ராஜா குலசேகரராவது ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். பாகவத ஈட்டம் எங்கு இருக்கிறது என்று பார்! அங்குதான் அவர்களுக்கு நடுவே, ஊடே ஊடே போய் வளைய வந்துகொண்டு ஒரு திவ்ய தம்பதி உலாத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருப்பதோ இவர்களைப் பற்றித்தான். ஆனால் இவர்கள் அங்கங்கே அலுக்காமல், ஆர்வமாக நான்காவது பிரஸன்னமாகத் தோய்ந்து நின்று கேட்பதோ அவர்கள் தம்மை எப்படியெல்லாம் அனுபவித்துப் பாடுகிறார்கள், பேசுகிறார்கள் என்று! தன்னைப் பற்றிப் பேசுவதைப் பக்கத்தில் வந்து நின்று கேட்பதில் ஆராத காதல் யாரு என்றால் நம் அழகியமணவாளனாகத்தான் இருக்கும். ஆனால் திருமழிசையாழ்வாருக்கோ தாங்கவில்லை இந்த மர்மம்!
உண்மையில் நீ எங்கிருக்கிறாய்? மண்ணில் வந்து பிறந்தாலும் திவ்யமாகவே இருக்கிறாய். மண்ணில் அவதாரம் எடுத்ததனால் மானுஷம் உன்னில் தட்டுகிறது என்று நினைத்தால், அங்கே யாருக்கோ மோக்ஷம் கொடுக்கிறாய். ஓ! இவர் திவ்யம், பரம் அத்புதம் என்று உன்னை நினைத்தால் மனிதர் போல் படாதபாடெல்லாம் படுகிறாய். சரி நீ நித்ய விபூதி ஆள் என்று முடிவு கட்டினால் அங்கு நித்ய சூரிகளுக்கும் எட்டாத தன்மையனாய் அங்குத்தைப் பேறு பெறக்கூடிய இந்த மண்ணுலகத்தார் இழக்கிறார்களே என்று அங்கும் இருப்பு பொருந்தாமல், ஸௌலப்யம் ஒளிவிடுவது மண்ணில் என்று வந்துவிடுகிறாய். மண்ணின் மாந்தர்க்கென்று உள்ள அறியும் வழி இருக்கிறது. அறிவு, எண். அதற்கும் நீ அகப்படுவதில்லை. அப்படியென்றால் நீ மண்ணில் இல்லையோ? போய்ப் பார்த்தால் நானா இங்கயேதானே இருக்கேன் என்னும்படி அநந்தன் மேல் கிடக்கின்றாய். நீ கிடக்கும் இருப்பே எங்கள் ஸ்வரூபத்தையும் எங்களுக்குத் தெளிவாக்குகிறது. உன் ஸ்வரூபம் என்ன என்பதையும் தெளிவாக்குகிறது. ஸ்வரூபத்தைத் தெளிவாக்குவது எதுவோ, வெளிப்படுத்துவது எதுவோ அது புண்யம் என்று சப்த வ்யுத்பத்தி சொல்கிறது. எனவே நீ அநந்தன் மேல் கிடக்கும் எங்கள் புண்ணியம். எங்கள் ஸ்வரூபம் நன்கு தெளிவடைந்ததும் எங்களுக்கு எங்கு தேட வேண்டும் என்ற வழியும் நிச்சயமாகிவிட்டது. இப்படியெல்லாம் கொல் கொல் என்று தேடி அயர்வதற்குப் பதில் உன் அடியார்களைப் பற்றினால் போதும். அவர்கள் கண்ணிற்கு நீ சிக்காமல் போக மாட்டாய். என்ன மாயை என்று அயர்வதை விட நின் தமர் கண்ணுளாய் என்று தேர்வதே கடைசி உபாயம்.
மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்
மண்ணுளே மயங்கிநின்று
எண்ணுமெண் ணகப்படாய்கொல்
என்னமாயை நின்தமர்
கண்ணுளாய்கொல் சேயைகொல்
அனந்தன்மேல் கிடந்தவெம்
புண்ணியா புனந்துழாய்
அலங்கலம் புனிதனே
(திருச்சந்த விருத்தம்)
***
No comments:
Post a Comment