Saturday, January 11, 2020

திருவாய்மொழியும் ரிக்வேதமும்

திருவாய்மொழியில் ஓரிடம்:

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான்; புகுந்ததற்பின்
மிக்க ஞானச் சுடர் விளக்காய்த் துளக்கற்றமுதமாய் எங்கும்
பக்க நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே.

தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான். எங்கு புகுந்தான்? புகுந்த பின்னே என்னவாய் நின்றான்?
மிக்க ஞானச்சுடர் விளக்காய்.
துளக்கற்று;
அமுதமாய்

இதற்கு முன்பாட்டில் நம்மாழ்வார் ‘சிக்கெனப் பிடித்தேன் கொள்’ என்று சொன்னதும் பகவான் இவர் இனி விடார் என்று தன் நடுக்கற்றான். எது போல் என்றால் ஸ்ரீராமாயணத்தில் விபீஷணனுக்கு ஸ்ரீலங்கையில் அபிஷேகம் பண்ணியருளிய பிற்பாடு பெருமாள் விஜ்வர: என்று ஆனார் என்பதை எடுத்துக் காட்டி, அதைப் போல் இவர் சிக்கெனப் பிடித்தேன்’ என்றதும் இனி விடார் என்று துளக்கற்றான் பகவான் என்கிறார் வியாக்கியான ஆசிரியர். மிக்க ஞானச்சுடர் விளக்காய், அமுதமாய்த் திகழ்ந்தான் என்று பாடுகிறார். ஜீவனுக்கு கர்மத்தால் ஏற்படும் ஞான சங்கோச விகாஸம் போலே ஜீவனுடைய இசைவு பார்த்துக் காத்திருக்கும் பரம்பொருளுக்கும் ஜீவன் இசைந்தவாறே ஒரு திகழ்ச்சியும் ஆனந்தமும் உண்டாகிறது என்று அனுபவிக்கிறார்.

விகாரமே அற்ற பரம்பொருளிடம் இந்த ஆனந்தமும், திகழ்ச்சியும் கர்மம் காரணமாக ஏற்படும் விகாரமன்று. தன்னுடையதான ஜீவன் தன்னிலிருந்து அந்நியப்படாமல் தனக்கு இசைந்து பொருந்துங்கால் பரமாத்மாவிற்கு உண்டாகும் விகாஸம் நம்மால் விளக்க அரிது. சாக்ஷாத்கரித்தவர்களின் அனுபவ வார்த்தைகளை அறிவு கிரகிக்க முடியாது. ஸ்ரீராமகிருஷ்ணரின் உடலுக்குள் அன்னை பவதாரிணி சிறு குழந்தை வடிவில் பெரும் ஒளியுடன், மிக்க ஆனந்தத்துடன் குதித்து ஆடிக்கொண்டே வந்து கலந்ததை குருமகராஜ் அவர்களுக்குப் பாதசேவை செய்து கொண்டிருந்த ராக்கால் என்னும் சுவாமி பிரம்மானந்தர் கண்டு பிரமித்து நின்றார் என்று சரிதங்கள் சொல்கின்றன. இதை எப்படி நாம் அறிவால் கிரகிக்க முடியும்? நாமே நேரே அனுபவித்தாலும் இது அறிவிற்கு விஷயம் ஆவது கடினம் என்றுதான் தோன்றுகிறது.

ரிக்வேதம் இந்த மிக்க ஞானச்சுடர் விளக்கு பற்றிப் பேசுகிறது. வழியைக் காண்பிக்க வேண்டி மனத்தினும் மிக்க ஞானச் சுடர் விளக்கம் உயிர்களின் உள்ளே அமைந்து உள்ளதாம். அத்தனை தெய்விகமும் ஒரே கவனமாகப் பொருந்தி அந்த உள்ளொளியை நோக்கியே மிகுந்த அக்கறையுடனும் மதிப்புடனும் செல்கிறதாம். ரிஷிக்கு ஏற்பட்ட ஆத்மிக அனுபவத்தை எப்படி அறிவு விளக்க முடியும்? ஒரு ரிஷியின் வார்த்தைகள்தாம் மற்ற ஒரு ரிஷியின் வாக்கை விளக்க முடியும். ஆழ்வார் விளக்கலாம். ஸ்ரீராமகிருஷ்ணர் விளக்கலாம் அவர்களுக்குள். நாம் இந்த விளக்கினை விளக்கும் விளக்குகளில் நம் இருள் நீங்கப் பெற்றால் நம் பாக்கியம் என்று கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

த்ருவம் ஜ்யோதி: நிஹிதம் த்ருசயே கம்
மநோ ஜவிஷ்டம் பதயத்ஸ்வந்த: |
விச்வே தேவா: ஸமநஸ: ஸகேதா
ஏகம் க்ரதும் அபி வி யந்தி ஸாது ||

வழியைக் காட்டுவதற்காக திடமான ஜோதி உள்ளே வைக்கப் பட்டிருக்கிறது. அனைத்து தெய்விகங்களும் ஒரு மனத்துடன் அந்த ஜ்ஞானமாகிய ஜோதியை நோக்கியுள்ளன. அந்த ஜோதி மனத்திற்கும் எட்டாத ஜ்ஞான மயம்.

இங்கே ஸாயணரின் பாஷ்யத்தில் காணும் விளக்கம் அற்புதம். - ப்ராணிஷு அந்தர்மத்யே ஹ்ருதயே; மநோ ஜவிஷ்டம் - மநஸோபி அதிசயேந வேகயுக்தம் த்ருவம் நிச்சலம் நிர்விகல்பம். ஜ்யோதிர்ப்ரஹ்ம சைதன்யம் நிஹிதம்| யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந் இதி ஹி ச்ரூயதே | விச்வநராத்மகம் பரமாத்மாநம் அபிலக்ஷ்ய ஸாது ஸம்யக் வி யந்தி . - உயிர்கள் மத்தியில் அதாவது ஹ்ருதயத்தில் எழுந்தருளியிருக்கும் ஜோதியாவது எது என்னில் அஃது ப்ரஹ்ம சைதன்யமே ஆகும். ச்ருதிவாக்கியம் கூட இருக்கிறது இதன் விளக்கமாக - இதய குஹையில் விளங்கும் இந்த பரம வியோமத்தை யார் அறிகிறாரோ - என்று. அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக எழுந்தருளியுள்ளவர் பரமாத்மா ஆவார்.

***

No comments:

Post a Comment