Thursday, January 9, 2020

பரம்பொருளைத் துதிக்கும் வேதம்

பரம்பொருளை ரிக்வேதம் துதிக்கிறது. காப்பாற்றுகிறார். ஏன் காப்பாற்ற வேண்டும்? உலகையும், வாழ்வையும் புரிந்து கொள்ளும் போது மனிதர் வந்து சேரும் இடம் என்ன? ஒருவரின் தனி வாழ்விலும் கூட நன்கு வலிமையோடு இருக்கும் பொழுது அனைத்தும் தம்மால் ஆகும் என்ற நினைவில்தான் இருக்கிறார். ஆனால் வாழ்வின் பல அனுபவங்கள் கற்றுத்தரும் பாடம் அவரை எந்த நிலைக்குக் கொண்டு வருகிறது!. ஓய்ந்த கடைநிலை உண்மை நிலையா அல்லது ஊக்கமான முதல்நிலை உண்மையா? வாழ்க்கையை நாம் முழுமையாகப் புரிந்து கொள்வதில் இருக்கிறது இதன் பதில். வாழ்வில் வலிமைக்கு எவ்வளவு பங்குண்டோ அதைப் போன்றே தயை, கருணை, மென்மை ஆகியவற்றுக்கும் பங்குண்டு. எவ்வளவு வலியவரும் பிறக்கும் பொழுது முழுவதும் பிறரை நம்பி இருக்கும் மென்மையிலும், பிறரின் அன்புடைமையிலும்தான் வாழ்க்கையையே ஆரம்பிக்கிறார் என்பதுதான் உண்மை. வாழ்வு ஒரு முழுமை. ஒவ்வொன்றுக்கும் அதில் இடம் இருக்கிறது. ஒன்று கவனத்திற்குரியது. மற்றது அலட்சியத்திற்குரியது என்பதைப்போல் பேதைமை இல்லை. இதைத்தான் ரிக்வேதம் உணர்த்துகிறது இந்த அரிய மந்திரத்தில்.

முதலில் பரம்பொருளை நாம் இறைஞ்ச வேண்டும். அப்பொழுதுதான் அதற்குத் தெரியுமா என்பதில்லை. அதன் அருளுக்கு நாம் நம்மை இசைவித்துக் கொள்வது அப்பொழுதுதான். பராவுதல், வேண்டுதல் நம் ஜீவனைப் பக்குவப் படுத்துகிறது. மீண்டும் மீண்டும் வேண்டுதல் என்பதே நல்லதொரு ஆன்மிக சாத்னை.

ஹவே ஹவே ஸுஹவம்

மீண்டும் மீண்டும் இறைஞ்சுகிறோம். வேண்டுவதற்கு எளியவர் பரம்பொருள். இங்கு பரம்பொருளை ரிக்வேதம் இந்திரன் என்னும் நாமத்தால் இறைஞ்சுகிறது.

நாம் மட்டுமன்று. பகவானைப் பழங்காலத்தும் பெரியோர் வேண்டினர். இன்றும் மகான்கள் பலரும் பரவித் தொழுவதும் பரமாத்மாவையே.

புருஹூதம் இந்த்ரம்

பரம்பொருள் நம்மைக் காக்கட்டும். காப்பது என்பது தீங்கிலிருந்தும், இடர்களினின்றும். த்ராதாரம்.

அதற்கு மேற்படியானது நம்மை நாம் விரும்பும் நன்மைகளை அளித்துப் பேணுதல். அதை அவிதாரம் என்கிறது வேதம். இதற்கு பாஷ்யம் எழுதும் ஸாயணர் கூறுவது - காமை: தர்ப்பயிதாரம். நாம் வேண்டும் நன்மைகளை அளித்துப் பேணுதல். அத்தகைய பரம்பொருளை அழைத்தல் மிகவும் எளிது என்பதால்தான் வேதம் கூறுகிறது ஸுஹவம். இதற்கு உரை எழுதும் ஸாயணர் ஸுகேந ஆஹ்வாதும் சக்யம் என்கிறார். பரம்பொருளோ நாம் எண்ணும் நன்மையனைத்தையும் தரவல்லது. சூரம். சௌர்யவந்தம். சக்ரம் என்பதற்கு அரிய பொருள் ஸாயணருடையது - ஸர்வ கார்யேஷு சக்தம் என்பதாகும். அனைத்து காரியங்களும் வல்ல சக்தியே சக்ரம் ஆகிய பரம்பொருள். அதற்குப் பெயர் இந்திரன். முடிவற்ற வளங்கள் நிறைந்தவர் ஆகையாலே பரம்பொருளை மகவான் என்கிறது ரிக்கு.

த்ராதாரம் இந்த்ரம் அவிதாரம் இந்த்ரம்
ஹவே ஹவே ஸுஹவம் சூரம் இந்த்ரம் |
ஹ்வயாமி சக்ரம் புருஹூதம் இந்த்ரம்
ஸ்வஸ்தி நோ மகவா தாது இந்த்ர: ||
(ரிக்வேதம் 6.47.11)

***

No comments:

Post a Comment