Tuesday, January 7, 2020

ஹிந்துமதத்தின் நூல்கள்

ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கு வெகு முன்பிருந்தே, புத்தர் காலத்திற்கும் முன்பு, வேதாந்தம் என்ற கல்வி பாரதப் பண்பாட்டில் தொடங்கிவிட்டது. வேதாந்தம் என்ற கல்வியின் பொருள் என்ன? ஆன்மிக, சமய தத்துவக் கருத்துகள் நிறைந்த பண்பாட்டுச் சூழ்நிலையில் தத்துவ விசாரத்தின் மூலம் குழப்பங்களைத் தீர்த்துத் தெளிவை அடையும் பேரியக்கம் தான் வேதாந்தம். அதன் பார்வையில் எந்த ஒரு சமயமும், ஆன்மிக தத்துவக் கருத்தும் அலட்சியிக்கப் படவேண்டிய ஒன்று அன்று. ஆழ்ந்து தேர்ந்த அணுகுமுறை நெறிகளாலும், மனிதனுக்கான அத்தனைவிதமான அறிவு நெறிகளாலும் எந்த ஒரு சமயத்தையும், ஆன்மிக தத்துவக் கருத்தையும் தீர விசாரித்து ஒரு முடிவுக்கு வரும் அணுகுமுறையே வேதாந்தம் பாரத ஆன்மிகப் பண்பாட்டிற்கு அளித்த கொடை.

அவ்வாறு வேதாந்த அணுகுமுறையை நன்கு செயல்படுத்தின ஆதார நூல்களாக இருப்பவை உபநிஷதங்கள். அந்த உபநிஷதங்களே வேதாந்தம் என்ற பெயராலும் அழைக்கப்படுவன. அந்த வேதத்தின் தத்துவ முடிவுகளின் பெட்டகமாய் இருக்கும் உபநிஷதங்கள் ஒரு பெரும் ஆதார சான்று நூல் ஹிந்து மதத்திற்கு.

உபநிஷதங்களில் இருக்கும் பெரும் தத்துவ ஆய்வுகளின் முடிவுகளை, ஆன்மிக உண்மைகளின் தெளிவை அனைத்து மக்களும் அன்றாட வாழ்க்கையில் நினைவில் மனப்பாடமாகக் கொள்ளும் அளவிற்கு இனிய ச்லோகங்களால் ஆன, அனைத்து வேதாந்த நுட்பங்களையும் தன்னகத்தே பொதிந்து கொண்ட நூல் ஸ்ரீமத் பகவத் கீதை. அது ஹிந்து மதத்தின் பெரும் சான்றான நூல்களில் ஒன்று.

அடுத்து வேதாந்தமாகிய உபநிஷதங்களிலும், வேதாந்த விளக்கமான நூல்களிலும் பரவலாக இருக்கும் பேருண்மைகளை தீவிர ஆன்மிக சாதனையாளர்கள் நன்கு கவனமாகக் கற்றுத் தங்கள் வழியில் முன்னேறுவதற்காக கோட்பாடுகள் வடிவில், நூற்பாக்களாக எழுந்த வேதாந்த சாத்திரம் எனப்படும் ஸ்ரீப்ரும்ம சூத்திரம். ஆக ஹிந்து மதத்தின் தத்துவக் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கே என்ன என்று அறிவதற்கு எங்கும் அலைய வேண்டாம். இந்த மூன்று நூல்கள் தாம் ஹிந்து மதத்தின் ஆதாரமான சான்று நூல்கள் மூன்று. இந்த மூன்று நூல்களுக்கும் சேர்த்து மொத்தப் பெயர் ப்ரஸ்தான த்ரயீ. ப்ரஸ்தானம் -- முக்கியமான ப்ரமாணங்கள் அல்லது சான்று நூல்கள்; த்ரயீ -- மூன்று நூல். இவை ஹிந்து மதத்திற்கான தத்துவங்கள் பற்றி அறிய அடிப்படை நூல்கள்.

இவற்றைத்தவிர தனித்தனி கடவுள் வழிபாட்டுத் தத்துவங்களையும், வழிமுறைகளையும், அந்தந்த சமய வழிபாட்டிற்கு ஏற்ற வாழ்வியல் நெறிகளையும் அறிய ஆகமங்கள் என்ற நூல் தொகுதிகள் இருக்கின்றன. சைவ வழிபாட்டிற்கு சைவ ஆகமங்கள்; வைஷ்ணவ வழிபாட்டிற்கு வைணவ ஆகமங்கள்; சாக்த வழிபாட்டிற்கு சாக்த ஆகமங்கள. இவ்வாறே கணபதி வழிபாடு; குமரன் அல்லது முருகன் வழிபாடு. இந்தத் தனிவழிபாட்டு ஆகமங்களில் பொதுவான தத்துவங்கள் வேதாந்தத்தைச் சார்ந்தும். பிரத்தியேகமான வழிபாட்டிற்கான தத்துவங்கள் அந்தந்த ஆகமங்களுக்கு என்று தனியாகவும் சொல்லப்பட்டிருக்கும்.

