உருவம் உள்ளதெல்லாம் அவயவங்களால் ஆனது. அவயவக் கூட்டாக இருப்பதெல்லாம் அழியும். மேலும் உருவம் அருவம் என்பன உண்மையில் நிலை மாற்றங்கள். எதை நாம் உருவம் என்கிறோம்? எது புலப்படும் நிலையில் இருக்கிறதோ அதை. புலப்படா நிலைக்குப் போனவை அருவம் நம்மைப் பொறுத்தவரையில். ஆனால் சூக்ஷ்ம நிலையில் உள்ளவற்றைப் புலன் கொண்டு கிரகிக்கும் அவற்றிற்கு அதே அருவம் உருவமாக ஆகிறது. நாமே சூக்ஷ்ம த்ருஷ்டிக்கு உபகரணம் கொண்டு பார்த்தால் அருவம் உருவமாகக் காட்சியளிக்கிறது. எல்லா நிலையிலும் எக்காலத்தும் முற்றிலும் அருவமாகவே இருந்தது இருக்கிறது இருக்கப் போகிறது எதுவும் மனித அறிவுக்குள்ளேயே ஏன் எண்ணத்திற்குள்ளேயே வராத விஷயம். எனவே அதைப் பற்றிப் பேச்சே எழுவதில்லை. அருவம் என்பதைப் பற்றிய பெரும் கருத்து ஆக்கம் எல்லாம் உருவம் என்பதை மனத்தில் கொண்டே அதன் மாற்றாகச் செய்யப்படுகின்றவை.
அப்பொழுது நம் உலகமே புலன்களால் மொண்ட அளவுதான் என்று இருக்கும் பொழுது அனைத்து உருவங்களையும் புழங்க இடமாகவும், காலமாகவும், வர்த்தமானமாகவும் தன் சரீரத்தில் இயன்று செல்ல வாய்ப்பாக இருக்கும் பரம்பொருளை அருவம் என்பது எங்ஙனே? நம் சிந்தைக்கரியன் புலன்களுக்கு எட்டான் என்று மட்டுமே கூற இயலும். அப்பொழுது அவன் உருவம் உடையவன் என்றால் அவயவங்கள் உடையவன்தானே? அப்பொழுது தோன்றி மறையும் அல்லவா? என்றால் இல்லை. அவன் உருவம் உடையவன் என்பது ஏன் சொல்லுகிறோம்? அருவமாக இருக்க முடியாது என்பதால். அவனை ஓர் உருவம் என்று சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுதும் நமக்குத் தோல்வியே. ஏனெனில் நாம் உருவம் என்று அறிந்ததெல்லாம் நம் புலன்கள் காட்டும் இளைத்த புன் உலகத்தில் பயிலும் உருவ நினைப்புகளையே. இவற்றைப் போன்று அவன் ஓர் உருவம் எனில் அப்பொழுது நம் புலன்களுக்கும் சிந்தைக்கும் எப்படியேனும் அகப்படுவான். அப்பொழுது இடம் காலம் நிகழ்வு என்னும் எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு பொருள்தான் அவன் என்பது ஆகிவிடும். வேதமானது அவனுக்கு உருவம் இல்லை, வடிவம் இல்லை என்று கூறுகின்ற நிஷ்கலம் நிராகாரம் என்ற இடங்களில் எல்லாம் என்ன சொல்ல வருகிறது? நாம் பழகிப் பழகி உடனே உருவம் உண்டு என்று படித்ததும் வழக்கமான உருவம் வடிவம் என்பதைக் கற்பனை செய்வோமே அந்த மாதிரியான பழக்கங்களைத் தள்ளுபடி செய்கிறது. அவன் ஒரு நாளும் இந்திரிய கோசரன் அன்று என்று வேதாந்தம் நிர்ணயிக்கிறது. எனவேதான் அவனைப் பொருட்களிலிருந்து வேறுபடுத்தி 'பரம்பொருள்' என்று அழைக்கிறது வேதாந்தம்.
***
No comments:
Post a Comment