Tuesday, January 7, 2020

ஹிந்துமதத்தின் வழிபாடுகள்

தனித்தனியாக இஷ்ட தேவதை, சித்தாந்தம் சம்பிரதாயம் என்று பல்கியிருப்பது ஹிந்துமதத்தின் விசேஷம் என்றால், பொதுவில் அனைவரும் தங்கள் தனிப்பட்ட சித்தாந்தங்களையும், இஷ்ட தேவதை வழிபாடுகளையும் விட்டுத் தராமல் ஒருவருக்கொருவர் ஆன்மிக வழியில் உதவிக்கொண்டு முன்னேறும் பொதுமை எனப்படும் வேதாந்த சித்தாந்த சமரஸம் என்பதும் மற்றொரு விசேஷம். இந்த நுணுக்கமான உள்ளடக்கமான முழுமையாகிய வேதாந்த சித்தாந்த சமரஸம் என்பதையே ஹிந்து மதம் என்று சொல்லுகிறோம். சாக்தம் (சக்தியை முழுமுதல் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் மார்க்கம்) கூறுகிறது -- சாக்தன் உள்ளத்தில் சாக்தனாகவும், வெளி ஒழுக்கத்தில் சைவனாகவும், பொது வாழ்வில் வைஷ்ணவனாகவும் உலகில் வலம் வருகிறான் என்று. சாக்தம் உண்மையில் சொல்ல வருவது என்ன? நாம் இன்று ஹிந்து மதம் என்று பார்த்துக் கொண்டிருக்கும் யதார்த்தத்தைத்தானே அவ்வாறு சொல்லியிருக்கிறது. அதுவுமில்லாமல் எந்த சித்தாந்தமாயினும் அது வேதத்தை ஏற்கின்ற சித்தாந்தம்தான். வித்யாசம் எல்லாம் வேதமானது என் கடவுள் வழிபாட்டைத்தான் கூறுகிறது என்று ஒவ்வொரு சித்தாந்தமும் தன் வழியை விளக்கும். வேதம் சொல்லும் வழிபாடு என் இஷ்ட தேவதை வழிபாடுதான் என்பது அனைத்து ஆகம சித்தாந்தங்களின் விளக்கமுறையாகத் திகழ்கிறது.

சைவம் (சிவனை முழுமுதல் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் மார்க்கம்) கூறுவது என்ன எனில் வேதங்களில் தங்கள் இறைவனைத்தான் பொதுவான வகையிலும், சைவ ஆகமங்களில் சிறப்பான வகையிலும் சொல்லப் பட்டிருப்பதாய்க் கூறும். வைஷ்ணவம் (திருமாலே முழுமுதல் பரம்பொருள் என்று வழிபடும் மார்க்கம்) வேதங்களில் பரம்பொருளின் பரத்வ நிலையும், வைணவ ஆகமங்களில் திருமாலின் வ்யூஹ நிலையும், இதிகாசங்களில் அவன் இவ்வுலகில் அவதாரம் செய்யும் நிலையும், திவ்ய ப்ரபந்தங்களில் கோயிலில் அர்ச்சா அவதாரமாக நிற்கும் நிலையும் கூறப்பட்டுள்ளதாகக் காட்டும். சாக்தமோ (சக்தியைப் பரம்பொருளாக வழிபடும் மார்க்கம்) வேதங்கள் அனைத்துமே ஆதிசக்தியின் பெருமையைக் கூறுவதாகவும், சாக்த ஆகமங்கள் வேதங்கள் சொன்ன பெருமைகளை வழிபாட்டு முறைகளுடன் நன்கு விளக்குவதாகவும் கூறும். கௌமாரம், காணாபத்யம் முதலிய கடவுள் வழிபாடுகளும் அவ்வாறே விளக்கிக் காட்டும். ஆக வேதங்கள் என்பன மூலச் சான்றுகள்; வேதாந்தம் என்பது தத்துவ விளக்கம்; வேதமும் வேதாந்தமும் பொதுவாக விளக்கிய தம் கடவுளின் சிறப்புகளைச் சிறப்பான வகையில் தம் தம் பக்தர்களுக்காக விரிவாகவும் ஆழ்ந்தும் உரைக்கும் நூல்கள் அந்தந்த வழிபாட்டு ஆகமங்கள் -- இதுதான் ஹிந்து மதப் பிரிவுகள் அனைத்திலும் காணப்படும் போக்கு.

