Tuesday, January 7, 2020

காணும் கண்பயன் ஆவதே

ஒரு விஞ்ஞானி இருக்கிறார். விலை உயர்ந்த ஒரு மைக்ராஸ்கோப் கண்டு பிடித்துப் பெரும் செலவில் உருவாக்குகிறார். எதற்கு? மிக நுண்ணிய ஓர் உயிரியின் வடிவைக் காண. அவ்வளவு பெருக்கத்திறன் எண்ணிக்கை கொண்ட மைக்ராஸ்கோப்புக்குத்தான் அந்த நுண் உயிரி அகப்படும். ஒரு நாள் பரிசோதனையைத் தொடங்குகிறார். பார்த்தால் என்ன என்னவெல்லாமோ நுண் உலகத்தில் கண்ணுக்குப் படுகிறது. ஆனால் அந்த உயிரி மட்டும் காணவே காணோம். சரி செய்த செலவெல்லாம் வ்யர்த்தம் போலும் என்று சோர்ந்த ஒரு நாளில் எதேச்சையாக அந்த ஆடியில் டான்ஸ் ஆடிக்கொண்டு வருகிறது அந்த நுண் உயிரி. ஆஹா...! அதன் வடிவம் தெளிவாகத் தெரிகிறது.! இவ்வளவு நாள் காத்திருந்தது வீண் போகவில்லை. இதைக் காணவேண்டும் என்று உருவாக்கிய இந்தக் கண் இன்றுதான் பயனுடையதாக ஆனது. காணும் கண் பயன் ஆவதே !

அது போல் இறைவனைக் காணத்தான் இந்தக் கண் பயன்படவேண்டும். ஆனால் ஊனக்கண்ணிற்கு இறைவன் ஒரு நாளும் புலப்படான். அவனைக் காண வேண்டுமென்றால் ஞானக் கண் என்று சொல்லப்படும் சாத்திரமாகிய திருஷ்டி தேவை. ஆனால் சாத்திரத்தைக் கைக்கொண்டும் அவனைக் காணும் வாய்ப்பு அவனைப் பொறுத்திருக்கிறது. ‘சூக்ஷ்மமான புத்தி, அளவிறந்த படிப்பு, நிறைய உபந்யாஸங்கள் இவற்றால் எல்லாம் இந்த ஆத்மா அடையப்படுவதன்று. அந்த ஆத்மாவையே விரும்புபவன், அந்த ஆத்மாவே தன்னைக் காட்டியருளக் காணலாமேயன்றி வேறு வழியால் அன்று’ என்று உபநிஷதங்கள் முடிவு கட்டின விஷயம். ஊனக்கண் புறப்பொருளுக்குத்தான் பரம்பொருளுக்கு அன்று. புறப்பொருளிலும் ஓரளவே. சாஸ்திர திருஷ்டி என்று போனால் ‘பக்தியோடு கூடிய சாத்திர ஞானத்தால்’ என்று ஸஞ்சயன் சொன்னது போல் ஒன்று இருக்கிறது. ஆனால் பகவானின் ஆத்மாவை நம்மால் அணுக முடிந்தால் பின்னர் கஷ்டம் இல்லையே! பகவான்தான் எல்லாருக்கும் ஆத்மா. பகவானுக்கு ஆத்மாவா? நல்ல வேளை அதையும் அந்த பகவானே சொல்லி வைத்திருக்க நமக்குக் கவலை இல்லை. ‘ஞாநீ து ஆத்மா இவ மே மதம்’ ‘என்னை உள்ளபடி அறிந்த ஞானி என் ஆத்மா போன்றவன் என்பது என்னுடைய மதம்’. அப்படியென்றால் இப்பொழுது தேட்டம் எங்கு வந்து நிற்கிறது? பகவானின் அடியார்களிடத்தில். அதைத்தான் பாடுகிறார்.

‘தேட்டரும் திறல் தேனினைத்தென்
அரங்கனைத்திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை
வாழ்த்தி மால்கொள் சிந்தையராய்
ஆட்டமேவி அலந்தழைத்தயர்வு
எய்தும் மெய்யடியார்கள்தம்
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது
காணும் கண்பயன் ஆவதே.’

அபூர்வமான அந்தக் கண் பயனின்றிக்கே ஒழிகிறது. என்னே ! ஆனால் என்று அடியாருக்குள் பகவான் உறைகிறான் என்பதை நன்கு ஒருவன் உணர்கிறானோ, அந்த அடியார்கள் பெருக்கமாய்க் குழுமியிருக்கக் காண்கிறானோ அன்றுதான் அந்த சாத்திரமாகிய திருஷ்டி, காணும் கண் பயனுடையாத ஆகிறது. ’தேட்டரும்..’ என்பதற்கே உரைவரையும் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அவர்கள் அற்புதமாக அங்கு சொற்களை இடுகிறார். ‘முடிய பாகவத விஷயம் உத்தேச்யம் ஆகிறது.’ பணக்காரர்களைச் சுற்றிக் கூட்டம். புகழ் பெற்றவர்களைச் சுற்றிக் கூட்டம். அவர்களிடம் பணம் இருக்கிறது. புகழ் இருக்கிறது என்று. அது போல் அடியார் நமக்கு உத்தேச்யர் அவர்களிடம் பகவத் விஷயத்தில் அளவற்ற ஈடுபாடும், ஞானமும் இருக்கிறது என்பது பற்றி. எனவே வேதங்களுக்கு எட்டாத பரம்பொருள், யோகத்திற்கு அரிய பரம்பொருள், சாத்திர திருஷ்டிக்குச் சிக்காத அந்த பரமாத்மா திருமாமணி மண்டபத்திலும் இருப்பு கொள்ளாமல் பக்தர்களின் கூட்டத்தில் ஊடே புகுந்து புகுந்து பத்தி உலாத்துகிறது என்பதன் தாத்பர்யம் இதுவன்றோ! ‘தேட்டரும் திறல் தேனினைத் தென்னரங்கனைத் திருமாதுவாழ் வாட்டமில் வனமாலை மார்பனை’ இன்று பாகவத விஷயமாகப் போற்றுவோமாக!

***

No comments:

Post a Comment