Monday, December 30, 2019

திவ்ய ப்ரபந்தம் ஏன் தோன்றியது?

சிருஷ்டி ஏன் நடைபெறுகிறது? உலகம் ஏன் உண்டானது? உயிர்கள் ஏன் பிறக்கின்றன? நமக்கு வாழ்க்கை என்பது ஏற்பட்டிருக்கிறது. அந்த வாழ்க்கையின் பொருள் என்ன? இது போன்ற கேள்விகளுக்கு உலகில் காலம் காலமாகப் பலரும் பல விதங்களில் விளக்கம் தந்திருக்கிறார்கள். இந்த விளக்கங்களைப் படிக்கும் பொழுது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசமானவை. நல்ல தெளிவுகளைப் பல பெரியோர்களும் கூறியிருக்கும் விளக்கங்களிலிருந்து நாம் பெறமுடியும். வாழ்வின் பொருள் என்ன என்பதைப் பலவேறு விதத்தில் பெரியோர்கள் மனித குலத்திற்கு விளக்கமாகத் தந்திருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் என்னும் மகான் ஸ்வாமி நம்பிள்ளையின் சீடராக இருந்தவர். நம்பிள்ளையின்பால் அளவுகடந்த பக்தி கொண்டவர். ஸ்ரீவைஷ்ணவ சமுதாயத்திற்கும், பக்த உலகத்திற்கும் ஒருங்கே மிகப்பெரும் நன்மை புரிந்தவர் ஜீயர். காரணம் என்னவெனில் அனைத்து ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோருடைய சரிதாம்சங்களை ஒருங்கு திரட்டி ‘குருபரம்பரா ப்ரபாவம் என்னும் நூலை அருளியுள்ளார். இன்றும் பக்த சமுதாயத்தின் கண்கண்ட ஆன்ம சாதனையாகத் திகழ்வது இந்த நூலைத் தொடர்ந்து வாசித்தலும், கேட்டலும் ஆகும். ஒரு நூலை வாசித்தலே மிகச் சிறந்த ஆன்ம சாதனையாக ஆகிவிட முடியுமா என்று ஐயுறுபவர்கள் தெளிவடைய ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பது இந்த மஹா கிரந்தம் ஆகும்.

இந்த நூலோடு மற்ற ஓர் அரிய நூலையும் அருளி பக்த உலகத்திற்குப் பேருபகாரம் புரிந்தவரும் இந்த ஜீயரே ஆவர். அந்த கிரந்தம்தான் வார்த்தாமாலை என்பதாகும். ஆசாரியர்கள் பலரும் பல காலங்களில் நடைமுறை நிகழ்ச்சிகளின் இடையில், பரஸ்பரப் பேச்சுகளினிடையில், ஒரு சில சூழ்நிலைகளில் கூறியருளிய வார்த்தைகள், கருத்துகள் ஆகியவற்றைப் பல சமயம் அவற்றின் சூழ்நிலைக் குறிப்புகளையும் விடாமல் பதிவு செய்திருக்கும் அரும்பணி இந்த நூலாகும். இவ்வாறு பெரியோர்களின் சரிதங்களையும், அவர்கள் யதேச்சையாகக் கூறியருளிய பொன்மொழிகளையும் பிற்காலத்தவர் இழந்துவிடாமல் பதிந்துவைக்க எண்ணம் எப்படி அந்தக் காலத்தில் பின்பழகியபெருமாள் ஜீயருக்கு ஏற்பட்டது என்பது நினைத்தால் வியப்பு தரும் ஒன்றாகும்.

திருக்கலிகன்றிதாஸர் என்னும் பெயருடைய ஸ்வாமி நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமானவர், மனிதர்களுக்கு அறியாதன அறிவிக்கும் உத்தமர், படிப்பவர்கள் அனைவரும் தமக்குக் குருவாகக் கருதி வணங்கும் தன்மையர் - என்று பின்பழகியபெருமாள் ஜீயரைப் பற்றிக் கூறுகிறது அவரைப் பற்றிய தனியன் சுலோகம்.

கலித்வம்ஸி தயாபாத்ரம், பச்சாத்ஸுந்தர ஸம்ஜ்ஞிகம்|
அஜ்ஞாதஜ்ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேசிகம் ஆச்ரயே ||

ஆம். அப்படித்தானே இவருடைய நூல்கள் இல்லையென்றால் ஆழ்வார்கள், ஆசாரியர்களின் சரிதங்களில் நடந்த பல விஷயங்களையும், அவர்களுடைய பொன்னே போன்ற பாவன மொழிகளையும் எப்படி நாம் அறிய முடியும்?

பின்பழகியபெருமாள் ஜீயருக்கு ஸ்வாமி நம்பிள்ளைபால் இருந்த ஆசார்ய பக்திதான் எத்தகையது என்பதை நாம் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளின் வாக்கால் உணர முடிகிறது.

’பின்பழக ராம்பெருமாள் சீயர் பெருந்திவத்தின்
அன்பதுவு மற்றுமிக்க ஆசையினால் - நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள்செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்.’

ஜீயர் அருளிச்செய்த குருபரம்பரா ப்ரபாவம் என்னும் நூலில் அவர் நூலின் தொடக்கமாகத் தந்திருக்கும் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஏனெனில் மேலே முதலில் குறித்த சிருஷ்டி, வாழ்க்கையின் பொருள் போன்ற பல உலக முக்கியமான கேள்விகளுக்கு ஸ்ரீவைஷ்ணவ நன்னெறி எத்தகைய விளக்கம் தந்திருக்கிறது என்பதை மிகவும் சாரமாக ஜீயர் தருகின்றார்.

உயிர்கள் பெருத்த அறியாமை இருளில் முழுகிக் கிடக்கின்றன சிருஷ்டிக்கு முந்தைய கணம்வரையில். சித் வஸ்து என்னும் உயிருக்கும், ஜட வஸ்துவுக்கும் எந்த வேறுபாடும் இன்றியே அவற்றின் கலந்து முயங்கிய நிலை உள்ளது. இத்தகைய நிலையில் இருக்கும் ஜீவன் தன்னுடைய அறியாமை ஆகிய தமஸ் நீங்கி மறைப்புண்ட தன் இயல்பாகிய ஞானம் ஒளிரப் பெறவேண்டும் என்றால் அந்த ஜீவனுக்கு பிறவி, கருவி கரணங்கள், வாழ்க்கை என்பன அமைய வேண்டும். அப்பொழுதுதான் ஒரு ஜீவன் தன் கர்மங்களை நீக்கிக் கொள்ள முடியும். ஆனால் உதவிக்காக தந்த பிறவியை உபத்திரவமாக ஆக்கிக் கொள்கிறது ஜீவன். விவேகத்திற்கு உதவியாகத் தந்த புத்தியைக் கத்தி போல் ஆக்கித் தன்னையே அழித்துக் கொள்கிறது. இந்த முதலில் தந்த உதவி பயன்படவில்லை என்றுதான் இரண்டாம் கட்ட உதவியாக சாத்திரங்களைத் தருகிறான் பகவான். அதுவும் பயன்படவில்லை என்றதும், தானே அவதாரங்களாய் வந்து ஜீவனை மீட்க முயல்கிறான். அப்பொழுதும் பயன்படாமல் போகவே ஆழ்வார்களைப் பிறக்கச் செய்தான் என்று ஜீயர் கூறும் விளக்கத்தைக் கருத்தை மட்டும் ஒரு கோவையாக ஆக்கித் தருகிறேன்.

- பகவான், உயர்ந்த ஆனந்தமயமான உலகத்தில், பரம்பொருளாகிய தனக்கு முற்றிலும் பயன்கருதா கைங்கரியம் ஆகிய ஈடுஇணையில்லாத ஆனந்தமயமான உயர்ந்த பேற்றினை, நித்ய முக்தர்கள், முக்தர்கள் இவர்கள் ஒப்ப, இவர்களோடு சேர்ந்து பெறுவதற்கு அனைத்து உரிமையும் உள்ளவர்களாய் இருந்தும் கர்மங்களில் கட்டுண்ட ஜீவர்கள் அந்தோ இழக்கின்றார்களே என்று அவன் துயரம் அடைகிறான்.

பத்த (baddha) ஜீவர்களோ, அதாவது கட்டுண்ட ஜீவர்களோ கர்மங்கள் கழிந்தால்தான் தங்களுக்கு உரித்தான அந்த உயர்ந்த நற்பேற்றைப் பெற முடியும். அவர்கள் கர்ம பந்தங்களினின்றும் விடுபட வேண்டுமெனில் ஜீவர்களுக்கு கரணம், களேபரம், உலகில் பிறப்பு முதலியன தந்து, தங்கள் கர்மத் தொகுதியைக் கழித்துக் கொள்வதற்கு வாய்ப்பு நல்க வேண்டும். மிகுந்த கருணையினால் அத்தகைய வாய்ப்பை சர்வேச்வரன் தந்தான். அசித்தோடு சூக்ஷுமமாகச் சிறிதும் வேறுபாடு தோன்றாமல் கலசிக் கிடந்த ஜீவர்களுக்குக் கரணம் ஆகிய இந்திரியங்கள், களேபரம் ஆகிய சரீரங்கள், போகங்கள் அனுபவிக்க, கர்மங்கள் புரியத் தகுந்த சூழ்நிலைகளாகப் பிறப்புகள், அதற்கேற்ற உலகம் எல்லாவற்றையும் சிருஷ்டி செய்தான். அவன் சிருஷ்டி செய்த நோக்கமாவது கரண களேபரங்களைக் கொண்டு ஜீவர்கள் தம் கர்மங்களைப் போக்கி, பரம்பொருளாகிய தன்னுடைய திருவடிகளைத் தொழுவார்கள் என்ற நோக்கத்தில் இவற்றைச் செய்தான்.

ஆனால் ஜீவர்களோ தங்களுக்குக் கொடுக்கபட்ட வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். வாழ்க்கைக்கு உதவியாகத் தந்த கத்தி, புணை முதலிய கருவிகளைக் கொண்டு வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளாமல், கத்தியால் அழிவையும், புணைகளில் ஏறிக் கடலில் போய் அமிழும் அனர்த்தங்களையும் செய்து கொள்வது போன்று, ஜீவர்கள் பகவானை அடைவதற்காக அவன் தந்த ஆக்கை, இந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உலக விஷயங்களில் ஈடுபடுதல், உலக இன்பங்களில் தங்களைப் போக்கிக் கொள்ளுதல், பொருள் பற்றில் அவனை மறந்து விடுதல் என்று தங்களுக்குத் தாங்களே கேட்டினைச் சூழ்ந்து கொண்டனர்.

பகவானும் மிகவும் மனம் வருந்தி, ஜீவர்களுக்கு நல்வழி எது தீவழி எது என்று பிரித்து அறிந்து கொள்ள வசதியாக வேதங்கள் முதலிய சாத்திரங்களைத் தந்தால், அதனால் வழிதவறாமல் தன்னிடம் வந்து சேருவார்கள் என்று நம்பி சாத்திரங்களை ரிஷிகள் மூலமாக வெளியிட்டான். ஆனால் ஜீவர்கள் அப்பொழுதும் சாத்திரங்களை அறிந்து நல்வழி அல்வழி என்று அறிந்து தன்னிடம் வராமல் மேலும் மேலும் தங்களுக்கு நாசத்தைச் சூழ்த்து கொள்வார்களாய், தாங்களே எதற்கும் கட்டுபடாதவர்கள், கடவுள் என்றெல்லாம் எதுவும் இல்லை என்று தங்களது ஆத்மா தங்கள் இஷ்டம் என்ற எண்ணத்தைக் கைக்கொண்டு அதனால் பகவானின் உடைமையான தங்கள் ஆத்மாவைக் களவு காணும் குற்றமாகிய ஆத்ம அபஹாரம் என்பதைச் செய்தவர்களாய் விபரீதமாகப் போனார்கள்.

பார்த்தான் பகவான். சரீரம், பிறப்பு ஆகியவை தந்தாலும் வழிதவறிப் போனார்கள். நல்வழி அறிவதற்காக சாத்திரம் ஆகிய உதவியைச் செய்தால், அதன்வழியே போகாது, தம்வழியே போய்க் கெடுகிறார்கள். சரி. நாடு காக்கும் அரசர்கள் எல்லைப் புறங்களில் உள்ள மக்கள் சமுதாயம் கீழ்ப்படியாது எதிர்த்துப் போனால் முதலில் தமது ஆணைகள் அடங்கிய ஓலையை அனுப்புவார்கள். அதற்கும் அமைதி விளையவில்லையென்றால் தாமே நேரே சென்று அடக்கி வருவதற்காகச் செல்வார்கள். அது போன்று பகவானும் தான் வெளியிட்ட சாத்திரங்களை மக்கள் ஏற்று அவற்றின் வழி ஒழுகவில்லை என்றதும் தானே நேரில் அவதரித்து ஜீவர்களைத் தன்னை நோக்கித் திருப்பப் பார்த்தான். அப்படியும் ஜீவர்கள், தங்களைப் போன்றே பிறந்து வளர்ந்த கடவுளின் அவதாரங்களைப் பார்த்துத் தம்மைப் போலவே கேவலம் அவர்களும் ஜீவர்கள்தான் என்று நினைத்து, அதனால் அவர்களின் உபதேசங்களைப் புறக்கணித்து, அவர்களோடு எதிர்த்து எதிரம்பு கோக்கவும் செய்தார்கள்.

பகவான் இதைக்கண்டு சரி இது நம்மால் ஆகும் காரியமில்லை என்று யோசித்து, மிருகங்களைப் பிடிப்பவர்கள் அந்த மிருகங்கள் ஈர்ப்புண்ணும் அதையொத்த மிருகங்களைக் கட்டி வைத்து அதன் மூலம் காட்டு மிருகங்களைப் பிடிப்பதைப் போன்று, இவர்களையொத்த ஜீவர்களைக் காட்டித்தான் இந்த ஜீவர்களை ஈர்த்து நம் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து தன்னிடம் சின்மயமாய் இருக்கும் ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலை, ஸ்ரீ, பூமி, நீளா, அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் முதலிய நித்யஸூரிகளை, 'நீங்கள் திராவிட தேசத்தில் சென்று நதிக்கரைகளின் ஓரமாகப் பிறவி எடுத்து மக்களுக்குத் தமிழ் மொழியில் உபதேசங்களைச் செய்யுங்கள்' என்று அனுப்பினான். அவர்கள்தாம் காவிரி, தாமிரபர்ணி முதலிய நதிக்கரைகளில் ஆழ்வார்களாய் அவதரித்தார்கள். பகவானும் அவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளி, அவர்களின் மூலமாக அனைவருக்கும் பயன்பட வேண்டித் திவ்ய ப்ரபந்தங்களை வெளியிட்டான். இவ்வாறு ஆழ்வார்கள் தோன்றினார்கள். --

இவ்வண்ணம் பின்பழகிய பெருமாள் ஜீயரின் நூலான குருபரம்பரா பிரபாவம் என்னும் குருபரம்பரையின் பெருமைகளைக் கூறும் நூலில் பிரவேசம் என்னும் நுழைவாயிலில் ஜீயர் எழுதியுள்ளதைச் சுருக்கி எளிமையாகத் தந்தேன். உலகின் சிருஷ்டி, உயிர்களின் பிறப்பு, மனித வாழ்க்கை, ஜீவர்கள் முக்தி அடைதல் என்ற அனைத்து உலகிற்கும் பொதுவான தத்துவ விளக்கங்களாகவும், ஆன்ம சாதனையாகவும் ஆழ்வார்களின் திருமால்நெறி திகழ்கிறது என்பதை ஜீயரின் அரிய விளக்கங்கள் நமக்கு உணர்த்துவதாகுக!

***

வாழ்க்கைக்கு மிக முக்கியம் ஆன்மிகம்

வாழ்ந்து அனுபவித்துப் பின் ஓய்ந்து அடங்கி முதுமையில் இறப்பை எதிர்நோக்கியிருக்கும் பொழுது கவலைப்பட வேண்டியது மதம் என்னும் சமாசாரம். வாழும் போது ஆன்மிகம் பற்றிக் கவலைப் படுபவன் வாழ்வை இழக்கிறான். -- இதுதான் உலக நடை போதிக்கும் யதார்த்தமான வார்த்தை. பொறிபுலன்கள் செயலோடு இருக்கும் பொழுது எதற்கு கடவுள், முக்தி இந்தப் பேச்செல்லாம்? இவ்வாறு எண்ணும் பச்சை மனம் பல அனுபவங்களைப் பெற்று, வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் புரிய ஆரம்பித்து, அப்பொழுதும் உடல் வலுவெல்லாம் இழந்த காரணத்தால் மட்டுமே இறப்பு என்ற ஒன்றை நினைவை விட்டு நீக்க முடியாத காரணத்தால் ஏதோ கடவுள், முக்தி, ஆன்மா என்ற பேச்சுகளுக்கு வந்து சேருகிறது. அனுபவித்துத் தீரக்கூடியனவல்ல ஆசைகள். ஆனாலும் ஆசையின் மாயச் சைகை கடைசி மூச்சு பிரியும் முன்னரும் கூட ஜீவனை மயக்காமல் விடுவதில்லை.

ஆனால் வாழ்வின் இறுதியில் தன் ஆன்ம நலத்தைப் பற்றியே ஓர் உயிர் முழு மனத்துடன் ஈடுபடுவதுதான் உரியது. சுவைத்துக் களைத்த உலக விஷயங்களைப் பற்றி அப்பொழுது எண்ணிக் கொண்டிருப்பது யாது பயன் தரும்? இந்தக் கணக்குதான் சாதாரணமாக உலகினர் போடும் லாப நஷ்டக் கணக்கு. இந்தக் கணக்கு புரிகிறது. ஆனால் இந்தக் கணக்கு சரியா?

நஞ்சீயர் சரம தசையில் இருக்குங்கால், குட்டக்குடி இளையாழ்வார் என்பவர் அவரிடம்,

'ஏனய்யா! த்வயம் என்ற ரஹஸ்ய ரத்னமான மந்த்ரத்தைத் தாங்கள் சரமதசையில் இருக்கும் இதுகால் சிந்தை செய்தால் நன்றாக இருக்குமே!' என்று கூறுகிறார்.

நஞ்சீயர் -- ஏனய்யா! அது என்ன உம்முடைய எண்ணம்? "உனக்கு அநுசந்திக்க வேண்டியிராதே எனக்கு இப்போது வேண்டுகிறதென்? நடையாடித் திரிவார்க்கு வேண்டாதே கிடப்பார்க்கு வேண்டியோ இருப்பது?"

ஸ்ரீவைஷ்ணவம் சொல்லும் மதம் ஆன்மிகம் என்பதில் உயர்ந்த மிகச் சிறந்த மந்த்ர ரத்னம் த்வயம். அதுவே உலகில் நடையாடித் திரிவார்க்குத்தான் மிக அதிகமாகத் தேவைப்படுவதாம். வாழுங்காலத்தில் ஆன்மிகம் எதற்கு? எல்லாம் 60 வயது மேல் பார்த்துக் கொள்ளலாம் என்ற உலக நடை எண்ணத்தை மண்டையில் ஓங்கி அடிக்கிறது நஞ்சீயரின் வார்த்தை. ஒன்றை ஞாபகம் கொள்ள வேண்டும். நஞ்சீயர் ஏதோ உபதேச பீடத்தில் உட்கார்ந்தபடி சாவகாசமாக உரையாடிய வார்த்தை அன்று இது. சரம தசையில் நின்று கொண்டு பேசும் வார்த்தை. மதம் யாருக்கு? வாழ்பவனுக்கா? அல்லது இறக்கும் தருவாயில் இருப்பவனுக்கா? வழக்கப்படியான கணக்கு உதைக்கிறது.

"உனக்கு அநுசந்திக்க வேண்டியிராதே எனக்கு இப்போது வேண்டுகிறதென்? நடையாடித் திரிவார்க்கு வேண்டாதே கிடப்பார்க்கு வேண்டியோ இருப்பது?"

இதில் முக்கியமானது என்னவென்றால் நஞ்சீயருக்கு அவ்வாறு சொன்ன குட்டக்குடி இளையாழ்வாரும் ஏதோ சாதாரண மனிதர் அன்று. அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதும் சாத்திர உட்பொருள் நிறைந்தது. அந்திம ஸ்ம்ருதி என்பது ஒன்று. கடைசியில் உயிர் பிரியும் தருவாயில் என்ன நினைவோடு ஜீவன் பிரிகிறதோ அந்த நினைவு அந்த ஜீவனின் மறுமையைப் பெரிதும் பாதிக்கிறது என்பதுதான் அந்திம ஸ்ம்ருதி. வாழ்வு முழுவதும் பிரம்ம சிந்தனையில் காலம் கழித்த ஜடபரதருக்கு அந்திம ஸ்ம்ருதியில் மானைப் பற்றிய கவலை வந்ததால் அடுத்த பிறவியில் அவர் மானாய்ப் பிறக்க வேண்டியிருந்தது என்று சாத்திரங்கள் சொல்கின்றன. இந்தக் காரணம் பற்றியே அந்தக் காலங்களில் கடைசி அந்திம காலங்களில் பகவந் நாம ஜபம், ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம் இவற்றையே செய்துகொண்டிருப்பார்கள். கூட இருப்பவர்களும் இவ்வாறே செய்வது வழக்கம். எந்த நேரத்தில் உயிர் பிரிய நேர்ந்தாலும் பகவத் ஸ்மரணை இருக்கும் என்பதற்காக. குட்டக்குடி இளையாழ்வாரும் அந்த நோக்கத்திலேயேதான் அவ்வாறு கூறியிருக்கிறார். நஞ்சீயர் என்ற பெருமானாரின் சிறப்பை அவரும் நன்கு உணர்ந்தவர்தாம். அதனாலேயே கூட அப்படிப்பட்டவருக்கு அந்திம ஸ்ம்ருதி சிறப்பாக அமைய வேண்டுமே என்ற ஆதங்கத்தில் அவ்வாறு கூறுகிறார்.

ஆனால் த்வயம் என்று சொல்லப்படுவதான ரஹஸ்ய ரத்னமும், மந்த்ர ரத்னமுமான அருந்தனமானது விசேஷமான உட்பொருள் கொண்டது. “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்ற பிரார்த்தனையின் பாரிப்பை உட்கிடையாய்க் கொண்டது. அதற்கு கால பேதம் எதுவும் கிடையாது. அங்கு இங்கு என்ற மறுமை, இம்மை பேதங்கள் எதுவும் கிடையா. எங்கிருந்தாலும் அவன் உகப்பிற்காக ஆன தொண்டெல்லாம் இயற்றுவதே ஜீவனுக்குப் பரமாநந்தமானது என்பதுதான் அந்த மந்த்ரத்தின் உட்பொருள்.

