இறந்தபின் ஜீவன் இருக்கிறானா? அல்லது அனைத்தும் இறக்கும் கணத்தோடு முடிவடைந்து விட்டதா? இந்தக் கேள்வியில்தான் கடோபநிஷதம் நங்கூரம் நாட்டியது. ஹிந்து மதம் இந்தக் கேள்வியை பால பாடமாக வைத்திருக்கிறது என்பதுதான் நசிகேதன் என்ற பாலன் வாயிலாக இந்தக் கேள்வியை வெளியிடுகிறது. ஜீவர்களிலேயே மூத்த முதல் ஜீவன் இந்தக் கேள்விக்கு விடை சொல்லத் திண்டாடுகிறது. அதாவது விசாரத்தை ஒரு சொல்லில் அடக்கினால் 'மறுமை' என்பது உண்டா? உண்டு என்பதுதான் ஹிந்து மத சாத்திரங்கள் அளிக்கும் விடை. ஆனால் அந்த விடையில்தான் மத உலகின் அத்தனை அழகையும் பொதிந்து வைத்திருக்கிறது ஹிந்து மதம். இயற்கை, இயற்கைக்கு மீறிய நிலை என்ற இரு அம்சங்களையும் மிக நேர்த்தியாகப் பிணைத்துள்ள நிலை மத இலக்கியங்களில் ஓர் அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.
பிறக்கும் உயிர் கர்ம மூட்டையைச் சுமந்து கொண்டுதான் வருகிறது. கொண்டுவந்த மூட்டையைத் தீர்க்கும் பொழுதே, புது கனத்தையும் ஏற்றிக் கொள்கிறது. கர்மத்தை அனுபவித்து முடித்து அதிலிருந்து விடுதலை அடைவது என்பது மிக அரிதானது என்கிறது வேதாந்தம். எனவேதான் 'அகர்மம்' என்பதை ஒருவன் அறிய வேண்டும் என்கிறது. கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் ஒருவர் பார்க்கக் கற்பாரேயானால் அவர் மாறி மாறிப் பிறக்கும் சுழலாகிய அசுபம் என்பதிலிருந்து விடுதலை பெறுவார் என்கிறது ஸ்ரீமத் பகவத் கீதை. கர்மம் என்பது தான் தனக்கு என்ற அகங்கார மமகார சாம்ராஜ்யம் ஆகும். அகங்காரமும், மமகாரமும் அற்றுப் புரியும் கர்மம் என்பது தன்னகத்தே அகர்மத்தைக் கொண்டிலகுவது. அதுபோல் அகர்மம் என்பது ஞான வ்யவஸாய மயமாய் இருக்கும் வரை சாத்விகமானது. முக்திக்கு வழியாக இருப்பது. ஆனால் அதுவே அறியாமையின் ஒண்டிடமாய் அகர்மம் ஆகிவிட்டதெனில் அது தாமஸிகமாக ஆகி மேலும் மேலும் இருளுக்கு இட்டுச் செல்கிறது. Silence must be active in knowing. Action must be silent of ahankara and mamakara. Silence must be really the business of knowing. Action must be the silence in doing. ஆனால் அவ்வாறின்றிப் பெருவாரியான உயிர்கள் வினையை விலங்காக ஆக்கிக்கொண்டு மரித்துப் போகின்றன. கொண்டு வந்ததை விட இரண்டு மடங்கு கனக்கிறது மூட்டை போகும் பொழுது.
இந்த உயிர் எங்கே போகும்? உபநிஷதங்கள் ஓர் அழகான சித்திரம் தருகின்றன. மரித்த உயிர் ஞானத்தால் முக்தி அடையாது போகுமேயானால், அப்பொழுது அது மீண்டும் பிறக்கும் வழியாகிய பித்ருயானத்தில் செல்கிறது. அணு வடிவினனாகிய ஜீவன் காற்று, மேகம் ஆகியவைகளில் கலந்து நெடுநாள் தங்கிப் பின்னர் தன் நேரம் வருங்கால், கார்மேகம், மின்னல் மழை என்பவற்றின் மூலம் இவ்வுலகை அடைகிறது. அடைந்து தன் கர்மாக்களுக்கு ஏற்றாற்போல் செடி, கொடி, விலங்குகள், பறவைகள், மனிதர் ஆகியோரின் உடல் தாதுக்களில் கலந்து, யோனிகளில் வடிவம் அடைந்து, அந்தந்த பிறப்புக்கு ஏற்ற உடல் அமைப்புகளைப் பெறுகிறது. இப்படியே பிறப்பு, வளர்ச்சி, தேய்வு, மரணம் என்ற சுழலின் வழியே கர்மங்களைக் குறைப்பதும், மிகுத்துக் கொள்வதுமாக ஜீவன் பிறவி தோறும் அலை பாய்கிறது. அறிவு நன்கு விளங்கப் பெறாத உயிரினங்களாய்ப் பிறந்து விட்டால், தன் நோக்கம் என்ன, தான் யார், தன் முக்திக்கு வழி யாது என்ற சிந்தனைகள் இன்றி, உண்டு உயிர்த்து, இனம் பெருக்கி, திரிந்து, பின் மடிவதே தொழிலாக அலைகிறது. அறிவு நன்கு விளங்கப் பெற்ற பிறவிகளாகிய மனிதர்களாகப் பிறவி கிடைத்தால், அதிலும் மனம். உடல் ஆகியவை முடமாகாமல், நல்ல செயல் நிலையில் இருக்கப் பெற்றால், அந்த ஜீவனைக் கண்டு, அந்தப் பிறவி பெறாத பல கோடி ஜீவன்களும் அமைதியாக தம் உள்ளத்தால் வாழ்த்துகின்றனவாம்.
