நீங்கள் அநந்தம் என்பதைத் தியானம் செய்து பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அதுதான் ஸ்ரீமந் நாராயணனை தியானம் செய்வது என்பது. ஏன் பரம்பொருளின் எந்த வடிவத்தையும் தியானம் செய்வது என்பதே அநந்தமான ஒன்றைக் காதல் செய்வதே ஆகும். எல்லாவிதத்திலும் அநந்தம். இடத்தால் எல்லைப் படாத அநந்தம். காலத்தால் எல்லைப் படாத அநந்தம். பொருளால் எல்லைப்படாத அநந்தம். புரியவில்லை. எப்படி இத்தகைய ஓர் வஸ்துவைத் தியானம் செய்வது? எனவேதான் பரவஸ்து. கூகிள் மேப்பில் காட்டுகிறார்கள். சும்மா பத்தாயிரம் கணக்கில் ஒரு பெருக்கம் போனாலே பூமியே கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. அவ்வளவு பொடியாய். அந்தப் பொடியில் எங்கோ எங்கோ பொடி நுண் நுனிக் கோண் கூறின் சதத்தில் ஒன்று. நாம் அநந்தத்தை, இன்ஃபினிடியைக் காதல் செய்வது என்று நினைத்துப் பாருங்கள்.
ஆனாலும் அந்த அநந்தம், அந்த பராத்பரம், அந்த பரவஸ்து, அந்த பரம ஆத்மா தன்னை இந்த அணு பரிமாணம் உள்ள ஜீவன் நினைக்கவும், காணவும், பூஜிக்கவும், ஸ்தோத்திரம் செய்யவும் ஆகலாம்படி அவனுக்கு எந்த எந்த உருவம் பிடிக்கிறதோ அந்த உருவத்தில் எல்லாம் தன்னை எல்லைக்கு உட்பட்டது போல் ஒரு மாயையை ஆக்கிக்கொண்டு வந்து இவன் முன் நிற்கிறதே! இது என்ன இது என்ன இது என்ன என்று மூர்ச்சை ஆகிறார் பீஷ்மர். அந்த அநந்தம், அந்தப் பரம்பொருள், எல்லையற்ற பராபர வஸ்து இப்படி ஓர் ஆய்ச்சிக் கை வெண்ணைக்கு அழுவதும் இதழ் நெளிப்பதுமாய் இருந்து ஏங்கி நின்ற எளிவே என்று நினைத்தார் நம்மாழ்வார். ஆறுமாச காலம் அப்படியே மூச்சுப் பேச்சின்றி மோகித்துக் கிடந்தார். இந்தப் பகுதியை கூரேசர் எடுத்து விளக்க ஆரம்பித்தார். 'ஆழ்வாருக்கு ஓடுகின்ற பா4வம் அறியாதே நாம் யார் இருந்து இதற்குப் பாசுரம் இடுவது!' என்று காலாழ்ந்தார் நெஞ்சாழ்ந்தார் கண் சுழன்றார், கண்ண நீர் வார 'இன்று இத்துடன் விட்டால் ஆகாதோ!' என்று அதிலேயே பரவசமாகிக் கிடந்தார். எழுந்து சென்ற வைணவர்கள் எம்பெருமானாரிடம் சென்றார்கள். எம்பெருமானாரோ காத்துக் கிடக்கிறார். 'என்ன சொன்னார் கூரேசர் இன்றைக்கு?' இந்த இடம் வந்தவாறே பரவசமானார், 'ஆழ்வார்க்கு ஓடுகின்ற பாவம் அறியாதே நாம் யார் இருந்து இதற்கு என்ன பாசுரம் இடுவது' என்று பேச்சோய்ந்தார், கண்ணீர் அளறில் ஆழ்ந்தார் என்றார்கள். அதற்கு எம்பெருமானார், 'என்ன பரம சேதநனோ! என்ன பரம சேதநனோ, ஆழ்வான்!' என்றார். அதுமுதல் கூரத்தாழ்வான் என்றே பக்த குலம் குலாவத் தொடங்கியது.
