ஒரு கெமிஸ்ட்ரி வகுப்பு. மாணவர்கள் எங்கோ பொருளின் ஆழத்தில் உள்ளே மறைந்து நடந்துகொண்டிருக்கும் நுண்மையான சலனங்களையும், அதற்கான தத்துவச் செயல்பாடுகளையும் பற்றிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். சாதாரண உலகில் காணக்கிடைக்காத கோவாலண்ட் பாண்ட்ஸ், கண்ணிற்கு ஒரு காலும் எட்டாத விசைகளின் திசைக்குறிகள் போன்ற எவ்வளவோ விஷயங்கள் பேசப்படுகின்றன. ஆசிரியர் பென்ஸீன் மாலிக்யூலைப் பற்றி விவரிக்க வேண்டி ஒரு லேப் மாடல் பென்ஸீனைக் கொண்டுவந்து மேஜையில் வைக்கிறார். ஆனால் ஆசிரியர் ஆரம்பிக்கும் போது ஒன்றைக் கூறினார்.
'மாணவர்களே! இதுதான் பென்ஸீன் மாலிக்யூல்.'
நியாயமா இது? அந்த மரக்கட்டை வேலைப்பாடா பென்ஸீன் மாலிக்யூல்? அறிவாளிகள் என்று பெயர் வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? அந்த மாணவர்களில் யாரேனும் ஒருவராவது அதை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாதா? அனைவரும் அதை நிர்விவாதமாக ஏற்றுக்கொண்டு ரசாயன சாத்திரத்தில் கேள்வி கேட்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் அந்த வகுப்பு முடியும் வரையில் அந்த மரக்கட்டம் பென்ஸீன் மாலிக்யூல்தான். அப்படித்தான் வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதன் மூலம் சந்தேக விளக்கம் பெற்று அந்த மாணவர்கள் பெரும் பட்டம் பெற்று, அறிவாளிகளாகி பல வேறு துறைகளிலும் திகழ்கின்றனர். சிலர் அதே கல்லூரியிலும் சேர்ந்து அதே வகுப்பறையிலேயே வந்து நுழைந்து மீண்டும் அந்த மரக்கட்டத்தைப் பார்த்து இதுதான் பென்ஸீன் மாலிக்யூல்' என்று பாடம் எடுக்கின்றனர். பாடம் நடக்கிறது. அறிவு விளக்கமும், போதனையும் தொடர்கிறது. இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. ஒரு கற்பனையைச் சொல்லி அதன் மூலம் உண்மை அறிவு விளக்கம் ஏற்படுமா? ஏற்படும் என்றால் அது கற்பனை என்பதனோடு சேர்த்தியா? மரக்கட்டத்தைப் பென்ஸீன் என்று சொன்னதன் மூலம் பெற்றது என்னவோ அறிவின் விளக்கம். அப்பொழுது அது அறிவு விளக்கத்திற்கான மாடல் என்பது புரிகிறது. அதை அந்த மனோபாவத்தோடு அணுகும் போதுதான் அதன் உண்மையான பயனைப் பெறுகிறோம். அதை வெறும் மரம் என்று நினைப்பவர் அப்படியே நின்று விடுகிறார். அவர் விஞ்ஞானத் துறைக்குள் செல்வதில்லை. ஆனால் அதை பென்ஸீன் என்று கருதியவர்கள்தாம் மேற்படிப்புக்குப் போகின்றார்கள்.
இது விக்ரஹம்; மண்ணால் ஆனது; கல்லால் ஆனது; லோகத்தால் ஆனது என்று நினைப்பவர் எந்தப் பலனையும் அடைவதில்லை. கடவுள் என்று ஒப்புக்கொண்டவர் மேலும் மேலும் ஆன்மிகத்தில் நுண்புரிதல் மிக்கவராய் முன்னேறுகிறார். அந்த விக்ரஹம் கடவுள் என்று ஒப்புக்கொண்ட பிறகு அங்கு என்னென்ன விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் அந்தக் கடவுள் என்ற ரீதியாக நடை பெறுகின்றன. எந்த விதமான தெளிவை அதில் ஈடுபடுபவர்கள் அடைகின்றனர் என்பதுதான் விக்ரஹம் என்பதன் உண்மையான பயன். ஹிந்து மத சாத்திரங்களில் ஆழமாக ஒருவர் போகப்போகப் பலவற்றையும் புரிந்து கொள்கிறார்.
