Saturday, January 11, 2020

பிரஹ்ம சர்யம்

பிரஹ்மம் என்பது பெரியது. மிகப்பெரியது. பெரிதினும் பெரிது. மிகப்பெரியது எதுவோ அதுவே ஜகத் காரணமான பரம்பொருள். அந்தப் பரம்பொருள், அந்தப் பரமாத்மா அவரைக் கண்டறிவதுதான் ஹிந்து மதம் பல விதங்களிலும் போதிக்கும் மையக் கருத்து. அந்த ப்ரஹ்மத்தைத் தேடி மனிதன் செல்லும் பயணம்தான் ப்ரஹ்ம சர்யம் எனப்படுவது. ப்ரஹ்மத்தை நோக்கிய, ப்ரஹ்மத்தைத் தேடி மனிதன் செல்லும் தேட்டம். ப்ரஹ்மம் எது என்று நிச்சயமாகி அதனை வாழ்க்கையில் பின் தொடரும் வழிச்செல்கை என்பதுவே ப்ரஹ்ம சர்யம். சர்யம் என்றால் செல்லுவது. ப்ரஹ்ம சர்யம் என்பது ப்ரஹ்மத்தைப் பின் செல்லுவது என்ற பொருள். ஆனால் நாளாவட்டத்தில் இந்த வார்த்தை ஏதோ கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல், காமம் கடிந்த விரதத்திற்கு மட்டும் பெயராக ஆகிவிட்டது. ஒருவர் கல்யாணம் ஆனவர். ஆனால் அவரோ சதா சர்வ காலமும் ப்ரஹ்மத்தைப் பற்றிய சிந்தனையிலேயே கழிக்கின்றார். அப்பொழுது அவர் ப்ரஹ்ம சாரியா இல்லையா? வேறு ஒருவர் கல்யாணம் செய்யவில்லை. சதா உடலின்பம் பற்றிய தியானமாகவே இருக்கிறார். அவர் அப்பொழுது ப்ரஹ்ம சாரியா? பிரம்மசர்யம் என்பது கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் இருப்பதோ உடல் ரீதியான இன்பம் அடையாமல் இருப்பது மட்டுமோ அன்று. மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் பிரம்மத்தை முற்றிலும் அனுசரிப்பதுவே பிரம்ம சர்யம்.

சம்சாரியோ சந்நியாசியோ பிரம்ம சர்யம் இல்லாத மனித வாழ்க்கை வ்யர்த்தம். ஹிந்து மதம் என்பதற்கு மாற்றுப் பெயராக ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் நான் இந்தச் சொல்லைத்தான் விரும்புவேன். ஏனெனில் ஹிந்து மதம் என்பதுவே ப்ரஹ்ம சர்யம்தான். நீங்கள் சைவராக இருக்கலாம். நீங்கள் வைஷ்ணவராக இருக்கலாம். நீங்கள் சாக்தராக இருக்கலாம். ஆனால் நீங்கள் தேடுவது ப்ரஹ்மத்தை. நீங்கள் பின்பற்றிப் போவது ப்ரஹ்மத்தை. உங்கள் மார்க்கம், உங்கள் நிஷ்டை எதுவானாலும் சரி, உங்கள் மதம் ப்ரஹ்ம சர்யம். ஆனால் இந்த வார்த்தை பெரிதும் குறுகிய பொருளில் கையாளப்பட்டுவிட்ட காரணத்தால் இந்த வார்த்தையைப் பயன் படுத்தும்போது கல்யாணமாகாத பிரம்மசாரி, பிரம்மசாரிணிதான் எண்ணத்தில் எழுவார். இப்படிச் சொன்னால் இன்னும் நன்றாகப் புரியும். ஹிந்து மதத்தில் சொல்லப்படும் க்ருஹஸ்தாஸ்ரமும் ப்ரஹ்ம சர்யமே ஆகும். இல்லறம், துறவறம் எதுவானாலும் ஹிந்து மதத்தில் நோக்கம் கடவுளை அடைதல்தான். ப்ரஹ்மத்தை வாழ்க்கையில் அனுசரிப்பதுதான் ஹிந்து மதம். எதற்கு இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் இல்லறம், துறவறம் எதுவானாலும் கடவுளை அடைவதுதான் மனித வாழ்வின் பயன். அதற்கான மார்க்கமாகத்தான் க்ருஹஸ்தாச்ரமமோ, சந்நியாஸ ஆச்ரமமோ பயன்பட வேண்டும். பிரம்மம் என்ற இலக்கைக் கருத்தில் கொண்டால் நம் பயணம் பிரம்ம சர்யமாக ஆகிறது. அதைவிடுத்து பிரம்மம் என்பதை மறந்து எதிர்மறையாக உளைச்சல்களே வழி எனக்கொண்டால் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அது பவ சாகர அலைகளே. அந்த சர்யம் பிரம்மத்தை நோக்கி அழைத்துப் போகாது.

யோகம் சமம் தமம் முதலிய பயிற்சிகளைச் சொல்கிறது. காரணம் இயற்கையின் பழக்கத்தால் உலகின்பால், இன்பங்களின்பால் தொடர்ந்து ஓடும் மனத்தை இறைவன்பால் திருப்பிவிட. சரி இறைவன் நமக்குத் தேவை என்று நமக்குத் தாகம் வேண்டுமே! அதற்கு என் செய்வது?
பொருளாதாரத்தில் ஒரு விதி சொல்வார்கள். Supply creates demand என்று. அது போலவே உலக சுகங்களைப் பற்றி எந்நேரமும் நமக்குத் தாக்கம் வந்தவண்ணம் இருப்பதால் நமக்கு உலக சுகங்களின்பால் தாகம். ஆனால் சத்சங்கம், சத்படனம், சத் சிந்தனை, சத் கீர்த்தனம் என்ன செய்கிறது? கடவுளைப்பற்றிய சப்ளையை இடைவிடாது கொடுத்து அதன்மூலம் நமக்கு இறைவனைப் பற்றிய தாகத்தை ஏற்படுத்துகிறது. நாம் சத் சங்கத்திற்கு எங்கே போவது? ஒன்று சத் சங்கம்தான் என்று எப்படித் தெரிவது? 'கடல் கடந்து எங்கோ இருக்கின்றோம் நாங்கள் எங்கே சத் சங்கம் தேடுவது?' ஒரு துறவி சொல்வாராம். உலகத்தில் ஒரே ஒரு பிரதி ஸ்ரீமத் பகவத் கீதை இருக்கும்வரை சத்சங்கத்திற்குக் குறையில்லை என்று. பழங்காலத்தில் அதாவது நூறாண்டுகளுக்கு முன் வரையிலும் கூட எந்தப் பைராகியாகட்டும், சாதுவாகட்டும், பண்டாரம் ஆகட்டும் அவரின் முடிச்சில் தவறாமல் இருக்கக்கூடியது கீதைப் பிரதி. நூல்களை மட்டும் நாம் கவனமாகச் சிறந்த நூல்களைப் பிரமாணமாக ஏற்று அதனை ஆர்வத்துடன் கற்பது என்ற வேட்கையைக் கைக்கொண்டால் பிறகு சாது சங்கம், சன்மார்க்கம் என்பது எல்லாம் நமக்குப் படிப்படியாக இறையருள் கூட்டிவிக்கும்.

***

No comments:

Post a Comment