எனவே குட்டக்குடி இளையாழ்வார் அந்திம ஸ்ம்ருதிக்காக த்வயத்தை அநுசந்தானம் செய்யச் சொன்னதும் நஞ்சீயருக்கு உள்ளே சிரிப்பு வந்துவிட்டது. ‘அடடே! இவர் த்வயத்தை ஏதோ சாதாரண மந்த்ரம் போல் நினைத்து அந்திம ஸ்ம்ருதிக்காக நமக்குப் பரிந்துரைக்கிறாரே! அதன் உள் பொருள் இவர் அறிந்தபாடில்லையே! இந்த ஜீவன் இந்த உடலோடு சேர்ந்திருந்தாலும் அல்லது இதைவிட்டுப் பிரிந்தாலும் ஒரு பொருட்டில்லையே! என்றும் நிலைத்த ஆத்மாவின் நித்ய தர்மத்தைப் போதிப்பது அன்றோ அந்த மஹாமந்த்ர ரத்னம். அவன் உகப்பே பேறு, அவனுக்காகவே தொண்டு, அவன் உகக்க அதுகண்டு கொள்ளும் ஜீவனின் உகப்பும் சைதந்யம் பெற்ற பலன் அவ்வளவே. மற்றபடி நிலவுலகில் அவன் வைத்தாலும் சரி, அல்லது தன் திருநாட்டில் கொண்டு போய் வைத்தாலும் சரி என்ன வேறுபாடு? சதா சர்வ காலமும் ஜீவன் அவனுடைய கைங்கர்யபரனாகவே இருத்தல் அன்றோ ஆத்மாவின் நித்ய தர்மம்! அதையன்றோ இந்த மந்த்ரம் போதிப்பது. அதையெல்லாம் நாம் சக்தராய் இருந்த காலத்தில் இவர் நம்மிடம் கேட்டிருந்தால் விளக்கமாகச் சொல்லியிருக்கலாமே! நமது இந்த நிலையில் நம்முடைய நன்மைக்கென்று இவர் சொல்லும் வார்த்தையில் இவர் அந்த மந்த்ர ரத்னத்தின் சீர்மையை உள்ளவாறு அறியவில்லைபோல் தோன்றுகிறதே! “ என்று உள்ளம் கிருபை கொண்டவராய் நஞ்சீயர் சுருக்கமாக இவ்வாறு கூறினார்.

“உனக்கு அநுசந்திக்க வேண்டியிராதே எனக்கு இப்போது வேண்டுகிறதென்? நடையாடித் திரிவார்க்கு வேண்டாதே கிடப்பார்க்கு வேண்டியோ இருப்பது?”

***

கர்மமும் கிருபையும்

கடவுள் கைவிடுமா? கடவுள் என்று கண்ணுக்குத் தெரிந்தால் தொல்லை இல்லை. அல்லது நாமாவது கண்ணுக்குப் புலப்படாத அருவத்தைத் தெரியும் திறன் பெற்றாலும் பரவாயில்லை. இது எதுவும் இல்லாமல், 'நாம் சிந்திக்கும் வரையில் தான் சித் சபை' என்று இருந்தால் என்ன தெளிவு அடைந்தாலும் மீண்டும் பழைய குழப்பம் பழகிய வாஞ்சையோடு ஏறி உட்கார்ந்து கொள்கிறது. ஆனால் எதுதான் நம் கண்ணுக்குத் தெரிந்துவிடுகிறது? எல்லாம் நம் கர்ம பலன் என்கிறோம். கண்ணுக்குத் தெரிந்தா சொல்கிறோம். பூர்வ ஜன்மத்தை விடுவோம். இந்த ஜன்மத்திலேயே நாம் செய்தது பலன் உருவில் வந்து நிற்கும் போது அதைச் செய்தேன், அதனால் இது வந்தது என்று சில நேரம் நிச்சயமாகக் கண்ணுக்குத் தோற்றும் படி நிற்பதில்லை. ஆனாலும் உணர்கிறோம். அதனால் வந்த விளைவுதான் இது என்று. உணர்பவருக்கு அது அர்த்தமாகிறது. எனக்கு நிரூபித்துக் காட்டு என்பார்க்குத்தான் தலைக்குத்து எல்லாம். தனக்கு நிரூபித்துக் காட்டச் சொல்வாரும் தாம் உணருங்கால் தனிமையில்தான் உணர வேண்டியிருக்கிறது.

புற உலகில் இதோ என்று காட்டலாகாது கடவுளை என்கிறது வேதாந்தம். எனவேதான் அவன் வேத வேத்யன் எனப்படுகிறான். வேதத்தால் அறியப்படுபவன். வேதைக வேத்யன், வேதத்தால் மட்டுமே அறியப்படுபவன். வேதாந்த ப்ரதிபாத்யன். வேதாந்தத்தால் இன்னான் என்று காட்டப்படுபவன். இப்பொழுது வேதம் என்றால் என்ன? அவனைக் காட்டுவது வேதம். அவனை மட்டும் எது காட்டுமோ அது வேதம். அவனை இன்னான் என்று எது காட்டித் தருமோ அது வேதாந்தம்.

ஆனால் இந்த விசாரங்கள் ஒரு புறமிருக்க பக்தி அவனை நேரே சென்று வளைத்து வைத்து அவனாலேயே பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்கிறது. உனக்கும் எனக்கும் உறவு ஒரு நாளும் ஒழிக்க ஒழியாதது. உன்னொடு என் சம்பந்தம் நித்யம். அப்படி இருக்க இத்தனை நாள் நான் இழந்தேன் என்ற நிலை எனக்கு ஏன் சம்பவித்தது? நான் ஜீவன். உன்னை இழந்ததாய் மறந்து திரிந்தேன். நீ பரன் தானே? பொறுப்பே இன்றி நான் பவக் கடலில் விழுவதையும் பார்த்தும் வெறுமனே இருந்தாய் என்னில் என்னை நீயே தள்ளி விட்டாய் என்று சொன்னால் என்ன தவறு? குழந்தை கிணற்றின் ஒட்டில் நிற்கக் கண்டும், வாரி அள்ளிக் கொண்டு அகலாமல், அது என்ன பண்ணுகிறது என்று பார்த்துக் கொண்டு நின்றாள் ஒரு தாய் எனில் அவளைக் குழந்தையைப் போக்கியவள் என்றே சொன்னால் என்ன குற்றம்? முதலில் பகவான் என்று பரம்பொருள் ஒன்று இருக்கிறதா என்பதில் புரியாமல் நாம் கவன்றால், பக்திக்கோ முற்றிலும் வேறு பிரச்சனை.

நம் கண்ணுக்குத் தோன்றாத பரம்பொருள் பக்தியின் கண்ணி நுண் சிறுத்தாம்புக்குக் கட்டுண்டு நின்றதோடு மட்டுமன்றி, தாம்புத் தழும்பை இடுப்புத் துணியால் இழுத்து இழுத்து விட்டுக்கொண்டு மறைக்கிறதுமாய், நாணித் தலை கவிழ்கிறதுமாய் நிற்பதும் எவ்வாறு? அப்பொழுது நம் கண்ணுக்குத் தோற்றாத அவன் பக்தியின் கட்டுக்குப் பணிகிறான் என்றால் இந்த பக்தி என்பதாவது என்ன என்று தெரிந்து தொலைத்தால் பரவாயில்லை. பக்தி என்றால் என்ன என்று நாமும் ஏதேதோ மேற்கோள்கள், அனுஷ்டானம், மேலையார் செய்வனகள் எல்லாவற்றையும்தான் ஜாபிதா போடுகிறோம். ஆனால் பக்தியும் நமக்குப் புரிந்த பாடில்லை. பரம்பொருள் என்று நம் கண்ணுக்குத் தெரியுமோ அன்று நமக்கு பக்தி புரிந்தது என்று கொள்ளலாம். பக்தி என்று நமக்குப் புரியுமோ அன்று நம் கண்ணுக்கு என்ன, கட்டுக்கும் பரம்பொருள் அடங்கும்.

சிறியாச்சான் அனுஷ்டானத்தில் மிகச் சிறந்தவர் என்று சொல்லியிருக்கிறேன். அவரிடம் ஒரு பிராம்மணர் பேசிய வார்த்தையும் அதற்கு அவருடைய மறுமொழியும் என்ன என்று சொல்வது?

"ஒரு ப்ராஹ்மணன் இறப்பில் நின்றும் விழ, அவ்வளவிலே சிறியாச்சான் அங்கேற எழுந்தருள, ப்ராஹ்மணன், 'ஆச்சான்! பெருமாள் என்னைத் தள்ளினபடி கண்டீரே' என்ன,

"அங்ஙனன்று காண், 'கர்மத்தாலே நாம் விழுந்தோம், பெருமாளெடுத்தார்' என்று நினைத்திராய்" என்றருளினார்."

பிராம்மணர் பாவம் இறப்பாகிய கூறையிலிருந்து தாம் விழுந்துவிட்ட கடுப்பில் பெருமாளைக் காரணமாக இழுக்கிறார். ஆனால் சிறியாச்சானின் பதில் முதன்முதல் ஜீவன் பரம்பொருளைப் பிரிந்த அந்த ப்ரபஞ்ச கணத்திற்கே, அந்த cosmic event அதற்கே போய்விட்டது. விழுந்து அடிபடாமல் தப்பிய பிராம்மணன் புரிந்து கொண்டாரோ இல்லையோ சிறியாச்சானின் பதில் என்னைப் பிறவித் தொடரின் ஆதிக்கே கொண்டு சென்று உலுக்குகிறது.

***

அழிக்காதே, பொலியச்செய் !

அழிக்காதே ! பொலியச் செய் ! மனிதன் ஓர் அழிக்கும் பிராணி போலும். எதை இவன் தொட்டாலும் அழித்துவிடுகிறான். இவன் தொடத்தொட அழிவுதான் தொடர்கிறது என்பதைத்தானே wear and tear என்பது காட்டுகிறது. இதற்குப் பதிலாக தொட்டால் அழியாது மேலும் மேலும் துலங்கும் என்று இருந்தால்! தேய்ந்த நிலையில் ஒன்று இருக்கிறது என்று கொள்வோம். மனிதன் தொடுகிறான். உடனே முன்னைவிடத் துலக்கம் அதிகமாகிறது என்றால் எப்படி இருக்கும்!

மொழியைப் பேசுகிறான். நல்ல மொழிதான். இதற்கு இன்ன ஒலி என்று அழகாக அமைந்திருக்கிறது. ஆனால் மனிதன் பேசத் தொடங்கியதும் பார்த்தால் அந்த மொழி, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைக்கு வந்து விடுகிறது. கேட்டால் corruption என்கிறான். அதாவது இலட்சிய நிலையில் இருக்கும் ஒன்று மனிதன் தொட்டால் அன்றாடம் அடிபடும் அரைகுறை நிலைக்கு வந்துவிடுகிறது. அதாவது Imperfection, Decay, Degeneration என்பதன் மாஸ்டராக இருக்கிறான் மனிதன். மைதாஸ் தொடுதல் - என்பார்கள். அது எல்லாவற்றையும் பொன்னாக்கும். ஆனால் மனிதன் தொடுதல் எல்லாவற்றையும் மண்ணாக்கும். மண்ணாக்குதல் என்றால் அழிவு உருமாற்றம் கெட்டுப் போதல் ஒரு நிலை நிற்காமை தேய்வு கெடுதல் நலிதல் பொன்றல் என்ற சுழற்சியில் ஆட்படுதல் -- இதைத்தான் குறிக்கிறது போலும். அப்பொழுது விண்ணாக்குதல் என்றால் இதற்கு நேர் எதிர்மாறோ?


நம்பிள்ளை இந்த ஜீவன் எதை எதையெல்லாம் அழிக்கின்றான் என்று ஒரு நிரலே தருகிறார். ஐயோ பாவம்! தொட்டதெல்லாம் அழிகிறது என்றால் என்ன செய்யும் இந்த ஜீவன்? ஏன் இப்படி ஆகிறது? இதை மாற்ற வழி ஏதும் கிடையாதா? இந்த ட்ரெண்டை மாற்றித் தொட்டால் வளரும் வழி ஏதேனும் கிடையாதா? மனித குலத்தில் யாரும் கண்டுபிடிக்காத மர்மம் இது. இதைத் தீர்க்கும் வழியைக் கண்டு பிடித்தவர்கள் ஒரே ஆட்கள்தாம் -- ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள்.

நம்பிள்ளை சொல்கிறார் -- ஏன் இந்த அழிவு ஏற்படுகிறது? யோசித்துப் பார். இந்த ஜீவன் தன்னை உடலுக்கு உரிய உயிராய் நினைத்துகொண்டு, இந்த சரீரத்தின் சரீரியாய்க் கருதிக்கொண்டு தானே தனக்கு ராஜா என்று கருதும் வரையில் இது இப்படித்தான் இருக்கும். ஆனால் என்று தன்னை பகவானுக்குச் சரீரம் என்று உணரத் தொடங்குகிறதோ அன்றே இந்த நிலைமை மாறிவிடுகிறது. ஏனெனில் அதுகால் இவனுள் இயங்குவது இவனில்லாமல் இவனுள் இருக்கும் பரமாத்மாவாகவே ஆகிவிடுவதால் அழிவே இலலாமல் தொட்டது துலங்குகிறது. எனவே இதுதான் சாய்ஸ் இருக்கிறதே என்கிறார் நம்பிள்ளை. என்ன?

நீ உன்னை சரீரியாக நினைத்துக் கொண்டு நான் இந்த உடலின் ஜீவன், தனிக்காட்டு ராஜா, சுதந்திரன், என்று நினைத்துக் கொண்டு அநர்த்தப்படு. அப்புறம் ஐயோ தொட்டது எல்லாம் அழிவா? மண்ணொடு மண்ணாய் மக்கிப் போன வாழ்வா? என்று நொந்து போ. இல்லையா? நீ அந்த பகவானின் சரீரம் என்பதை உணர்ந்து உஜ்ஜீவனம் அடை. என்றென்றும் குஷியாக ஹாவு ஹாவு என்று பாடிக்கொண்டு ஆநந்தமாகத் திரி. அப்புறம் உன் இஷ்டம் என்கிறார் நம்பிள்ளை. அவருடைய இந்த அருமையான திருவாக்கைப் பதிவு செய்கிறது வார்த்தாமாலை.

"ரக்ஷகத்வத்தை அழித்தான்; சேஷத்வத்தை அழித்தான்; பரத்வத்தை அழித்தான்; விக்ரஹத்தை அழித்தான்; அருளை அழித்தான்; அடியாரை அழித்தான்; விபூதியை அழித்தான்; பந்தத்தை அழித்தான்; வ்ருத்தியை அழித்தான்;

தன்னைச் சரீரியாக ப்ரதிபத்தி பண்ணி அநர்த்தப் படுதல் ~
தன்னைச் சரீரமாக ப்ரதிபத்தி பண்ணி உஜ்ஜீவித்தல் செய்யுமத்தனை --

என்று பிள்ளையருளிச் செய்தார்."

***

கூவுதல் வருதல்

சின்ன குழந்தைகள் பளீர் பளீர் என்று பேசும் அழகு பார்ப்பதற்கே தெய்விகம். அதுவும் தாயாரே உருவெடுத்து வந்தது போல் பெண் குழந்தைகள் பேசும் போது சாக்ஷாத் அன்னைதான் பேசுகிறாள் என்று தோன்றும்.

அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும் எம்பெருமானார்க்கு! திருப்புளிங்குடி திவ்ய தேசத்தில் சேவித்து அந்தத் தெரு மூலையில் ஒரு சின்ன பெண்குழந்தை வரவும், அந்தக் குழந்தையிடம், ‘குழந்தாய்! இங்கிருந்து ஆழ்வார் திருகரி எத்தனை தூரம் இருக்கும்?’ என்று பேச்சு கொடுக்க, அந்தக் குழந்தை, அர்ச்சகரின் குமாரி, கணீர் என்று,

’கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு
இடர்கெட அசுரர்கட்கு இடர்செய்
கடுவினை நஞ்சே! என்னுடை அமுதே!
கலிவயல் திருப்புளிங் குடியாய்!
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை
நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க, நீ ஒரு நாள்
கூவுதல் வருதல் செய்யாயே.’

என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைப் பதிலாகச் சொல்லியது. குழந்தை பாசுரம் சொல்லும் நேர்த்தியிலும், பிஞ்சுக் குரலின் பைம்பொழிவிலும் அதிசயித்து நின்றார் உடையவர். அந்தக் குழந்தையோ, ‘ஜீயரே! இந்தப் பாசுரம் பாடம் இல்லையா?’ என்று கேட்டதும் பெரிதும் மகிழ்ந்து அந்தக் குழந்தையைக் கொண்டாடி ஆசீர்வதித்தார் எம்பெருமானார் ஸ்ரீராமாநுஜர். அந்தக் குழந்தை பதில் சொன்ன குறிப்பு என்னவென்றால் ‘கூவுதல் வருதல்’ என்று ஆழ்வார் திருப்புளிங்குடி எம்பெருமானைப் பாடுகிறாரே! அப்படியென்றால் திருப்புளிங்குடியிலிருந்து ஆழ்வார் திருநகரி கூப்பிடு தூரம்தானே. இது அந்தப் பாசுரம் சந்தையாயிருந்தால் அதிலேயே தெரியுமே என்பதாகும். நம்மாழ்வார் மீது குழந்தையிலிருந்து அனைவருக்கும் இருந்த பக்தியைக் கண்டு நெகிழ்ந்து போயிருப்பார் உடையவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

***

லோபத்தில் எத்தனை வகை?

லோபத்தில்தான் எத்தனை வகை? லோபம் என்றால் ஆசைமட்டுமன்று. ஆசைப்பட்டதை ஆர்வமாகக் கைப்பற்றிக்கொண்டு ஒரு நாளும் அதை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அடமாக உரிமையாக்கிப் பேணிக்கொள்ளும் உடும்புப்பிடியான பற்று இருக்கிறதே அந்த மனப்பான்மைக்குத்தான் உண்மையில் லோபம் என்று பெயர். ஆங்கிலத்தில் chronic possessive. இந்த லோபம் என்பது ஆன்மிக சாதனையில் ஒருவருக்கு எதிர்ப்படும் மன ரீதியான ஆறு விரோதிகளில் ஒன்று. காமம், குரோதம், லோபம், மதம், மாஸ்சர்யம், மோகம் என்று ஆறு. இந்த ஆறும் நன்கு பாடமாகியிருக்கிறது. ஞாபகப்படுத்த வேண்டிய தேவையே இல்லை. ஆனால் இதைப் போன்று சத் விஷயங்கள் உடனே நினைவுக்கு வராதோ? போகட்டும்.

இந்த லோபம் இருக்கிறதே, அதாவது பொருளாசை, பொருளை அடைந்து அதில் விடாப்பிடியான பற்றுதல் என்பது, இந்த லோபம் முழுமையாக உடையவன் ஸம்ஸாரி. சார்! அவர்கிட்ட ஒரு பைசா போனாலும் வெளியில வராது சார். அவர்கிட்ட போயிடுத்தா போச்சு, அவ்வளவுதான் முதலை வாயில் போனால் போல்தான். -- இது போல் ஏற்படும் சொலவுகள் எல்லாம் இந்த லோபத்தைக் குறித்து எழுகின்றன. இந்த அளவுகோலின்படி பார்த்தால் நாம் எத்தனை பேர் உண்மையான ஸம்ஸாரிகள்? அதிலும் நாம் முதலிடம் வகிப்போமா என்பது சந்தேகம் தான். நாமெல்லாம் பர்ஸெண்டேஜ் ஸம்ஸாரிகள்தாம். முதல் பரிசு பலருக்குக் கிடைக்காது.

ஆனால் இதே லோபமானது அறிவு விஷயத்தில் இருந்தால் அதுவே எவ்வளவு சிறப்பு! ஒரு சத் விஷயத்தைக் கேள்விப் படுகிறோம். உடனே லபக் என்று அதைக் கைக்கொண்டு நினைவில் வைத்துப் பூட்டி ஒரு நாளும் அதை இழக்க மாட்டேன் என்று அடமாகப் பேணும் அந்த அறிவுத்தனமான லோபம்,....அடடா! அது இருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! ஆனால் அறிவு போன்ற உயர்ந்த விஷயங்களில் கொள்ளும் லோபத்தை (ஒரு வேளை யாராவது கொண்டால்) லோபம் என்று சொல்வதில்லை. ஏனெனில் அப்பொழுது உயர்ந்த குணமாகவும், ஆன்மிக வழிக்கு அனுகூலமாகவும் ஆகிவிடுகிறது. அறிவு விஷயத்தில் அப்படி லோபம் கொண்டு கற்பதுதான் உண்மையான மாணவத் தன்மை என்கிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட லோபம் இல்லாமல் கற்பவர்கள் கடையர்கள்தாமாம்!

உடையார் முன் இல்லார் போல்
ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்.

ஆனால் ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்யர்களோ என்னில் எவ்வளவு லோபங்களைப் பட்டியலிடுகின்றனர்! ஸம்ஸாரி என்பவன் அர்த்த லுப்தன். பொருள் பற்று கொண்டவன்.

ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் ஜ்ஞான லுப்தன் ஆம். தன்னுடைய ஆத்மாவின் நிலைநின்ற தன்மை யாது என்ற ஆத்ம ஜ்ஞானம், பகவானின் ஸ்வரூபம் என்ன என்பதைப் பற்றிய ஜ்ஞானம் ஆகிய இந்த ஜ்ஞானங்களைப் பொறுத்த மட்டில் எந்த அர்த்தங்களும் சிந்தாமல் கொண்டு உள்ளே மறப்பொன்று இன்றிப் பேணுபவன். 'அன்று நான் பிறந்திலேன், பிறந்தபின் மறந்திலேன்' என்பது அன்றோ ஆழ்வார் வாக்கு! 'ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை யான்' அன்றோ!

அடுத்து முக்தர்களாக நித்ய விபூதியை அடைந்தவர்கள், அங்கேயே என்றும் இருக்கும் நித்ய முக்தர்கள் ஆகிய இவர்கள் கைங்கர்ய லுப்தர்களாம்! பகவானுக்கு அனைத்து தொண்டுகளும் சிறிதும் பிசகின்றி, தவறாமல், அயர்வு, மயர்வு ஏதுமில்லாமல், அனைத்துத் தொண்டுகளும் நானே ஆற்ற மாட்டேனா என்ற பேரார்வத்துடன் கைங்கர்யம் செய்பவர்கள். யாருக்கும் அதில் பங்கு கேட்டால் விட்டுக் கொடுக்காத அளவுக்கு possessive.

சரி. இவர்கள்தாம் இப்படி என்றால் பகவான் எப்படி? அவனும் ஒரு லுப்தன் தானாம்! பகவான் தாஸ்ய லுப்தனாம்! இந்த ஜீவன் தன் இயல்பின் படி யாருக்கு தாஸ்யம் பூணுவது என்றால் அவன் ஒருவனுக்கே அன்றி பிறர் திறத்ததல்லா என் அடிமை என்ற படி தாஸ்யம் என்ற மொத்தத்தையும் தன் ஒருவனுக்கே கொள்ளும் அளவிற்கு தாஸ்ய லுப்தனாம் பகவான். அதாவது அவனைத் தவிர வேறு யாரும் ஜீவனின் தாஸ்யத்திற்கு அருஹர் அல்லர் என்றபடி.

எந்தக் காலத்திலோ ஆசார்யர்கள் சொன்ன அருமையான ரத்தினச் சுருக்கமான வார்த்தையை வார்த்தாமாலை ஏடுபடுத்தி வைத்திருக்கிறது.

"அர்த்தலுப்தன் ஸம்ஸாரி; ஜ்நாநலுப்தன் ஸ்ரீவைஷ்ணவன்; கைங்கர்ய லுப்தர் முக்தநித்யர்; தாஸ்ய லுப்தன் எம்பெருமான்."

***

முமுக்ஷு என்பது யார்?

பக்தி என்றால் என்ன என்ற கேள்வி ஒரு பக்கம்;
சாக்ஷாத்காரம் என்றால் என்ன என்ற கேள்வி ஒரு பக்கம். இது இருக்கட்டும் என்று அனுஷ்டானம் என்று போனால், வெறுமனே இயல்புக்குப் போக்குவீடு விடுதல்தான் அனுஷ்டானம் என்று முடித்துவிடுகிறார் சிறியாச்சான். இதெல்லாம் இருக்கட்டும். எல்லாவற்றுக்கும் முதலில் ஒருவனுக்கு வீடுபேறு அடைய வேண்டும் என்ற ஆசை வேண்டுமே. மோக்ஷம் அடைய இச்சை கொண்டவன் யார்? அந்த மோக்ஷ இச்சை உடையவனைத்தான் முமுக்ஷு என்று அழைக்கின்றன சாத்திரங்கள்.