'அப்பாடா! நம்மில் ஒருவருக்கு இந்தப் பிறவி வாய்த்து விட்டது. அந்த ஜீவன் இந்த மனம், அறிவு, இந்திரியங்கள் இவைகளைப் பயன்படுத்தி நிச்சயம் ஞானம் அடைந்து முக்தி அடைதல் திண்ணம். அதனால் பலகோடி உயிர்கள் எல்லையற்ற மங்களத்தை அடையப் போகின்றன.' என்று ஆவலுடன் எதிர்நோக்குகின்றனவாம்.
ஆனால் மனிதப் பிறவி அடைந்த அந்த ஜீவன், பிறந்த நோக்கத்தை மறந்து, முக்தி அடையக் கொடுத்த மனம் முதலிய கருவி கரணங்களாலேயே மேலும் மேலும் அறியாமையையும், கர்மச் சுழலை விளைக்கும் இருவினைப் பயன்களையும் கொள்ளை கொள்ளையாகக் குவிக்கும் பொழுது அந்த மற்ற உயிர்கள் உள்ளத்தால் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனவாம்.
"ஐயோ! இருந்து இருந்து நம்மில் ஒருவருக்கு அறிவு விளங்கப் பெற்ற மானிடப் பிறவி வாய்த்தும் அநர்த்தம் ஆகிவிட்டதே!
தரப்பட்ட அரிய வாய்ப்பு பாழானதும் இன்றி, கட்டுகளை விடுவித்துக் கொள்வதற்காகக் கொடுக்கப்பட்ட கத்தி ஒன்றைக் கொண்டு, ஒரு கானகத்தில் திருடர்களால் கட்டுண்ட ஒருவர் தம்மை விடுவித்துக் கொள்வதற்கு பதிலாக, அந்தக் கத்தியால் தம்மையே குத்திக் கொள்வது போல் ஆகிவிட்டதே! பெரும் நதியின் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட ஒருவர் பிடித்துக் கொண்டு கரையேற வசதியாக ஒரு புணையைத் தந்தால், அதன் உதவியால் மெதுவாகக் கரையை நோக்கிச் செல்லாமல், 'ஆஹா! புணையைப் பிடித்துக்கொண்டே வெள்ளத்தோடு அடித்துச் செல்வது எவ்வளவு இன்பமாக இருக்கிறது' என்று சொல்லிக்கொண்டு கடலிலே போய் மாய்வாரைப் போன்றும் ஆகிவிட்டதே! ஐயோ என்ன துர்பாக்கியம்!" என்று பெரும் துயரத்தை அடைகின்றனவாம் மனித்தப் பிறவி பெறாத மற்ற உயிரினங்கள். கவிதை போல் இருந்தாலும் இதனுள் நம் உள்ளத்திற்கு மட்டும் புரியும் ஓர் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இந்த வாழ்க்கையிலேயே இந்த வாழ்வென்னும் புதிர்க்கு விடை கண்டோர், ஞானம் அடைந்தவர்கள், முக்தர்களாக ஆகி மரிக்கும் ஜீவன்களின் கதி என்ன என்ற கேள்விக்கு இயற்கைக்கு அப்பாலாகிய உலகுக்குச் செல்லும் அவர்கள் மீண்டும் திரும்பி பிறவிச் சுழலுக்குள் வருதல் இல்லை என்கிறது ஹிந்து மதம். அவர்கள் செல்லும் வழிக்கு 'தேவயானம்' என்று பெயர். திவ் -- என்பது ஒளி என்ற பொருள் உடையது. ஒளிவழியில் செல்லும் உயிர்கள் அவர்கள். இயற்கையில் ஒளிக்கு நேர் காட்டுகளாய் இருக்கும் அனைத்தும் அவர்கள் வழியைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. சூரியன், அக்னி, கதிர்கள் என்றபடி அனைத்தும். கௌஷீதகி உபநிஷதம் இன்னும் மிக விரிவாக இந்த ஒளிமிகு பாதையைப் பற்றி விவரிக்கிறது. இந்த ஒளிமிகு பாதைக்கு வேறொரு பெயரும் உண்டு. ஒளி என்பதற்கு அர்ச்சிஸ் என்ற பெயர் உண்டு. அர்ச்சிஸ் என்னும் ஒளி முதலாகத் தொடங்கும் வழி என்னும் பொருளில் அர்ச்சிர் + ஆதி + மார்க்கம் = அர்ச்சிராதிமார்க்கம் என்பது முக்தர்கள் செல்லும் கதி என்கிறது வேதாந்தம்.
