பாரதியாரின் சிந்தை கவரும் பாடல்களிலே ஒன்று 'அழகுத் தெய்வம்' என்று தலைப்பில் வருவது. 'மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்' என்னும் பாடல். இதில் மூன்றாவது கண்ணியில் இப்படி வருகிறது.
காலத்தின் விதிமதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலா மென்றாள்
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை யென்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்கா ணென்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.
இதில் மூன்று நான்காவது வரிகளில் கூறுவது, 'ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்; நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்; ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்; எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண் என்றாள்' என்று முற்பகுதியில் கூறியது பிற்பகுதியில் கூறியதற்கு முரணாக இருக்கிறது.
முதல் இரண்டு வரிகள் - ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்; நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்.
அடுத்த இரண்டு வரிகள் - ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்; எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண் என்றாள்.
நினைத்தது நடக்கும் என்றால் அப்புறம் ஏன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடும் என்ற நிச்சயமின்மை. திரு சீனி. விசுவநாதன் அவர்களது பதிப்பின் படி கையெழுத்துப் பிரதியின் படத்தில் பார்த்தால் பாரதியார் முதலில் வரியை ஒரு மாதிரி எழுதி பின்னர் சில வார்த்தைகளை மாற்றி எழுதுகிறார். உதாரணத்திற்குக் 'காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்' என்ற வரியில் கையெழுத்துப் பிரதியில் அந்த வரியில் இருப்பது 'கையாகுமா மென்றாள்' என்பது. ஆனால் அச்சுப் பக்கத்தில் காண்பது கருவியா மென்றாள் என்பது. அது போல் கடைசி வரியில் அதாவது 'முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்' என்ற அச்சு வரிக்குக் கீழே கீழ்க்குறிப்பில் 'மோகவிடாய் தீர்ந்தேன்' என்பது கையெழுத்துப் பிரதி என்று குறிப்பு போட்டிருக்கிறார். ஆனால் கையெழுத்துப் பிரதியின் படத்தில் காண்பதோ 'மூர்ச்சித்து நின்றேன்' என்பதை அடித்துக் கீழே 'மோகமது தீர்ந்தேன்' என்று கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் நல்ல வேளை நாம் எடுத்துக்கொண்ட நான்கு வரிகளில் இவ்விதம் அடித்தல் திருத்தல் இல்லை.
ஞாலத்தில் விரும்பியது நண்ண வேண்டும் என்ற நியதி இல்லை. ஆனால் எண்ணியது எய்தும் என்று பாரதி கூற வருவது போல் படுகிறது. விருப்பம் என்பது நமது இச்சையை மட்டும் சார்ந்து நிற்பது. ஆனால் எண்ணுவது என்பது உலகில் உள்ள புற அக மெய்மையைக் கவனத்தில் கொண்டு எழும் மனத்தின் செய்கை என்று படுகிறது. இவ்வாறு பொருள் படுத்தினால்தான் பாரதியார் பிற இடங்களில் கூறியுள்ளதும் இங்கு வந்து பொருந்துகிறது.
மனப் பெண் என்னும் பாடலில் அவர் மனத்தை விளித்துக் கூறும் வரிகள் ஈண்டு நோக்குதற்குரியன.
"மனமெனும் பெண்ணே வாழி நீ கேளாய்
ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்
அடுத்ததை நோக்கி அடுத்தடுத்து உலவுவாய்
நன்றையே கொள்ளெனில் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவிடு என்றதை விடாதுபோய் விழுவாய்....
நின்னொடு வாழும் நெறியும் நன்கறிந்திடேன்
இத்தனை நாள் போல் இனியும் நின் இன்பமே
விரும்புவேன் நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன் முத்தியும் தேடுவேன்
உன்விழிப்படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன் தனக்கு இன்பம் ஓங்கிடச் செய்வேன்"
என்ற வரிகளில் மனத்தின் விருப்பத்திற்கும் ஜீவன் எண்ணுவதற்கும் உரிய வித்யாசத்தைக் காட்டிவிடுவது போல் இருக்கிறது. மனத்தின் விழியில் பட்டதை மனம் நயப்பது விருப்பம். மனத்தின் விழியில் அல்லாமல் ஜீவனின் விழியில் பட்ட சிவம் என்னும் நன்மையான பொருளை நாடுதல் எண்ணம் என்று ஒருவாறு வித்யாசம் காணமுடிகிறது. இவ்வாறு மனத்தின் வழியில் ஜீவன் போகாமல், ஜீவனின் சுயமான பார்வையில் மனம் கூடி நின்று ஒத்துழைப்பது எண்ணம் என்று கொண்டால் கீழ்க்காணும் பாரதி வரிகளும் புதுப்பொருள் சுரந்து நிற்கின்றன.
உண்மையறிந்தவர் உன்னைக் கணிப்பரோ மாயையே மனத்
திண்மை உள்ளோரை நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே
மனம் தன் போக்கில் படரும் விருப்பங்கள் மாயையின்பால் படும். ஜீவன் அந்த மனத்தைத் தனக்கு ஒவ்விய விதத்தில் ஆள்வது திண்மை. அவ்வாறு ஜீவன் மனத்தை ஆளும் செயல் எண்ணம். அத்தகைய எண்ணம் முற்றிலும் மெய்மையைப் பற்றிய கவனத்தில் ஊன்றியது ஆகையாலே அந்த எண்ணம் என்பது பொய்ப்பது அரிது. எனவேதான்
மஹாசக்திக்கு விண்ணப்பம் என்னும் பாடலில் கூட பாரதியார்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்
என்று பாடும் வரிகள் மிகவும் பொருத்தமுடையன.
இவ்வாறு இருக்கவேதான் பாரதியார் களிப்பினில் பாடும் வரிகளான
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி
கண்ணும் ஆருயிரும் என நின்றாள்
காளித்தாய் இங்கு எனக்கருள் செய்தாள்
என்ற வரிகளையும் நம்மால் இந்தத் தெளிவில் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
***
No comments:
Post a Comment