Thursday, January 9, 2020

அந்திமம்

ஆத்ம ஞானம் மிக அடிப்படையானது. ஆத்ம ஞானத்தைப் புரிந்துகொண்டவன்தான் மத வாழ்க்கைக்கே உரியவனாகிறான். கடவுள் என்ற விஷயம் புரியத் தொடங்க வேண்டுமென்றாலே ஆத்ம ஞானம் பற்றிப் புரிய வேண்டியிருக்கிறது. மனிதனை, தான் ஆத்மா என்று புரிந்துகொள்ள வைக்கத்தான் ஹிந்து மதம் இவ்வளவு பாடுபடுகிறது. ஆத்ம ஞானத்தைப் போன்றே ஒரு கருத்து ஹிந்து மதத்தில் மிகத் துணிச்சலாக அணுகப் பட்டிருப்பது மரணமும், மரணத்தை ஒட்டிய காலமுமான அந்திமம் என்பதாகும். மனித வாழ்க்கையின் விழுமியங்களை உறைத்துப் பார்க்கும் உறைகல்லாய் இருக்கிறது இந்த அந்திமம். உறவு, கல்வி, சுற்றம், காதல், செல்வம், சுகம், போகம் சொத்து முதலிய எததனை எத்தனை வாழ்க்கை விழுமியங்களை நாம் கருத முடியுமோ அத்தனையையும் மனிதனைத் தங்கு தடையின்றி ஈட்டுவதற்கு எந்தத் தடையும் சொல்வதில்லை ஹிந்து மதம். ஆனால் அது ஒன்றே ஒன்றைத்தான் செய்கிறது. அந்திம நிலையில் இவையெல்லாம் என்ன பெறுமதி பெறும்? - என்ற கேள்வியை மனிதன் முன் வைக்கிறது. ஹிந்து மதத்தின் இந்தப் போக்கு ஈவு இரக்கமற்றதாய்த் தோன்றினாலும் அது அவ்வாறு செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நீண்ட நெடிய அனுபவம் செறிந்த பண்பாட்டு வாழ்க்கையைக் கொண்டது ஹிந்து மதம். இன்று தோன்றி நாளை மறையும் தன்மைகளே அடர்ந்த உலகில் நித்யமான நிலைப்பாடு கொண்ட விழுமியம் எது என்பதுதான் அதன் ஊக்கமுதல் காரணியான ஆதி நோக்கமே என்று சொல்லும்படியான படிப்பினை மரபு கொண்டது ஹிந்து மதம்.

ஹிந்து மதம் தன்னுடைய படிப்பினைகளைக் கற்ற பள்ளிக்கூடமே இந்த அந்திம காலம், அந்திம அவஸ்தை, மரணம் எனலாம். மரணத்தின் முன்னால் அனைத்தும் மதிப்பிழந்து மறைந்துபடுவதை அது நேருக்கு நேராக நோக்குகிறது. ஒரு நாளும் 'அதெல்லாம் உலக இயற்கை; இன்று ஆகிற வழியைப் பார்' என்ற சால்ஜாப்புகளில் மயங்குவதில்லை. உலகில் ஏதேனும் நிலைத்தது உண்டா இல்லையா? மரணத்தைத் தாண்டி இந்த உயிர் இருக்கின்றதா இல்லையா? மரணத்தின் முன்னர் அதனையும் மீறி தன் மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் விழுமியம் எதுவேனும் உண்டா? அவ்வாறு இருந்தால் அந்த விழுமியமே வாழ்க்கையின் இலட்சியமாக ஆகத்தக்கது. அவ்வாறு நிலைத்த விழுமியம் எதுவும் இல்லை என்று முடிவானால், வாழ்விற்கு எந்த இலட்சியமும் பொருத்தி உரைப்பது வெறும் பிள்ளை விளையாட்டு. இந்தத் தீர்மானத்தை ஹிந்துமதம் எடுக்கப் பெருந்துணையாக இருந்தது ‘அந்திமம்’ என்ற வாழ்வின் யதார்த்தம். மரணத்தின் வாயிலில் மூன்று நாள் காத்திருந்து உபவாசம் இருந்தவன் நசிகேதன் என்ற சிறுவன் அன்று. ஹிந்துதான் அவ்வாறு உபவாசம் இருந்தவர். மரணத்திற்குப் பிற்பட்ட நிலை என்ன என்றறிய அவர் மரணத்தின் வாயிலிலேயே நின்று காக்கத் தயங்கவில்லை. மரணம் அவரைக்கண்டு பயந்தது. அவருக்கு மரணத்தின் பிந்தைய நிலை என்ன என்ற கேள்விக்குப் பதிலாக, நெடிய வாழ்நாள், அரசாட்சி, அதிகார போதை, வற்றாத பெருஞ்செல்வம், வாழ்வின் தேர்ந்தெடுத்த சுக போகங்கள், அழகுகள் என்ன வேண்டும் அனைத்தும் தரச் சன்னத்தமாக நின்றது. ஆயினும் ஹிந்துவின் ஒரே கேள்வி, 'மரணத்திற்குத்தானே மரணத்தின் பின் என்ன என்று தெரியும். எனவே மரணத்தின் பின்னர் இந்த உயிர் இருக்கிறதா இல்லையா?' இந்தக் கேள்விக்கு விடை. இதற்குப் பதிலாக வேறு எதுவும் உடன்பாடில்லை. ஹிந்துவின் அந்த அதி உக்ரமான நிர்ணய காலத்தைத்தான் உபநிஷதம் கடோபநிஷத் என்ற பெயரில் கவிதையாக்கி வைத்தது.

