சாஸ்திரமே ஒரு தனி உலகம். ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ ஆகிய பரம்பொருள் ’உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்கிறார் நம்மாழ்வார். ஸ்ரீமஹாபாரதத்தில் சஞ்சயன் கூறுவது - பக்தியுடன் சேர்ந்த சாத்திரத்தால் ஜநார்த்தனனை அறிந்தேன் என்கிறான். சாத்திரம் உலகம் மட்டுமன்று. சாத்திரம் என்பது கண் என்கிறார்கள் வேதாந்திகள். என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து என்பதும் நம்மாழ்வாரின் வாக்கு.
ஆனால் பாரமார்த்திக இயல் என்று பார்த்தோம் என்றால் உலகமே முதன்முன்னம் மனிதருக்குத் தரப்பட்ட ஒருவகையில் சாத்திரமே என்பது புரியும். ஸ்ரீபின்பழகிய பெருமாள் ஜீயரும் தமது குருபரம்பரா ப்ரபாவம் என்னும் கிரந்தாரம்பத்தில் இந்த விஷயத்தைக் குறிப்பு காட்டுகிறார். சிருஷ்டி என்பதே முதலில் மனிதரைப் படைக்கும் போதே கருவி கரணங்களைப் படைத்து, தேகம் என்பதோடு ஜீவனைச் சேர்த்து, அந்தக்கரணங்கள் என்று தந்த போதே அவற்றை வைத்துக் கொண்டு ஜீவர்கள் ஜகத்காரண வஸ்துவான பரம்பொருளை உணர வேண்டும் என்றுதான். அந்த நோக்கம் தோல்வியடையவே பின்பு உதவியாக இருக்கட்டும் என்று சாஸ்திர ப்ரதானம் பண்ணியருளினான் என்கிறார். அதாவது சாதாரண வகுப்பில் சரியான தேர்ச்சி ஏற்படாத மாணவர்களுக்கு ஸ்பெஷல் வகுப்புகள் நடத்துவதைப் போல, தம்முடைய மனம், புத்தி, கருவி கரணங்கள் ஆகியன கொண்டு உலகத் தன்மையில் தம்மை இழந்துவிடாமல் நேர்வழியில் சிந்தித்துப் பரம்பொருளைப் பற்றிய நாட்டம் கொள்ளாது போனதால் அவர்களுக்கு நன்கு புரிந்துகொள்ளப் பலவாறு விளக்கிக் கூடுதல் துணை உபதேசங்களுடன் தரப்பட்டது சாத்திரம் என்பது கருத்தாகும்.
இந்தப் படித்தரங்களை உள்ளமைத்துப் பாடுகின்றாரோ என்று நாம் நினைக்கும் படியாக அமைந்திருப்பது பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதி என்னும் அரிய திவ்யப் பிரபந்தமாகும்.
சாத்திரம் என்பது ஒரு விளக்கு என்பதைப் போல பிறப்பு என்பதே ஒருவகையில் விளக்குதான். கர்மங்களை நீக்கிக்கொள்ள வாய்ப்பாக இந்த ஜீவனுக்கு ஜன்மம் என்பது தரப்படுகிறது. பிறப்பைப் பரம்பொருளைக் காட்டும் விளக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மனிதருக்குத் தரப்படுகிறது. பிளவுபட்ட பார்வைகளாகப் பார்க்கும் பொழுது உலகம் முறையற்ற குழப்பமாகத் தெரிகிறது. ஆனால் ஒருங்குறக் காணும் பயிற்சியினால் அனைத்திலும் உள்புகுந்து திகழும் தத்துவம் தரிசனமாகிறது. எனவேதான் ‘ஒன்றாகக் காண்பதுவே காட்சி’ என்றாள் அவ்வைப் பாட்டி. அப்படி ஒன்றாகக் காணும் வழி ஒன்றைச் சொல்லிக் கொடுக்கிறார் பொய்கையாழ்வார்.
வையம் அந்த விளக்கின் தகளி. அந்தத் தகளியில் விளக்கேற்றுவதற்காகப் பெய்யும் நெய்யானது வார்கடல். அந்த விளக்கில் காணும் சுடர் வெய்ய கதிரோன். ஏன் விளக்கத்தை ஏற்றுகிறோம்? பொருளைக் காண்பதற்கு. பொய்கையாழ்வார் ஏற்றிய விளக்கில் நாம் காணும் பொருளோ தோன்றி மறையும் பொருள் எதுவும் இல்லை. எல்லைகளுக்கு அப்பாற்பட்டதான மாற்றங்கள் அற்றதான நிலைப்பேறான உண்மையான பரம்பொருளையே காண்கிறோம். அந்தப் பரம்பொருளையும் முழுவதையும் காட்டி விடுமா இந்த மாதிரி புற உலகையே ஒன்றாகத் திரித்து ஏற்றிய விளக்கு? முழுவதும் காட்டுவது அவனுடைய அருளே அன்றி வேறு எதுவும் அன்று. ஆனால் அவனுடைய திருத்தாள்களை ஒருவாறு நமக்குக் காட்டிவிடுகிறது இந்த விளக்கு. ‘செய்ய சுடராழியான் அடிக்கே ஏற்றினேன் சொல்மாலை’. இவ்வாறு திருவடி தர்சனத்தால் என்ன பலன் கிட்டும்? உலகத்தாரின் இடர் என்னும் ஆழி நீங்குமே என்று ஏற்றினேன் என்கிறார் பொய்கையாழ்வார்.
திருவள்ளுவரும் கூறுவது என்ன? ‘கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழார் எனின்?’ என்பதுதானே.
வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.
(பொய்கையாழ்வார்)
***
No comments:
Post a Comment