'அவ்வளவு பெரியவன் கிடீர்! நம்முன்னே இவ்வளவு எளியனாய் ஏவின செய்யும் சேவகனாய், தூது போ என்றால் ஓலை கட்டிக்கொண்டு தூது போவான் ஒருவனாய் நிற்கிறான் இந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா!' என்று சொல்ல வருகிறார் பீஷ்மர். சொல்ல முடியவில்லை. நெஞ்சடைக்கிறது. அப்பொழுதே பிராணன் பிரிந்துவிடுமோ என்று பயம் பிடிக்கிறது. சொல் ஓய்ந்து பரவசராய் ஆழ்ந்த பாட்டனின் உள்ள ஆவேசம் பாசுரமிட்டு வருகிறது. அற்புதமான கவிதை. சௌந்தர்யமெல்லாம் சிமிழ்ப்புற பெய்த சொற்கள். அநந்தம் என்பது உருவம் கொண்டது போல் உயிர்கள் முன் நடிக்கும் என்றால், அந்தச் சாகசத்தையும் சொல்லாடித் தோற்கின்ற வெற்றி இந்தக் கவிதை - தியான ச்லோகம்.
பாலால் ஆகிய பெருங்கடல். ஏன் பால்? பால் என்பது ஜீவ ரசம். பாற்கடலின் கரை எதனால் ஆனது? தூய ரத்தினங்கள் வில் எறியும் சுடர் பரப்புதான் கரைமணல். முத்துமாலைகளால் ஆகிய ஆசனம். ஸ்படிக மணி போன்று பளிங்கிடும் முத்துகளால் ஆனவையோ அவர் அங்கங்கள்? ஆசனத்தின் மேலே விதானமிடும் மேகங்கள் தாம் கர்ப்பம் சுமந்த அமுதத்தை அவ்வப்பொழுது பிலிற்றும் சாரல். சங்கம் ஒருகை, சக்கரம் ஒருகை, கதை ஒருகை, லீலா பதுமம் ஒருகையில். அந்த முகுந்தன்!
அடுத்த ச்லோகம் இந்தச் சித்திரத்தைப் பெரும் புதிர் வியப்பாக ஆக்குகிறது. உங்கள் கற்பனையைக் கட்டி அதில் உங்களை ஏற்றிப் பின் அதை உடைத்து, கற்பனாதீதமான அநந்தத்தின் முற்றத்தில், அரங்கன் திருமுற்றத்தில் உங்களை இடுகிறது தியான ச்லோகம்.
இப்படி ஓர் திருவின் மணாளன் வீற்ற கோலம், அந்த முகுந்தன் யார்? அவர் எப்படி இருப்பார்? அவரா?
அவருக்கு இந்த பூமிதான் பாதங்கள்.
அவருக்கு இந்த வானம் நாபி.
வாயு பிராணன்
சந்திரன் சூரியன் இருகண்கள்
திக்குகள் காதுகள்
திய: என்னும் விண்ணுலகு தலை
அக்கினி வாய்
சமுத்திரம் அடிவயிறு
எந்த வயிற்றில் தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள், நாகர், கந்தருவர், அசுரர் என என என விரிந்த உலகு விசித்திரமாக விளையாடிக் களிக்கிறதோ அந்த மூவுலக வடிவினர்தாம் ஈசராகிய இந்த விஷ்ணு
இந்த விஷ்ணுவாகிய ஈசரை நமஸ்கரிக்கிறேன்.
அந்த பரமாத்மாவாகிய வாஸுதேவருக்கு நமஸ்காரம்
எப்படி இந்த விராட் சொரூபத்தை மனத்தில் வாங்குவது? கவிதையாக்கிப் பார்த்தாலும் கற்பனையின் கீல்கள் உடைந்து போகின்றன. அந்தத் தோல்வியைக் கண்டு பரம கருணை ஏற்படுகிறது அந்த எல்லையற்று எல்லையற்று எல்லையற்றதான் ஒன்றில். தூய்மையான யோகிகளின் இதயத்தில் பரம தயையால் நாம் புரிந்துகொள்ள வேண்டி, அஃது ஓர் உருவம் கொள்கிறது.
