மனித குலத்தில் எழுந்த மாபெரும் கருத்துகளில் ஒன்று 'யாகம்' என்பது. ஒரு கருத்து தன்னை விளக்குங்கால் எவ்வளவு பொருள் பரப்புகளைத் தன்னுள் அடக்கமுடிகிறது என்பது அந்தக் கருத்தின் ஆழம், அகலம், விரிவு முதலியவைகளைக் காட்டுகிறது. 'யாகம்' என்பது விளக்கிக்காட்டாத வாழ்வின் பகுதியே இல்லை எனலாம். யாரோ ஒருவர் தாம் கற்ற கல்வியை சமுதாயத்திற்கு அளிக்கிறார். எங்கோ ஒரு மூலையில் தாம் உண்டு தம் அயராத நற்பணி உண்டு என்று தொடர்கிறது. பிறர் பலன் பெற்றார்களா, அதனால் அவருக்கு ஏதாவது லாபமா இதெல்லாம் ஒன்றும் அவருக்குப் பொருட்டில்லை. காலையில் ஞாயிறு உதிக்கிறது. பகல் ஆட்சி. மாலையில் சென்று பின் மறுநாள் காலை என்று அதன் கிரமம். என்ன ஒளி! என்ன உஷ்ணம்! உயிர் தழைக்கிறது. உலகம் இயங்குகிறது. அதற்கு ஏதாவது தெரியுமா? தன் பணி மகத்தானது என்று? அது அறியும் திறனற்றது எனவே தெரியாது எனலாம். உண்மை. அதைப்போல உயிரும், அறிவும் உள்ள ஒரு மனிதர் சதாசர்வ காலமும் தாம் கோரிய நற்பணியே கருமமாய் உள்ளார். அது யாகம்.
ஞாயிற்றை எண்ணி என்றும்
நடுமை நிலை பயின்று
ஆயிரம் ஆண்டு உலகில் -கிளியே
அழிவின்றி வாழ்வோமடீ!
என்கிறார் பாரதி. ஆனால் அது பைத்தியக்காரன் செயலல்லவா? என்கிறது நடைமுறை வாழ்க்கையே குறி என்று இருக்கும் அன்றாட மனம். ஆனால் இந்த அன்றாடக் கண்மூடித்தனம் இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந்து ஓட வேண்டுமென்றாலும் எவ்வளவு யாகங்கள் உலகில் நடைபெற்றாக வேண்டியிருக்கிறது. உலகம் மிகுதியும் யாகங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறுபான்மை மனித யத்தனங்களைத் தாங்கி நிற்கும் வரையில் உலகம் செழிக்கும். மிகுதியும் மனித யத்தனங்களாக மாறி சிறுபான்மையே யாகங்கள் அடிப்படையில் உள்ளன என்னும் போது உலகம் அல்லலுறும்.
'தர்மம்' என்ற அதி சூக்ஷ்மமானதும், உலக இயக்கத்தின் அடிப்படைச் சரடாக இருக்கும் தத்துவத்தின் வடிவங்களில் பிரதானமானது இந்த யாகம். மற்றைய வடிவங்கள், ஹோமம், தானம். த்ரவ்யத்தின் பால் தன்னுடையது என்ற எண்ணத்தைத் துறந்து அதைத் தெய்வத்திற்கு ஆக்குவது என்பது யாகம். ஜீவன், அவனது உடைமை என்னும் எண்ணம், அந்த எண்ணத்தைத் தெய்வச் சிந்தையால் விடுதல்-- என்ற இந்த யாகம் என்பதின் தத்துவப் படிவம் ஹிந்து மதத்தின் நாடி நரம்புகளிலெல்லாம் இழையோடும் கருத்து. மனிதன் தான், தனது என்ற தன் பிறவியில் அமைந்த சூழல்களில் பிறரும், தானுமாய் வளர்த்துக்கொண்ட அகம்பாவம், பேராசை முதலியவற்றை அகற்றிக்கொள்ள தெய்வம் என்ற புகலிடத்தைவிட சிறந்தது வேறில்லை. இன்னும் சொல்லப் போனால் ஜீவன் தன் உண்மையான தான் என்பதை இழந்துதான் அகம்பாவம், பேராசை என்னும் போலியான தன்மைகளிடத்தில் சிக்குண்டுவிடுகிறது. தன்னுடைய உண்மையான சுயம் என்பதை அடைவதற்கும் ஜீவனுக்கு நல்வழியாக தெய்வம் இருக்கிறது.