போகத்தில் ஆசை கொண்டவன் புபுக்ஷு. புபுக்ஷுவும் இல்லை; முமுக்ஷுவும் இல்லை; இப்படி இருக்கும் நிலை மிகவும் சிரமம். முமுக்ஷுவுக்குத்தான் மோக்ஷ சாத்திரம். மோக்ஷ சாத்திரம் எனக்குப் புரியவில்லையே என்று கத்தினால் அதற்கு எனன பண்ணுவது? முதலில் முமுக்ஷுவாக ஆகிவிட்டோமா என்று பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் ஒருவன் எப்படி முமுக்ஷுவாக ஆகிறான்? அதாவது மோக்ஷ இச்சை எப்பொழுது ஒருவனுக்கு ஏற்படுகிறது? இந்த உலக அனுபவங்களில் சலித்துப் போய் யார் நிலைத்த தத்துவம் எது என்று சிந்திக்கத் தொடங்குகிறாரோ அப்பொழுதுதான் மோக்ஷ இச்சை ஏற்படுகிறது. எனவே மீண்டும் முதல் கட்டத்திற்கே. முமுக்ஷு மட்டுமன்று, முமுக்ஷுவாக ஆக நினைப்பவனும் மோக்ஷ சாத்திரம் படித்துத்தான் ஆகவேண்டும். எனவே முமுக்ஷுவாக ஆகு. பின்னர்தான் உன் கேள்விகள் என்று சொல்ல முடியாது.

ஆனால் முமுக்ஷுவாக ஒருவன் ஆனால் அதை என்ன தடயம் வைத்துக் கண்டுகொள்வது? பராசர பட்டர் ஒரு சின்ன பரிசோதனையைச் சொல்கிறார். அதைச் செய்து பார்த்தாலே தெரிந்துவிடும், நாம் முமுக்ஷுவா அல்லவா என்று. ஒருவன் அதிருஷ்டத்தை த்ருஷ்டமாக அநுஸந்திக்க வேண்டும். த்ருஷ்டத்தை அதிருஷ்டமாக அநுஸந்திக்க வேண்டும். இந்தப் பரிசோதனையில் தெரிந்துவிடும். அநுஸந்தானம் என்றால் தொடர்ந்து மனத்தால் கருதுவது.

அதிருஷ்டம் என்பது பரமபதம், பாரமார்த்திக நிலை போன்றவற்றைப் பற்றிய ஆசார்ய உபதேசத்தை, தன்னுடைய விச்வாசம் காரணமாகப் பிரத்யக்ஷம் போலக் கருதுதல். த்ருஷ்டம் என்பது இவ்வுலக சுக துக்கங்கள். மற்றபடி உலக வாழ்க்கை. இவை அல்பமானது, அஸ்திரம், என்று உணர்ந்து, வைராக்கியத்தினால் பற்று அற்று, அதனால் இவை இல்லாதது போலவே கருதும் மனநிலை ஏற்பட்டு, இவ்வுலக வாழ்வை ’அதிருஷ்டம்’ - உள்ளபடிக் கண்டால் நிலையென்று எதுவும் மிஞ்சாதது - என்று கண்டுகொள்ளாமல் இருப்பது.

எனவே எவன் ஒருவன் அதிருஷ்டத்தை த்ருஷ்டமாக அநுஸந்திக்கின்றானோ, த்ருஷ்டத்தை அதிருஷ்டம் போல் அநுஸந்திக்கிறானோ அவன் முமுக்ஷு.

***

பட்டினிப் பெருமாள்

’படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனோ!’
-- என்கிறார் ஆழ்வார். அது என்ன படியாய்க் கிடத்தல்? அவனுக்கே தொண்டு பூண்ட தன்மையது இந்த ஆத்மா என்ற சேஷத்வமும், அவன் இட்ட வழக்காய் இருத்தல் என்ற ஸ்வரூப ஞான முதிர்ச்சியான பாரதந்த்ர்யமும் துலங்கும் மனநிலை. படியாய்க் கிடந்தால் கிடக்க வேண்டியதுதானே? ஏன் அவன் பவளவாயைக் காண்பேனே என்ற மனோரதம்? சித் வஸ்து ஆயிற்றே ஜீவன்! சைதன்யம் உடையவன் என்பதற்குப் பொருள் ஏற்பட வேண்டாமோ!

எம்பெருமானார் காலத்தில்தான் எத்தனை விதமான ஆன்மிக மனோபாவங்கள் துலங்கப் பெரியோர்கள் இருந்துள்ளனர்! பட்டினிப் பெருமாள் என்று ஒருவர். பெரிய பெருமாளின் திருமுடிக்குறையிலே, அதாவது குடதிசை முடியை வைத்து என்பதற்கேற்ப மேற்கு பார்ச்வத்திலே (மேலை வீதிகளில் ஒன்றாக இருக்கும்) கல் போல் கிடப்பர் இந்தப் பட்டினிப் பெருமாள். பேச்சு, அசைவு எதுவும் கிடையாது. தூண், மரம் எல்லாவற்றோடும் அதுவும் ஒன்று என்ற கணக்கில் யாரும் அவரை ஓராள் என்று பார்ப்பது கிடையாது. சில நாட்களுக்கு ஒரு முறை அவரைப் பார்த்து எம்பெருமானார் "பெருமாளே!" என்று விசாரித்து விட்டுச் சென்றால் அவ்வளவுதான் மரம் போல் கிடக்கும் அந்த மனிதரிடத்துச் சலனம் உண்டாகும். பதிலுக்குத் தானும் "ஜீய! ஜீய!" என்று சொல்வார். எம்பெருமானார்க்குப் பரம சந்தோஷம். இன்றைக்குக் கிருதார்த்தர் ஆனோம் என்று சொல்லிக் கொண்டு, பட்டினிப் பெருமாளோ அவ்வளவுதான், நாலு நாள் தொடர்ந்து அந்த நினைவிலேயே மூழ்கி இருப்பர், ’எம்பெருமானாரின் கடாக்ஷத்திற்கு இலக்காக ஆனோமே!' என்று.

ஒரு நாள் சில திருடர்கள் பொருள்களைக் களவு கண்டு போகும் பொழுது அவர்களில் ஒருவன் இந்தப் பட்டினிப் பெருமாளைக் கண்டுவிட்டான். என்ன இது ஒரு மனிதன் இங்கு முழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறானே என்று கூட்டாளிகளுக்குச் சொல்ல, அவர்கள் "உனக்குத் தெரியாதா? அவன் இந்த மரம், கல் போன்று நெடுநாள் இப்படியே இங்கேயே உட்கார்ந்திருப்பவன். அவனை யாரும் ஒரு மனிதனாகக் கணக்கிடுவது கிடையாது. இந்த மரம் கல் யாருக்காவது நம்மைப் பற்றி உரைக்கக் கூடுமென்றால் அன்றோ இவனும் நம்மைப் பற்றி உரைப்பது. கவலையை விடு. வா வா சீக்கிரம்" என்றனர்.

இந்த உரையாடலை அந்தப் பக்கம் வந்த எம்பெருமானார் கேட்க நேர்ந்தது. அவர் இந்தச் சம்பவம் பற்றிப் பல நாள் பலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

படியாய்க் கிடந்து
நின் பவளவாய்க் காண்பேனோ!

*
பெருமாளே!
ஜீய ஜீய

***

நாமஜபம் அகப்பகை கடியும் ஆயுதம்

தாகத்திற்குத் தவிக்கும் மனிதன் காதில் தண்ணீர் பற்றிய செய்திதான் முதலில் விழும். தருமனுக்கு உயிரின் பிரிவு என்பது என்றோ நடக்கப் போகும் ஒன்று. ஆனால் பாட்டனுக்கு அது நிகழ்காலம். அதுவும் நீட்டிவைத்த நிகழ்காலம். The moment of dying extended to obey his wish but still remains a moment. புறத்திலும் அம்புப் படுக்கை. அகத்தின் மர்ம ஸ்தானத்திலும் அம்புப் படுக்கை. அம்புகளின் கூரிய முனைகளாகிய மலர்களால் தன் வாழ்வு என்னும் படையலைக் கண்ணனுக்கு ஆக்குகிறான் காங்கேயன். உண்மையில் அவன் ஒருவனே வீரன். ஆனால் அவன் உபதேசம் செய்வதோ ஆன்ம தீரத்தைப் பற்றி. அவனைச் செய்ய வைக்கிறான் அச்சுதன். ஆகாதவற்றை ஆக்குவோன். கூடாதவற்றைக் கூட்டுவோன். பேசாதவற்றைப் பேச வைப்போன்; பாராதவற்றைப் பார்க்கவும் அவன் அருளல்லால் நமக்கு ஏது கதி?

வென்று வேலெடுத்த விரை திண் தோளையும், வரையன்ன உடலையும் வீழ்ச்சியின் ஆயிரம் நாவுகளாகச் சுவைக்கின்றன ஆயிரம் அம்புகள். ஆனால் மடியும் உடலின் ஒற்றை நா உரைப்பதோ மடியாத உயிருக்கு ஆயிரம் நாமங்கள். அம்புகளின் தாகம் தீரக் கிடந்தவன் தன் அம்பு தாகம் தீர விழைந்தக்கால், அம்பால் நீரூட்டித் தாகம் தீர்த்தவனின் தேர்ச் சாரதியை அன்பால் பரவுகிறான் புனிதநீர்ப் புதல்வன். தவித்த உயிர்த்தாகத்திற்குக் காதில் முதலில் விழுவதோ ஆறாவது கேள்வி. 'எதை ஜபித்தால் உயிர் முத்தி பெறலாகும்?' அவன் அளித்த விடையை அருந்த நமக்கு அளிக்கிறார் ஆதிசங்கரர். --

"நிலைப்பன திரிவன என்று உருவான உலகத்திற்கு உடையவன்; படைப்பின் கடவுளருக்கும் படைக்கும் பெருங்கடவுள்; இடம் காலம் பொருள் ஆகியவற்றால் அளவிட முடியாதவன்; புருஷோத்தமன், அவனையே சிறிதும் சோர்வில்லாமல் அவன் விஷயத்திலேயே முயலும் மனிதர் எல்லாவிதத் துக்கத்திலிருந்தும் நீங்கியவர்கள் ஆகிறார்கள்"

பராசர பட்டரின் உரை பேசுகிறது --

"திரிவன நிலைத்தன என்னும் ஜகத் என்பதற்கு உடையவனாகிய ஸ்வாமி; தேவர்களுக்கும் பெருந்தேவன்; அளவிடக்கூடாத பெருமையுள்ளவன்; தன்னையும் அளிக்கும் பரம வள்ளல்தன்மை கொண்டவன்; அத்தகைய அவரை ஆயிர நாமங்களால் எக்காலமும் முயன்று துதி செய்வதனால் மனிதர் எல்லாத் துன்பங்களையும் கடந்தவர் ஆவர்."

அம்பின் நுனி குளிக்க அம்பின் துளி குளிரக் கிடந்து உரைத்தவனின் அன்பு மொழி நம் வாழ்வின் வறட்சியைப் போக்காதோ! வீரர்களின் வாழ்க்கை வில், அம்பு, வேல், கவசம், போர், அழிவு, காப்பு என்றிருப்பது. வீரர்களின் பிதாமகன் இங்கு மரணத்தின் முற்றத்தில் கிடந்தபடி அழியா உயிருக்கு ஆக்கம் தேடுகிறான். இந்த உயிரை நலியும் அறியாமை, உலக ஆசைகள், மாயை என்னும் பகை முடிக்கும் ஆயுதத்தைப் பேரனுக்குப் போதிப்பதுபோல் உலகிற்கு அளிக்கிறான். உயிரின் இந்த ஓயாப் போரில் கைகண்ட ஆயுதம், வாய்கண்ட ஆயுதமாக இருக்கிறது. வினைகளின் கட்டை அவிழ்க்கும் மர்மம் பெயர்ச்சொல்லில் இருக்கிறது. அந்த ஆயுதத்தை தன் வீர வாழ்க்கையின் பழக்கத்தில் விளக்குகிறான்.

'தருமா! எந்த ஆயுதத்திற்கும் தேவதை உண்டு, பீஜம் உண்டு, சக்தி என்பது உண்டு, இதயம் என்பது உண்டு. அந்த ஆயுதத்திற்கான பிரயோஜனம் என்பதும் உண்டு. சாதாரணமாக போர் ஆயுதங்களுக்கு எஃகு என்பதை பீஜம் என்று கூறுவோம். ஏனெனில் காரணம் ஆகிய எஃகிலிருந்துதான் ஆயுதம் உருவாகிறது. ஆயுதத்தின் அழிக்கும் திறன் அதன் முனையின் கூர்மையில் இருக்கிறது என்ற காரணத்தால் ஆயுத முனையைச் சக்தி என்று சொல்வது வழக்கம். ஆயுதத்தின் மையப் பகுதியானது அதன் இயக்கம் வேகம் இலக்கு நாட்டம் முதலிய அம்சங்களுக்கு முக்கியமாக கேந்திரம் என்பதால் இதயம் என்று சொல்லப்படுகிறது. ஓர் ஆயுதம் என்றால் அது என்றும் வெறும் அலங்காரமாகவும் பொழுது போகவும் செய்யப்படுவது அன்று. ஆயுதம் என்று ஒன்று உருவானால் அதற்குப் பிரயோஜனம் என்று ஒன்று கண்டிப்பாக உண்டு. பொதுவாக நாம் அறிந்து பழகிய ஆயுதங்கள் சத்ரு வதம் என்னும் பயனை நோக்காக உடையன. ஆனால் தருமா! நான் சொல்லப்போகும் இந்த புருஷோத்தமனின் ஆயிர நாமங்கள் என்பதும் ஒரு வகையில் ஓர் ஆயுதம்தான். சத்ரு வதம் என்பதையும் நோக்காக உடையதுதான். இந்த ஆயுதத்திற்கும் கண்டறிந்த ரிஷிகள், தேவதை என்று உண்டு. இந்த தேகம் நிலையில்லாதது. அதை அழிக்க வரும் எதிரிகளே சத்ருக்கள் என்று ஆயுதங்களை எறிந்து அழிக்கத் தக்கவர்கள் என்றால், இந்த ஆத்மாவிற்கு எதிரிகள் ஆக வரும் அறியாமை, உலக ஆசைகளின் வேகம், மாயை, காமம், குரோதம் லோபம், மதம், மாச்சரியம், மோகம் ஆகிய சத்ரு கூட்டங்கள் மாயாவிகளிலும் மாயாவிகளான பகைகள்.

மற்ற புறப்பகைகள் உன் உடைமைகளைக் கைப்பற்றி, உன் இருப்பிடத்தைக் கைப்பற்றிப் பின் உன்னை அழிக்கும். ஆனால் இந்த கொடிய அகப்பகைகளோ முதலில் உன்னை அடிமைப் படுத்திப் பின்னர் உன் நிதய வாழ்வு, அளவிலா ஆநந்தம், எல்லையற்ற ஞானம் ஆகிய உன் சொந்த இயல்புகளாகிய செல்வங்களை உன்னைக் கொண்டே தங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடும். இவற்றுக்கு அழிவு என்பது ஒரே ஆயுதத்தினால்தான். அதுதான் பகவானின் நாமஜபம். இந்த ஆயுதத்திற்கு யார் ரிஷி? சந்தஸ் என்ன? தேவதை எது? பீஜம் எது? சக்தி எது? இதயம் எது? பிரயோஜனம் எது? என்கிறாயா, சொல்கிறேன் கேள்.

வேத வியாசர்தாம் இதைக் கண்டறிந்த ரிஷி. பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்களால் ஆன அனுஷ்டுப் என்னும் சந்தம் தான் இதற்கு சந்தஸ். தேவதை யார் என்றால் பகவானான விஷ்ணு. பீஜம் என்பது அம்ருதாம்சூத்பவ: என்பது. தேவகீநந்தன: என்பது சக்தி. திரிஸாமா என்பது இதயம். அனைத்துக் குற்றங்களையும் களைந்து ஆழ்ந்த நிலைத்த சாந்தி என்பது இதன் பிரயோஜனம். பாற்கடலில் பள்ளிகொண்ட மாய மணாள நம்பியை தியானித்தபடியே இந்த ஆயுதத்தை நீ நாவினால் ஏவினாலே போதும், போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். எனவே மனத்தால் ஓர்ந்து திடநம்பிக்கையுடன் செப்பு.' என்கிறான் பீஷ்மன் மரணத்தின் வாயிற்படியில் அமர்ந்தபடி. அவனைவிட வீரனும் இருந்ததில்லை. அவனுடைய சொற்களைவிட தீரமும் இருந்ததில்லை.

'வேதாந்தம் கற்பதால் என்ன பலன்?' என்ற கேள்விக்குப் பதிலாக விவேகாநந்தர் கூறிய கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது. வேதாந்தம் கற்றால் அனைவரும் வீடு வாசல் என்று எல்லாம் விட்டுவிட்டு ஆண்டிகளாகப் போய்விடுவார்களோ என்ற அச்சமும் பலர் நினைவில் தொனிப்பதுண்டு. ஆனால் விவேகாநந்தர் கூறுவது என்னவெனில் வேதாந்தம் கற்பதால் ஒரு மெக்கானிக் இன்னும் சிறந்த மெகானிக்காக ஆகிறான். ஒரு தொழிலதிபர் இன்னும் சிறந்த தொழிலதிபராக ஆகிறார். பேராசிரியர் ஒருவர் முன்னிலும் சிறந்த ஆசிரியராக ஆகிறார். அலுவலகத்தில் வேலை செய்பவர், பட்டறையில் வேலை செய்பவர், துறைமுகத்தில் வேலை செய்பவர், வண்டி ஓட்டுபவர் என்று அவரவர் தம்தம் சூழ்நிலையிலேயே முன்னிலும் மிகச் சிறந்து விளங்க ஆரம்பித்துவிடுகின்றனர் என்பது விவேகாநந்தரின் கருத்து. பீஷ்மரும் இதையே கூறுகிறார் ஆயிர நாமங்கள் ஓதுவோர் தம்தமக்கு விருப்பமான தொழில், படிப்பு, ஈடுபாடு என்ற சூழ்நிலைகளிலேயே மேலும் சிறந்து விளங்கத் தொடங்குகின்றனர் என்று. இந்த ஆயிர நாமங்களைக் கேட்பவனும் கீர்த்தனம் செய்பவனும் சரி அனைவருமே இம்மையிலும், மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடைவதில்லை என்று அடித்துச் சொல்கிறார் பீஷ்மர், தாம் மரணம் அடையும் தருவாயிலும் கூட.

இன்று நேற்று அன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எத்தனை எத்தனை மக்கள் இந்த வார்த்தைகளில் மிகுந்த விசுவாசம் வைத்து இவற்றைக் கற்கின்றனர்! 'ரோகார்த்தோ முச்யதே ரோகாத்' அதாவது ரோகம் ஆகிய வியாதியினின்று விடுதலை அடைய வேண்டுபவன் நோயினின்றும் விடுதலை அடைகிறான் என்ற சொல் தொடரின் 'ரோகார்த்த:' என்பது ஒரு பழைய கணித முறைப்படி எண்ணினால் 632 என்ற எண்ணிக்கையைக் கூறும். அதாவது கடபயாதி சங்க்யை - என்ற கணக்கு முறையின் படி இவ்வாறு 'ரோகார்த்த:' என்ற சொல்லுக்கு 632 என்ற எண்ணிக்கை வருகிறதாம். எனவே பிணியாளர்கள் 632 தடவை இதை ஜபித்து ஹோமம் செய்வது உண்டென்றும், இது கேரள தேசத்தில் நடக்கிறது என்றும் 1928ல் ஸ்ரீ மணலூர் எம் வி ராமானுஜாசாரியார் (மஹாபாரதம் முழுதும் தமிழில் கொண்டுவந்த மகான்) எழுதுகிறார். அன்றைய நாளில் விஜ்ஞாந சிந்தாமணி என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்த வைத்ய சாத்திர நிபுணரான புன்னசேரி ப்ரஹ்மஸ்ரீ நீலகண்ட சர்மா தமக்குச் சொன்னதாகவும் எழுதுகிறார்.

கீழ்க்கண்ட 3 செய்யுட்களும் எனக்குப் படிக்கும்தோறும் கேட்கும்தோறும் கண்களை நனைத்துவிடுகின்றன.

துர்க்காணி அதிதரதி ஆசு: புருஷ: ப்ருஷோத்தமம்|
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நிதயம் பக்தி ஸமந்வித:||

வாசுதேவ ஆச்ரயோ மர்த்த்யோ வாசுதேவ பராயண:|
ஸர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சநாதனம்||

நவாசுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித்|
ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் நைவ உபஜாயதே||

இந்த மூன்றுக்கான தமிழாக்கம் --

பத்தியுடன் என்றும் பொருந்தி
பகவானின் நாமங்கள் ஆயிரமும்
போற்றுபவர் கடந்திடுவர் விரைவாகப்
பொல்லாத துன்பங்கள் எவற்றையுமே.

மரிக்கும் மனிதர் வாசுதேவனை அண்டி
வாசுதேவனையே புகலாகக்கொண்டு வழுத்தினால்
பாபங்கள் அனைத்தினும் விடுபட்ட தூய ஆன்மாவாய்
நிலையான பரம்பொருளில் சென்று சேர்வர்

வாசுதேவ பக்தர்களுக்கு என்றும்
சிறிதும் அசுபம் என்பது ஏற்படுவதில்லை
பிறப்பு மரணம் முதுமை வியாதி பயம்
ஒரு நாளும் உண்டாவதுமில்லை.

யாருக்கு உண்மையில் புருஷோத்தமனிடம் அந்தத் தூய பக்தி இருக்கிறது? இதைக் கண்டுபிடிக்க ஒரு சூத்திரம் சொல்கிறார் பீஷ்மர். 'யாரிடம் கோபம் இல்லையோ, பகையில்லையோ, பொருளாசை இல்லையோ, கெட்ட எண்ணம் இல்லையோ அவர்கள் புருஷோத்தமனின் பக்தர்கள் என்று உணரலாம். யாரும் சொல்ல வேண்டியதில்லை.'

***

நாமஜபம் சிறந்த தர்மம்

பிரஸ்தான திரயம் என்னும் உபநிஷதங்கள், கீதை, ப்ரஹ்ம சூத்திரம் என்னும் மூன்று பிரமாண நூல்களின் கருத்துகளும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆயிர நாமங்களில் கிடைக்கும் என்பதே சாரமான கருத்து. தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம், அதிகதமமான தர்மம் உங்கள் கருத்தின்படி என்ன? என்று கேட்டான் தருமன் பீஷ்மனை. பீஷ்மனும் சூக்ஷ்மமாகச் செய்தியை உரைக்கின்றான்.

