Wednesday, January 1, 2020

பிரபத்தியைப்பற்றி இதிகாசங்கள் காட்டும் விளக்கம்

பிரபத்தி என்பது புரியாதவரை, மனிதர் செய்வது அனைத்தும் ஆன்மிகத்திற்கான ஆயத்தம்தான். நாம் சொல்லுகின்ற சைவம் வைஷ்ணவம் சாக்தம் மற்றபடி எந்த மறுமை உலகமாயினும் பிரபத்தி, சரணாகதி என்பதை உள்ளம் தோய உணரும்வரை நம்மைப் பயிற்றுவிக்கும் அனுஷ்டானங்களாக இருக்கின்றன. என்றோ ஒருநாள் இந்த 'நானை'விட்டு வெளியே கால் எடுத்துவைப்போம் அன்றோ! அப்பொழுதுதான் நமக்கு மதம் என்பதே ஆரம்பம். கடவுள் என்பதும் அர்த்தம் உள்ளதாக ஆகும். அத்தகைய பிரபத்தியைச் சொல்லவந்தது ஸ்ரீராமாயணம். ஸ்ரீராமாயணத்தை அத்தகைய 'பிரபத்தி சாஸ்திரமாக' நாம் புரிந்து கொள்வதில்தான் நமக்குப் பெரும்பயன் இருக்கிறது.

பிரபத்தியில் நாம் விரும்பிய வண்ணமெல்லாம் அவனுக்குத் தொண்டு செய்தல் முதல்படி. ஆனால் அவன் உகந்தவண்ணமே தொண்டியற்றி அந்தத் தொண்டால் அவன் உகப்ப, அவன் உகந்தான் என்பது பற்றியே நாம் உகத்தல் என்பது மிக வளர்ந்த நிலை. அந்த நிலையில் நின்று அவன் உகந்த தொண்டிலே தான் பழுத்தவன் பரதாழ்வான். ஸ்ரீராமன் தடுத்தாலும் மீறி அவனுக்குத் தான் அனைத்துத் தொண்டுகளும் இயற்ற வேண்டும் என்று சந்நத்தமாக நின்றவன் லக்ஷ்மணன்.
சேஷத்வம் விளக்கம் பெறுகிறது லக்ஷ்மணனிடத்தில். அவன் உகப்பே தன் உகப்பு; அவனிட்ட வழக்கே தன் இருப்பு - என்பதான பாரதந்திரியம் விளக்கம் பெறுவது பரதாழ்வானிடத்தில்.

(பரதந்த்ரம் -- அவனை முற்றிலும் சார்ந்து தன் இயக்கம் அமையப்பெற்றது; அவ்வாறு அவனை முற்றிலும் சார்ந்து தன் இயக்கம் அமையப் பெறும் தன்மை பாரதந்த்ர்யம்; பரதந்த்ரம் என்பதின் adjectival noun பாரதந்த்ர்யம்)

ஸ்ரீராமனிடத்தில் பக்தி என்பதும் ஆரம்பநிலையே என்னும்படி முதிர்ந்த நிறைவு நிலை எனப்படுவது ஸ்ரீராமனின் பக்தனிடத்தில் ஒருவர் கொள்ளும் பக்தி என்பதாகிய பாகவத சேஷத்வம்.

இங்கு இந்த ’சேஷம்’ ’சேஷத்வம்’ என்ற வார்த்தைகள் என்ன பொருளைக் குறிக்கின்றன என்று பார்ப்போம். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நுழைவோர்க்கு முதலில் இந்த வார்த்தைகள் காதில் விழும். என்ன பொருள் என்று தெரிந்து கொள்வது தெளிவிற்கு வழிவகுக்கும். ஒரு பொருள் இருக்கிறது. அது உயிருள் பொருளா அல்லது உயிரில் பொருளா என்பது இருக்கட்டும். இந்தப் பொருள் அந்தப் பொருளுக்கு அதிசயத்தை விளைப்பதாய் இருக்கிறது. அதிசயம் என்றால் என்ன? சிறப்பு. ஒரு பொருளால் மற்றொரு பொருளுக்குச் சிறப்பு ஏற்படுமானால் அப்பொழுது சிறப்பு செய்யும் பொருள் சிறப்பு செய்யப்படும் பொருளுக்குச் சேஷமாக இருக்கிறது எனப்படும்.