சாந்தமான வடிவு
அரவணைமேல் சயனம்
நாபியில் மலர்ந்த தாமரை
தேவர்களுக்கெல்லாம் நாயகன்
உலகின் ஆதாரம்
ககனமாகிய ஆகாயத்தைப் போன்ற தன்மை
மேகம் போன்ற நிறம்
திருவின் கேள்வன்
அந்தக் கேண்மையால்
கமலமென மலர்ந்த கண்கள்
யோகிகளின் உளத்தே
தியானத்தால் புலப்படும் அருள்
பவ பயத்தைப் போக்கும் அபயம்
ஸர்வ லோகங்களுக்கும் ஏக நாதன்
அந்த விஷ்ணுவை என் ஆற்றாமையால்
வணங்கியவண்ணமே இருப்பன் யான்.
கார்மேகமன்ன மேனி
மஞ்சள் பட்டில் ஆடை
திருமறு மார்வம்
உயிர்க்குல மணி விடுசுடரால்
ஒளிர்தரு அங்கங்கள்
முளரி அலர்ந்தன்ன
விரிந்த கண்கள்
புண்ணியர் புடைசூழ் சுற்றம்
உலகனைத்துக்கும் ஒரே நாதன்
விஷ்ணுவை வந்தித்து உவப்பேன்
(பொருளனைத்துக்கும் ஆதி
புவியைத் தாங்கும் பொறை
பல்லுருவம் கொண்ட பரிவு
பிரபுவான விஷ்ணுவிற்கு நமவே)
கையன சங்கமும் நேமியும்
தலையன கிரீட குண்டலமும்
பொன்னாடையரையும்
பதுமநல் பார்வையும்
ஆரமார் மார்வம்
விளங்குயிர் மணியும்
நாற்கரம் திகழும்
விஷ்ணுவை வணங்குவன் தலையால்.
பாரிசாத தருநிழலும் பொன்னரிமாத் தவிசும்
கார்மேகவண்ணமும் கண்புடைபரந்த நோக்கும்
அணிதிகழ் இருக்கையும் திங்களேய்க்கு முகமும்
நாற்கரமும் திருமறுமார்வும் கொண்டு
ருக்மிணி சத்ய பாமையுடன் விளங்காநிற்கும்
ஸ்ரீகிருஷ்ணனைச் சரணம் எய்துகிறேன்.
*
இது ஏதோ ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் இருப்பது. பக்தர்கள் உவப்பது என்று மட்டுமன்று. சங்க காலப் புலவோர் மெய்மறந்து சொல் மறந்து வாய்வெருவி நிற்பது. --
"ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாவுடை மலர் மார்பின்
மைஇல் வால் வளை மேனி
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய
வாய்வாங்கும் வளை நாஞ்சில்,
ஒரு குழை ஒருவனை;
எரிமலர் சினைஇய கண்ணை;
பூவை விரிமலர் புரையும் மேனியை;
மேனித் திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை;
மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை;
மால் வரை எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை;
சேவல் அம் கொடியோய்!
நின் வலவயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே."
(பரிபாடல்)
மாவுடை மலர் மார்பின்
(ஸ்ரீவத்ஸ வக்ஷ:)
மேனித் திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை;
(ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்)
மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை;
(ஸஹார வக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்)
சேவல் அம் கொடியோய்!
(கருட த்வஜா!)
பீஷ்மன் பரவசத்தில் தியான நிஷ்டையில் ஆழ்ந்ததும், நம்மாழ்வார் ஆறுமாசம் மோகித்து மூச்சு பேச்சின்றிக் கிடந்ததும், சொல்ல வந்த கூரேசர் சொல்லொழிந்து கண்ணருவி இழியப் பரவசமானதும், பரிந்து பரமனைப் பரவும் பரிபாடலும் ஒரே தியானம்தானே!
***
No comments:
Post a Comment