"அப்பா! உலகில் ஆகமங்கள் பல இருக்கின்றன. ஆகமம் என்றால் கடவுள் இன்னார் என்று சொல்லி அவரை அடைய வழிகாட்டும் மார்க்கம். ஆகமங்கள் எல்லாம் எதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்று நீ அறிவாயா? நீ அத்தனை ஆகமங்களையும் ஒன்றுவிடாமல் நன்கு படித்துப் பரிட்சை கொடுத்துத் தேறி மஹாவித்வானாக இருக்க வேண்டும் ஆகம சித்தாந்தங்களில் என்பது அவற்றின் நோக்கமன்று தருமா! ஆகமங்களுக்கு நோக்கம் நீ அதை வாழ்க்கையில் அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்பதுதான். நீ அதை ஆசரிப்பதில்தான் அந்த ஆகமங்கள் இருக்கின்றன. வாய் வார்த்தைகளில், பக்கம் பக்கமாக எழுதுவதில், பெரும் புத்தகங்கள் எழுதிப் படித்துக் குவிப்பதில் இல்லையப்பா உண்மையில் ஆகமங்கள். நீ அதன்படி ஒழுகுகின்றாய் என்ற அந்த ஒழுக்கத்தில்தான் எந்த தர்மமும் நன்கு வெளிப்பட்டு நிலைபெறுகிறது. ஒன்று தர்மம் என்று எப்படி ஆகும்? எது உன்னை உடனே தன்னைக் கைக்கொண்டு ஒழுகும்படிச் செய்யுமோ அதுதான் தர்மத்தின் லக்ஷணம். அப்படிச் செய்யாத தர்மம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்ற அளவில்தான் நிற்கும். ஒருவரை ஒரு வாக்கியத்தின் மூலம் ஒரு கட்டளையைச் சொல்லி அதன்படி நடக்க வைக்க மூன்று விதங்களில் முடியும் என்கிறது காவிய சாத்திரங்கள்.

"ஒன்று ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு இடித்துச் சொல்லி அறிவுறுத்திச் செய்ய வைப்பதுபோல் செய்யலாம். அப்படிச் செய்தால் அந்த மாதிரியான நூலுக்கு மித்ர ஸம்ஹிதை, என்று பெயர்.

"சில நூல்கள் பல இனிய கதைகள், கவிதைகள் எல்லாம் சொல்லி சிந்தையைக் கொள்ளை கொண்டு அழகுடன் சேர்த்து இன்ன விதத்தில் இருக்க வேண்டும் என்று கனிவுடன் கூறிச் செய்ய வைக்கின்றன. அந்த நூல்களுக்கு 'காந்தா ஸம்ஹிதை' என்று பெயர்.

"சில நூல்கள் எந்த வித ஆடம்பரமுமின்றி இன்னது செய்ய வேண்டும், இன்னது தவிர்க்க வேண்டும் என்று தெளிவுபடச் சுருக்கமாக நேரே தைக்கும் வண்ணம் உரைக்கின்றன. அதைப் படிக்கின்ற எவரும் முதல் காரியம் அதைச் செய்துவிட்டுத்தான் மறுவேலை என்று செயலில் ஈடுபடுகின்றனர். அதாவது ஒரு பிரபு கட்டளை பிறப்பித்தால் அவரிடம் வேலை செய்வோர் அந்தக் கட்டளைகளைச் செயலாக்குவது தம் தலையாய கடன் என்ற பொறுப்புணர்ச்சியில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். அப்படிப்பட்ட நூல்களை 'பிரபு ஸம்ஹிதை' என்று சொல்வார்கள். அத்தகைய பிரபு ஸம்ஹிதை போன்று நம்மை உடனே ஏற்று அனுஷ்டானம் செய்ய எது தூண்டுமோ அவைதான் தர்மங்கள். அப்படிப்பார்த்தால் எவைதான் தர்மங்கள்? யார்தான் எந்தத் தர்மங்களை ஏற்று எங்கு செய்கின்றனர்? என்று நினக்கிறாயா? இந்த லக்ஷணங்கள் எந்த தர்மங்களில் பொருந்தி இருக்கிறதோ அதுதான் தர்மங்களில் எல்லாம் சிறந்த தர்மம்.

பகவந் நாமங்கள் என்ற தர்மத்தை யோசித்துப் பார். இந்த நாமங்கள் தாம் சாக்ஷாத் நேரடியான தர்மங்கள். இதைச் சொல் என்பதற்கும், அப்படியே இதை ஏற்று இதன்படி ஒழுகுவதாக இதைச் சொல்வதற்கும் இடையில் வித்யாசமே இல்லை. தர்மம் ஒன்று தனியாக இருக்கிறது. அதை ஏற்று அதன்படி நடத்தல் என்ற ஆசாரம் என்பது தனியாக இருக்கிறது என்பதை பகவந் நாமங்கள் விஷயத்தில் சொல்ல முடியாது. நாம ஜபம் விஷயத்தில் எது தர்மமோ அதுவேதான் ஆசாரமும். இதைச் சொல் என்பவனும் அதைச் சொல்கிறான். அதைச் சொல் என்று காதால் கேட்பவனும் அதையே அந்தக் கேட்கும் கணத்திலேயே, மனத்தால் வாங்கும் கணத்திலேயே சொல்பவனாய் ஆகிவிடுகிறான். தர்ம உபதேசமும், அந்த தர்மத்தை ஆசரிக்கிற ஆசாரமும் ஒரே கணத்தில் நடைபெறுவதை நீ பகவந் நாம ஜபம் ஆகிய இந்தச் சிறந்த தர்மம் ஒன்றில்தான் பார்க்க முடியும்.

"அப்படிப்பட்ட பகவந் நாம ஜாபம் ஆகிய தர்மத்தைவிட வேறு எந்த தர்மம் முழுக்க முழுக்க பிரபு ஸம்ஹிதை என்பதற்கு ஒவ்வியதாய் வருகிறது? யோசித்துப் பார். ஆகவே இந்த அழிவில்லாத தர்மம் ஆகிய பகவந் நாம ஜபம் என்னும் தர்மத்திற்கு யார் பிரபு? பிரபு ஸம்ஹிதை என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் அவ்வாறு செய்யப் பணிக்கும் ஆணைசக்தி உடைய அந்தப் பிரபு யார் என்கிறாயா? அழியாத, பொய்க்காத, மாறாத இந்தத் தர்மத்திற்கு பிரபு மாறாதவனாகிய அச்சுதன்.

ஸர்வ ஆகமாநாம் ஆசார: ப்ரதமம் பரிகல்பித:|
ஆசார ப்ரபவோ தர்ம: தர்மஸ்ய ப்ரபு: அச்யுத:||

அனைத்து ஆகமங்களிலும் அவற்றின்படி நடப்பதே முக்கியமாக முதலில் விளக்கப்படுவது ஆகும். அவ்வாறு நடக்கும் ஒழுக்கமே தர்மத்தை நன்கு வெளிப்படுத்தும். (இந்த பகவந் நாம ஜபம் என்ற) தர்மத்திற்கு பிரபு அச்சுதன். எனவே நீ தர்மம் என்று கவலைப் பட்டாலும் இதைவிடச் சிறந்த தர்மம் இல்லை. தனம் என்று கவலைப் பட்டாலும் இதைவிட அருந்தனம் எதுவும் இல்லை. இன்பம் என்று கவலைகொண்டவனாய் இருந்தாலும் இதைவிடப் பேரின்பம் எது உண்டு? மோக்ஷம் என்று கவன்றால் நாமஜபம் சொன்னால் அன்றே அப்பொழுதே வீடு வீடாமே என்பது அன்றோ பக்த சமுதாயத்தின் அனுபவமாக இருப்பது.

வழிவழியாக வரும் ஆசாரிய புருஷர்கள் அனைவருமே இந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்பதை நாமாவளி ரூபத்தில் இருக்கும் வேதாந்தச் செப்பு என்றுதான் நினைக்கின்றனர். வேதாந்த மறைபொருளைத் தன்னிடத்தே இந்தக் கடவுள் நாமங்கள் செறிவாகக் கொண்டுள்ளன என்ற உறுதியில்தான் அவர்தம் உரைகளே எழுந்துள்ளன. பெயர்களின் பட்டியலில் அப்படிப் பெரும் வேதாந்தக் கருத்துகளைப் பொதிந்து வைத்த வியாசர்தாம் என்ன தயை மிக்கவர்!

ஸ்ரீபராசர பட்டர் கூறுகிறார் --

"இந்த ஸம்சாரமாகிய உலகம் பகவானின் இயல்பு முதலிய ஆன்மிக விஷயங்களில் ஏற்கனவே அறிவில்லாத ஒன்று. அதுவும் கலி காலத்தில் கேட்கவே வேண்டாம். அறியாமை இன்னும் அதிகம். அது மட்டுமில்லை. தமக்குத் தெரியாது என்ற குறைபாடே தங்கள் நெஞ்சில் சிறிதும் தோன்றாமல், தங்களை எல்லாம் தெரிந்து நிரம்பினதாக நினைத்துக்கொண்டிருக்கும் ஜனங்களிடத்தில் வேதாந்த ரஹஸ்யத்தை நான் சொல்லத் துணிவது சாகசமே! இந்த விஷயத்தில் ஸஹஸ்ர நாமத்தை வெளியிட்ட வியாசரும், துதிக்கப்படும் ஸ்ரீமந் நாராயணனும் இப்படித் துணியும் என் அறியாமையைப் பொறுத்துக் கொள்வார்களாக!" என்ன சார்! ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று சொல்லும் நாமாவளியில் அப்படி என்ன வேதாந்தம் என்று அலட்சியமோ, பொறாமையோ எதுவுமின்றி தயவு செய்து உங்கள் உள்ளத்தை உட்செலுத்திக் கேளுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார் அன்றைக்கே!

உரைக்காரர்கள் நாமங்களின் எண்ணிக்கையையும், வகைகளையும் பற்றிப் பலவாறாக யோசித்திருக்கின்றனர். பொதுவாகச் சொன்னால் ஆயிரம் நாமங்கள் என்பது இயல்பாக நூறு நூறாக வகைபடுத்தும் முறையைத் தந்திருக்கிறது. ஸ்ரீபராசர பட்டர் காட்டும் வகைப்பாட்டில் ஓர் அருமையான நயத்தைக் காட்டுகிறார், பாஞ்சராத்திர சித்தாந்த ரீதியாக. அதாவது ஸ்ரீபாஞ்சராத்திர சித்தாந்தம் என்பது பரமாத்மாவின் ஐந்து இறைநிலைகளைப் பற்றிப் பேசுவது. பரத்வ நிலை, வ்யூஹ நிலை, விபவ நிலை, அந்தர்யாமி நிலை, அர்ச்சை நிலை என்பன அந்த ஐந்து நிலைகள். மொத்த நாமங்களையே இந்த ஐந்து நிலைகளை வைத்து வகைபடுத்திக் காட்டுகின்றார் ஸ்ரீபட்டர். ஸ்ரீஆதிசங்கரரின் உரை அத்வைத சித்தாந்தமான ப்ரஹ்மம் என்பது சத்யம், ஜகத் என்பது மிதயை, இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே, வேறு அன்று என்ற கருத்தில் நிற்பது என்றாலும் ஸ்ரீஆதிசங்கரரின் கூற்றுப்படி, 'அந்த பிரம்மம் மாயாவிசிஷ்டமாகக் கொண்டு சகுண பிரம்மமாக இந்த ஆயிர நாமங்களுக்குப் பொருளாகிறது' என்றாலும் பல இடங்களிலும் ஸ்ரீஆதிசங்கரர் பக்தியிலேயே நெகிழ்ந்து போகிறார். உதாரணத்திற்கு 'நாராயண;' என்னும் நாமத்திற்கு உரை எழுதுகையில் ஸ்ரீஆதிசங்கரர் எழுதுவது --

"நரன் என்னப்படும் ஆத்மாவினிடத்து உண்டானதால் நாரங்கள் என்னப்படும் ஆகாயம் முதலிய கார்ய வர்க்கங்களில் காரண ரூபியாக வியாபித்திருப்பதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர்; நரர்கள் என்னப்படும் ஜீவர்களுக்குப் பிரளய காலத்தில் ஆதாரமாயிருப்பவர்; நரம் என்னப்படும் ஜலமாகிய ப்ரளயசாகரத்தில் சயனித்திருப்பவர்; 'விஷயப்பற்றுக்களை விட்டு ச்ரேயஸைக் கருதுகிற ஸந்யாசிகள் ஸம்ஸாரம் என்னும் கொடிய விஷத்தைப் போக்குவதற்கு உரியதாகிய 'நாராயணாய நம:' என்னும் இந்த ஸத்ய மந்த்ரத்தையே கேட்க வேண்டும் என்பதை நான் கைகளைத் தூக்கிக்கொண்டு உயர்ந்த குரலால் உபதேசிக்கிறேன்' என்பது நரஸிம்ம புராணம்."

***

ஆள் மறைந்தால்தான் தத்துவம்

ஆழ்வார் தாம் இருந்த ஓர் அருள் நிலையில், தக்க ஞானக் கண்களாலே தாம் கண்ட ப்ரத்யக்ஷமாக பகவத் தரிசனத்தைக் கூறுகிறார். ஆபரேடிங் ஸிஸ்டத்தில் நாம் சிலவற்றைக் காண்பதாகக் கூறுகிறோம். லௌகிகக் கண்களுக்கும், தொழில்நுட்பம் அறியாதார் கண்களுக்கும் முறையே இரண்டும் நம்பிக்கையின் பாற்பட்ட அனுபவக் கூற்றுகளாய் இருந்துவிடுவதான ஓர் ஒப்புடைமை அமைந்துவிடுகிறது. எனவே நீ அனுபவித்தது உன்மட்டோடு. அதற்கு என்ன பொதுச் சான்றாண்மை? என்ற கேள்வி அவசியம் கேட்கப்பட வேண்டிய கேள்வியாக ஆனாலும் அந்தக் கேள்வியே சிந்தனைக்குரியதாகவும் ஆகிவிடுகிறது.

ஏனென்றால் பழங்காலம் தொட்டு, பல இடங்களில், பல மொழிகளில் பிறந்த ஆன்மிக அருளாளர்களும், இறையன்பாளர்களும் தாங்கள் கண்ட காட்சியைப்பற்றிச் சொல்லிக்கொண்டுதான் வந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகின் பல இடங்களில் சொல்லும் ஒன்று எப்படிப் பேசி வைத்துக்கொண்டு கட்டுக்கதை புனைந்தது ஆகும்? சரி அப்படியென்றால் அது எப்படிச் சாத்தியம் ஆகும்? ஏனென்றால் ஒன்று வேறு ஏதோ தளத்தில் நிகழ்ந்தது, வேறு ஏதோ சூழல்களில் நிகழ்ந்தது, இத்தகைய மனோநிலையில் நிகழ்ந்தது என்றுதான் சொல்லிக்கொண்டு போகமுடியுமே ஒழிய, நிகழ்ந்தது என்று சொன்ன பிற்பாடு இருப்பு நிகழ்வு என்பதற்கான அனைத்து அம்சங்களும் அங்கு வந்துவிடும். இந்த இருப்பில்தான் இதுமாதிரி நிகழும் வேறு ஓர் இருப்பு இருக்கிறது. அதுபோல் எவ்வளவோ வகை இருப்புகள் உண்டு என்றெல்லாம் ஒருபோதும் சொல்லமுடியாது. Existence is One. பல தளங்கள், சூழல்கள் என்று சொல்லலாம். அதற்குத்தான் ஆபரேடிங் ஸிஸ்டம் உதாரணம் பயன்படுகிறது.

ஆபரேடிங் ஸிஸ்டத்திலும் சரி, அருளாளர்கள் தரும் விவரணைகளிலும் சரி நிகழ்வு நிகழ்வாக இருக்கும் வரையில் எந்தக் காட்சியாக இருந்தால் என்ன? அதற்கும் ஒரு ஹோலோக்ராபிக் வர்ச்சுவல் அனுபவத்திற்கும் என்ன வித்யாசம் இருக்கப் போகிறது? அதாவது ஒருவர் ஒரு காட்சி பெறுகிறார் என்றால் பின் அவர் அங்கு உடைந்துவிட வேண்டும். அந்த வ்யக்தி முற்றிலும் நொறுங்கிவிட வேண்டும். காண்பவனை முற்றிலும் மாற்றிவிடாத காட்சிக்குப் பெரிதும் பெறுமதி இருக்கும் என்று தோன்றவில்லை. ஓர் ஆபரேடிங் ஸிஸ்டம் உதாரணம் காட்சிக்கான பொதுமையைப்பற்றிய விவாதத்தை ஆழ அகலமாக ஆக்குமே தவிர, காட்சிக்கான விளக்கமாக ஒரு போதும் ஆகிவிடாது என்றே தோன்றுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணரே கூட ஒரு சமயம் விவேகாநந்தரின் கேள்வி ஒன்றுக்கு, அதாவது இந்த யோகக் காட்சிகளுக்கான உள்ளார்ந்த பெருமதிப்பு ஏதேனும் உண்டா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் 'நீ ஆன்ம சாதனையில் முன்னேறிக்கொண்டிருக்கிறாய் என்று வேண்டுமானால் இந்தக் காட்சிகள் தெரிவிக்குமே அன்றித் தம்மளவில் ஏதும் பெருமதிப்பு உடையன அல்ல' என்று கூறுகிறார். யாரோ ஒருவர் தமக்கு இத்தகைய காட்சிகள் ஏற்படவேண்டும் என்று கரையும் பொழுதும் இந்தக் காட்சிகளை விட விவேகமும், வைராக்கியமும், பக்தியும், ஞானமும் எவ்வளவோ சிறந்தவை என்று அறிவுறுத்துகிறார். ஆக அருளனுபவம் என்பது ஒருவரை உள்ளே 'கண்டமான' நிலையிலிருந்து அகண்டமாக ஆக்கவேண்டும். அவரது ஸங்குசிதமான வ்யக்தியை உடைத்து விகாசமான ஆளுமையை, அல்லது ஆளிறந்த தன்மையை ஏற்படுத்த வேண்டும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் கூறும் மொழி -- ஞானத்தின் முன்னால் ஒருவனிடம் இருப்பது பச்சையான அகங்காரம். அது அல்லல் படுத்தும். ஆனால் ஞானம் அடைந்த பின் அவனது அகங்காரம் கெடுதல் செய்யும் தன்மையை இழந்துவிடுகிறது. எரித்த கயிறு போல் இருக்கிறது. பார்வைக்கு மட்டும் அகங்காரம் போன்று. ஆனால் அதனால் கட்ட இயலாது. அதாவது தான் என்று ஒருவன் குவித்து வைத்துள்ள சுய நிலுவைகள் அத்தனையும் நிர்மூலமாக எரிந்துபட வேண்டும். இருந்ததற்கான ஒரு தோற்றமே மிஞ்சும். சாம்பலாகிப் போன கயிறு முறுக்கின புரிகள் உட்பட அப்படியே இருக்கும். ஆனால் ஒரு காற்றடித்தால் தூள் தூளாகப் பறந்துவிடும்.

ஆள் மறைந்தால்தான் வேதாந்தமே புரியும் என்பார் பிள்ளை எங்களாழ்வான். ஸ்ரீராமானுஜரின் மருமகனார் நடாதூராழ்வான். அவருடைய பேரர் நடாதூரம்மாள். தமது பிதாமஹரிடம் வேதாந்தம் கற்கத் தொடங்கினார் நடாதூரம்மாள். ஸ்ரீபாஷ்யம் மங்களஸ்லோகம் தொடங்கினதுமே 'அகில புவந' என்று ஆரம்பித்ததுமே ஏன் அகில புவந என்று ஆரம்பிக்க வேண்டும்? நிகில புவந, ஸகல புவந என்றெல்லாம் ஆரம்பிக்கலாமே? அவற்றை விடுத்து 'அகில புவந' என்று ஆரம்பிப்பதின் ஸூக்ஷ்மம் என்ன? என்று கேட்டார் நடாதூரம்மாள். பெரியவருக்கு ஒன்று புரிந்தது. பையன் சிறுவயது. துடியாகக் கேட்கும் கேள்விகளுக்கு எல்லை இருக்காது. அத்தனைக்கும் ஈடு கொடுத்துக் காலக்ஷேபம் சொல்ல தம் வயது இடம் கொடுக்கவில்லை. எனவே தமது பேரனை 'அப்பா! ஐயத்திற்கே இடமின்றி ஆழமும் விரிவுமாகச் சொல்லக் கூடியவர் திருவெள்ளறையில் எழுந்தருளியுள்ள ஆசாரியரான பிள்ளை எங்களாழ்வான். நீ அவரிடமே சென்று கற்கத் தொடங்கு' என்று அனுப்பி வைத்தார். இளவயதினரான நடாதூரம்மாள் ஆர்வமும் முனைப்பும் தள்ள திருவெள்ளறை போய்ச் சேர்ந்தார். பிள்ளை எங்களாழ்வான் திருமாளிகையைக் கண்டறிந்து கதவைத் தட்டினார்.

'யாரது?' என்று உள்ளிருந்து எங்களாழ்வானின் குரல்.

இளைஞர் 'நான்தான் நடாதூரம்மாள். ஸ்ரீபாஷ்யம் கற்க வந்திருக்கிறேன். என் பிதாமஹர் நடாதூராழ்வான் அனுப்பினார். அருள் புரிய வேண்டும்'

எங்களாழ்வான் உள்ளிருந்தபடியே 'நான் செத்த பிற்பாடு வா. சொல்லுகிறேன்' என்றார்.

இளைஞருக்கு முகம் செத்துவிட்டது. என்ன இது? மகாபெரியவர் என்னதான் ஏதோ விரக்தியில் இருந்தாலும் இப்படியா அச்சானியமாகக் கூறுவது? ஒரே வார்த்தை சௌகரியமில்லை இப்பொழுது என்றுகூட கூறியிருக்கலாம். எல்லாம் நம் தலைவிதி என்று நொந்தபடியே பாவம் காஞ்சிபுரம் திரும்பிவிட்டார்.

முகம் வாடி வரும் பேரனைக் கண்டதும் போன இடத்தில் என்ன சேதியோ என்னவோ என்று தாத்தா ஆதுரமாகப் படபடப்புடன் விசாரிக்கிறார். 'பிள்ளை எங்களாழ்வான் நலம்தானே?'

பேரன் என்ன சொல்வார்? 'பெரியவர் நலமே உள்ளார். ஆனால் என் பூர்வ ஜன்ம கர்மங்கள்தாம் நன்மையாக இல்லை போலும்!'

ஏனப்பா? என்ன ஆயிற்று?

'நான் சென்று கதவைத் தட்டினேன். யாரது என்று வினவினார். நான்தான் நடாதூரம்மாள், தங்களுடைய பேரன் என்று கூறினேன். என்ன விரக்தியோ தெரியவில்லை? 'நான் செத்த பிறகு வா. சொல்கிறேன்' என்று கூறிவிட்டார். ஏன் எனக்கு இப்படி ஆயிற்று? ஸ்ரீபாஷ்யம் கற்க வேண்டும் என்று நினைத்தது தப்பா? என்று வருந்தினார் பேரப்பிள்ளை.

நடாதூராழ்வானோ சிரிக்கின்றார். 'அப்பனே! உனக்கு ஏற்கனவே உபதேசம் ஆரம்பமாகிவிட்டது தெரியவில்லையா ?'

என்ன?

'ஆமப்பா! நான் செத்த பிறகு வா என்றால் அந்த மகான் தம்மைக்குறித்துச் சொல்லவில்லை. யார்? என்ற கேள்விக்கு இந்த ஆத்மாவின் உண்மையான இயல்புக்கு, பகவானின் உடலும், சேஷமும் ஆன இந்த ஆத்மாவின் சொந்த இயல்புக்குப் பொருத்தமாக ஆத்மாவின் நிலைநின்ற பெயரான 'அடியேன்' என்று சொல்லாமல் நீ இந்தத் தேகத்தோடு சம்பந்தப்பட்ட பெயரான தேகாத்மாபிமானமான பெயரையும், இன்னாருக்குப் பிறந்தவன், இன்னார் பேரன் என்று வந்து மறையும் சொந்தங்களை இட்டும் உன்னை அடையாளப்படுத்திக் கொண்டாயல்லவா? அதைத்தான் அவர் குறித்திருக்கிறார். அந்த ’நான்’ என்ற தேகாத்மாபிமானம் அடிப்படையான அடையாளம் உன் உணர்விலிருந்து மறைந்து ஆத்ம ஸ்வரூபமான 'அடியேன்' என்ற உணர்த்தி தலை தூக்கியபின்பு வா. அப்பொழுதுதான் நீ ஸ்ரீபாஷ்யம் கேட்கச் சரியான அதிகாரி ஆவாய்.' என்று உனக்கு முதல் உபதேசமே கனகச்சிதமாக ஆரம்பம் ஆகிவிட்டது. கொடுத்து வைத்தவன் போ மீண்டும்' என்று சொல்லிப் பேரனைத் திருவெள்ளறைக்கே அனுப்பிவைத்தார் வேதாந்தச் சுவடறிந்த பாட்டனார். பக்தியின் உதவியோடு கூடிய சாஸ்திரத்தால் ஜநார்த்தனனை அறிந்தேன் என்றான் சஞ்சயன்.