கோயிலில் ஒருவர் போனால் அவர் அங்கு காண வேண்டியது அர்ச்சாவதாரமாகிய மூர்த்தியை மட்டுமே. அதை விட்டுவிட்டு அந்த மூர்த்தத்தின் உபாதாந வஸ்து என்ன என்று ஒருவர் ஆய்ந்து கொண்டிருப்பாரேயானால் அவர் தாம் பெறக்கூடிய பயனை வீணடிக்கிறார் என்று கூறுவர் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள். உபாதாந வஸ்து என்றால் எந்தப் பொருளைப் பயன்படுத்தி அந்த விக்ரஹம் செய்யப்பட்டிருக்கிறதோ அந்தப் பொருளைக் குறிக்கும். அந்த வஸ்துவால் ஆன விக்ரஹத்தின் மீது எந்த தெய்வ மூர்த்தியைப் பக்தியின் கண்கள் காண்கிறதோ அந்த மூர்த்திதான் அங்கு பிரதாந நோக்கம் என்ற தெளிவு கோயிலில் பக்தி பூர்வமாக ஈடுபடும் மக்களுக்கு முக்கியமானது. கோயிலில் முதலில் உபாதாந வஸ்துவை வைத்து விக்ரஹத்தைச் செய்ததும், அந்த விக்ரஹம் தன்னைப் போல் மூர்த்தியாகிவிடுவதில்லை. ஆவாஹனம் என்பது அந்த தெய்வ மூர்த்தியை அந்த விக்ரஹத்தில் மனோநிச்சயமாக வந்திருக்கச் செய்தல். அதாவது அந்த விக்ரஹத்தை இனி மனப்பூர்வமாக அந்த தெய்வ மூர்த்தியாகக் கருதுவது என்ற நிச்சயம். ஏன் அவ்வாறு கருத வேண்டும்? தத்துவ நிலையில் உள்ள தெய்வ மூர்த்தியினிடத்தில் மனம் தியானத்தில் நிலைக்க வேண்டி இந்த விக்ரஹ ஆராதனை பயன்படுகிறது. எனவேதான் விக்ரஹத்தை தியாலம்பனம் என்று பெரியோர் கூறுவர். அந்த விக்ரஹம் இயற்கையான பொருளுக்கு அப்பாற்பட்டதாகவும், தெய்வத் தன்மை வாய்ந்ததாகவும், அனைத்து நன்மைகளும் பொலிய நிற்கும் ஆதாரமாகவும் கருதப்படுகிறது. அதாவது சுபாச்ரயம் என்று கருதப்படுகிறது.
அதாவது கோயிலுக்குள் இருக்கும் ஸ்தலமும், ஆகாயமும் (Topos and the Space) பிறர் கண்ணில் படும் நிஜம் வேறு. அதே ஒரு பக்தரின் கருத்தில் படும் மெய்மை வேறு. கோயில் என்ற அந்த ஸ்தலத்திற்குள் அந்த ஆகாயத்திற்குள் ஒரு பக்தர் மட்டுமே கருத்தியல் ரீதியாக நுழையவே முடியும். எனவேதான் கோயிலுக்குப் போவதென்றால் அதற்கு உரிய பக்தி, அனுஷ்டானம், உரிய ஆடைகள், உடலை அந்த பக்திக்கு ஏற்ப தெய்வத்துக்கு உரியதாக்கிய சின்னங்கள் ஆகியவற்றை அணிந்துதான் செல்ல வேண்டும் என்று வைத்தனர். பக்தியுடன் போவதுதான் கோயில். பக்தியுடன் போனால்தான் கோயில்.
***
No comments:
Post a Comment