Saturday, January 11, 2020

ரிக்வேதம் பாடும் ‘அன்றிவ்வுலகம் அளந்தாய்’

ரிக்வேதம் ஓர் ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி’ என்று பாடுகிறது. ஏன் விஷ்ணு திரிலோகத்தையும் அளந்தார்? ஜீவர்களுக்கு அப்பொழுதுதான் வசிக்க இடமே ஏற்படும். சாதாரணமான வசிப்பிடத்தைக் குறியீடாக்கி ஆத்ம ஞானத்தின் முக்கியத்துவத்தை ரிக்வேதம் உள்பொதிந்து பாடுகிறது. ஆனால் இந்த உள்ளர்த்தம் இன்னதுதான் என்று ஸாயணரும் நமக்குச் சொல்லவில்லை.

ரிக்வேதம் சொல்கிறது -

விசக்ரமே ப்ருதிவீம் ஏஷ ஏதாம்
க்ஷேத்ராய விஷ்ணு: மநுஷே தசஸ்யந் |
த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ
உருக்ஷிதிம் ஸுஜநிமா சகார ||

ஸாயணர் சொல்வது என்னவென்றால் இந்த விஷ்ணுவானவர் இந்த ப்ருத்வீ எனப்படும் மூவுலகையும் க்ஷேத்ரத்திற்காக, அதாவது வசிப்பிடத்திற்காக மனிதர்களுக்கு அளிப்பதற்காக அளந்தார். இதை ஆக்ரமித்திருந்த அஸுர சக்திகளிடமிருந்து இதை வாழ்வுக்காக மீட்டார்.

ஏஷ தேவோ விஷ்ணு: ஏதாம் ப்ருதிவீம் ப்ருதிவ்யாதீநாம்ஸ்த்ரீந் லோகாந் க்ஷேத்ராய நிவாஸார்த்தம் மநுஷே ஸ்துவதே தேவகணாய தசஸ்யந் அஸுரேப்யோSபஹ்ருத்ய ப்ரதாஸ்யந் விசக்ரமே - என்பது ஸாயண பாஷ்யம்.

யார் அந்த அஸுரர்கள்? வாழ்வாவது யாது? மனிதர்கள் என்றால் யார்? க்ஷேத்ரம் என்னும் நிவாஸ ஸ்தாநம் என்பது என்ன?

இத்தனைக்கும் விடை கூறுவது சுத்த ஸத்வம் தொட்டாசாரியாரின் ஸ்வாபதேச வியாக்கியானம். ஆனால் தொட்டாசாரியார் ஸ்வாமியும் வெளிப்படையாக இந்த மந்த்ரத்தைச் சொல்லவில்லை. ஸாயணரும் வெளிப்படையாக இந்த தத்வார்த்தத்தைச் சொல்லவில்லை. குறிப்புணர்த்துவது போல் ஓரிடத்தில் காட்டுகிறார். எங்கு? த்ருவாஸோ அஸ்ய ஜநாஸ என்ற இடத்தில் ஜனங்கள் அல்லது உயிர்கள் விஷ்ணுவின் அடியளப்பினால் நிலைபெற்று திடமாக நிம்மதியுற்றார்கள் என்னும் பொருள்படச் சொல்லுமிடத்து த்ருவாஸ: என்பது எதைக் குறிக்கும் என்று குறிப்பு காட்டுகிறார். த்ருவாஸோ நிச்சலா பவந்தி, ஐஹிக ஆமுஷ்மிகயோ: லாபேந ஸ்திரா பவந்தி இதி அர்த்த: - த்ருவாஸ: என்பது திடம ஆனார்கள், அலையாமல் நிம்மதி உற்றனர் அதாவது இஹலோக பரலோக லாபங்களால் ஸ்திரமாக ஆனார்கள் என்று பொருள் - இது ஸாயணரின் வரிகளுக்குப் பொருள்.

அகங்காரம், காமம், குரோதம், லோபம் போன்ற அசுரர்களிடமிருந்து ஜீவஸ்வரூபத்தை மீட்டு தன் அடிக்கீழ் இருத்தும் அம்மான் அன்று ஆழ்வார்களும் ஸ்ரீஆண்டாளும் பாடுவது வேதத்திற்கு நேர் விளக்கம் அன்றோ!

இது என் அதிகப்ரசங்கம் என்றால் சுத்த ஸத்வம் சுவாமி பொறுப்பாராக!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment