொள்வதில்லை. ஆனால் மானிடவராம் இந்தச் சிலர் என்ன நினைப்பார்கள் என்று நான் கருதியதில்லை. சொல்லாமல் கொள்ளாமல் போய் நிற்பதுண்டு. அப்படி ஒரு சுவாதீனம் நானாக எடுத்துக் கொண்டது. ஆரம்ப கட்டத்தில் நான் தத்துவத்தின் பக்கம் மிக அதிகமாக ஊறிவிட்டேன் என்று ஒரு சலிப்பே தெரிந்தது திரு A.V.Subramanian இடம். பிறகு இலக்கியம், கவிதை என்பதிலும் மிக ஊறியவன் என்று தெரிய வந்ததிலிருந்து சரியாகிவிட்டது. பேச்சில் சலசலசல என்று நகைச்சுவை விரவி, குற்றாலத்து இளம் சாரல் போல் யாராவது உரையாடி நீங்கள் கேட்டதுண்டா? மாட்டீர்கள். அதுதான் திரு ஏ வி சுப்பிரமணியன். சாரல் நம்மீது விழத்தொடங்கி கொஞ்ச நேரத்திற்குப் பின்னர்தான் நமக்கே கவனத்திற்கு வரும். அது வரையில் அது தானாய் விளைந்த சுகம் என்று கருதுவோம்.

வடமொழியா, தமிழா, அதுவும் சங்கத் தமிழா, திடுதிப்பென்று ஏதாவது முரட்டு ஆங்கில நூலா எல்லாவற்றையும் நீங்கள் திரு AVS இடம் எதிர்பார்த்துத்தான் செல்ல வேண்டும். இந்த மூன்றிலும் அவரிடம் ஒரு விசேஷம் இருந்தது. என்னவென்றால், வடமொழி நன்கு அறிந்தவர், அதுவும் அதிலேயே பேசவேண்டும் என்றாலும் ஒன்றும் சிரமப்படாதவர் தத்துவப் பிராதான்யமாக இன்றி இலக்கியம் முக்கியம் என்று இருந்தார். நீங்கள் பெரிய தத்துவ வாதி என்று காட்டிக்கொண்டால் மலர்ந்த அவர் முகம் சிறிதே கடுகடுக்கும்.

சரி தமிழிலோ என்றால் காவியத்தமிழ், பாரதித்தமிழ், வள்ளுவத்தமிழ் எல்லாவற்றையும் மீறி சங்கத் தமிழின் கவிச்சுவை என்று வாய் ஓயாமல் சொல்லுவார். அதிலேயே குதித்துக் கடப்பாரை நீச்சல் எல்லாம் போடுகிறவராக இருந்தார். ஆங்கிலமோ என்றால் இலக்கிய ரசனைக்கான உயிரியல் அடிப்படைகளை, மூளையியல் அடிப்படைகளை அலசுகிற நூல்கள் அவர் விரும்பிப் படித்தவை. சங்கப் பாடல்களிலிருந்து சில பாடல்களை சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் சாஹித்ய அகாடமியில். உத்தேசமாக எவ்வளவு நூல்கள் எழுதியிருப்பார் மனிதன்? ஆண்டுகள் நிறைந்த தம் முதுமைப் பருவத்தில் அன்று அழகான புன்னகையுடன் கூறினார், ' 140க்கும் மேல் இருக்கும். பல நூல்கள் என்னிடமே காப்பி இல்லை. யாராவது ரோட் சைட் கடையில் பார்க்க நேர்ந்தால் தயவு செய்து வாங்கி வந்துவிடுங்கள். பணம் தந்துவிடுகிறேன் ' எப்படி இருக்கிறது கதை?

ந கச்சிதா3ஸீத3ந்ருதோக்திநா விநா நிஷேத4தி ப்ரேயஸி கா க3திர் மம|
ஸமாக3மாஹே ஸ்ரவத3ம்பு3ஸம்ஸ்தி2த: ப3க: ப்ரஸந்நோSர்தி2த மத்ஸ்ய ஸம்ஹதி: ||

இந்த ச்லோகம் குறுந்தொகைப் பாட்டு ஒன்றின் ஸம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு. குறுந்தொகை 25

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
-கபிலர்.

இது ஒரு பாடல் மட்டும் இல்லை. குறுந்தொகையிலிருந்து சுமார் 200 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஸம்ஸ்க்ருத பத்யங்களாகச் செய்திருக்கிறார் திரு ஏ வி எஸ். வெளியீடு -- ஸாஹித்ய அகாடமி. திரு ஏ வி எஸ் ஓர் அருமையான இலக்கிய வாதி. வடமொழி சரளமாகப் பேசும் வல்லமை கொண்டவராக இருந்தார். தமிழில் சங்கப் பாடல்களை மிகவும் நேசிக்கும் ரசிகர். வடமொழி காவிய சாத்திரக் கோட்பாடுகளையும், தமிழ் தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகளையும் இணைத்து சங்கப் பாடல்களை ரசித்து, நம்மையும் ரசிக்க செய்வதில் மிகத் திறமையானவர். அவரே காவிய சாத்திரக் கோட்பாடுகளில் புதிய தடங்கள் உருவாக்கியவர். தமிழில் அளபெடையை கவிஞர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்று அவருடைய விளக்கம் அருமை.

200 குறுந்தொகைப் பாடல்களுக்கும் ஸம்ஸ்க்ருத ஆக்கம, கூடவே ஸம்ஸ்க்ருதத்தில் விளக்கம், துணைக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு பாடல்களுக்கு என்று தமிழ் தெரியாத பிற மொழி இந்தியர்க்கு நன்கு பயன்படும் வண்ணம் சங்க நூல் ஒன்றை அறிமுகப் படுத்தியிருக்கும் திரு ஏ வி எஸ் அவர்களின் அரும்பணி பாராட்டிற்குரியது. ஓர் அருமையான ஆங்கில முன்னுரை நூலை முகப்பில் அணி செய்கிறது. அதில் ஆசிரியர் கூறும் ஒரு கருத்து கவனத்திற்குரியது. த்வனி என்ற வடமொழி காவிய சாத்திரக் கருத்தின் மிக நுணுக்கமான உதாரணங்களாகச் சங்கப் பாடல்கள் திகழ்கின்றன என்று கூறுகிறார்.

Suggestion or dhvani has received a great deal of attention at the hands of Sanskrit rhetoricians. But the use of this device by creative poets is more extensively met with in Tamil Sangam love poetry than even in Sanskrit literature. (pp14)

திரு ஏ வி எஸ் 200க்கும் மேற்பட்ட நூல்கள் இலக்கிய சம்பந்தமாக எழுதியுள்ளார். என் பார்வையில் பட்டவரை சுமார் முப்பது நூல்களின் காலவரிசை நிரல் தருகிறேன்.

1) அன்பு மிகுந்த மதம் -- கலைஞன் பதிப்பகம் --ஜூலை 1975

முன்னுரையில் திரு ஜெயகாந்தன் கூறுவது: "சமயத்துக்காக இலக்கியம் படைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிற உலகத்தில் மொழியினால், இலக்கிய ரஸானுபவத்தால் கவிதையை ஒரு மதமாக மாற்றுகிற மகத்தான பணியை எமது முன்னோர் பலர் தமிழ்மொழியில் செய்திருக்கின்றனர் என்பதற்கு இந்நூல் ஒரு சிறு சான்று"

2) சங்கப் பாட்டில் பொங்கும் உணர்ச்சி --- சேகர் பதிப்பகம் --1983

KEATS ஒரு கடிதத்தில் Poetry should surprise by a fine excess என்று கூறுகிறார். அதைப்படித்த ஆசிரியர் அந்தக் கருத்தில் உள்ளத்தை இழந்து, சங்க இலக்கியத்துக்குப் பொருத்திச் சிந்தனை செய்யத் தொடங்கிய விளைவு இந்த நூல்.

3)சங்கப் பாட்டில் புதிய பார்வை (அகநானூறு) -- சேகர் பதிப்பகம்-- 1984

குறியீடு, பாத்திரங்கள் வழியே கவிஞன் தன் கருத்தைக் கூறுவது, கலையின் வரம்புகளை உகந்து உணர்ச்சிகள் மீதுறும்படியாக கவிதை அமைத்தல், அந்த உணர்ச்சியை படிப்பவர்க்கும் குன்றாமல் பெயர்த்தளித்தல் ஆகிய நான்கு இலக்கியக் கொள்கைகளை வைத்து அகநானூற்றிலிருந்து சில பாடல்களுக்கு ஆசிரியர் கண்ட விளக்கம் இந்த நூல்.

4)பாரதி கண்ட கவிதைத் தலைவி -- வானதி பதிப்பகம் -- 1982

பாரதியின் வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி என்று தொடங்கும் பாடலை வைத்து பாரதியின் கவிதை இலக்கணங்களைப் பலபட பேசுகிறார் ஆசிரியர்.

5) தமிழ்க் கவிஞன் தேர் திறன் -- திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் -- 1989

'கவிஞன் புலன்கள் வழியாக அவன் உள்ளத்தில் வந்து தாக்கும் அத்தனை ஆயிரம் அலைகளையும் அவன் தன் கவிதைக்குப் பயன்படுத்துவதில்லை. மிகமிகச் சிலவற்றையே தெரிந்தெடுத்துப் பாடலாக ஆக்கித் தருகிறான் கவிஞன்' என்று கூறும் ஆசிரியர் கவிஞனின் தேர்திறனை ஆராயும் நூல் இது.

