Wednesday, January 1, 2020

சைவ சித்தாந்தமும், பன்னிரு திருமுறையும் - கடலூர் தே ஆ ஸ்ரீநிவாஸாசாரியார்

ஆத்ம குணங்கள் எட்டினையும் எட்டு புஷ்பங்களாகக் கூறுவதும் அந்த எண்மலர்களை இட்டு வணங்குவதையே தாத்பர்யமாகவும் கொண்டு பூசை என்பது அனுஷ்டானத்தில் இருக்கிறது. சிவஞான முனிவர் ஒரு பாடலில் இவ்வாறு சொல்கிறார்.

’இருதய நாப்பண் அஞ்செழுத் துருவின்
இறைவனை, உயிர்க்கொலை செய்யாமை
அருள், பொறி அடக்கல், பொறை, தவம், வாய்மை
அன்பு, அறிவு என்னும் எண்மலர் கொண்டு
ஒருமையொடு அர்ச்சித்து இடுக என்று அடியர்க்கு
ஒள்ளிய தீக்கை செய்து உணர்த்தத்
திருஅமர் துறைசை உறையருள் குருவாம்
திருநமச் சிவாயர்தாள் போற்றி’

இந்த ஆத்ம குணங்கள் இன்றியமையாதவை என்பதை ஸ்ரீகௌதம தர்ம ஸூத்ரம் வலியுறுத்துகிறது.

’யஸ்யைதே சத்வாரிம்சத் ஸம்ஸ்காரா: ந ச அஷ்டாவாத்ம குணா: ந ஸ ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் ஸாலோக்யம் கச்சதி ’

"எவர்க்குப் பலவிதமான சம்ஸ்காரங்கள் இருந்தும் இந்த எட்டு ஆத்ம குணங்கள் இல்லையோ, அவர்கள் இறைவன்பால் ஒன்றுவதும் இல்லை, இறைவனின் உலகம் புகுவதும் இல்லை" -- என்பது கௌதம தர்ம ஸூத்ரத்தில் காணும் முடிவு.

‘சமயத்தின் இருகண்களென விளங்குவன சமய சாத்திரங்களும், தோத்திரங்களும் ஆம். கண் இல்லாமல் வழி நடப்பது கடினம். அப்படியே சாத்திர தோத்திர நூலறிவு இல்லாது சமய வாழ்வு நடத்துவது அரிது. சாத்திர நூலறிவு உலகைப் பற்றியும், தன்னைப் பற்றியும், தலைவனைப் பற்றியும் தெரிய வேண்டிய ஞானத்தை விளைப்பது. தோத்திர நூல் சாத்திர நூலால் துணியப்பட்ட தலைவனை நன்கறிந்து அவன்பால் பக்தி உண்டாகச் செய்வது. இந்த ஞானமும்,பக்தியும் ஒரே குறிக்கோளுக்கே உதவுவன.’ என்று திருவாவடுதுறை ஆதீன வித்வான் திரு டி எஸ் தியாகராஜ தேசிகர் அழகுறக் கூறுகிறார்.

சைவ சித்தாந்தப் பெருநூலான சிவஞான போதத்தின் பன்னிரண்டு சூத்திரங்களையும், பன்னிரண்டு திருமுறைகளோடு எழுத்தாலும், எண்ணாலும், கருத்தாலும் ஒப்புமை கொண்டு இலங்கும் பெற்றிமையை நன்கு ஆய்ந்து கடலூர் தே ஆ ஸ்ரீநிவாஸாசாரியரால் இயற்றப்பட்ட நூல் ’சிவஞான போதமும், பன்னிருதிருமுறையும்’ என்னும் நூலாகும்.

ஆன்மா ஐம்புலன்களின் கட்டில் இருக்கும்போது தன்னையும் அறியாது; பரம்பொருளையும் அறியாது. தவத்தாலும், சிவத்தின் அருளாலும் சரியை, கிரியை, யோகம் முதலிய நிலைகளில் பக்குவப்பட்டு வரும் சீவனுக்கு அந்தச் சிவமே குருவடிவாகி வந்து ‘உணர்த்த உணர்வது ஆன்மா’ என்பதற்கேற்ப ஆன்ம இயல்பை உணர்த்தவே, ஆன்மாவும் ஐம்புலன்களாகிய வேடரினின்றும் நீங்கித் தான் உண்மையில் அரசகுமாரன் என்றுணர்ந்து அரன்கழலே சேரும் என்ற உண்மையைச் சொல்வது சிவஞான போதத்தின் எட்டாம் சூத்திரம்.

’ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்திவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.’

இந்தச் சூத்திரப் பொருளோடு எப்படி எட்டாம் திருமுறை (திருவாசகமும், திருக்கோவையாரும்) ஒப்புமை, ஒத்த கருத்துடைமை போன்றவற்றால் தொடர்புற்றுத் திகழ்கிறது என்பதை நூலில் கடலூர் தே ஆ ஸ்ரீநிவாஸாசாரியார் விளக்குகின்றார். திருவாவடுதுறை ஆதீனத்தின் வெளியீடான இந்நூல் மெய்கண்ட சாத்திரங்களின் வழியே தோத்திர நூல்களையும், பன்னிருதிருமுறை முழுமையையும் புரிந்துகொள்ள விழைவார்க்கு நல்லதொரு விருந்தாகும்.

***

No comments:

Post a Comment