***

கணினி, நெஞ்சென்னும் உட்கண், ஆயர்தேவு

கணினி, ஆபரேடிங் ஸிஸ்டம், இன்டெர்நெட் தொடர்பு, பிரௌஸர், ஸர்ச் பொறி, எச்டிடிபி முகவரி என்று இந்தச் சூழலில்தான் வெப் தளம் பிரத்யக்ஷம் ஆகிறது. நாம் இருக்கு என்கிறோமே அந்த வெப் தளம் எங்கே பார்ப்பது? கணினியில் நாம் காட்டுவது திரையில் ஏதோ தெரியும் சலன சித்திரங்கள். ஆனால் நாம் சொல்வதோ ஏதோ வெப் உலகம் என்று மின் அலை அமைத்த பொதுவெளி. அது இதுதான் என்பதும் அதைக்காண இத்தனை வாங்கியாக வேண்டும், இவற்றை ஒருங்கிணைக்கும் நெறிமுறைகளை வேறு கற்க வேண்டும். – ஆக மொத்தம் ஒரு நம்பிக்கைவாதியைப் போல் நம் பேச்சுகள், செயல்கள் ஆகிவிடுகின்றன ஹைடெக்கான கணினி நெட் சூழ்நிலையில். ஆனால் இயல்பான வாழ்க்கையே இப்பொழுது நமக்கு வித்யாசமான கோணத்தில் தெரிந்துகொண்டிருக்கிறது.

ஐம்புலன்கள், ஐம்பொறிகள், ஐம்பூதக் கோவையான உலகம், மனம், மொழி என்று இத்தனை இருந்துதானே எனக்கே பிரத்யக்ஷமான இந்த உலகம் இயன்றுகொண்டிருக்கிறது. எனவே இந்தப் பிரத்யக்ஷம் எனக்கு இந்தச் சூழலின் கூட்டரவைச் சார்ந்து தோன்றும் சத்யம் அதுதானே? இந்தச் சூழலை விட்டுப் பிரிந்து நின்று பார்த்தால் இதன் சத்யத்வம் என்ன ஆகும்? அப்படி ஒரு நிலை முடியாது என்ற காரணம் இதன் சார்பு நிலையைப் பற்றிய என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்துவிடவில்லையே! அசாத்தியம் ஒன்றைப் பற்றித் தெரிவிப்பது இந்த சத்யம் பாதிப்பே அற்றது என்று உறுதியளித்தது ஆகாதே! அப்படியே பார்த்தாலும் தூக்க நிலையில் ஓரளவிற்கு இதுவும் சாத்யம் என்றுதானே ஆகிறது. ஸ்வப்னம் வெறுமனே நனவு நிலையின் தலைமீது பறக்கும் நீராவிதான் என்று கழித்துக்கட்டிவிட முடியுமா? ஓர் ஆபரேடிங் ஸிஸ்டத்தின் பிரத்யக்ஷத்தை இன்னொரு ஆபரேடிங் ஸிஸ்டத்தின் பிரத்யக்ஷம் கொண்டு கொள்ளவோ தள்ளவோ முடியாது என்பதைத்தானே இப்பொழுது கணினியும், இணையமும் எனக்கு ஜீவனின் ஸ்திதி பற்றிய புதிய கோணத்தையல்லவா திறந்துவிடுகிறது.

இது ஒரு பக்கம் என்றால், 'என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே' (3162) என்று பாராங்குச நாயகிப் பாசுரம் முற்றிலும் புதுப்பொருள் கொண்டு அன்றோ என் நினைவில் எழுகிறது. இப்பொழுது நான் நம்மாழ்வாரிடம் எப்படி நெஞ்சின் பொதுமையைப் பற்றி வாதம் செய்வது? கணினி முதலிய சூழல்கள் இருந்தால்தான் வெப் உலகத்தைப் பார்க்க முடியும் என்று சொன்ன வாய் உலர்வதற்குள் இந்த நினைவை எதிர்நோக்கும் போது திகைப்படைகிறேன். அவரோ தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணில்லாமல்தான் பேசுகிறார்.

'மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே' (3082)

'ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே' (3365)

'காண்மின்கள் அன்னையர்காள்! என்று காட்டும் வகை அறியேன்' (3409)

பொதுமையாக ஆக்குவதற்கு இதில் ஒன்றுமில்லை என்று நான் அவருக்குச் சொல்லும் போது அந்த வார்த்தைகள் சரியாக விலாசம் விசாரித்துக்கொண்டு வந்து எனக்கே பொருந்துகின்றன. நானே ஒரு நூறு வருஷங்களுக்கு முன் இருந்தால் யாராவது என் மாதிரி சொல்லியிருந்தால் நானும் ஏதோ நம்பிக்கைகளின் உலகம் என்று போயிருப்பேன். ஆனால் விஞ்ஞானம் உபகரணங்களின் மூலமான ஒரு நுண் அனுபவத்தை எனக்குப் பலாத்காரமாக என் வாழ்க்கையில் திணித்துவிட்டதால் இது என்னைப் பொறுத்தவரையில் யதார்த்தம் ஆகிவிட்டது. அதுபோல் பக்தி உலகு என்பதையும் ஏதாவது விஞ்ஞானம் பலாத்காரமாகப் பொதுமைப் படுத்துமேயானால் அப்பொழுது நம் யதார்த்தக் கணக்குகள் வேறு மொழியைத்தானே பேசும்!
அதைத்தான் திருதராஷ்ட்ரன் கேட்கிறான் ஸஞ்சயனிடம்.

"ஸஞ்சயனை நோக்கி திருதராஷ்ட்ரன், நீயும் நானும் ஒக்க சாஸ்த்ர வாசனைகள் பண்ணிப் போந்தோம். இங்ஙனே இருக்கச் செய்தே எனக்கு உன்பக்கலிலே கேட்டு அறியவேண்டும்படி உனக்கு இவ்வர்த்தத்தில் வைசத்யம் (அறிவு விளக்கம்) உண்டானபடி எங்ஙனே? என்ன ---

ஸஞ்சயன்:- எனக்கு வாசி கேளாய்! ....
சுத்தபாவங்கத: பக்த்யா சாஸ்த்ராத் வேத்மி ஜநார்த்தனம் -- நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப்பட்டிருப்பன். பக்தி ஸஹக்ருத சாஸ்த்ரத்தாலே அவனை அறிந்தவன் என்றானிறே"
(ஈடு பகவத் விஷயம் 5.5.2).

சஞ்சயா! நீயும் நானும் ஒன்றாகத்தான் படித்தோம். ஆனால் தத்வார்த்தங்களை நீ சொல்ல நான் கேட்க வேண்டியிருக்கிறதே? இது எப்படி? படித்தது ஒரே ஆசிரியரிடம். படித்ததும் ஒரே நூல்களை. ஆனால் உனக்குப் பிரத்யக்ஷமாக ஆவது ஏன் எனக்கு நீ எடுத்துச் சொல்லிக் கேட்டுக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது? பாவம்! கல்வியின் ஓர் ஆணிவேரைத் தடவித் தடவிச் சுண்டிப் பார்க்கிறான் திருதராஷ்ட்ரன்.

'மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே' (3082)

'ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே' (3365)

'காண்மின்கள் அன்னையர்காள்! என்று காட்டும் வகை அறியேன்' (3409)

பக்த்யா ஸஹக்ருத சாஸ்த்ரம் -- பக்தியின் உதவியோடு கூடிய சாஸ்த்ரம். இந்தப் பின்புலத்தில் இனிவரும் சம்பவத்தைப் பாருங்கள்.-
ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் சொல்லச் சொல்ல ஏடுபடுத்தினவர் கூரத்தாழ்வான். நடுவில் உபாதைகள் வந்தபின்பு ஏடுபடுத்தும் பணிக்குத் தகுந்த ஒருவர் வேண்டியிருந்தது. அந்தத் திருப்பணிக்கு ஏற்றவரென தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிள்ளை எங்களாழ்வான். வேதாந்தம் கரைகண்டவர். இவருக்கு இருந்த அபரிமிதமான ஞானத்தெளிவைக் காட்டும் நிகழ்ச்சிகள் பல. சாஸ்த்ரத்தில் கரை கண்டவர். ஸ்ரீவிஷ்ணு புராணத்துக்கு உரை எழுதியவர். அவர் தூங்கப் போகும் பொழுது, தூக்கமும் அழுத்தாமல் நனவும் கலையாமல் இருக்கும் முன்னிலையில் கனவில் 'எனக்கு நாவல் பழம் வேண்டும்' என்று ஒரு சிறுபிள்ளை கேட்கிறது. சரி ஏதோ கனவு என்று நனவின் பகுதி தள்ளியவாறே தூங்கப் புக மீண்டும் மீண்டும் சிறுபிள்ளையின் தொந்தரவு அதிகமாகிறது.

'யாரப்பா நீ?' என்கிறார் பிள்ளை எங்களாழ்வான்.

"நான்தான் சீயர்மகன் ஆயர்தேவு" என்று பதில் சொல்கிறது சிறுபிள்ளை.

விழித்தெழுந்து பிள்ளை எங்களாழ்வான் நேரே போனார் நஞ்சீயரிடம்.

"சீயரே! உம்முடைய மகன் ஆயர்தேவு எங்களை இங்கே குடியிருக்கவும் ஒட்டுகிறானில்லை, தூங்கவும் விடுவதில்லை" என்று படும் தொல்லையைச் சொன்னார்.

உடனே நஞ்சீயர் திருப்பள்ளியறைக்குச் சென்று "நாயந்தே! இப்படிச் செய்தல் கூடாது" என்று கடிந்துகொண்டார்.

ஆயர்தேவா? எங்கள் கண்ணுக்குப் படவில்லையே என்கிறது என் யதார்த்த அளவுகோல். என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்கிற பாசுரப் பகுதியும், கணினி - வெப் உலகமும் ஒன்றுக்கொன்று சங்கேதமாகப் பேசிக்கொள்கின்றன. என்னதான் நடக்கிறது இந்த உலகத்தில்? கட்டங்கள் கிழித்து வைத்திருக்கிறோம். உண்மைகள் கீழ்ப்படிய மறுக்கின்றன. துயிலின் சுகம் போனதுதான் மிச்சம். பாவம் நீங்களாவது நன்றாக உறங்கிக் கொண்டிருந்தீர்கள்! உங்களையும் தொந்தரவு படுத்தி ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

முயலும் சரணாகதியும்

சில வருஷங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு தனி வீட்டில் குடியிருந்தேன். சுற்றிலும் மரங்கள். வாசலில் கிராதிக்கு உட்பக்கம் மேடைபோல் குறடு. சைக்கிள் அங்குதான் நிறுத்துவோம். மேலே ஊஞ்சல் கட்டித் தொங்க விடக் கொக்கிகள். ஊஞ்சல் கட்டவில்லை பல வருஷங்களாக. எனவே குருவிகள் தங்கள் குடும்ப வாழ்க்கையை அங்கே தொடங்கிக் குஞ்சு பொறித்துப் பறக்குமட்டும் பயன்படுத்தக் கூட்டைக் கட்டின. கூடு இருந்துகொண்டே இருக்கும். குருவிகள் பேறுகாலத்தில் வரும் முட்டையிட்டு அடைகாக்கும். நாங்கள் எங்கள் வேலையுண்டு நாங்களுண்டு என்று போகின்றவர்கள் என்று அதற்கு யார் சொன்னார்கள்? குருவிக்கூட்டைக் கலைப்பது பாவம் என்று இளகிய மனத்தர் என்று அதன் பாஷையில் யாராவது தெரிவித்தார்களா? அது தெரியாமல் அந்தக் குருவிகள் குருட்டாம் போக்கில் கூடு கட்டிக் குடும்பம் நடத்துகின்றன என்று கூறாதீர்கள். நிச்சயம் பறவை, விலங்கு, பூச்சி, ஏன் எறும்பு எல்லாமே அறிவில்தான் இயங்குகின்றன என்ற நிச்சயம் சிறிது இயற்கையில் வாழ்ந்தாலே தெரிந்துவிடும். ஆனால் வகுப்பறை மேடைக்கு மட்டும் சில கொள்கைகள், சில வாசகங்கள், சில கோட்பாடுகள். இதற்கு 'ஒப்புக் கொள்ளப்பட்ட நெறிமுறைகளின் படி' என்று பெயர். இதிலும் ஒரு காரணம் இருக்கலாம். இல்லையென்றால் பொய் மலிந்து எங்கும் பூனைக்குறும்பு ஆகிவிடும்.

விவேகாநந்தர் சொல்வார், 'அதோ வருகிறது கனவேகத்தில் புகைவண்டி. தண்டவாளத்தில் விரைவில் சுழலும் அதன் சக்கரங்கள். இன்னும் சற்று இருந்தால் சக்கரம் ஏறி அந்த எறும்பு நசுங்கியிருக்கும். ஆனால் லாகவமாக எறும்பு பக்கவாட்டில் நகர்ந்து எங்கு இடைவெளி ஏற்படுமோ அங்கு ஒதுங்கித் தப்பித்து மீண்டும் தன் வழியைத் தொடர்கிறது. அதனிடம் சுதந்திரம் இருக்கிறது' என்று கூறுவார். உயிர், விடுதலை, அறிவு -- ஒரு வைரத்தையே திருப்பித் திருப்பிப் பல பட்டைகளில் தெரியும் ஒளி மாலைகளைக் காண்கிறோம்.

நமது குருவிக்கு வருவோம். குஞ்சு பொறித்து நாட்கள் ஆகிப் பறக்கப் போகிறது என்றால் எங்களுக்கு முதல்நாளே தெரிந்துவிடும். கலகல கல என்று கூட்டில் ஓயாத பயணக் கலகலப்பு இருக்கும். send off போலும் என்று பேசிக்கொள்வோம். அப்படி ஒரு சமயம் ஏதோ அவசரம் காலை கிளம்பிச் சைக்கிளை எடுக்கச் சென்றேன். கூடத்திலிருந்து பக்கத்துச் சன்னலுக்கு வெளியே சைக்கிள் நிற்கும். கதவைத் திறந்தால் ஒரு குருவி வினோதமான முறையில் பாரபோலா, டம்பல்ஸ் போன்ற பல வடிவங்களில் தன் இறக்கைகளை அதிர்வுற வீசிய படியே கிழே தரையில் என் கால்கள் நகர வொட்டாமல் சுற்றிச் சுற்றி வருகிறது. வினோதமாக இருக்கிறது. சத்தம் கேட்டாலே ஓடிவிடும் பறவை என் எதிரில் கால்களுக்கு அருகில் என்னைத் தடுப்பதுபோல் வியூகம் போடுகிறது. ஒரு கணம் பொறி தட்டினாற் போல் உறைத்தது. அடடா பிள்ளையைப் பள்ளிக் கூடம் சேர்க்கும் 'வித்யாரம்பம்' சடங்கு நடக்கிறது போலும். இப்பொழுது வராதே என்கிறது என்று. அப்படியே ரிவர்ஸ்ஸில் பின்னால் வந்து கதவைச் சாத்திவிட்டேன். பக்கத்து சன்னலில் நின்று என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தேன்.

சைக்கிள் ஹாண்டில் பார் மேல், பறக்க முயன்று புது அனுபவத்தில் நெட்டுக் குத்த விழுந்த குஞ்சு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுந்த உட்கார்ந்திருக்கிறது. அப்பன் பறவை, ஆத்தாள் பறவை இரண்டும், அவற்றின் குடும்பத்தில் எந்த உறவு முறை இந்தச் சடங்கிற்கு முன் நின்று நடத்த வேண்டும் தெரியாது. இரண்டும் மாறி மாறி குரல் கொடுத்து ஊக்கம் தருகிறது. அல்லது செய்முறை குறிப்புகள் தருகின்றன. நமக்கு எல்லாமே ஒரே கிலுகிலுகிலுகிலுதான். ஓர் அரை மணி நேரம் நான் மனித உலகிற்கும் பறவை உலகிற்கும் இடைப்பட்ட உலகில் இருந்தேன். நான் ஏற்கனவே அறிந்து வைத்திருந்த co-ordinates எல்லாம் அந்த நேரத்தில் தூரவே நின்றன. பிரத்யக்ஷம், படித்த அறிவைப் புறந்தள்ளி விட்டு மூர்த்தண்யமாக நடந்துகொண்டிருந்தது. குருவியோடு நான் மனத்தொடர்பு கொண்டதும், அந்தக் குஞ்சின் வித்யாரம்பத்தில் நான் கலந்துகொண்டதும், ஏற்கனவே எனக்குக் கணந்தோறும் பழக்கத்தில் இருக்கும் படித்த, புரிந்துகொண்ட உலகும் ஒன்றையொன்று முறைத்துக்கொண்டு பேச்சு இல்லாமல் நின்றன. பழைய உலகம். இந்தப் புதிய பார்வையை எந்தத் தட்டில் கொண்டு போய்ச் சொருகி வைப்பது.? எல்லாமே அறிவுதான்.

நான் குருவியோடு பேசினேன் என்றால் நம்பிக்கையாகிவிடும். அல்லது குழந்தைக் கதையில் வரும் கற்பனையாகிவிடும். அதன் வீட்டுக் குஞ்சு பெரிசான நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்றால் நீங்களே என்னைத் தனியாக பார்த்து 'ரொம்ப படிக்காதீர்கள். அவ்வளவாக உடம்புக்கு நல்லது இல்லை' என்று அக்கறையாக நல்லது சொல்வீர்கள். இல்லை நம் பழைய உலகில் இடம் கொள்ளாத ப்ரத்யக்ஷமானாலும் அது நம்பக் கூடியது அன்று. என் புரையுள் சொருகிவைக்க இடம் இல்லையென்றால் அது உண்மையில் இருந்தும் இல்லாதது போல்தான். மனித உயிர் மனித உடல் மனித வாழ்க்கை இந்த ரீதியில்தான் தொடக்கமுதல் நான் மூளையில் தகவல் கவாண்களைச் சட்டம் கட்டி வைத்திருக்கிறேன். அதில் கொள்ளாதது ஏதோ freak என்று புறம் தள்ளப்படுகிறது.

இங்குதான் எனக்கு ஓர் ஐயம் வருகிறது. பக்தி என்பது பழைய உலகில் புதிய பார்வையோ? ஏனெனில் இந்தச் சம்பவத்தைப் பாருங்கள். எனக்கு ஏற்பட்ட ப்ரத்யக்ஷ அனுபவம் இல்லையேல் இதற்குப் பெரிதும் மதிப்பு அளித்திருக்க மாட்டேன். ஆனால் இப்பொழுது இந்தச் சம்பவத்தில் மனம் தோய்ந்து சுழல்கிறது. ----

சேது ஸ்நாநம் செய்ய பராசர பட்டர் போனார். மீளும் போது பாதிரிக்கொடி அருகில் பொழுது சாய்ந்துவிட்டது. அக்கம் பக்கம் தங்கிச் செல்ல வீடுகள் இல்லை. ஒரு வேடன் குடிசையில் சென்று சிறிது அமர இடம் பார்த்தார். வேடன் தான் அமர்ந்திருந்த ஆஸநத்தையும் தந்து, கட்டிலைத் தட்டிப் போட்டு அமரச் சொல்லி உபசரித்தான். பட்டர் யோசித்தார். இவனுக்கு நம்மைப் பற்றித் தெரியாது. நாம் ஏதோ இவனுக்குச் செய்தோம் என்று பதிலுக்கு இவன் இதைச் செய்யவில்லை. தன்னை அண்டி வந்தான் ஒருவன் என்ற ஒரே காரணத்திற்காக இதைச் செய்தான் ஆனான். அப்படியென்றால் பகவானுடைய வீடு இந்த உலகம். இங்கு ஒண்ட நாம் வந்துவிட்டோம். நம்மை முன்பின் தெரிந்தவன், உறவு, பிடித்ததைச் செய்தவன் என்ற எந்தக் காரணத்தையும் முன்னிடாமல் தன் வீட்டை அண்டி வந்தான் என்ற ஒரே காரணத்திற்காக அந்த பரமசேதனனும் நம் நன்மை செய்யத்தானே வேண்டும். என்ன நினைத்திருக்கின்றானோ? என்று கூறிக்கொண்டார். சரி போதுபோக்காக இருக்கட்டும் என்று அவனிடம் இன்று வேட்டையாடப் போனாயாப்பா? ஏதாவது விசேஷம் உண்டா? என்று வினவினார்.

வேடன் சொல்லுகிறான்: --

'சாமி! ஒரு முசல் குட்டியைப் பிடிச்சேனுங்க. பிடிச்சிக்கிட்டுப் பொட்டைவெளியில வாரேன். பார்த்தா தாய்முசலு அந்த எரிக்கிற பொட்டை வெளின்னு கூட பார்க்காம என் முன்னாடி நெடுஞ்சாண்கிடயா விழுந்து அடம் பண்ணுது. எனக்கு என்னமோ பண்ணிடிச்சி சாமி! பேசாம அந்தக் குட்டிய உட்டுட்டு வந்துட்டன்' என்றான்.

பட்டர் முகத்தில் ஈயாடவில்லை. அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தவர் நெடுநேரம் கழித்துக் கூறுகிறார்:-- இந்தச் சம்பவத்தில் பொதிந்திருக்கும் குணாதிசயங்கள்! ஒரு முசல் தன் குட்டியைக் காப்பாற்றச் சரணாகதியை அனுஷ்டிக்கிறது. வேட்டையாடுதலே வாழ்க்கையாக உடைய வேடன் சரணமடைந்த ஓருயிரைத் தன் உணவை விட்டுக்கொடுத்தும் காப்பாற்றுகிறான். இந்த இரண்டு குணநலன்களுமே பரம சேதனனாகிய பகவான் விஷயத்தில் சம்பந்தப் பட்ட குணங்கள். அவ்வாறுதான் பிரமாணங்கள் தெரிவிக்கின்றன. கீதையில் கண்ணன் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என் ஒருவனையே சரணமாகப் பற்று. என்று பிரபத்தியாகிய சரணாகதியை உபதேசித்தான். அவ்வாறு சரணாகதி செய் என்று இந்த முசலுக்கு யார் உபதேசித்தார்? ஸ்ரீராமாயணத்தில் 'அரி ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா' சரணமடைந்த விரோதியைக்கூட ஒருவன் தன் பிராணனை விட்டும் காப்பாற்ற வேண்டும் என்று சரணாகதி அடைந்தவனைக் காக்க வேண்டிய பொறுப்பு பற்றிக் கூறியிருக்கிறது. சர்வசக்திமானாகிய பகவான் அன்றோ அனைத்து உயிர்களையும் காக்கவல்லவன். அவ்வாறு சரணாகதி அடைந்தவர்களைக் காப்பது கடமை என்று இந்த வேடனுக்கு யார் உபதேசித்தார்கள்?