இவ்வாறு மரணத்தின் பிற்றை நிலையைப் பற்றி வேதாந்தம் சொல்லும் விவரணையிலிருந்து ஆகமங்கள் தங்கள் தங்கள் கடவுள் வழிபாட்டிற்கேற்ப சிற்சில இடங்களில் வேறுபடுகின்றன. ஆனால் இறைவன் அருள் பெற்று, இவ்வுலகப் பந்தம் அற்று வீடு பேறு அடையும் உயிர்கள் திரும்புதல் இல்லை என்றும், கர்மங்களிலிருந்து விடுபாடாமல், அறியாமையில் மரிக்கும் ஜீவன்கள் மீண்டும் பிறவிச் சுழலுக்கு வருகின்றன என்றும் கூறுவது அனைத்து ஆகம, வேதாந்தங்களுக்கும் பொது.
ஆக, மனிதனின் மறுமை என்ற கேள்வியைப் புதிராக்கி, அதை மேலும் வெறுமையாக்கி, மனப்பாழாக அடிப்பதற்குப் பதில் ஹிந்து மதம் இயற்கை, இயற்கையின் அதீதம் இரண்டையும் பிணைத்து, பந்தமுற்ற நிலை, விடுபட்ட நிலை என்ற இரு உயிர் நிலைகளையும் விளக்கும் விதம் மிகவும் ஆக்க பூர்வமானது. உண்மையில் இவ்வுலக வாழ்வை வாழ்வாங்கு வாழ்தல் என்பதற்கே வலிமையான அடிப்படையே அத்தகைய மிக இயல்பானதும், ஆக்க பூர்வமானதுமான மறுமை விளக்கமேயாகும். அவ்வாறின்றி மறுமை என்பது எதுவும் இல்லை, அனைத்தும் மொத்தமாக அழிந்து இல்லாமல் போகும் உயிர்ப்பாழ், அவ்வளவே என்பது வாதத்திற்கு அந்த நேரத்தில் சுவையாக இருந்தாலும் மனித வாழ்வின் அடிப்படை இயல்பு அதனை ஏற்பதில்லை. காரணம் இருக்கின்ற ஒவ்வொரு பொருளும் மொத்தமாக இல்லாமலே போய்விட முடியாது. எந்தப் பொருளும், இப்பொழுது இருக்கிறது என்றால் அது நிலை மாற்றம்தான் அடைய முடியுமேவொழிய, சுத்தமாக ஒன்றும் மிச்சமில்லாமல் அழிந்துவிடுதல் என்பது அனுபவத்திற்கும், அறிவின் காரண காரிய விதிகளுக்கும், தர்க்கத்திற்கும் முரணான ஒரு விஷயம். இருக்கும் உடல் மரணத்தின் பின்னரும் இருக்கிறது; நிலை மாறிக்கொண்டு. ஆனால் உள்ளே உயிர்ப்பாகவும், உணர்வாகவும் இருந்த உயிர் மட்டும் முழுதும் அழிந்து விடுதல் என்பது எப்படிச் சாத்தியம் ஆகும்? எனவேதான் ஸ்ரீமத் பகவத் கீதை, 'இருப்பதற்கு என்றும் அழிவில்லை; இல்லாததற்கு என்றும் இருப்பில்லை' என போதிக்கிறது. The existent thing can never go out of existence. என்ற இந்த தர்க்க நியாயம் மறுமையின் வலுவான பக்க பலமாய் நிற்கிறது. எனவேதான் ஸ்ரீகிருஷ்ணனின் குரல் துணிந்து ஒலிக்கிறது -- 'அர்ச்சுனா! ஒரு நாளும் நல்லது செய்யும் ஜீவர்கள் நாசத்தை அடைவதில்லை' ;
ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்க்கதிம் தாத கச்சதி -- என்பது ஸ்ரீமத் பகவத் கீதை.
நல்லதைச் செய்; உனக்கு நாசமில்லை இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி அதாவது நீ வீடுபேறு அடைந்தாலும் சரி இல்லை மீண்டும் பிறவிச் சுழலில் வந்தாலும் சரி.
***
No comments:
Post a Comment