சாதாரணமாகச் சமம், தமம் முதலியவற்றைச் செய்து பின்னர் தியானம் என்பது முற்றி ஞானம் என்பது கனிந்து வருதலாகிய கிரமத்தைத்தான் தவம் என்பார்கள். ஐம்பொறிகளைப் புறத்திலும், அகத்திலும் அடக்குங்கால் எந்தப் பலத்தில் அடக்குவது? மனமோ ஐம்புலன் இன்பத்தில் என்ன தவறு? இதோ ப்ரத்யக்ஷமாக இருக்கின்ற இன்பம் அதுவல்லவா? என்று கேட்கிறது. இருக்கின்ற இன்பத்தை அனுபவிக்காமல் விட்டுவிடுவதாலும், வெறுப்பதாலும் என்ன பயன்? அப்படியே பார்த்தாலும் இன்பம் என்பதைப் பார்த்தவர் யாராவது உள்ளம் பூர்வமாக ஒதுக்குகின்றார்களா?
எது உண்மை என்று தெரிந்துகொண்டால் பின்னர் பொய் எப்படி மயக்க முடியும்? ஐம்புலன் இன்பத்தை இன்பம் என்று நினைக்கிறோம். உலகத்தில் அன்றாடம் அனுபவமும் அதைத்தான் சொல்கிறது. பின்னர் அது உண்மையில் இன்பம் இல்லை என்றால் அந்த ஞானத்தை முதலில் கைவரப் பெற்றால் அல்லவோ மயக்கம் விலகும். நோக்கம் தெளிவாகும். பார்வை திடம் பெறும். அப்புறம் ஐம்புலன் இன்பம் என்ன, இன்னும் எத்தனைப் புலன் இன்பம் வந்தாலும் மனம் ஏன் அதைக் கவனிக்கப் போகிறது? அதுதான் ஞானத்தைப் பெற்றுவிட்டதே !
ஞானம் என்பதை முதலில் அடைந்து பின்னர் ஐம்புலன் அடக்கம் என்பதைப் பேணுதல் ஒழுங்காக அறிவுடைமையான பயணம் என்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இந்தப் பயணம் இருக்கிறதே இது இயல்பானதாய் மட்டும் இல்லாமல், தொடக்கம் முதலேகொண்டு ஆநந்தமாய் இருக்கின்ற பயணம் என்கிறார். ஆம். அறிய வேண்டியதை அறிந்தாய்விட்டது. தெளிய வேண்டிய உண்மையைத் தெளிந்தாய்விட்டது. பின்னர் என்ன குழப்பம்? ஐம்புலன்கள் ஏன் தறிகெட்டு ஓடப்போகின்றன?
ஆனந்தமாய்
அரங்கற்கே உயிர்கள் அடிமை
என்னும் ஞானம் தனால்
ஐம்பொறி வாசல் சாத்தி...
-- பலாத்காரமாக வாசலைச் சாத்திப் பாருங்கள். பிட்டுக்கொள்ளும். தாழ்ப்பாள் தெறிக்கும். தலை தெறிக்க ஓடும். வட்டியும் முதலுமாய் மேயும். ஆனால் அதுவே ஞானம் என்பதால் ஐம்பொறி வாசலைச் சாத்துங்கள், வெறுமனே ஒப்புக்குச் சாத்தி வைத்தாலும் போதும். இயல்பாகக் கட்டில் நிற்கும். ஏன்? சாத்துவது ஞானம் அல்லவா! பொறிவாசல் சாத்திவிடலாம். ஆனால் ஏற்கனவே பல பிறவிகளிலும், இந்தப் பிறவியிலும் இதுகாறும் அனுபவித்த வாசனைகள் பற்று என்ற வடிவத்தில் இருக்கின்றனவே. அதை என்ன செய்ய? அதற்கும் உபாயம் இருக்கிறது. ஞானத்தால் வாசலைச் சாத்திவிட்டு, அரங்கனின் நற்றாளைப் பற்றிக்கொண்டுவிட வேண்டும். அவ்வாறு நற்றாளைப் பற்றி ஈனம் தரும் பற்றும் அற்று....
என்றும் யான் எனது என்னும் அபிமானம் தவிர்ந்திருப்பார் இருக்கிறார்களே அவர்களுக்கு
மிகப்பெரிய தவமும் அவர்கள் அவ்வாறு இயல்பாக இருக்கின்ற நிலைக்குச் சற்றேனும் ஈடாகாது.
ஆனந்த மாய்அரங் கற்கே
உயிர்கள் அடிமை என்னும்
ஞானம் தனால் ஐம்பொறிவாசல்
சாத்தி நற்றாளைப் பற்றி
ஈனம் தரும் பற்றும் அற்று என்றும்
யான் எனது என்னும் அபி
மானம் தவிர்ந்திருப்பார்க்கு இது
போல் இல்லை மாதவமே.
(திருவரங்கக் கலம்பகம் )
***
No comments:
Post a Comment