எங்கோ ஒரு காட்டில் யாரோ ஒரு வேடனுக்கும் முசலுக்கும் இடையில் தன்னியல்பாக பிரபத்தி பலித்ததே! இந்த விசேஷம்தான் என்ன! இயற்கையே சரணாகதிக்குத் தன் போக்கில் பிரமாணம் சொல்லுகிறதோ? - என்று நெடு நேரம் சிந்தை வயத்தவர் ஆனார் என்று வார்த்தாமாலை அந்தத் திருக்கணத்தை ஏடுபடுத்தியிருக்கிறது.

அறிவு, மனத்தொடர்பு, உள்ள அதிர்வு, உயிர், உயிருக்கு உயிர் உண்டாகும் உள்ளப் பரிமாற்றம், பக்தி இவையெல்லாம் என்ன? ’பழைய உலகினில் புதிய பார்வைகளின் விடியல்’ என்று கவிதை போல் ஏதோ எழுதிப் பார்க்கிறது என் அந்தரங்கம்.

***

பிறந்த குழந்தைக்கு பக்தி வருமா?

நமக்கு எதற்குத்தான் நேரமிருந்தது? ஒரு ஹோட்டலில் நண்பருடன் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஒரு காட்சி. ஒரு குழந்தை கிடுகிடுவென்று எதையோ காட்டிக்கொண்டு ஓடுகிறது. தகப்பன் பின்னாலேயே ஓடுகிறான் திட்டிக் கொண்டு. குழந்தையோ 'அது அது' என்கிறது. எது என்று கேட்கத் தகப்பனுக்குப் பொறுமையில்லை. 'சரி சரி வாவா அதற்கெல்லாம் நேரமில்லை' கையைப் பிடித்து இழுத்துத் தன் கவலையில் தோய்ந்தவாறே சென்றான். குழந்தையிலிருந்து கடவுள்வரை எதற்கும் நமக்கு நேரமில்லை. பின் நம் காலமெல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? அதோ அங்கே ஓர் ஒல்லியான சின்ன சிகப்பு நாய் கிடுகிடுவென வந்து அந்தக் குழந்தையிடம் நின்று ஏதாவது கிட்டுமா? கிட்டாதா? என்று இரண்டு முறை வாலை ஆட்டி, பின் நிச்சயம் செய்துகொண்டு விறுவிறு என்று எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. அப்படித்தானே நம் மனத்தையும் அலையும் நாயாக்கிப் பேருமா பேராதா என்று அலையவிட்டிருக்கிறோம். குழந்தைமையை எட்டி எம்பிப் பார்க்கத் தெரியாத நாம் நகக்கண்ணை உண்டவாறே டிவியைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் சமாதியில் திவ்ய தமபதிகளைப் பார்த்ததாகச் சொன்னவர் வார்த்தையை நாம் ஏற்றாலும் விடுத்தாலும், குழந்தைமையைப் பார்க்கத் தெரியாத ஆட்களே இல்லை ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசாரியர்களின் கூட்டத்தில்.

ஒரு குழந்தை பிறக்கிறது. உடனே எல்லோரும் 'கைகள் இருந்தவா காணீரே, கால்கள் இருந்தவா காணீரே' என்று திரள் திரளாக வந்து பார்ப்பர்கள் அன்றோ! அதுபோல் ஒரு பெரியவர், முக்கோல் பகவர் வந்து 'என் கண்ணினால் நோக்கிக் காணீர்' என்று உரிய கண்ணால் அந்தக் குழந்தையைப் பார்க்கிறார். பக்கத்தில் இருப்போர் அவர் குழந்தையை எடுக்கும் லாகவத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர். ஸ்ரீராமானுஜரிடம் அந்தக் குழந்தையைக் காட்ட வேண்டுமே! அதுவரை ஐயோ குழந்தைக்கு ரட்சையிட வேண்டுமே. முக்கோல் பகவர் தாயாகி விடுகிறார். வலுவான ரட்சையாக இட்டவாறே கொண்டுசென்று ஸ்ரீராமானுஜரிடம் காட்டுகிறார். அவரோ குழந்தைமையைப் பார்க்கத் தெரிவதில் பரிபூரணர். விந்தை! என்ன இது த்வயம் கமழ்கிறது! என்று வியந்து கூறுகிறார். ஸ்ரீவைஷ்ணவத்தின் நாபியான தத்துவக் கருவூலங்கள் மூன்று மந்திரங்கள்.-- பெரிய திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம்.

கொணர்ந்து கொடுத்த எம்பார் தயங்கியபடியே 'அடியேன்தான் வரும்போது ரக்ஷையாக இருக்கட்டுமே என்று த்வயம் ஓதினேன்' என்றார்.

'அப்படியா! ஆஹா குழந்தைக்கு ஸ்வாபாவிகமாகவே நீர் பரிவர் ஆனீர் அன்றோ! இந்தக் குழந்தைக்கு நீரே ஆசாரியராய் இரும்' என்றார். (ஸ்வாபாவிகமாகவே - இயற்கையாகவே)

குழந்தை யார்? கூரத்தாழ்வான் குமாரரான பராசர பட்டர். ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு இந்தப் பெரியவர்கள் படுத்தும் பாடு! நாமாக இருந்தால் உடனே ஜாதகம் கணிப்போம். இல்லையா குழந்தை பேரில் எவ்வளவு டெபாஸிட் செய்யலாம் என்று யோசிப்போம். அதுகூட இல்லை. அவன் குழந்தை பிறந்தபோது நாம் மெனக்கெட்டுப் போய் பார்க்கவில்லை.? எட்டிப் பார்த்தானா அவன்? என்று மணல் சோற்றில் கல் பொறுக்கிக் கொண்டிருப்போம்.

பிறந்த குழந்தைக்கு பக்தி வருமா என்று ஜோஸியம் பார்க்கும் பெற்றோர் தோன்றுகிற அன்றிலிருந்து கிருத யுகக் கணக்கு ஆரம்பம்.

***

ஸ்ரீ ஆளவந்தாரும் குருகைக்காவலப்பனும்

ஸ்ரீமந் நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மீட்டதோடு அல்லாமல், அதற்குத் தேவகானம் என்ற வியக்கத் தக்க அதீதமான இசைநெறியில் அமைத்து, தமது மருமகன்களான மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார் என்ற இருவரையும் அதைக் கோவில்கள் எங்கும் பாடி ஆடி அபிநயித்து பக்தர்களிடையே அனுபவத்தில் வளர்த்து வருமாறு ஏற்பாடும் செய்தார். அதனோடும் நிற்காமல், --- 'பரத்வம் தேக வியோகம் ஆனபிற்பாடு திருநாட்டில் பெறும் அனுபவம். வ்யூஹங்கள், விபவம் என்னும் நிலைகளெல்லாம் ஆகமங்கள் பரக்கச் சொல்லுமதாய் இத்தேகம் கொண்டு அனுபவிக்க உரியதாய் இருப்பன அல்ல. அவதாரங்களைச் சொன்னால் அவை சமகாலத்தில் இருந்தோரில் சில கொடுத்துவைத்த புண்ணியாத்மாக்களுக்கு மட்டுமே புரிந்துகொள்ள முடிந்து, மற்றையோரின் அலட்சியத்திற்கு இலக்காகி, என்றோ பெருகி வடிந்து போன வெள்ளம் இன்றைய தாகத்தைத் தீர்க்கவொண்ணாதது போலே என்றோ வந்து போன ராம கிருஷ்ணாதிகள் இன்றுள்ளார் கண்டு பழகி உய்ந்து போக வழியின்றிக் கடந்தகாலத்ததுவாய் இருக்கும். என்றென்றும் மக்கள் புத்தி தெளிந்தால் சென்று கிட்டலாம்படி இருப்பது இரண்டே இரண்டுதான். அவை 'பின்னானார் வணங்கும் சோதி' என்று கொண்டாடத்தக்க அர்ச்சாவதாரம் ஆகிய கோவிலில் எழுந்தருளும் மூர்த்தி. மற்றது 'அடியேன் உள்ளான் உடல் உள்ளான்' என்னும்படி ஆத்மாவுக்கு ஆத்மாவாய் நம் உடலுக்குள்ளேயே அந்தர்யாமியாய் எழுந்தருளும் பரமாத்மாவின் நிலை.

கோவிலில் சென்று கண்காணக்கண்டு, கையாரத்தொழுது, வாயாரப்பாடி, உடலார ஆடி, உள்ளம் சொல் செயல் அனைத்தும் குளிர அடையும் அனுபவத்திற்கு அடைத்த மதிலாக நாம் திருவாய்மொழியைக் காத்து, இசையில் கோத்து காலம் விஞ்சிய நியமமாய் ஆக்கிவைத்து விட்டோம். அந்தர்யாமியை யோகத்தில் நண்ணும் விருப்புடையோருக்கு வாய்ப்பாய் 'யோக ரஹஸ்யம்' என்றொரு நூல் செய்வோம்.' - என்று எண்ணியோ என்னவோ அந்த யோகரஹஸ்யத்தை குருகைக் காவலப்பன் என்னும் சீடரிடம் கொடுத்துத் தமது பேரன் ஆளவந்தார் ஆளான பின்பு அவருக்கு உபதேசிக்கும்படியும் சொல்லிப் போனார்.

ஆளவந்தார் இதைக் கேள்வியுற்று குருகைக் காவலப்பனைக் காணச் சென்றார். அங்கோ குருகைக் காவலப்பன் ஆழ்ந்த சமாதியில் பேச்சு மூச்சின்றி இருக்கிறார். இவரும் சென்றவர் எந்த அரவமும் இன்றி அமைதியாகக் காத்து நிற்கிறார். திடீரென்று கண் விழித்தவர், குருகைக் காவலப்பன் 'இங்கு சொட்டைக் குலத்தில் உதித்தார் எவரேனும் வந்தவர் உண்டோ?' என்று கேட்க யாருக்கும் தெரியவில்லை. ஆளவந்தார் தயங்கியபடியே 'அடியேன் உள்ளேன் சொட்டைக் குலத்தவன்' என்று கூற 'ஆஹா தொழுகுலம் அன்றோ நீவிர்!' என்று கொண்டாடிப் பேசத் தொடங்கினார். ஆளவந்தாருக்கு முதலில் ஆச்சரியத்தை நீக்கிக் கொள்ளத் துடிப்பு. 'ஸ்வாமி! அது எங்ஙனம் சொட்டைக்குலத்தாரைக் குறிப்பாகத் தேடியது?' என்று வினவ, குருகைக் காவலப்பனின் பதில்:

'அதுவா? சமாதியில் ஆழ்ந்து நிலைத்த நிலையில், பெருமாளும் பிராட்டியும் திவ்ய தம்பதிகளாய்க் காட்சியளித்து அடியேனுடைய இதயகமலத்தே வீற்றிருந்தனர். திடுதிப்பென்று பெருமாள் பக்கத்தில் பிராட்டியையும் ஒதுக்கிவிட்டு, முன் 'ஸதா பச்யந்தி' என்று இருக்கும் என்னையும் தலையைப் பிடித்து கீழழுத்தியவாறே எம்பி பின்னால் யாரையோ நோக்கிக் கொண்டிருக்கக் கண்டேன். பெருமாளின் கவனம் இப்படி ஈர்க்கப் படுமானால் அஃது நிச்சயம் சொட்டைக் குலத்து உதித்தார் ஒருவரின் பிரபாவமாகத்தான் இருத்தல் வேண்டும் என்று உணர்ந்து கேட்டேன்' என்றார். நாதமுனிகளின் குலம் சொட்டைக் குலம். (பழமையான அந்தணர் குலங்களில் ஒன்று சொட்டைக் குலம் என்று சொல்கிறது தமிழ்ப் பேரகராதி. சுரோத்திரியர் (வேதம்வல்ல அந்தணர்) என்பது சொட்டை என்று ஆனதா தெரியவில்லை)

என்ன கதைகள் இவையெல்லாம்? நம் கணக்குகளின் தலையில் எல்லாம் கால் வைத்துத் தாண்டி எங்கோ போய் நின்றுகொண்டு ஒய்யாரமாக நம்மை நோக்கும் போது நமக்கு ஒன்றும் புரியவில்லை.

***

Friday, December 27, 2019

அப்பொழுதைக்கு இப்பொழுதே

கோயிலுக்குப் போகிறோம். நமக்கோ இப்பொழுதைக்கு ஆன்மிகம், தெய்விகம், மெய்ஞானம் எல்லாம் என்னத்துக்கு என்று அதன் முக்கியத்துவம் புரியவில்லை. அதற்குப் பதிலாக உலகியல் ஆர்வங்கள் வேறு இங்கே வா என்று இழுக்கின்றன. இருக்கவே இருக்கிறது ஏகப்பட்ட கவலைகள். உடனே கவனம் செலுத்த வேண்டிய வேலைகள். ஏதோ பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று போகலாம். ஆனால் நமக்குள் ஒரு சின்ஸியர் பேர்வழி இருந்துகொண்டு குரல் கொடுக்கிறார். ‘உனக்கு உண்மையில் அதில் ஆர்வம் இல்லை என்றால் நீ ஏன் போகிறாய்? உனக்கு உண்மையாய் இரு’ என்று. நாமும் என்ன நினைக்கிறோம், ‘சரி கடவுள் விஷயத்திலாவது நாம் உண்மையாய் நடந்து கொள்ள வேண்டாமா? என்று காத்திருப்பவர்களைப் பார்த்து, ‘இல்லை நீங்க போங்க நான் வரவில்லை’ என்று சொல்லி விடுகிறோம். அப்புறம் நமக்கே தோன்றுகிறது. ஏன் அப்படிச் சொன்னோம்? எல்லாமே நமக்குப் புரிந்து, நாம் ஆர்வம் கொண்டால்தான் செய்கிறோமா? ஆபீஸ் வேலையே எடுத்துக் கொள்வோமே. கடமை என்று செய்வதில்லையா? அதுவே பின்னர் அப்பாடா நல்ல வேளை இதைக் காலத்தில் செய்து வைத்தோம். இப்பொழுது எவ்வளவு உதவியாய் இருக்கிறது! என்று மகிழ்வதில்லையா? அதுபோல் தெய்விக விஷயங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வரும்பொழுது நமக்குச் செய்யும் சக்தி இல்லாது போனால் அப்பொழுது நாம்தானே வருந்த வேண்டிவரும். அப்பொழுதே திருப்பாவை முப்பது பாட்டையாவது மனப்பாடம் செய்திருக்கக் கூடாதா? அவ்வளவு கூப்பிட்டார்களே அந்த ஸ்தோத்திரபாட கோஷ்டிக்காகவாவது போய் வெறுமனே சொல்வதைத் திரும்பச் சொல்லிவந்தாலே இப்பொழுது நமக்குச் சில ஸ்தோத்திரங்களாவது மனப்பாடம் ஆகியிருக்குமே! - இப்படி நினைத்து ஏங்கும் காலத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் கண் தெரியாது, காது மந்தம், கால் தள்ளாடும். ஆனால் கொடுமை அப்பொழுது என்று பார்த்து வாழ்க்கையில் புரியாதது எல்லாம் புரிய ஆரம்பிக்கும். அதுவும் தெய்விகம், ஆன்மிகம் எல்லாம் இந்த விஷயத்தில் மிகவும் படுத்தும். மரணம் வாசலில் காத்திருக்கும் போதுதான் முண்டகோபநிஷத்து நன்றாகப் புரிவதுபோல் தோன்றும். அதில் மிகுந்த ஆசையும் அப்பொழுதுதான் ஏற்படும். இரு நான் படித்துவிட்டு வருகிறேன் என்றால் எவ்வளவு கத்தினாலும் காது கேக்காது. இந்த மாதிரி வாழ்வியல் கஷ்டங்கள் எல்லாம் உண்டுதான் என்று தெரியாதா ஸ்ரீபராசர பட்டருக்கு. அவர் இதற்குச் சொல்லும் வழிதான் நமக்குக் கைகண்ட வழி.

ஸ்ரீபராசர பட்டர் சொல்வது - கோயிலுக்குப் போவது, பகவத் கிரந்தங்களை வாசிப்பது, கேட்பது இதெல்லாம் ஒருவர் ஆர்வம் இல்லை என்று தோன்றினாலும் ஒரு அனுஷ்டானம், ஒரு நியமம் என்று, பொய்யாகப் பண்ணுவது போல் உள்ளம் சிணுங்கினாலும் கூட, செய்து கொண்டு வருவது நல்லதுதானாம். ஏனெனில் கடைசி காலத்தில் உதவி செய்யும் என்கிறார்.

"நம்பி திருவழுதிவளநாடு தாஸர்க்கும், பிள்ளை திருநறையூர் அரையருக்கும் பட்டர் அருளிச் செய்த வார்த்தை:- உகந்தருளின நிலங்களிலே பொய்யேயாகிலும் புக்குப் புறப்பட்டுத் திரியவமையும்; அந்திம தசையிலே கார்யகரமாம்."

உகந்தருளின நிலங்கள் - கோயில்கள், அவர்களுக்கா சொல்கிறார்? எல்லாம் எனக்காக வேண்டியல்லவா?

***

அருளிச்செயல்

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் மிக முக்கியமான ஒரு ப்ரயோகம் 'அருளிச்செயல்' என்பது. ஆழ்வார்களின் பாசுரங்களைத்தாம் 'அருளிச்செயல்' என்று குறிப்பது வழக்கம். அதாவது யாரிடம் அஹங்கார மமகாரங்கள் முற்றிலும் அகன்று, உள் நிறைந்த ப்ரசன்னமாய் அவன் ஆண்டு, இவர்களைத் தன் வாயாகவும், குரலாகவும் கொண்டு தன்னையே பாடிக்கொண்டான் என்று பூர்வாசார்யர்கள் முடிவு செய்தார்களோ அவர்களுடைய திவ்ய ப்ரபந்தங்களே 'அருளிச்செயல்' எனப்படுவது. திவ்ய ப்ரபந்தம் என்றாலும் அருளிச்செயல் என்றாலும் பொருள் ஒன்றே. சரி. இதன் பயன்பாடு குறித்து பூர்வாசாரியர்கள் யாரேனும் குறிப்புகள் தந்துள்ளனரா? என்று பார்த்தால் நல்ல வேளையாக ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளே அற்புதமான விளக்கம் பெய்து வைத்திருக்கிறார்.

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்வாழி
தாழ்வாது மில்குரவர் தாம்வாழி -- ஏழ்பாரும்
உய்ய வவர்கள் உரைத்தவைகள் தாம்வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து.
(உபதேச ரத்தின மாலை)

'அருளிச்செயல்' என்பதற்குப் பொருளாக பிள்ளைலோகம் ஜீயர் உரை எழுதுவது என்னவெனில்

"அருளிச்செயல்களாவன: ஸர்வேச்வரன் அருளடியாகத் தங்கள் அருளாலே செய்யப்பட்டதாகையாலே அதுவே நிரூபகமாம்படி, இருப்பதாகிற த்ராவிட வேத சதுஷ்டய அங்க உபாங்கங்களான திவ்யப்ரபந்தங்கள்."

’திராவிட வேத சதுஷ்டயம்’ -- த்ராவிட வேதங்கள் நான்கு. அவை நம்மாழ்வாரின் திவ்ய ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.

திராவிட வேதாங்கங்கள் ஆறு. திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம்.

மற்றை எண்மர் நன்மாலைகள் த்ராவிட வேதங்கள் நான்கின் உபாங்கங்கள். ஸ்ரீமதுரகவி ஆழ்வாரின் பிரபந்தமும், ஆண்டாளின் திருப்பாவை, திருமொழிகளும் த்ராவிட வேத வேதாந்த ஸாரார்த்தங்களைப் போதிக்கப் பிறந்தவை.

'அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்', 'நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை', 'பயிலுஞ் சுடரொளி' 'நெடுமாற்கடிமை' போன்ற பாசுரங்களில் கூறப்படும் பாகவத சேஷத்வத்தையே தம் முழு இயல்பாய்க்கொண்டு நின்றவர் ஸ்ரீமதுரகவியாழ்வார் ஆகையாலே ததீய சேஷத்வம் (அடியார்க்குத் தொண்டன் என்ற நிலை) என்ற த்ராவிட வேத ஸாரமான அர்த்தத்தைக் கூற வந்தது கண்ணிநுண் சிறுத்தாம்பு.

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளான ஆண்டாளின் திவ்ய ப்ரபந்தங்கள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும். அவை திராவிட வேதங்கள் நான்கின் மறைமுடிவுகளைக் காட்டும் உபநிஷதங்களாய்க் கருதப்படுவன. உபநிஷதங்களுக்கே வேதாந்தங்கள் என்று பெயர் வாய்ந்தது போன்று ஆண்டாளின் திவ்ய ப்ரபந்தங்கள் த்ராவிட வேதாந்தங்கள் என்று கருதப்படுவன. ’பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதஸ் சிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ’- மறைமுடிகளெங்கும் மறைந்துள நற்பொருளை மறைமுடி விளங்கும் நாரணர்க்கு அறிவித்த ஆண்டாள் - என்கிறது தனியன் சுலோகம்.

'ஹே அம்ருதஸ்ய புத்ரா:!' என்று மண்ணவரை விளியா நின்றன உபநிஷதங்கள். 'வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொள்மின்' என்றார் திருத்தகப்பனார். ’வையத்து வாழ்வீர்காள்!’ 'நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!' என்று ஆன்ம வர்க்கங்கள் அனைத்தையும் ஒரு திரளாக்கிக் கொண்டு போகப் பாரித்தாள் ஆண்டாள். பிரிகதிர்ப் படுவோரையும் விடேன் என்று 'ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை?' என்று தெருட்டித் தன் வழியே கொண்டு சேர்த்தாள் அஞ்சு குலத்துக்கு ஒரு சந்ததியாம் அந்தப் பெண் பெருமாள். வேதாந்த ஸூத்ரங்களுக்கு ஸ்ரீபாஷ்யம் எழுதிய உடையவர் என்றும் மனனம் செய்வதோ திருப்பாவை. அவருக்கு 'திருப்பாவை ஜீயர்' என்றே திருநாமம் இதனால் அமைந்தது. 'கோயில் அண்ணரே!' என்று அருளப்பாட்டினால் ஆண்டாள் விளித்த பெருமையும் எம்பெருமானார்க்கு உண்டு. இவர்களுடைய நற்கலைகளான திவ்ய ப்ரபந்தங்கள் எல்லாம் 'அருளிச்செயல்'.

ஆனாலும் நாம் எப்படி இவற்றை அருளிச்செயலாக அறிந்துகொள்ள முடியும்? நேரடியாகப் பாசுரங்களைக் கற்றுப் பாருங்கள். நன்றாக இருக்கிறது. காதிற்கு இனிமையாக இருக்கிறது. காமச்சுவையாய் இருக்கிறது. காதல் பாட்டாய் இருக்கிறது என்று விஷ ஜுரத்தில் பித்து பிடித்தாரைப் போலே ஏதாவது பிதற்றித் திரிவோம். எளிய மொழிகளால் ஆன ஆழ்வார்களின் இன்னமுதமான பாசுரங்களின் ஆழ்பொருளை நம்பிள்ளை, நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகிய ஆசாரியர்கள் தெரிய வியாக்கியைகள் செய்ததால் அன்றோ அருளிச்செயல் எனபதை அருளிச்செயல் என்றே நம்மால் அறிய முடிந்தது! என்று வியக்கிறார் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள்.

பெரியவாச் சான்பிள்ளை பின்புள் ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால் - அரிய
அருளிச் செயல்பொருளை ஆரியர்கட் கிப்போ
தருளிச் செயலாய்த் தறிந்து.

ஆழ்வார்கள் ஏற்றம்! அருளிச்செயல் ஏற்றம் !!