சைவம் வேத, வேதாந்த சான்று நூல்களைப் பொது ப்ரமாணம் என்றும், சைவ ஆகமங்களைச் சிறப்பு ப்ரமாணம் என்றும் வகைப்படுத்தும். தமிழ் நாட்டின் சைவ சித்தாந்தம் தேவார திருவாசகங்களை தோத்திர நூல்கள் என்றும், திருமூலர் திருமந்திரத்தை தோத்திர சாத்திர நூல் என்றும் கூறும். வைஷ்ணவம் வேத வேதாந்தங்களை அடியொற்றியே விசேஷ சாத்திரங்களான வைணவ ஆகமங்களும், இவற்றைச் சார்ந்து ஆழ்வார்கள் அருந்தமிழில் இயற்றிய திவய பிரபந்தங்களும் அமைந்திருப்பதாகக் கூறும். சாக்தத்திலோ சக்தியைப் பற்றிக் கூறுமிடத்து, 'வேதாந்தங்களால் அறியப்படுபவள்' என்றும், 'சாக்த சமய ஆசாரங்களால் வழிபடப் படுபவள்' என்றும் துதிக்கவே செய்யும்.

வேதாந்தத்தின் பெரும் பணிகளில் ஒன்று வெவ்வேறு தத்துவ மரபுகளையும், சமய வழிபாட்டு முறைகளையும் செம்மையான மானுட அறிவு நெறிகளால் விசாரத்தினாலும், விவாதத்தினாலும், சிந்தனை, மனனம், தியானம் என்ற படிநிலைகளில் நன்கு புரிந்து கொள்வதைப் பரவலான பாரதப் பண்பாடாய் ஆக்கியது எனலாம். அதே போல் ஆகமங்களின் தலையாய பணி, வேதாந்த போதத்தைத் தன்னகத்துள்ளே செறிவாக்கித் தனித்தனி வழிபாட்டுத் தத்துவங்களையும், வழிபாட்டு நெறிகளையும் ஆழ்ந்த ஆன்மிக வாழ்வியலாக வளர்த்தெடுத்தது எனலாம். ஹிந்து மதத்திற்கு இரண்டும் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன.

ஆகமங்கள் செய்த மற்ற ஒரு நல்ல பணி என்னவென்றால் பலப்பல பிரதேசங்களில் உள்ள மொழிகளில் எல்லாம் இந்த ஆன்மிக அறிவுச் செல்வங்களை வளர்த்தெடுக்க ஊக்கம் தந்தது ஆகும். அதனால் பிரதேச மொழிகளில் பெருமளவிற்கு ஆன்மிக அருள் பாடல்கள் எழுந்தன என்பது மட்டுமின்றி, அந்தப் பிரதேச மொழி நூல்களிலும் வேதாந்த ஆகமக் கருத்துகள் திறம்பட மக்களுக்குப் போய்ச் சேர்ந்தமையும் ஆகும். பக்தியும், பழகிய மொழியின் லாகவமும் சேர்ந்து உயர்ந்த வேதாந்தக் கருத்துக்களையும், ஆகம நெறிகளையும் மக்களுக்கு அன்றாடம் புழங்கு சிந்தனைகள் என்ற அளவில் கொண்டு வந்து தந்துவிட்டன. அதனால் மூல நூல்களைப் படித்திராதவர்கூட ஹிந்து மததின் சாரமான கருத்துகளைப் பற்றி நன்கு உணர்ந்துகொள்ள பெருவாய்ப்பாக இந்த வேதாந்த ஆகம பக்திக் கூட்டியக்கம் அமைந்தது. இதுதான் நாம் இன்று நடைமுறையில் காணும் ஹிந்து மதம்.

எனவேதான் ஹிந்து மதத்திற்கான நூல்கள் என்றதும் ஆரம்பத்தில் பல மொழிகளில் பல நூல்கள் என்று எண்ணம் எழுகிறது. ஆனால் பொறுமையாக இதை நாம் புரிந்துகொண்டால் எவ்வளவு காலத்திற்கு முன்னமிருந்தே தெள்ளத் தெளிவாக ஹிந்து மதம் தன் மக்களுக்கான ஆன்மிகக் கல்வியை நடத்தி வந்திருக்கிறது என்பது புலனாகும். இல்லாவிட்டால் எங்கோ வடநாட்டின் கோடியில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு கிழவி சொல்லுகின்ற கருத்துகளும், தமிழ் நாட்டின் ஓர் ஊரில் எங்கோ ஒரு சமயப் பெரியவர் அமர்ந்து பேசும் சொற்பொழிவும் எப்படி ஒன்று போல ஒரே விதக் கருத்துகளைச் சொலவது சாத்தியம் ஆகக்கூடும்.?

***

No comments:

Post a Comment