எனவேதான் உலகின் மிகப்பழைய நாகரிகங்கள் எல்லாம் முதுமையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அதற்கு முதலிடம் தருகின்றன. உதாரணம் சீன நாகரிகம். இளம் வயது எத்தகைய சான்றாண்மை உடைய வாழ்வின் பகுதியோ அதைப் போன்றே, அதைவிடவும், முதுமை மிகச் சான்றாண்மை கொண்ட வாழ்வின் பகுதி. ஆனால் நம் காலத்தில் முதுமையின் ஆவணங்கள், முதுமையின் தன்னம்பிக்கை மிக்க சுயபதிவுகள் இல்லாமலேயே போகிறது. ஏதோ சார்ந்து வாழும் ஒரு வாழ்வின் கழிநிலையாகத்தான் முதுமை இப்பொழுது பார்க்கப் படுகிறது. பார்க்கப் போனால் முதுமைதான் வாழ்வின் மிக மையமான கவனத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டும். அவ்வாறு போற்றிய மதம் ஹிந்து மதம். அதன் அடையாளங்கள்தாம் வானப்ரஸ்தம் என்னும் வனம் புகு நிலை, வீடு என்பதை ஆழ்ந்து எதிர்நோக்கும் துறவற முதிர்நிலை என்பன.

மேலைய பண்பாடுகள் காலத்தால் மிகவும் இளையவை. அவை இன்னும் வாழ்வின் படிப்பினைகளைக் கற்கவே இல்லை. அவற்றின் ஊக்கங்களைக் கடன்வாங்கி நாம் இப்பொழுது இளமையைக் கொண்டாடுகிறோம். ஆனால் நம் பண்பாடோ இந்த ஆரம்பப் பாடங்களை என்றோ கற்று முதுமையின் முக்கியத்துவம் என்ன என்பதை நன்கு அறிந்த பண்பாடு. மரணத்தின் உள்ளர்த்தம் என்ன என்பதை நன்கு ஆய்ந்த பண்பாடு. அந்திமத்தின் மரநிழலில் தன் முதிர்ந்த படிப்பினைகளைப் பெற்ற பண்பாடு.