இப்பொழுது இந்தச் சிறப்பு செய்தல் என்றால் என்ன என்பதற்கு வருவோம். ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்குச் சிறப்பு விளைவித்தால் அப்பொழுது அவரைச் சிறப்பு கொண்ட மனிதருக்கு சேஷமானவர் என்று கூறலாம். இந்த மனிதரைச் சேஷமானவராகக் கொண்ட முதல் மனிதர் சேஷி. அதிசயம் பெறுவோன் சேஷி. அதிசயம் விளைப்போன் சேஷன். எல்லாம் வேள்விகளைப் பற்றிய படிப்பான பூர்வ மீமாம்ஸா சாஸ்திரத்தின் கருத்துகளை வேதாந்தத் துறைக்கு ஏற்ப நிர்வாஹம் பண்ணிப் பொருத்தப்பாட்டுடன் பயன்கொள்ளப்பட்ட துறைச்சொற்கள்.

ஸ்ரீராமானுஜர் கொங்கு நாட்டிற்குப் பயணமான காலத்தில் அங்கு சிலர் இவர்களைக் கண்ணுற்று ஸ்ரீநாமங்கள் தரித்திருக்கக் கண்டு, ஸ்ரீரங்கத்திலிருந்து வருகின்றனரோ என ஐயுற்று வினவினர். இவர்களும் ஆம் என்று கூறவே முதல் கேள்வி, 'ஸ்ரீராமானுஜர் பாங்காக எழுந்தருளி உள்ளாரா?' ஸ்ரீராமானுஜர் உள்பட அனைவருக்கும் ஆச்சர்யம்! 'எப்படி உங்களுக்கு உடையவரோடு சம்பந்தம்?' 'நல்லான் சக்ரவர்த்தி என்பார் எங்களுக்கு முன்னரே ஆவிக்கு உதவியான நல்வார்த்தைகளைக் கூறித் திருத்திப் பணிகொண்டுள்ளார்' என்றனர். ஸ்ரீராமானுஜரின் சொற்கள் வியப்பும் குளிர்த்தியும் கொண்டு வெளிப்பட்டன, 'நல்லான் என்ற காளமேகம் இங்கும் வர்ஷித்ததோ!' இங்கு நல்லான் உடையவரிடம் போய்த் தாம் இவ்வாறு செய்வதாகவோ, தம்மால் இவ்வளவு பேர் உயிர்க்கு உறுதியை அடைந்தனர் என்றோ கூறினாரில்லை. ஆனால் தம் வாக்கால், மனத்தால், வாழ்வால் தம்முடைய ஸ்வாமியான உடையவருக்கு அதிசயத்தை விளைத்த வண்ணம் இருந்தார் நல்லான். எனவே ஊருக்கு நல்லான் நமக்கும் நல்லான் ஆனார். நல்லான் சேஷ பூதர். (சேஷ பூதர் -- சொல்லாலும் மனத்தாலும் செயலாலும் சேஷத்வமே வடிவுகொண்டு நின்றவர்) உடையவர் சேஷி. அனைவருள்ளும் இருக்கும் பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணன் சேஷி. நாம் ஜீவர்கள் அனைவரும் அந்தப் பரம்பொருளுக்கு சேஷம். அவ்வாறு தம்மை அவனுக்குச் சேஷம் என உணர்ந்து அந்தச் சேஷத்வத்தில் நிலைப்பேறாக நிற்போர் சேஷ பூதர். பகவானின் சேஷ பூதன் பாகவதன்.

பகவானிடம் சேஷ பூதராக இருப்போர் முதல் நிலையில் நிற்பவர்கள் எனில் பாகவத சேஷத்வம் பூண்டவர்கள் முதிர்ந்த நிலையில் நிற்போர் ஆவர். லக்ஷ்மணன் பகவானிடம் சேஷத்வமே வடிவாக நின்றவன். பரதன் பகவானிடம் பாரதந்த்ரியமே வடிவாக நின்றவன். சத்ருக்னன் பரதனிடம் பாகவத சேஷத்வமே வடிவாக வாழ்ந்தவன். பரதனுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்று தானே ஸ்ரீராமனிடத்தில் சத்ருக்னனுக்கு ஈடுபாடு. பாகவத சேஷத்வத்திலே ஊன்றி நிற்பவன் என்றே சத்ருக்னன் இடத்தில் ஸ்ரீராமனுக்கு அளவு கடந்த பிரியமும், மதிப்பும். பிதா சொன்னதை புத்ரன் செய்யக் கடவன் என்ற ஸாமாந்ய சாஸ்திரத்தைக் காண்பித்தான் பெருமாள். சேஷிக்கு அனைத்துவித கைங்கர்யங்களும் செய்யப் பேராசை கொள்ளுதல் சேஷ பூதனின் இயல்பு என்பதைக் காண்பித்தான் இளையபெருமாள். சேஷி வகுத்த கைங்கர்யமே, சேஷி வகுத்த பணியே செய்து அவனுகக்க அதுவே தனக்குப் பேறாய்க் கொள்ளுதல் சேஷத்வத்தின் கனிந்த நிலை என்பதைக் காட்டினான் பரதன். 'ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார் தவம்' எனும்படி, தொண்டர்க்குத் தொண்டனாம் துய்ய நிலையைக் காட்டினான் சத்ருக்னன். இந்த நால்வரும் சரணாகதி சாஸ்திரத்தின் நயம் முழுதும் தெரிவிக்க நின்ற அரும்பொருளை நாம் ஸ்ரீராமாயணத்தின் மூலம் உணரவேண்டும்.

