கிடாம்பி ஆச்சான், கிடாம்பிப்பெருமாள் ஆகிய ஆசாரியர்களைப் பற்றி ஸ்ரீராமனுஜார்ய திவ்யசரிதை கூறும் விஷயங்கள் மிகவும் ரஸமானவை. வேதாந்த பாஷ்யம் தலைக்கட்டின பின்பு அதைப் படியெடுத்து இந்த ஆசாரியர்கள் மூலமாக காஷ்மீர தேசத்து சாரதா பீடத்திற்கு அனுப்பப்பட்டது என்னும் குறிப்பு இந்த நூலில் காண்கிறது. ஒரு முக்கியமான நிகழ்ச்சி கிடாம்பி ஆச்சான் பற்றிக் கூறுகிறது. தும்பையூர்க் கொண்டி என்று ஒரு தயிர் விற்கும் பெண்மணியைப் பற்றிய நிகழ்ச்சி. தயிர் கொடுத்ததற்கான விலையை கிடாம்பி ஆச்சான் தரும் பொழுது அது தனக்கு வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாகத் திருநாடு வேண்டும் என்றும் தும்பையூர்க் கொண்டி கூறினாளாம். ‘ததிமூல்யம் வேண்டாம். லோகாந்தரம் வேண்டும்’ என்று கேட்டாள். அதற்கு கிடாம்பி ஆச்சான் அது என்னால் ஆகும் ஒன்றல்லவே. அது அந்த திருவேங்கடமுடையான் அன்றோ தரவேண்டும் என்றார். தும்பையூர்க் கொண்டியும், ‘அப்படியா? அப்படியென்றால் திருவேங்கடமுடையானுக்குத் தேவரீர் ஒரு சிறுமுறி ப்ரஸாதித்து அருளவேண்டும்’ என்றாள். அவரும் எழுதிக் கொடுத்தார். அதை எடுத்துக்கொண்டு திருவேங்கடம் போன பெண்மணியான தும்பையூர்க் கொண்டி, அங்கு சென்று திருவேங்கடமுடையான் திருமுன்னர் அந்த முறியை வாசித்துக் காட்ட, திருவேங்கடமுடையானும் திருநாடு ப்ரஸாதித்தருளினார் என்று திவ்ய சரிதை சொல்கிறது.
இது என்ன பக்தி! நம்மால் கிஞ்சித்தாவது இதைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியுமா? வெட்டிக்கு நானும் இந்த நூல் அந்த நூல் என்று நோண்டிக்கொண்டு, தத்வம், இலக்கியம், விஞ்ஞானம் என்று பரக்க... என்ன பயன்? முதலில் தும்பையூர்க் கொண்டியின் மனநிலையே எனக்குப் புரியவில்லையே! பக்தி எனக்குப் புரிகிறது என்று நினைத்தால் அது என் தவறு என்பது புரிகிறது.
***
No comments:
Post a Comment