இங்கும் நாம் ஹிந்து மதத்தின் உள் அமைப்பின் நுணுக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மரணம் என்பதை ஏதோ நினைக்கவே கூடாத பயங்கரம் என்ற எண்ணத்தை ஊட்டுவதில்லை ஹிந்து மதம். வாழ்க்கை என்பதையே ஒருவன் நிதானமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மரணம் என்பதைப் பற்றிய ஆழ்ந்த ஆக்க பூர்வமான புரிதல் ஏற்பட வேண்டும். மரணத்திற்கு அப்பாற்பட்ட நிலையைப் பற்றிய தெளிவிற்கு நம்மிடம் அறிவின் சாதனங்கள் இல்லை. இருக்கும் அறிவு எல்லாம் வாழ்வு என்னும் வட்டத்திற்குள்தான் பயன்படும். யோக சாதனைகளால், ஆன்மிக ஆழ்நிலைகளில் பல மகான்கள் மரணத்தின் பிற்றைய நிலையைப் பற்றியும் கூறியிருக்கிறார்களே என்றால் அவற்றை உள்ளபடிப் புரிந்து கொள்ள நம்மிடம் அதற்கான பயிற்சிகள் இல்லை. நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வது ஏதோ ஒரு நம்பிக்கை நட்சத்திரம் போல் ஆச்வாசத்தைத் தருமே அன்றி, இன்றைய அறிவின் வழிப்படும் இளைய சமுதாயத்தினர்க்கு சில கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கும். மேலும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் மரணம் என்பதை நெருக்கத்தில் உணரும் நிலை வரும்போது நம்பிக்கையால் வெறுமனே கட்டிவைத்த சோறு பயன்படாது. 'யார் கண்டார்கள்? ஏதோ சொல்லி வைத்திருக்கிறார்கள்..' என்ற உறுதியற்ற நிலைதான் மனத்தில் இருக்கும். எனவேதான் மாணவப் பருவத்திலேயே முதுமைக்கான பயிற்சியை ஹிந்து மதம் அளித்துவிடுகிறது. முதுமை வந்த பிறகு பல தத்துவ நுட்பங்களை அலசி ஆராய மனம் ஒருப்படுமா என்பது சந்தேகமே. எனவே நன்கு மனம் திறம்பட சிந்திக்கும் காலத்திலேயே ஆழ்ந்த சிந்தனையை, வாழ்க்கையின் அடிப்படை விஷயங்களில் செலுத்துகிறது. இளமையில் முதுமைக்கான பயிற்சியை அளிக்கும் ஹிந்து மதம் முதுமையை இளமைக்கான பாதுகாவலாகவும், வழிகாட்டலாகவும் வைத்தது. எனவே ஹிந்து மதத்தில் தலைமுறைகளிடை இடைவெளி என்ற கண்ணறாவியெல்லாம் இல்லை.

பிறந்த உயிர் வாழும் நாளெல்லாம் உள்ளுக்குள் அஞ்சி நடுங்குவது இந்த மரணத்திற்காகவே. அந்த மரணத்தை நன்கு புரிந்துகொண்டால் பிறகு பதட்டம் இல்லாமல், பேராசையின் அலைக்கழிப்பெல்லாம் இல்லாமல் வாழ்வை வாழ்வாங்கு வாழலாம் என்கிறது ஹிந்து மதம். அமெரிககாவில் நாத்திகச் சிந்தனையாளர் ராபர்ட் இங்கர்சால் அவர்களை விவேகாநந்தர் சந்தித்த பொழுது ஒரு சுவாரசியமான பேச்சு எழுந்தது. என்னவெனில், இங்கர்சால் கூறியது, 'இந்த உலகம் ஓர் ஆரஞ்சுப் பழம். இதுதான் எனக்குக் கிடைத்திருக்கிறது. இதை ஒட்டப் பிழிந்து அனுபவிக்க நினைக்கிறேன்'. அதற்குப் பதிலாக விவேகாநந்தர் கூறியது, 'ஆம் ஐயா! நீங்கள் கூறியது சரிதான். இவ்வுலகம் ஓர் ஆரஞ்சுப் பழம்தான். ஆனால் அதை என்னுடைய முறையில் பிழிந்து சுவைத்துப் பாருங்கள். ஒரு சொட்டு கூட விரயம் ஆகாமல் உங்களால் அனுபவிக்க முடியும்'. இந்த உரையாடலில் பொதிந்திருக்கும் பெரும் உண்மையை நாம் அந்திமம் என்ற கருத்தைப் புரிந்துகொண்டால்தான் உணர முடியும். வாழ்வின் முழு அனுபவத்தையும் ஒரு சொட்டு கூட விடாமல் பெறச் சீரிய வழிதான் வேதாந்தம் என்பதாகும்.

***

No comments:

Post a Comment