Tuesday, January 7, 2020

ஆபரேடிங் ஸிஸ்டமும், கருவி கரணமும்

ஆபரேடிங் ஸிஸ்டம் பூட் ஆகவில்லை என்கிறோம். என்ன செய்தாலும் கருவி கரணங்கள் திறக்கவில்லை என்றால் இதுவும் ஒருவித மரணம்தானோ? புனரபி ஜனனம் புனரபி மரணம் என்றதின் ஒருவேர் இந்த வழியாகவும் ஓடுகிறதோ? ஆபரேடிங் சிஸ்டம் அவுட்டு என்றால் உள்ளே நுழைய முடியாது. வெளியிலிருந்து என்ன கத்தினாலும் இணையத்தில் காதில் விழப்போவதில்லை. இணையத்தில் இருப்பவர்களோடு தொடர்பு கொள்ளும் அமைப்பில், வடிவில், முறையில் தொடர்பு கொண்டால்தான் இணையத்தைப் பொருத்தவரையில் உளராய் ஆகிறோம். ஆனால் முன்னாலும் நாம் இருக்கிறோம்.

'அர்ஜுனா! நீயும் நானும் அக்காலத்தும் இருந்தோம். இவர்களும் இருந்தார்கள். இனியும் எக்காலத்தும் நீயும் நானும் இவர்களும் இல்லாமல் இருக்கப்போவதில்லை.' 'இந்த ஜீவன் கர்மங்கள் தீர்ந்த இந்த உடலைப் பழஞ்சட்டையைக் கழட்டி எறிவதுபோல் எறிந்துவிட்டு, புத்துடல் தேடிப் புறப்படும் மரணத்தில்.' 'வருவதற்கோ போவதற்கோ கலங்கான் பண்டிதன்'.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் வருகிறது. ஜீவனுக்கான ஆபரேடிங் சிஸ்டம்தான் கரண களேபரம் என்னும் சதுர்விம்சதி தத்துவங்களால் ஆன உலகு - உடல் - உயிர் போலும். கர்மமும், காலமும் வினை மடுப்பானும், மடுக்கும் வாயும் போலும். இதில் ஆத்மா என்ன செய்கிறது? சாட்சி என்கிறது வேதாந்தம். 'பொய்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை' வேண்டுகிறது குருகூர் நம்பியின் குறுகாத பக்தி. ’யானாய் என்னில் நிறைந்தானை’ என்கிறது ஆழ்வாரின் பக்திக்குள் நிறைந்த ஞானம். 'அஹம் பிரம்மாஸ்மி' என்கிறது உபநிஷத ஞானத்திற்குள் நிரம்பி வெளிப்பொசியும் பக்தி. இப்படி ஆளுக்கு ஆள் அஞ்ஞானத்தையும், அரைகுறை ஞானத்தையும் விரட்டினால் அது எங்கே போகும், பாவம்! எனக்குள் வந்து ஒண்டிக்கொண்டு 'தயவு செய்து என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே' என்று கெஞ்சுகிறது.

***

No comments:

Post a Comment