பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்ன சொன்னாலும் ஜீவன் லேசில் நம்பிவிடுமா என்ன? உழைக்க வேண்டிய உலகில் சோம்பி வாழ்வதும், உத்தமன் அடியிணை கதி என்று நிம்மதியாய் இருக்க வேண்டிய வாழ்வில் வேண்டாத அலைச்சல்படுவதும் ஜீவனுக்கே ஸ்வரூபம் என்று சொல்லும்படியாக அல்லவோ ஆகிவிட்டது ! ஆகாத தீமைகளைச் சேர்த்துக்கொள்கிறது; ஆகிவரும் நன்மைகளை விலக்கிக்கொள்கிறது பாவம், இந்த ஜீவனின் நிலைமை ! எல்லாம் இந்த ஜீவனுக்கு என்று அறியும் திறன், செய்யும் திறன், துய்க்கும் திறன் கொடுக்கப்பட்டிருக்கிறதே.. பின்னர் அதற்கு என்ன வேலை? ஐயா ! அது புறத்தில் சாத்ய வஸ்துக்களை அடையும் விஷயத்தில்தான் இந்த ஜீவன் கர்த்தா என்னும் அந்தஸ்து எல்லாம் பொருந்தும். உயிர்க்குயிராய் இருக்கும் விஷயத்தில் ‘தான் ஒருவன்’ என்று தனிக்குடித்தனம் பேணுவதை ஒழித்து, அவன் அடிக்கீழ் அமர்ந்து புகுதல்தானே ஒரே வழி !
அது எப்படி? அப்புறம் மனிதனின் சுயேச்சை, முயற்சி, முனைப்பு எல்லாம் என்ன ஆவது? இந்த ஜீவன் என்பவன் கர்த்தா, போக்தா, ஞாதா. இதுதானே ஜீவனின் இயல்பு? அதனால்தானே சாத்திரம் என்பதே ஜீவனைக் குறித்து, அதுவும் மனித ஜீவனைக் குறித்து வந்ததே. பரமாத்மா என்றால் சுலபமா? எத்தனையோ கடும் முயற்சிகள், செலவுகள் எல்லாம் செய்தால்தான் பெரிய மனிதர்களின் தயவு கிட்டுகிறது. என்ன விளையாட்டா? உலகத்தில் அல்ப லாபத்துக்கே பெரும் பிரயாசை பட வேண்டியிருக்க, உலகமே எதைக் கருதினால் வெறும் துச்சமோ அந்தப் பரம்பொருளை அடைய, செய்ய வேண்டிய தவம், ஜபம் எவ்வளவு பெரியது!
ஐயங்கார் அருமையாகக் கூறுகிறார். ஜீவனின் இதயம் என்ன என்பதை அப்படியே படம் பிடித்துக் காண்பித்தால் போன்று. முதலில் ஊருக்குப் போகின்றவனுக்குத் தான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்று தெரியவேண்டும். பின்னர் தான் ஏறும் வண்டி அந்த ஊருக்குப் போகுமா என்று தெரியவேண்டும். இது இரண்டுக்கும் அடிப்படையாகத் தான் யார் என்று தெரிந்திருக்க வேண்டாமா? நீ யார் என்று உனக்குத் தெரிந்தால் பின்னர் இவ்வளவு பிரயாசைகளை எல்லாம் தவம் என்று மயங்கி நீ நோக வேண்டாமே!
சீதரன், பரந்தாமன், வாமனன் ஆகிய திருவரங்கனுக்கு அடிமை.
நீ உனக்கு ஏதுமில்லை என்று அறி.
நெடுங்காலம் ஸம்ஸரித்துப் போந்த ஜீவர்கள் ஏதோ ஓர் பிறவியில் நினைவு எழுந்து பகவானிடம் அணுகினால் அவன் இந்த ஜீவனின் குற்ற மூட்டைகளைக் கணக்கில் எடுக்காதபடிக்குப் பக்கத்திலேயே பரிந்துரை தத்துவமாக வீற்றிருக்கும், அதுவும் அவனால் தன் மார்வத்திலேயே தரிக்கப்பட்டு வீற்றருளும் ஸ்ரீ - அந்த ஸ்ரீதரன்;
தத் விஷ்ணோ: பரமம் பதம் - என்று சுருதிகளே வாய் பொலிந்து பாடும் உயர்ந்த பதத்தின் நாயகன் ஆகையாலே பரந்தாமன்.
அவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தின் ஒரே நாயகனாய் இருந்த போதிலும் இந்தப் புவியின் மீது பெருங்கருணை கொண்டு இதை மீட்கத் தான் குறளாய்க் குறுகி மாவலியிடம் பிச்சை கேட்கப் புகுந்து ஈரடியால் மூவுலகும் அளந்த மாய நெடியோனாய் வந்த வாமனன்.
இவ்வாறு ஸ்ரீதரனாகவும், பரந்தாமனாகவும், வாமனனாகவும் ஆகி, நின்று, வந்து அருளும் பிரான் ஆகிய திருவரங்கனுக்கே, ஏ ஜீவனே ! நீ அடிமை. இதுவே உன் உள்ளார்ந்த இயல்பு. இதை உன்னாலும் மாற்ற முடியாது. ஏனெனில் நீ உனக்குச் சொந்தமானவனும் இல்லை; உனக்கு நீ காவலனும் இல்லை. உன்னைக் காப்பாற்றும் சொந்தம் உடையவன் அந்த அரங்கனே. அவன் காப்பதும் ஏதோ இந்த ஜீவன் கேட்பதற்காக என்று இல்லாமல் தன் சொத்தைத் தான் பரிந்து மீட்கும் சொந்த லாபமாக. இதை நீ நன்கு அறிய வேண்டியதுதான் பாக்கி. இதை மட்டும் நீ நன்கு அறிந்துவிட்டால் போதும் பின்னர், இந்தத் தெளிவைக் காட்டிலும் மிக்க மா தவம் ஏதும் இல்லை.
மாதவங்கள் என்றோ தவங்களின்
மருவு சீவன் என்று ஒருவ! நீ பெரும்
பூதமல்லை; இந்திரியம் அல்லை; ஐம்
புலனும் அல்லை; நற்புந்தி அல்லை காண்;
சீதரன், பரந்தாமன், வாமனன்
திருவரங்கனுக்கு அடிமை; நீ உனக்கு
ஏதும் இல்லை என்று அறி; அறிந்த பின்
ஈதின் மா தவம் இல்லை எங்குமே.
(திருவரங்கக் கலம்பகம்)
***
No comments:
Post a Comment