இதில் சேஷத்வமே வடிவு பெற நின்ற தம்பியர் மூவருள் ஏன் பரதன் மட்டும் வான் பணயம் பெற்றான்? காரணம் இளையபெருமாள் செய்த கைங்கர்யத்திற்குத் தேவை ஸ்ரீராமனின் சந்நிதாநமே அன்றி வேறொன்றும் அன்று. சத்ருக்னனின் கைங்கர்யத்திற்குப் பரத சந்நிதாநமே தேவை. வேறெதுவும் தேவையில்லை. ஆனால் பரதனின் கைங்கர்யமானது சேஷி வகுத்த பணியை அவன் உகப்பே தலைப்பேறாய்க் கொண்டு செய்தல் என்பது. முதலில் ராஜ்யபாரம் என்பது பரதனுக்கு உகவாத ஒன்று. அவனுக்கு ’க்ஷத்ரம்’(அரசு நிர்வாஹம்) என்ற கர்மத்தை ஸ்ரீராமராஜ்யமாகக் கைங்கர்யப்படுத்திக் கொடுத்ததுதான் பாதுகைகளைக் கொடுத்ததன் தாத்பர்யம் ஆவது. அங்கு கைங்கரியத்தை ‘வான்பணயம்’ ஆக பரத நம்பிக்குத் தரும்பொழுது அடைமொழியாக வால்மீகி இட்டிருக்கும் பதம் ஸந்யாஸம் என்று ந்யாஸ வித்யையான பிரபத்தி பதம்.

ஸ்ரீராமாயணத்தின் பிரபத்தி விளக்கம் இவ்வாறிருக்க, ஜயம் என்னும் ஸ்ரீமத் மஹாபாரதத்தில் அர்ச்சுனன் கர்மத்தால் அயர்ந்து விழ, வீரச்செருக்கு வில்நழுவ, வியர்த்த சுயமுயற்சி தலைமடிய, ஆள்வானும் நீ, ஆட்கொள்வானும் நீ, 'சிஷ்யஸ் தே அஹம் சாதி மாம் த்வாம் பிரபந்நம்', 'சிச்சன் நான் உனக்கே திருத்திப் பணிகொள்ளே! உன்னடிமைத் திறம் பூண்ட தொண்டன் அடியேன்' என்று சரணடைய, கருணையால் கண்ணன் ஆட்கொள்ள நடந்த மாற்றம் எத்திறத்தது என்று ஒரே வரியில் சொல்கின்றார்கள் வியாக்யான ஆசிரியர்கள்.

'ஷட்கத் திரயம் முழுவதும் எடுப்பதும், சாய்ப்பதும், தரிப்பதுமாய்ச் சென்றதிறே'

தன் முனைப்பில் உற்ற கர்மமாய் எடுத்தான் வில்லை அர்ச்சுனன். விஷாதமாகிக் கண்சுழலா, கைகழலா, கெடு இயல்பின் மதி மூட, பொகட்ட வில்லும், பொன்றிய முனைப்பும், கவிழ்ந்த தலையும், கண்வார் நீரும் கவலைக் கடலில் வீழ்ந்த காண்டீபனைக் கடலன்ன அருள் பொழிந்து காத்தான் கண்ணன். சாய்ந்த வில் நிமிர்ந்தது. மடிந்த முனைப்பு அவன் பணி என்றே ஊற்றமாய் மலர்ந்தது. இனி வில்லானது கண்ணன் கைவில். தன் கைவில் நாணில் தங்கும் சரம் போலத்தான் தானும் அவன் கைத் தங்கும் படையே என்பது உறைத்தது. இனி தனக்குக் கருமம் இல்லை. அவன் பணிக்குத் தடையும் இல்லை, தடையாய் நின்ற தானும் இல்லை. எனவே எடுத்துச் சாய்ந்த வில்லை இப்பொழுது அர்ச்சுனன் தரித்தான் கண்ணனின் கைங்கர்யமாக.

பரத நம்பியும் பெருமாளும் காட்டும் பொருள் பிரபத்தியின் ஒரு நிர்வாஹம் என்றால், ஸ்ரீகிருஷ்ணனும், அர்ச்சுனனும் காட்டும் நெறி பிரபத்தியின் வேறொரு நிர்வாஹம்.

*

No comments:

Post a Comment