***

சேஷத்வம்

ரஹஸ்யம் என்றாலே ஏதோ சீக்ரட் என்ற நினைப்பு வருகிறது அல்லவா? இந்த 'ரஹஸ்யம்' என்ற சொல்லுக்கு அவ்வாறு பொருள் அன்று. சாத்திரக் கருத்துகளின் மிக ஆழமான பொருள் என்பது இந்த 'ரஹஸ்யம்' என்ற சொல்லுக்குப் பொருள், ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயங்களில். அதாவது சாத்திரக் கருத்துகளை ஒருவர் மேம்போக்காகப் படிக்கிறார். ஒரு பொருள் வருகிறது. பிறகு காலம் செல்லச் செல்ல இன்னும் ஆர்வமாக அதனுடைய ஆழ அகலம் எல்லாவற்றிலும் ஆய்ந்து ஒப்பு நோக்கிக் கற்கிறார். ஆழ்பொருட்கள் புலப்படுகின்றன. பின்பு ஸாரமான பொருள் முடிவுகள் என்ன என்று மிகுந்த முனைப்போடு தோய்ந்து அறுதியான பொருள் தேற்றங்களைக் கண்டு கொள்கிறார். அந்த நிலையைத்தான் ரஹஸ்யம் என்று சொல்வது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் ரஹஸ்யங்கள் மொத்தம் மூன்று. அஷ்டாக்ஷரம் என்னும் திருவெட்டெழுத்து, த்வயம் என்னும் மந்திரரத்னம், சரம ச்லோகம் என்னும் பகவத் கீதையின் 18 ஆவது அத்யாயத்தின் ச்லோகம் ஒன்று. நம்பிள்ளையின் ஈடு வியாக்கியானத்தை ஏடுபடுத்திய வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளையின் மூத்த குமாரரான பிள்ளை லோகாசாரியர் அருளியது அஷ்டாதச ரஹஸ்யங்கள் என்னும் நூல். 18 நூல்கள் அடங்கிய அஷ்டாதச ரஹஸ்யங்கள் என்னும் நூலில் முமுக்ஷுப்படி என்னும் நூல் மூன்று ரஹஸ்யங்களையும் உள்ளது உள்ளபடி விளக்கும் சிறந்த நூல். அதற்கு ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளின் மணிப்ரவாள வியாக்கியானமும் அமைந்துள்ளது மேலும் விளக்கம் பொலிய நிற்பதாகும்.

ரஹஸ்யத்ரயத்தையும் அதாவது மூன்று ரஹஸ்யங்களையும் எட்டே சுலோகங்களில் அடக்கி ஸ்ரீபராசர பட்டர் அருளிச்செய்தது அஷ்டச்லோகி. ரஹஸ்யத்ரயஸாரம் என்பது ஸ்ரீவேதாந்த தேசிகர் அருளிச் செய்தது.

தத்வத்ரயம் என்பது மூன்று தத்துவங்களைக் குறிக்கும். தத்வங்கள் மொத்தம் மூன்று. சித், அசித், ஈச்வரன். சித் -- அறிவுசால், அறிவுருவான, அணுவான உயிரிகள். அசித் -- அறிவு சாலாத சடப்பொருள்கள். ஈசவரன் -- பேரறிவு சான்ற, பேரறிவே உருவான, சித், அசித் ஆகியவைகளைத் தன்னுள் உள்ளடக்கிய, விபுவான, பிரபஞ்ச மகா நித்திய பேருயிர்த் தத்துவம். மூன்று தத்வங்களுக்குப் பெயர் தத்வ த்ரயம்.

இந்த தத்வ த்ரயங்களையும் செவ்வையாக விளக்கும் நூல் பிள்ளை லோகாசாரியாரின் தத்வ த்ரயம் என்னும் நூல். அதற்கும் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளது வியாக்கியானம் அமைந்து அந்த நூலையே குட்டி ஸ்ரீபாஷ்யம் என்று சொல்லலாம் அளவிற்குச் சிறப்புடையதாய்த் திகழ்கிறது.

ரஹஸ்யங்கள் மூன்றுக்குப் பெயர் ரஹஸ்ய த்ரயம்.
ஸ்ரீ அஷ்ட அக்ஷரம் = ஸ்ரீ அஷ்டாக்ஷரம் = திரு எட்டு எழுத்து. ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்திற்குப் பெயர் திருவெட்டெழுத்து அல்லது அஷ்டாக்ஷர மஹாமந்த்ரம். ஜீவனின் சேஷத்வ இயல்பை அறுதியிட்டுரைக்கும் பொருள் கொண்டது திருமந்த்ரம் என்னும் அஷ்டாக்ஷர மந்தரம்.

த்வயம் = இரட்டை = இரண்டடி கொண்ட மந்திர ரத்னம். இரட்டைத் தத்துவமான பெருமாளையும், பிராட்டியையும் பற்றிய தத்துவத்தை உள்ளடக்கியதாலும் த்வயம் என்று பெயர்.

சரம ச்லோகம் = கடைசி ச்லோகம். சரமம்=கடைசி.
எந்தக் கடைசி? ஸ்ரீமத் பகவத் கீதையின் கடைசி அத்யாயமான 18ஆம் அத்யாயத்தில் ஈற்றுப் பகுதியில் வரும் ச்லோகம். அனைத்து தர்மங்கள், உபாஸனைகள் எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின்பு உண்மையானதும், நேரடியானதுமான, கடைசி உபாயமாகிய ப்ரபத்தி நெறியைக் கூறுவதாலும், சரம உபாயத்தைக் கூறுவதாலும் சரம ச்லோகம் என்று பெயர்.

முதலில் சேஷத்வம் என்றால் என்ன என்று பார்த்தோம். முக்கியப் பொருளுக்குச் சிறப்பினை (அதிசயம்) ஏற்படுத்தும் துணைப்பொருள் எதுவோ அது அந்த முக்கியப்பொருளுக்குச் சேஷமாய் இருப்பது. தனக்குச் சிறப்பினை, அதிசயத்தை ஏற்படுத்தும் துணைப்பொருளைத் தனக்குச் சேஷமாய்க் கொண்டு இருக்கும் முக்கியப் பொருளானது சேஷியாய் இருக்கிறது. எதற்குச் சேஷியாய் இருக்கிறது? தனக்குச் சேஷமாய் உள்ள துணைப்பொருளுக்குத் தான் சேஷியாய் இருக்கிறது. எனவே சேஷமான பொருட்கள் இல்லாத போது ஒரு முக்கியப் பொருளைச் சேஷி என்று குறிப்பிட முடியாது. ஒரு பொருளுக்குச் சேஷத்வம் இருந்தால்தான் அது எதற்குச் சேஷமாய் இருக்கிறதோ அந்த முக்கியப் பொருள் இதைப் பொறுத்தவரையில் சேஷித்வம் கொண்டதாய் இருக்கிறது என்று சொல்ல இயலும்.

அப்பொழுது சேஷத்வமும், சேஷித்வமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது. சேஷத்வத்தின் ப்ரதிஸம்பந்தம் சேஷித்வம். சேஷத்வ ப்ரதிஸம்பந்தியான -- என்றால் சேஷித்வம் உடைய என்று பொருள். ஆக விஷயம் என்னவென்றால்
சேஷத்வ ப்ரதிஸம்பந்தம் சேஷித்வம்.
ஸம்பந்தம் உடையது என்பதற்குப் பெயர் ஸம்பந்தி.
சேஷத்வ ப்ரதிஸம்பந்தம் உடையது சேஷத்வ ப்ரதிஸம்பந்தி. அதாவது சேஷித்வம் உடையது என்று பொருள்.

இந்தச் சேஷத்வம், சேஷித்வம் என்ற சொற்களுக்கு மொழிபெயர்ப்புச் சொற்கள் சொல்லலாம். ஆனால் இந்தப் பதங்கள் பூர்வ மீமாம்ஸை, வியாகரணம் என்று பல்துறைப் பொருட்சாயைகள் உள்ளமையப் பயன்படுத்தப்படும் துறைச் சொற்கள். எனவே இவற்றிற்கு உண்மையான மொழிபெயர்ப்பு செய்வது இயலாத ஒன்று. ஆனால் கருத்துகளை விளக்கிக் கொள்ள மொழிபெயர்த்து, விளக்கி எல்லாம் செய்ய வேண்டும்.

***

பக்தியின் உலகம் கோயில்

கோயில் என்றாலும், பெரிய கோயில் என்றாலும் ஸ்ரீரங்கம். மதிள் திருவரங்கம் என்பதுதான் பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதன் மற்ற இடத்தில் எல்லாம் படைவீடாக எழுந்தருளியிருந்தாலும் தன் சொந்த யதாஸ்தானமாகக் கொண்டு 'மருவியிருக்கும்' பெரிய கோயில். பெரிய கோயில் என்று சொல்ல வேண்டாம். ஸ்ரீரங்கம் என்று சொல்லத் தோன்ற வேண்டாம். பூலோக ஸ்ரீவைகுண்டம் என்றெல்லாம் சொல்ல நா எழ வேண்டாம்.

பக்தி இல்லை. தோய்வு இல்லை. வெளிப்படையாக நாஸ்திகர் என்று இல்லை அவ்வளவுதான். ஆனால் கோயில் கட்டடக் கலை, சிற்பம், இந்த மதிள் எப்பொழுது கட்டினது, அந்தச் சிற்பம் எப்பொழுது வடித்தது, இது எந்த நாட்டுக் கலைப்பாணி என்றெல்லாம் ஓர் ஆர்வமாவது இருக்குமே சிலருக்கு. அது போல, 'அதான் அந்தப் பெரிய மதிள் இருக்குமே சார்' என்றாவது ஒரு பிரகிருதி சொல்லாதோ?

'மதிள் திருவரங்கம் என்னா கருவிலே திருவிலாதீர்!' என்கிறார் ஆழ்வார்.

கோயிலாழ்வாரிலே அமர்ந்து ஒருவன் கண்ணை மூடிக்கொண்டு ஜபம் செய்தானாம். 'அந்தோ பாபம்!' என்று பரிதாபப்பட்டுப் போனார்கள் ஆசார்யவர்யர்கள். பராசர பட்டரும் இன்னும் சில ஆசார்யர்களும் ஸ்ரீரங்கத்தில் தெரு ப்ரதக்ஷிணம் போனார்கள் என்றால், பராசர பட்டர் கோபுரம், மதிள், வீதிகள், என்று ஒன்று விடாமல் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, வியந்து வியந்து பார்த்துக்கொண்டு செல்வாராம். அவர் பார்வையில் அஃது சாக்ஷாத் ஸ்ரீவைகுண்டம். 'நீணிலா முற்றத்து நின்றவள் நோக்கினாள். காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்' என்றால் காணும் கண் காணாதோ? என்ன! நின்றவளின் நோக்கு நமக்கும் பிரதிஷ்டையாக வேண்டும். அவ்வளவே.

கோயிலாழ்வார் என்றால் என்ன? ஸ்ரீரங்க விமானத்திற்குக் கோயிலாழ்வார் என்று பெயர். வீட்டில் பெருமாள் எழுந்தருளி இருக்கும் பூஜை அறைக்கும் கோயிலாழ்வார் என்பதே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய பரிபாஷை. ஏன்? தானும் தன்னதும் அவனுக்கே என்று சொல்லலும் மிகை என்னலாம்படி அகங்கார மமகாரங்கள் அற்றால் பின் இருப்பிடம் வைகுந்தம் அல்லவா? பெருமாள் எழுந்தருளியிருக்கும் அறை ஸ்ரீரங்க விமானமாகிய கோயிலாழ்வாராகத்தானே இருக்க வேண்டும். கோயிலாழ்வார் என்பது இன்னும் சொல்லப் போனால் சின்ன மண்டபம் போன்று அமைந்த பீடம், மண்டபம். மரத்தாலோ, மற்ற பொருளாலோ ஆனதுதானே, ஏன் அதற்கு இப்படி ஆழ்வார் என்ற பெயர் ஒட்டு? அங்குதான் ஸ்ரீவைஷ்ணவத்தின் சூக்ஷ்மங்களில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் உலகம் எல்லாம் எதனால் ஆகியது? அங்கு ஜட வஸ்துவே கிடையாது. சுத்த சத்வமே இருக்கும் இடம் ஸ்ரீவைகுண்டம். அந்த சுத்த சத்வம் அஜடம். அங்கிருக்கும் நித்ய ஸூரிகள் தாமே எவ்வடிவும் பகவானின் கைங்கர்யத்திற்காகக் கொள்ளும் தன்மையர். எனவேதான் விமானமாக ஆகியிருப்பதும் அஜடமான ஒரு பெரும் தத்துவமே என்னும் பொருளில் ஆழ்வார் என்ற பிரயோகம் வருகிறது.

அர்ச்சை என்பது ஓர் அவதாரம் என்றே ஸ்ரீவைஷ்ணவம் கூறுகிறது. அங்கிருக்கும் சுத்த சத்வ மயமான நித்ய விபூதியே அர்ச்சாவதாரமாகிய கோயிலிலும், கோயிலாழ்வாரிலும் உண்டு என்றும், 'தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே' என்பதற்கேற்ப அங்கு நித்ய விபூதியில் எத்தகைய உகப்புடன் பகவான் எழுந்தருளி இருக்கிறானோ அதே உகப்புடன் தன் பக்தர்கள் விரும்பும் எந்தப் பொருளிலும் நித்ய விபூதியோடு (திவ்ய சிறப்போடு) ஒக்க எழுந்தருளி உள்ளான் -- என்றும் கருதுகின்றனர்.

பக்தியற்ற கண்ணுக்கு எல்லாம் கல் மண் கட்டடம் உலோகம் சிற்பம் கோபுரம் என்ற பொதுவான பார்வை. பக்தியின் கண்ணுக்குத் தெரியும் உலகங்களோ முற்றிலும் வேறானவை. பக்தியின் உலகத்தை வெளியுலகத்தவர் ஒரு நாளும் தீண்டிவிட முடியாது. என்ன வேண்டுமானால் இது கல் இது மண் இது வெறும் கட்டடம். இது வெறும் சிலை என்று தொட்டுத் தொட்டுப் பார்க்கலாம். இது பரம்பொருள் என்று தொட்டுப் பார்ப்பதற்குத்தானே மனித குலம் இவ்வளவு தூரம் பரிணாமத்தில் நீண்ட பயணம் வந்திருக்கிறது. இது கல் இது மண் என்றறிய ஓரறிவுயிர் ஈரறிவுயிர் போதுமே.

நீணிலா முற்றத்து நின்றவள் நோக்க, அந்நோக்கோடு ஊன்றிய நோக்கமே நம் நோக்கம் ஆனால் அன்றோ, காணுமே கண்ணபுரம் என்று காட்டுங்கால் காணலாவது! அன்றேல் கோயிலாழ்வாரில் என்ன குவலயம் எங்கணுமே கண் செம்பளித்து, காணாத கண்ணிற்கு இருட்டு மாத்திரமே அன்றோ மிஞ்சும். இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி நமக்காகவும் கொஞ்சம் சுருங்கட்டும்.

*

பெரிய என்பதன் விளக்கம்

கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் என்று பார்த்தோம். இன்னும் விசேஷமாக ஸ்ரீரங்கம் சம்பந்தமான பல விஷயங்களைப் 'பெரிய' என்று அடைமொழியிட்டு வழங்குவது பரிபாஷை. 'பெரிய கோயில்' என்றால் ஸ்ரீரங்கம். பூலோக ஸ்ரீவைகுண்டம் எனப்படுவது அதுவே. அரங்கனுக்கு ஈடளித்த வள்ளலான கோயில் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளுக்குப் 'பெரிய ஜீயர்' என்று பெயர். ஸ்ரீரங்க நாயகித் தாயாருக்குப் 'பெரிய பிராட்டியார்' என்று பெயர். 'ஓடும் புள்ளேறி' அவசரமே உருவாய் வந்து தோன்றி அடியார் இடர் களையும் அரங்க நகரப்பனுக்கு வாகனமான புள்ளரையனுக்குப் பெயர் 'பெரிய திருவடி'. ஆஞ்சநேயன் 'சிறிய திருவடி'. பெருமாளோ 'பெரிய பெருமாள்'. அவரது திருத்தேரோ பெரிய திருத்தேர். கோயிலில் ஆகும் பிரதானமான பிரசாதத்திற்குப் 'பெரிய அவசரம்'. என்று பெயர். இப்படி 'பெரிய' பெரிய' என்ற பிரயோகம் ஏன் வந்தது.? இதற்கு ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை அவர்கள் திருமாலை உரையில் விளக்கம் தருகிறார்.

'ஒருவில்லால் ஓங்கு முன்னீர் அடைத்து உலகங்கள் உய்ய' என்ற திருமாலைப் பாட்டில், 'மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னாது, கருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே!' என்ற அடியில், 'மருவிய பெரிய கோயில்' என்பதற்குப் பொருள் சொல்லும் வாய்ப்பில், 'பெரிய' என்று ஏன் சொல்லுகிறது? கோயிலின் பரப்பை வைத்தா? என்ற கேள்வியைத் தாமே எழுப்புகிறார்.

"பெரிய கோயில் -- கோயில் பரப்பை நினைத்தன்று; ராஜா இன்னவிடத்திலே இருந்து நினைப்பிட்டான் என்றால், பின்னை அவன் தன்னாலும் மாற்ற நினைப்பிட ஒண்ணாதிருக்கும் தேச கௌரவத்தைப்பற்றச் சொல்லுகிறது. அதாகிறது ஸம்ஸாரிகள் கார்யம் வீடறுக்கையிறே. '(பவித்ரம் பரமம் புண்யம்) தேசோயம் ஸர்வ காமதுக்' (காருட புராணம்); 'வைஷ்ணவாநாம் விசேஷோஸ்தி விஷ்ணோராயதநம் மஹத்' (லைங்கம்)"

அதாவது சம்ஸ்க்ருதத்தில் 'மஹா' என்ற முன்னொட்டின் பயன்பாட்டின் இடத்தில் 'பெரிய' என்ற அடைமொழி வருகிறது. உபநிஷதங்களில் சில வாக்கியங்களை 'மஹாவாக்கியங்கள்' என்பர். ஏன்? அனைத்து தத்துவ அம்சங்களையும் தன்னுள் அடக்கியவையாய், முழுமையடையாத காரணத்தால் வேறொரு வாக்கியத்திற்குச் சென்று பொருள் காண வேண்டாதபடி நிறைவு பெற அமைந்த வாக்கியம் 'மஹாவாக்கியம்'. அது போல் ஸம்ஸாரிகளின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் இடமாக இருப்பது; ஜீவர்களின் அனைத்து கார்யங்களும் 'வீடறுக்கும்' இடமாக இருப்பது ஸ்ரீரங்கம் என்பது பற்றிப் 'பெரிய கோயில்' என்று பெயர் ஏற்பட்டது.

இந்த 'வீடறுக்கும்' என்ற பதம் என்ன? வீடு அறுத்தலா? இஃது ஓர் அருமையான பழந்தமிழ்ச் சொற்கோவை. to resolve the issues, to solve the problems, to satisfy the demands என்றபடி பொருள் செறிவு மிகுந்த சொற்றொடர். ஸம்ஸாரிகள் காரியம் வீடறுக்கை என்றால் உலகங்களில் உள்ள ஜீவர்களின் பிரார்த்தனைகளைப் பூர்த்தி செய்துதருதல் என்று பொருள். இது நான் தேடியவரை பொருநராற்றுப்படையின் உரைப்பகுதியில் ஆளப்பட்டிருக்கிறது. (அடி 188) பொருநராற்றுப்படை 188ன் உரையில் 'அரசன் தம்முள் முரண்பட்டு வரும் வழக்குகளை வீடறுப்பான்' என்ற பொருளில் ஆளப்படுகிறது. இது நிற்க.

மதிள் திருவரங்கம் என்னாது கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே! -- என்றாரே ஆழ்வார். அதற்கான வியாக்கியானத்தில் ஒரு ரசமான நிகழ்ச்சி உதாரணம் காட்டப்படுகிறது. நிகழ்ச்சி சாதாரணமாக வீடுகளில் நடைபெறக் கூடியது. ஒரு வயதானவர் கடைசி காலத்தில் உயிர் பிரியும் தருவாயில் கிடக்கிறார். இன்றா நாளையா தெரியவில்லை. அவரிடத்தில் போய் ஒரு பெரியவர் 'ஸ்வாமின்னு! போங்காலத்திற்குக் காப்பாக அஷ்டாக்ஷரம் சொல்லுமே' என்றார். கிடக்கும் பெயர்வழியும் 'ஆகட்டும் சொல்லிப்பார்க்கிறேன்' ஆகட்டும் சொல்லிப்பார்க்கிறேன்' என்று இத்தையே மீண்டும் மீண்டும் சொன்னாரே அன்றி திரு அஷ்டாக்ஷரம் வாயில் வரவில்லை.

திரு அஷ்டாக்ஷரம் என்பதற்கும் எட்டு எழுத்தே தான். 'ஆகட்டும் சொல்லிப் பார்க்கிறேன்' என்ற மறுமொழிக்கும் எட்டு எழுத்தேதான். இந்த வெறும் எட்டு எழுத்தைச் சொன்னவனுக்குத் திருவெட்டெழுத்தைச் சொல்லும் பாக்கியம் கிட்டவில்லை. வெறும் எட்டு எழுத்தைச் சொல்ல முயற்சி கம்மி. திருவெட்டெழுத்தைச் சொல்வதென்றால் முயற்சி அதிகம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. இதுவும் எட்டு எழுத்து. அதுவும் எட்டு எழுத்து. எப்படியோ எட்டு எழுத்து சொல்கிறான். சொல்வதுதான் சொல்கிறோம் என்று திருவெட்டெழுத்தைச் சொல்லாதோ பைத்தியம்? 'கருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே!' என்று போக வேண்டியதுதான். வெறும் எட்டெழுத்தை மீண்டும் மீண்டும் சொன்ன வாய் திருவெட்டெழுத்தைச் சொல்ல வாய்க்கவில்லையே! என்ன பாக்ய ஹீனம்! 'கருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே!' என்கிறார் ஆழ்வார்.

*

கோயில்

கோயிலாகிய ஸ்ரீரங்கத்திலேயே பிறந்து, வளர்ந்து, நிலைத்த மகனீயர்கள் எத்துணையோ பேர் உண்டு. ஆனால் அத்தனை பேருக்கும் கோயில் என்பதை முன் இட்டுப் பெயர் வழக்கம் அமையவில்லை. ஆனால் காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்த ஸ்ரீபெரும்புதூர் வள்ளல், ஆழ்வார் திருநகரியிலிருந்து ஸ்ரீரங்கம் வந்த ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் போன்ற சிலருக்கோ கோயில் என்பதை இட்டு வழங்கும் சில பெயர்கள் அமைந்துள்ளன.

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடாநிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

என்று ஆண்டாள் பாடுகிறாள் (நாச் திரு 9.6).

பிற்காலித்து வந்த யதிராஜராகிய உடையவர் திருமாலிருஞ்சோலை நம்பிக்குப் பெண்பிள்ளை நேர்ந்துவைத்தாள் என்று தெரிகிறதே அன்றி அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றினாளோ என்று அறியக்கூடவில்லை; எனவே அந்த நேர்த்தியை நாம் நிறைவேற்றக் கடவோம் என்று ஸ்ரீராமானுஜர் சொன்னவண்ணம் நிறைவேற்றினார். அன்று ஆண்டாள் சந்நிதியில் எழுந்த அருளப்பாடு "கோயில் அண்ணரே" என்பது. ஆண்டாள் தம்முடைய மனோரதத்தை ஓர் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றியபடியாலே ஸ்ரீராமானுஜரை அண்ணரே என்று விளித்தாள். அப்பொழுது ஸ்ரீரங்கத்து அண்ணரே என்றோ திருவரங்கத்தண்ணா என்றோ விளிக்காமல் 'கோயில் அண்ணரே' என்று விளித்தபடியால் அதுமுதல் ஸ்ரீராமானுஜருக்குக் 'கோயில் அண்ணன்' என்று திருநாமம் வழங்கத்தொடங்கியது. ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் 'கோயில் அண்ணர்' என்பது ஸ்ரீராமானுஜரைக் குறிக்கும்.