ஒவ்வொரு மதத்தின் அமைப்பும் மற்ற மதங்களிலிருந்து வேறுபடுவதைப் போலவே ஹிந்து மதம் என்பதற்கும் பிரத்தியேகமான அம்சம் இருக்கிறது. என்ன பிரத்தியேகமான அம்சம்? இவ்வாறான பலப்பல தனித்தனி வழிபாடுகள் தங்கள் சித்தாந்தங்கள் என்பதைத் தாண்டி பல சித்தாந்தத்தினர் ஒருவருக்கொருவர் கலந்து உணர்வுடன் பங்கு கொள்ளும் பொதுவான சமய வாழ்வில் ஒரே பரம்பொருளைத்தான் தனித்தனி வழிகளில் நாம் அடைய வழிபடுகிறோம்; தனித்தனி வழிபாட்டிற்கு அவரவர்க்கு அவரவர் ஆகமங்களின் வழியே உபதேசித்த குருமார்கள், ஆசாரியர்கள் தனித்தனியாக இருப்பினும் பொதுவான சமய வாழ்வில் அனைத்து வழிபாடுகளும் சென்று சேர்வது ஒரே பரம்பொருளுக்கே. அனைத்து தனித்த இஷ்ட தேவதை வழிபாடுகளும், சித்தாந்தங்களும் ஜீவனுக்குக் காட்டுவது பரம்பொருளை அவரவர் பரிபக்குவத்தின் படியும், நம்பிக்கை ஊக்கம் காரணமாகவும் தனித்தனி வழிகளில் அடைவது எப்படி என்பதைத்தான். ஒருவரின் இயல்புக்கு ஒவ்விய மார்க்கம் மற்ற ஒருவருக்கும் சரிப்படும் என்று கூற இயலாது. அந்தந்த ஜீவன் பல பிறவிகளாக அடைந்து வரும் பரிபக்குவத்திற்கு ஏற்பவே அதன் வழிபாட்டு ஊக்கமும், சித்தாந்தமும் அமையும். எனவே ஒருவர் மற்றவர் செல்லும் வழியில் குறிக்கிட்டு அவருடைய நிஷ்டையைக் குலைப்பது பெரும் பாவம். இந்த அம்சத்தில் ஹிந்து மதம் பிரத்தியேகமான தன்மை கொண்டதாய்த் திகழ்கிறது.

இஷ்ட தேவதை நிஷ்டை என்று பார்த்தால் ஒவ்வொரு சித்தாந்தியிடம் நீங்கள் கேட்டால் தெள்ளத் தெளிவாகத் தன் கடவுள் யார், நூல் எது, வழி காட்டிய குருமார் யார் எனக் கூறுவார். அது ஆகமங்கள் காட்டும் இஷ்ட தேவதை நிஷ்டை. அதே சமயத்தில் ஹிந்துவானவர் அனைத்து சித்தாந்தங்களின் பொதுவான சமய ஊக்கத்தில் இயங்கும் போது 'ஆகாயத்திலிருந்து பெய்த மழை பல நதிகளாகிச் சென்று அனைத்தும் ஒரே கடலை எப்படி அடைகின்றனவோ அதைப்போலவே பலவித வழிபாடுகளும் வெவ்வேறு மக்கள் மத்திகளில் உண்டாகி அனைத்தும் அந்த ஒரே பரம்பொருளைத்தான் சென்று அடைகின்றன' இந்தக் கருத்துள்ள ச்லோகத்தை ஆதிகாலம் தொட்டே தம் அன்றாட வழிபாட்டில் ஹிந்துவானவர் கூறிவருகிறார். இந்த அனைத்துப் பொதுமைக் கருத்தை வேதம் தெளிவாகக் கூறுகிறது -- 'இருப்பது ஒரே பரம்பொருள்; அந்தந்த சித்தாந்த அறிஞர்கள் வேறு வேறு பெயரிட்டு அந்தப் பரம்பொருளை வழிபடுகின்றனர்'. அந்தப் பரம்பொருள் பல உருவங்களை அந்தந்த பக்தர்களின் பக்திக்காக ஏற்று அருள் புரிவது; அதேநேரம் எந்த உருவத்திலும் அடைபடாது அனைத்தையும் கடந்த அருவமாகவும் இருப்பது. It has both personal and impersonal aspects என்று கூறுகிறது வேதம். தான் கூறும் பரம்பொருள் தத்துவம் போன்றே ஹிந்து மதமும் தனித்தனியான இஷ்ட தேவதை நிஷ்டையைக் கூறும் சித்தாந்தங்கள், அனைத்து சித்தாந்திகளும் மீப்பொது உணர்வில் இயங்கும் பொதுவான சமய வாழ்வு என்று இரண்டு விசேஷத் தன்மைகளும் கொண்டதாய்த் திகழ்கிறது ஹிந்துமதம்.

***

No comments:

Post a Comment