Friday, January 3, 2020

மனித வாழ்க்கையும் புனிதமும்

மனித வாழ்க்கையே அலாதியானது. அதன் தாபங்கள், கோபங்கள், தவிப்புகள் உட்பட அனைத்தும் அலாதியானவை. மனிதர் வாழ்க்கையில் மாட்டிக்கொண்டு படுகின்ற எந்த அவஸ்தையும் அவரைப் புனிதப்படுத்தாமல் இருப்பதில்லை. அவர் இன்பங்கள், வெற்றிகள், லாபங்கள், பெருமிதங்கள் அவரை மலினப் படுத்தலாம். அகங்காரம் மனிதரை ஆட்டிப் படைக்கலாம். புன்மதியும், சூழ்ச்சியும், புரையோடிப் போன துர் எண்ணங்களும் அவரைப் புரட்டி எடுக்கலாம். ஆனால் உலக அவஸ்தைகள் என்ற பெரும் சுழலில் மாட்டி எத்துண்ட பின்னர் எத்தகைய மனிதரும் தாம் தூய்மைப் படுத்தப் பட்டதாய் உணர்வதும் உண்டு. இந்தத் தூய்மை, புனிதம் என்பது வெளியிலிருந்து மனிதருக்குத் தரப்படும் ஒன்றன்று. அவர்தம் உள் இயல்பை மூடிக் கவிந்த அழுக்குகளை, உலக அனுபவங்கள் என்னும் பெரும் கலக்கியில் போட்டுச் சுழற்றி நீக்குகிறது. தன்னியல்பில் துலங்கும் ஜீவன் தன்னைத் தூய்மை உற்றதாய் உணர்கிறது.

அந்தத் தூய தன்னியல்பின் வண்ணமாகவே அதன் வாழ்வு தொடர்ந்து அமைந்துவிட்டால் மனித வாழ்வே எவ்வளவு புனிதமானது என்பது நிதர்சனமாகும். மாசு படிந்த கண்ணாடியில் தெளிவாகத் தெரிவதில்லை. ஆனால் தூய்மை உற்ற ஆடி பொருளை உள்ளது உள்ளபடிக் காட்டுகிறது. நம் உள்ளமும் கண்ணாடிக்குச் சமம். அதை தெளிவாக்க வேண்டியதுதான் மிச்சம். தெளிவான உள்ளம் பரம்பொருளையே அன்றோ காட்டிவிடுகிறது! கட்டப்பட்டிருக்கும் பசுவின் கன்று என்ன முயன்றாலும் தாயை அடைவதில்லை. ஆனால் கட்டவிழ்ந்த உடனேயே தாவிக் குதித்து அடுத்த நொடியே தன் தாயிடம் சேர்ந்து விடுகிறது.

"தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ
ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை
எளிதாகத்
தாய்நாடு கன்றே போல்
தண் துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும்
புரிந்து. "

என்கிறார் பொய்கையாழ்வார்.

***

No comments:

Post a Comment