உலகம் என்ற முழுமையில், இயற்கை என்னும் பெரும் தத்துவத் தொடரில் தான் ஓர் அங்கம் என்று உணர்வதற்குப் பதில் 'தான்' என்ற ஒன்றிற்குத்தான் அனைத்தும் படையல் என்று மயக்கம் கொள்வதை இந்த 'யாகம்' என்ற கொள்கை நிவர்த்தி செய்கிறது. முக்கியமாக இங்கே கவனிக்க வேண்டிய கருத்து 'யாகம்' என்பது loosing one's individuality அன்று. அதாவது தன்னுடைய அறிவைக் கொண்டு உலகைப் புரிந்து கொள்ளுதல், தன் இடத்தைப் புரிந்துகொள்ளுதல், தன்னுடைய உண்மையான இயல்பைப் புரிந்துகொள்ளுதல் ஆகிய மனிதத் தன்மையை அடிப்படையாகக் கொண்டுதான் 'யாகம்' என்பதே இருக்கிறது. அதாவது யாகம் என்பது முழுமையின் நிகழ்வில் தன் செயல்பாட்டை மனிதன் பொருந்தவிடக் கற்றல் என்பதேயாகும். தன்னைத் துச்சமாக ஒதுக்குவது அன்று. முழுமையையும் தன் இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிடலாம் என்று நினைக்கும் ஒரு மயக்கம் மனிதனுக்குள் கிளம்புகிறது. அது அவனுடைய உண்மையான சுயத்தின் போலியாய் அறியாமைகளால் முடையப்பட்ட இருள் முகம். அதற்கு முழுமையைப் பலியாக்காமல் இருப்பதுதான் ஜீவன் தன் அறிவைக்கொண்டு சாதிக்கும் பெரும் யாகம். அதற்கான பயிற்சியை வெவ்வேறு யாகங்களின் வடிவில் கொண்டு வந்து தருகிறது வேதங்களின் வேள்வி இயல்.
வேதம் காட்டும் வாழ்க்கை நெறி, பிரபஞ்சத்தைப் பற்றிய தெய்விகக் கண்ணோட்டம், அதன் வழியில் மனிதர் தம் வாழ்வைப் போற்றிச் சிறக்கச் செய்தல் என்னும் இந்தக் கருத்துகளுக்கான குறியீடுதான் யாகம் என்பது. ஆகமங்கள் அந்த வேத நெறியைத்தான் அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக ஆக்குகிறது. 'கோவில்' என்ற வடிவத்தில் பக்தியின் மொழியால் ஆக்கிக் காட்டுகின்றன ஆகமங்கள். யாகம் என்ற பெரும் குறியீட்டை கனம் குறையாமல் 'பூஜை' என்ற பொதுமையான வழிபாடாக ஆக்குகிறது. யாகம் என்ற சொல்லின் வேர்ப்பொருளும் பூஜை என்பதாகும். யாகம் என்பதன் வேர்ச்சொல் 'யஜ்' என்பது ஆகும். 'யஜ்' என்ற வேர்ச்சொல் 'பூசித்தல்' என்ற பொருளில் பயன்படும் என்று 'யஜ - தேவ பூஜாயாம்' என்பது வசனம். தெய்வத்தை உத்தேசித்துச் செய்யப்படும் த்ரவ்ய த்யாகம் யாகம் என்று சொல்லுவர். தேவதாம் உத்திச்ய த்ரவ்ய த்யாகோ யாக:
அதாவது 'உள்ளது ஒரே பரம்பொருள். பற்பல சித்தாந்த அறிஞர்கள் அதைப் பலவாறாக அழைப்பார்கள்' என்று மொழிந்த வேதத்தின் உள்நோக்கத்தை, 'அனைத்து மக்களுக்கும் எனது மங்களகரமான வாக்குகளை வழங்குகிறேன்' என்றுரைத்த வேதங்களின் உண்மை நெறியை, பக்தியில் ஒன்றுபட்டோர் அனைவரும் ஒரு சமுதாயம் என்ற மங்கள நாதத்தை முழங்கியபடி ஆகமங்கள் நடைமுறை சாத்யமாக்கிக் காட்டிய பொன்னான பெருமலர்ச்சிதான் கோவில் பூஜைகள் என்பன. மிக இயல்பான மலர்ச்சியாக பெரும் மாற்றங்களைத் தோற்றுவிக்க நமது முனிவர்களால்தான் முடியும். ஹிந்து மதத்தின் இந்தத் தடைகளைத் தாண்டி இயல்புற மலரும் சிறப்பான தனமையை மிகச்சரியாக இனங்கண்டு எடுத்துரைத்தவர் விவேகாநந்தர்.
--Did India ever stand in want of reformers? Do you read the history of India? Who was Ramanuja? Who was Shankara? Who was Nânak? Who was Chaitanya? Who was Kabir? Who was Dâdu? Who were all these great preachers, one following the other, a galaxy of stars of the first magnitude? .... They all tried, and their work is still going on. The difference is this. They had not the fanfaronade of the reformers of today; they had no curses on their lips as modern reformers have; their lips pronounced only blessings. They never condemned. They said to the people that the race must always grow. They looked back and they said, "O Hindus, what you have done is good, but, my brothers, let us do better." They did not say, "You have been wicked, now let us be good." They said, "You have been good, but let us now be better." That makes a whole world of difference. - Vivekananda
***
No comments:
Post a Comment