6) அளபெடையும் ஆழ்பொருளும் - திருக்குறள் நுண்ணாய்வு -- திருக்குறள் பதிப்பகம் -- 1991

அளபெடை ஓசை நிரப்பத்தானே, பொருள் விளக்கத்தில் அதன் பங்கு என்ன இருக்க முடியும் என்று நினைத்து திருக்குறளுக்குப் பொருள் கண்ட முன்னையோர் விடுத்துச் செல்ல, 'வள்ளுவர் தமது பாக்களில் அளபெடையின் வாயிலாகப் பொருளுக்கு வளம் தேடியதைக் கண்ட' ஆசிரியர் அந்த இன்பத்தை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் நூல். 100 குறள்களால் நிறுவுகிறார் எப்படி அளபெடை பொருள் சிறக்கும் உத்தியாகப் பயன்படுகிறது என்று. முக்கியமான நூல்.

7)கம்பன் காட்டும் களன் -- நர்மதா பதிப்பகம் -- 1987

தமது பல புதிய கருத்துக்களைக் கொண்டு கம்பனை புதுப்பார்வை பார்க்கிறார்.

8) பேரெழில் வாழ்க்கை -- சேகர் பதிப்பகம் -- 1990

'பதிற்றுப் பத்தினை ஒரு வரலாற்றுக் கருவூலம் என்று கருதும் பொது வழக்கத்திற்கு மாறாக, அதைப்பாடிய கவிஞர் நோக்கில் அது கவிதையாகத்தான் அமைந்து பாடப்பட்டது' என்ற நிச்சயத்துடன் கவியின்பம் காட்டுகிறார் ஏவிஎஸ்.

9) கம்பன் காப்பியம், கதை மாந்தர் கூற்று -- தமிழரங்கம் -- 1995

முனைவர் ப மருதநாயகத்தின் நல்ல அணிந்துரை வரவேற்க அமைந்திருக்கிறது நூல். கதை மாந்தரின் மூலம் வெளிப்படும் கூற்று கவிச்சுவை மிகும் உத்தி என்பது ஆசிரியரின் கருத்து. அவ்வழியில் கம்பன் நம்மோடு உறவாட நூல் களமாகிறது.

10) ரசிக்கச் சொல்கிறான் கம்பன்! -- நர்மதா பதிப்பகம் -- 1998

ரசிக்க வைக்கிறார் ஆசிரியர்.

11) ஞானத்தை அடையும் வழி -- கலைஞன் பதிப்பகம் -- 1999

உபநிடதங்களில் வெளிப்படும் நகைச்சுவைக் கட்டங்கள் மூலம் ஞானம் பிறந்த தடங்களைக் காட்ட முயல்கிறார் ஆசிரியர்.

12) கம்பனில் உவகை ஊட்டும் உணர்ச்சிகள் -- வானதி பதிப்பகம் --1999

கம்பனைப் பற்றிய நாலாவது நூல் புதிய கருத்துக்களுடன்!

13) இனிக்கும் இலக்கியம் -- அருள் பதிப்பகம் -- 1999

'இலக்கியம் எனக்கு 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து இன்பம் வழங்கி வருகிறது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று எழுதியுள்ளார் ஆசிரியர்.

14) சங்கப் பாட்டில் குறியீடு -- ராஜராஜன் பதிப்பகம் -- 2000

என்றோ ஒருநாள் தமிழ்ச் சமுதாயம் சங்க நூல்களைப் பாராட்டத்தான் போகிறது என்ற ஏக்கத்தில் விளைந்த வேள்வி அவி இந்த நூல்.

திரு ஏ வி எஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களில் சில

1) Stray Flowers -- World Poetry Society 1976

2)Convention and Creativity in Sangam Love Lyrics --Tamil pathippagam -- 1980

3) Unity of Sentiment in Sanskrit Plays -- University of Madras -- 1982

4) The Unique viewpoint of a Poet -- Surabharathi Samithi -- 1981

5) The innovative genius of Bhavabhuti -- 1983 - The CPR foundation

6) Waves from the Chandogya -- 1985 - S Viswanathan Pvt Ltd

7) The Focus on the Speaker -- 1985 -- ....

8)Fine Excess of Poetic Sentiment -- 1985 ....

9) Poetry in Sanskrit Plays - 1984 -- university of Madras

10)The aesthetics of Wonder - Motilal Banarsidass--1988

11) A Universal Theory of aesthetics -- S Rambharathi Corp 1997

12) The Indian Theory of Aesthetics - a reappraisal -- Rashtriya Sanskrit Sansthan 2005

இவைதான் என் பார்வைக்கு வந்தவை. மிச்சம் எங்கு என்று கண்ணில் படும் தெரியாது. இன்று போனால் அவரைப் பார்க்க முடியாது. ஏதோ திடீரென அவருடைய நினைவு வரவே அந்தக் காலத்தில் அவரைப் பற்றி நான் எழுதியதையே கண்டு திருப்திபட்டுக் கொள்கிறேன்.

*** 

No comments:

Post a Comment