தம்முடைய ஆசார்யரின் கட்டளையால் திருவரங்கமே தம் நிலைத்த இருப்பிடமாகவும், திருவாய்மொழியைக் கற்பதும், கற்பிப்பதும், அதற்கு உண்டான உரைவளங்களைப் புகட்டும் வகையில் உரைப்பெருக்கு ஆற்றுவதுமே தம் வாழ்வின் பொழுதுபோக்காகக் கொண்டவர் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள். அதனாலேயே அவருக்கு கோயில் மணவாள மாமுனிகள் என்று பெயர் ஆயிற்று.

*

மங்களாசாஸனம்

மங்களாசாஸனபரை: (மங்களாசாஸனமே தம் நியதியாய்க் கொண்டோர்)-- என்கிறது ஸ்ரீவெங்கடேச மங்களாசாஸனம்.

மங்களாசாஸன பரைர்
மத் ஆசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைர் ஆசார்யை:
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

மங்களத்தை ஆசாஸிக்கை (நலம் திகழ் நிலையே நிலைக்க நெஞ்சுருகுதல்) என்பது எப்படி
ஒரு ஜீவனின் இயல்புக்குச் சேரும்? இவனோ சிறியன், அணுப்ராயத்தன், சுருக்கம், விரிவு ஆகிய விகாரங்களுக்கு உட்பட்ட அறிவை உடையவன். இருள் துயக்கு மயக்கு ஆகிய குற்றங்களுக்கு ஆட்படுபவன். இவன் எப்படி அந்த ஸர்வஸ்மாத்பரனின் நலம் திகழ் நிலை நிலைக்க வேண்டுமே என்று நெஞ்சம் பரிவனாய் ஆகி நிற்றல் முடியும்? ஏதோ வாய்க்குச் சமத்காரமாக சொல்வதாய் இருக்கலாமே ஒழிய உண்மையில் எப்படி ஒட்டும்? இந்தக் கேள்வி நம் மனத்தில் எழலாம். காரணம் இந்த மங்களாசாஸனம் என்பதோ, பிரபத்தி என்பதோ வெறும் வித்வத்துக்கு மட்டும் புலனாகும் அர்த்தங்கள் அல்ல. ஆத்ம ஞானம் புலரத் தொடங்கிய பின்னர்தான் இந்தக் கருத்துகள் புரியும். இவை புரியத் தொடங்கிய பின்பு மற்றைய கருத்துகளில் ருசி இருக்காது.

ஆன்மாவின் இயல்பு சேஷத்வம். சேஷம் சேஷம் என்றால் என்ன? எது ஒன்று தான் சார்ந்த ஒன்றிற்கு அதிசயத்தை விளைக்கிறதோ அது அந்த மூலத்துக்குச் சேஷம். இந்த சேஷ வஸ்துவால் விளையும் அதிசயத்தைப் பெற்று விளங்குவது சேஷி. சேஷம் ஜீவன்; சேஷி பரம்பொருள். பரம்பொருளுக்கு அனைத்து அதிசயமும் தன் இச்சை, ஞானம், கர்மம் ஆகியவற்றால் விளையும்படி இருக்கை ஆத்மனின் இயல்பு. அதிசயம் என்பது சிறப்பு. எனவே தம் ஆத்ம இயல்பை உணர்ந்தோர், தம் சேஷத்வத்தில் நிலை நிற்பர். சேஷத்வ ஞானம் தலையெடுத்த ஜீவனுக்கு பகவானுக்கு அனைத்துச் சிறப்புகளும், நன்மைகளும் ஏற்படவேண்டும்; அவன் சிறப்புகளுக்கு எவ்வித இடையூறும் விளையலாகாது என்று நெஞ்சு உளுக்கி நிற்றல் அல்லது வேறு என்ன இயல்பான மன நிலையாக இருக்கமுடியும்? இவன் அவனைக் காக்கின்றானா என்பது அல்ல பேச்சு. இவனுடைய ஆத்மஞானத்தால் இவனுக்கு விளையும் பாவ பரிபாகம். இடமல்லாத இடத்தில் பயத்திற்கு ஓரிடம் ஏற்படுகிறது. இந்த ஜீவனின் பக்தி பிரபாவத்தால் விளையுமதான அஸ்தானே பயசங்கை (அஸ்தானே -- இடமல்லாவிடத்தில்; பயசங்கை -- அச்சமுடன் ஐயுறல்) என்பதுதான் இந்த மங்களாசாஸனத்துக்கு அடிப்படை. இந்த மங்களாசாஸனமே ஓர் உருவாகத் திகழ்ந்தவர்தான் பெரியாழ்வார்.

அதாவது உலக வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு ஜீவன், தான், தன்னுடைய வெற்றி, தன்னுடைய வாழ்வு, தன்னுடைய பாதுகாப்பு என்ற வெறியுடன் இயங்குகிறது. இதே ’தான் பற்றிய வெறி’தான் கடைசியில் மங்களாசாஸனம் என்னும் நிலைக்கு அதே ஜீவன் பரிபக்குவப்பட்டு வந்து நிற்கும் பொழுதும் வெளிப்படுகிறது. என்ன வித்யாசம்? தான் யார் என்ற self-definition நன்கு தெளிவடைந்துவிட்டது. அவ்வளவுதான். இந்த உடலும், மனமும் சுமந்த இந்தப் பெண்ணோ, ஆணோதான் தான் என்னும் உணர்வு கழண்டு, தான் உண்மையில் ஆத்மா, ஆத்மாவாகிய தான் தனக்குள் உள்ளுயிராய் விளங்கும் பரமாத்வாவிற்கு உடலாக இருக்கின்றோம், சரீரமாக இருக்கின்றோம் என்ற தன்னுணர்வு தெளிந்து எழுந்துவிடுகிறது. பிறகு உலகம் முழுவதும் அவன் உடலாய் விளங்கும் காட்சி புலப்படுகிறது. அப்படிப் புலப்படுங்கால் இந்த உலகம், தான், பிறர் என்ற வேறுபாடின்றி அனைத்தும் அவனுடைய சரீரமாகத் திகழ, அவன் ஒருவனே முழுமுதல் ஒருவனாய்த் திகழ்கிறான். தனியே உலகம் என்று ஒன்றும் இல்லை. தனியே தானும் பிறரும் இல்லை. அவனன்றித் தனியே உயிர்கள் இல்லை. இருப்பது அந்த ஒரே தத்துவமான பரமாத்மா. அவனுடைய திருமேனியாகத்தான் இந்த ஆத்மா விளங்குகிறது. அவனுடைய திருமேனியாகத்தான் இந்த ப்ரபஞ்சமே விளங்குகிறது. இந்தப் பக்குவத்திற்கு வந்து விட்ட ஜீவன் தன்னுடைய அகம் நெகிழ, உள்ளம் கரைந்து வேண்டுவதெல்லாம் அந்த ஏக தத்துவம், அனைத்தையும் சரீரமாகக் கொண்டு தான் அனைத்துக்கும் உள்ளுயிராய் விளங்கும் அந்தப் பரமாத்வானது என்றும் பொலிந்திட வேண்டும், என்றும் விளங்கித் திகழ வேண்டும், என்றும் இவ்வண்ணமே ஒளிர்ந்து, சுடர்ந்து ஓங்க வேண்டும், பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு நீடூழி வாழ வேண்டும் என்றுதான்.

அந்த உயர்ந்த பாவம், உயர்ந்த உள்ளச் சிறப்பு அதைத்தான் மங்களாசாஸனம் (மங்களத்தை ஆசாஸிக்கை - இறைவனுக்கு நன்மையை வேண்டி விழைவது) என்ற பதம் உணர்த்துகிறது. கடைசியில் உயர்ந்த பரிபக்குவத்தில் ஜீவனுக்கு இயல்பாக வாய்க்கும் உள்ள உயர்வை ஆரம்பக் கட்டத்திலேயே ஆத்மிகப் பயணத்தில் முனையும் ஜீவனுக்கு அனுஷ்டானமாகவும், சடங்காகவும், தொழுகையாகவும் ஆக்கிவைத்தால் அந்த ஜீவனின் ஆன்மிக முன்னேற்றம் இன்னும் சுலபமாக வாய்க்கும் என்ற காரணத்தினால் நம் ஆழ்வார்களும், ஆசாரியர்களும் இவ்வண்ணம் கோயில் வழிபாட்டிலேயே அதை அமைத்துவைத்தனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது இன்னும் நினைவில் நிற்கிறது.

'கோயிலுக்குப் போகலாம் வா' என்றார்கள் நண்பர்கள். 'போகலாமே' என்று சொல்வதற்குள் நண்பர்களில் ஒருவர், 'ஏய்! இவங்கள்ளாம் கோயிலுக்குச் சாமி கும்பிட போக மாட்டாங்கடா! நாமெல்லாம் போயி ஏதாவது வேண்டிப்பமில்ல இவங்க ஸ்ரீவைஷ்ணவர்கள் கோயிலுக்குப் போனா சாமி நன்னா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணிவிட்டு வருவார்கள்.'

நண்பர்கள் கொல்லென்று சிரித்துவிட்டனர். எனக்குச் சிந்தனை வயமாகிவிட்டது. ’உண்மைதான். நமது பெரியவர்கள் என்ன சொல்லிவைத்திருக்கிறார்கள்? கோயிலுக்குப் போதல் என்றாலே அந்த திவ்ய தேசத்தைச் சென்று ஸேவித்து மங்களாசாஸனம் செய்கை. அதெல்லாம் ஆழ்வார் போனால்தானே. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் போனால் எங்கே மங்களாசாஸனம்? ஆனால் சாதாரண மனிதர்கள் என்று நம்மை நாம் எங்கே பிரித்துக்கொண்டு நகருவது? அனைத்தும் அவன் உடைமை என்பதை இசைந்தால்தானே ஸ்ரீவைஷ்ணவம் என்பதைப் பற்றிப் பேச்சு. ஆனால் நாம் போய் நின்று 'பெருமாளே! நீர் நன்றாக இருக்க வேண்டும். உமது திவ்ய ஆஸ்தானம் என்றும் மங்களம் பொலிக.' இப்படியா நினைக்கிறோம்.? 'பெருமாளே! நீர் மிக உயர்ந்தவர், மிகச் சிறந்தவர் என்பது எனக்குத் தெரியும். நானோ ஒரு சிறு ஜீவன். எனக்கு அருள் புரியும்' என்றுதானே நினைக்கிறோம்.'

ஒரு ஜீவன் தன் நிலையை உணர்ந்தால் உறக்கம் கெடும். உணவு செல்லாது. ஒரு நெடிய துக்கம் மட்டுமே அந்த ஜீவனை ஆட்கொள்ளும். அப்படி இருக்கும் ஜீவன் கடவுளிடம் தன் துர்க்கதியைச் சொல்லிக் குறையழுது நிற்றலே இயல்பு. எத்தகைய மனோநிலை அல்லது ஆன்மிக பரிபாகம் வாய்த்தால் ஒரு ஜீவனைத் தன் நிலைபற்றிய அச்சம் அனைத்தும் நீங்கப் பெற்றதுவாய், அத்துடன் நில்லாமல் முழுமுதலுக்கே குறைவற்ற மங்களத்தைத் திருவுள்ளம் பற்றும் பெருந்தகைமை வாய்த்ததுவாய் ஆக்கும்? 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்று பெரியாழ்வார் இதையே திவ்ய பிரபந்தத்திற்கெல்லாம் ஓம்காரமாக ஆக்கிவைத்தார். இந்தப் பெருந்தகைமையே ஒரு வடிவு கொண்டாலொப்பத் திகழ்ந்த காரணத்தால் பெரிய ஆழ்வார் ஆனார்.

மங்களா சாஸனம் என்பது ஏதோ எம்பெருமானைப் பார்த்து வாழ்க வாழ்க என்று சொல்லிப் போவது மட்டுன்று. பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுதல் என்றால் அந்த திவ்ய தேசம், அதை ஒட்டி அமர்ந்த அடியார் குழாங்கள், கோயிலைச் சார்ந்த கைங்கர்யங்கள் என்றபடி அனைத்தும் நல்ல நிலையில் சீரும் சிறப்புமாக விளங்க வேண்டும் என்று ஆசைப் படுவதுதான் மங்களாசாஸனம். கோயில் அலகிடுதல் என்பது தொடங்கி, கோயிலைச் சார்ந்த சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்த அக்கறை என்னும்படி அனைத்தும் திருப்பல்லாண்டு என்பதில் சேரும்.' ---

என்னடா? நாங்க சொன்னதுக்குக் கோவித்துக்கொண்டு விட்டாயா? நாங்க ஏதாவது இல்லாததையும் பொல்லாததையும் சொன்னோமா? -- என்று கேட்க ஆரம்பித்தனர் நண்பர்கள்.

நான் - 'இல்லையப்பா. மிகச் சிறந்த ஒரு மனோபாவத்தை நம் முன்னோர் எப்படி எப்படியெல்லாம் நம் வாயிலும், வழக்கிலும் வரும்வகை நாடி, மொழியாகவும், முன்னோர் மொழிந்த முறையாகவும், பின்னானார் வணங்கும் சோதியாகவும் தந்துவிட்டுப் போயிருக்கின்றனர் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்'

’நின் சேவடி செவ்வி திருக்காப்பு’

***

பிரபத்தி சுலபமா?

யோகம், ஜப தபம், தவம் எல்லாம் ஒருவர் எவ்வளவு முயன்றாலும் உண்மையில் மிகவும் கஷ்டமானவை சார். மனத்தை ஒரு நிமிடம் சஞ்சலம் இல்லாமல் நிறுத்துவதே பெரும்பாடாய் இருக்கிறது. இதில் பக்தி என்று சொன்னாலும் நாம் எவ்வளவு தூரம் மனம் தோய்ந்து ஈடுபட முடியும்? -- இவ்வாறு ஒருவர் வெளிப்படையாகச் சொல்பவரை நாம் என்ன செய்ய முடியும்? அவர் சொல்வது நியாயம்தானே! இல்லை என்று மறுக்கவா முடியும்? ஸ்ரீமத் பகவத் கீதை கேட்ட அர்ஜுனனே இவ்வாறுதானே பகவானிடமே சொன்னான்.

"கிருஷ்ணா! நீ சொல்வதுபோல் ஸமத்வம் யோக உச்யதே என்று சொன்னால், மனத்தைச் சம நிலை பிறழாமல் வைப்பது என்பது மிகவும் கஷ்டமாயிற்றே! எனக்கு முடியும் என்று நம்பிக்கை இல்லையே! காற்றடிக்கும் பொழுது தீபம் ஆடாமல் இருக்க வேண்டும் என்பது போலல்லவா இருக்கிறது! புலனுணர்ச்சிகள் என்னும் விடாத பெருங்காற்றில் எப்படி முடியும் இது?"

"அர்ஜுனா! விடாமுயற்சியினாலும், பொறுமையினாலும், அப்யாஸத்தினாலும் யோகம் கைவரப் பெறும் என்பதை அறிவாயாக. ஆனால் கஷ்டமானதுதான் என்றாலும் அசாத்யமானது அன்று" என்று கூறுகிறான் ஸ்ரீகிருஷ்ணன். எனவே நம் போல்வார் மலைப்பதில் என்ன தவறு இருக்கிறது? நியாயம்தான். நமக்கெல்லாம் ஏற்ற வழி பிரபத்தி, சரணாகதி ஒன்றுதான். எல்லாம் அவன் கையில் விட்டுவிட்டு, அவன் அருளே வாழ்வு நமக்கு என்று இருத்தல், அதுதான் நம் போல்வாருக்கு. எந்த வழிக்கும் லாயக்கில்லாத நம் போன்ற அசக்தர்களுக்குச் சரணாகதியை விட்டால் என்ன கதி?

ஆழ்வார்களும், ஆசார்யர்களும், பெரும் மஹான்களும் சரணாகதியே கதியென்று இருந்தார்களே! அவர்களும் அசக்தர்களா? நமக்குக் கடவுளிடம் மனத்தை வைத்தல் கஷ்டமான வேலை என்றால், அவர்களுக்கோ கடவுளிடமிருந்து மனத்தை மீட்டல் மிகவும் சிரமமான காரியம்.

திருவிருத்தம் 38

'கடமாயினகள் கழித்துத் தன் கால்வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர்நிலைநின்றதவம் இதுகொல்?
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகளந்து
நடமாடிய பெருமான் உருவொத்தன நீலங்களே.--

என்ற பாட்டில் ஒரு குறிப்பு காட்டுகிறார்கள். குருகைக் காவலப்பனை மற்றவர்கள் 'எம்பெருமானை நினைப்பதற்கு எங்களுக்கு ஒரு விரகு சொல்லுங்கள்' என்று கேட்க,
குருகைக் காவலப்பன், ‘எம்பெருமானை மறப்பதற்கு எனக்கு நீங்கள் ஒரு விரகு சொல்ல மாட்டீர்களோ?' என்றாராம்.- (விரகு - உபாயம்)

- "ஒரு பதார்த்தத்தைக் கண்டால் அதினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் அவன் அந்தராத்மதயா நிற்கில் அல்லது அவற்றுக்கில்லையிறே. விசேஷணாம்சம் தோற்றாநிற்க நினைக்க விரகு கேட்க வேண்டுவதே".

அதாவது ஒரு பொருளானது பெயர் வடிவம் ஆகியவற்றோடு கூடியிருக்கிறது என்ற காரணம் பற்றியே ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது உள்ளே அந்தர்யாமியாய் நாராயணன் நிற்கின்றான் என்று. ஏனெனில் அவன் உள் நின்றால் அல்லது ஒரு பொருளுக்கு இருப்புடைமை என்ற 'ஸத்தை'யே கூடாது. ஆக ஒரு பொருளைப் பார்த்தாலே நமக்கு என்ன நினைவு எழ வேண்டும்? ஆஹா! ஒரு பொருள் பொருளாக இருக்கிறதே! அப்பொழுது அவன் உள் நிற்கிறான் என்றல்லவா அர்த்தம்! என்று எந்தப் பொருளைப் பார்த்தாலும் அவன் நினைவு எழும்படியாகத்தான் ச்ருஷ்டியே அமைந்திருக்கிறது. நீங்கள் என்னடா என்றால் அவனை ஞாபகப் படுத்திக் கொள்வதற்கு ஓர் உபாயம் சொல் என்கிறீர்களே! சரியாகச் சொன்னால் மறப்பதற்கன்றோ உபாயம் தேட வேண்டியிருக்கிறது. -- இது குருகைக்காவலப்பனின் ஹ்ருதயம்.

எம்பார் கூறுகிறார் ---

"நம்மை லோக யாத்திரையினின்றும் வேத யாத்திரையிலே மூட்டுந்தனை அருமை போரும் ஆழ்வார்களை வேத யாத்திரையிலே நின்றும் லோக யாத்ரையிலே மூட்டுகை".

It is as difficult to divert the Alwars from the Vedic realisation to worldly involvements, as it is to divert us from worldly involvements to the Vedic realisation.

அப்படி இருக்க ஆழ்வாராதிகளும் ஏன் சரணாகதியே கதி என்று இருந்தார்கள்? காரணம் என்னவென்றால் ஆத்ம ஸ்வரூபத்தை நன்கு உணர்ந்தால் அதன் இயல்புக்குப் பொருந்தின மார்க்கமே பிரபத்தியாகிய சரணாகதிதான்.
ஸ்வரூபத்தை நன்கு உணர்ந்து ஆத்ம ஜ்ஞானம் செவ்வனே வாய்க்கப் பெற்றவர்கள் ஆகையாலே அவர்கள் ஸ்வரூபத்துக்கு ஏற்ற ஹிதம் ஆகிய உபாயமாகச் சரணாகதியைக் கைக்கொண்டார்கள். நாம் கைக்கொள்வதற்குக் காரணம் அசக்தி. அவர்கள் கைக்கொள்ளக் காரணம் ஸ்வரூப ஜ்நாநம். எப்படியோ சுலபமான வழியொன்று கிடைத்ததே, அதுவே போதும் என்று நினைக்கிறோம். உண்மையில் சுலபமா பிரபத்தி என்பது?

என்னை நான் காப்பதற்கு ஆள் இல்லை. எனக்கு என்று எதுவும் இல்லை. எல்லாம் உன் உடைமை. எல்லாம் உன் பாரம். நான் என்னைப் பற்றிக் கவலைப்பட உரியவன் இல்லை. என்னைப் பற்றிய பொறுப்பு எனக்குக் கிடையாது. உனக்கே அனைத்தும் பொறுப்பு. -- இவ்வாறு ஒருவர் மஹாவிச்வாஸத்துடன் முடிவாகத் திண்ணத்துடன் ஒப்படைத்துவிடுதல் என்பதுதான் பிரபத்தி.

நினைத்துப் பாருங்கள். இவ்வாறு சொன்ன பிறகு, அடுத்த வினாடி நம் வாழ்க்கையைப் பற்றி நாம் ஒரு சிந்தனையும் பட முடியாது. ஒரு கவலையும் பட முடியாது. ஒரு துரும்பு நறுக்கக் கூட நமக்கு உரிமை இல்லை. ‘நான் அதைக் கோவிலில் தானே சொன்னேன். வெளி உலகத்துல பல விஷயங்களில் நான் தானே எல்லாத்தையும் பார்த்துப் பண்ணியாகணும். அதாவது என்னால முடிந்தமட்டும் செய்யறேன். முடியாத பக்ஷத்துல அவன் பார்த்துக்கட்டும்னு சொன்னேன். அதுக்குன்னு ஒன்றுமே பண்ணாம சோம்பேறியா இருக்க முடியுமா? ஒன்றும் பண்ணாம இருந்தா என் அன்றாட வாழ்க்கையின் யோக க்ஷேமத்தை யார் கவனிக்கிறது?’ -- இந்த நிலைக்குத்தான் நாம் வந்து சேருவோம். எதிலும் சௌகரியமான சாய்மானம் அதுதான் நமக்குத் தெரிந்த ஆன்மிகம், பக்தி நம்பிக்கை, சரணாகதி. ஆனால் பணம் கிடைக்கும், இனபம் வேண்டும், கிரிக்கட் மேட்ச் பார்க்க டிக்கட் வாங்கணும், வெளிநாடு போவதற்கு விசா வாங்கணும் என்றால் இராப்பகலாகத் தவம் கிடப்போம். உலக ரீதியாக நமக்கு முக்கியம் என்ற நோக்கத்திற்கு உழைப்பது நமக்கு மிகவும் அர்த்தம் உடையது. ஏதோ ஆச்வாசமாக வாழ்க்கையில் அவ்வப்பொழுது கடவுள், பரம்பொருள், மறுஜன்மம் என்றெல்லாம் நினைவு எழும்பொழுது அந்த பக்தி, ஜப தபம், எல்லாம் யாரால பண்ண முடியும்? அப்பா! சரணாகதி பண்ணிட்டா எல்லாம் அவன் பார்த்துப்பான்.

உலகியல் கணக்குகள் என்று நமக்கு முடிவடைகின்றனவோ அன்றுதான் நம் ஆன்மிக ஜனனம் ஆரம்பம்.

***