Friday, January 3, 2020

வீட்டுக் கவலை

வீட்டுக் கவலை. ஏதோ போகிறது வாழ்வு. இன்று தூங்கினால் நாளை விழிப்பு. உண்டால் பசி. உருளும் காலத்தின் பின் எழும் தூசியாய் நினைவுகள். சில கண்ணை உறுத்தலாம். சில நெஞ்சில் கனக்கலாம். ஆனால் உருளையில் ஒட்டிய மலராய் நாம் ரசித்தவை கழிய, உண்டாகும் புத்தனுபவ அரும்புகள் கிள்ளிக் கிள்ளிப் பார்த்து விளையாடும் தோட்டமாய் நம் தீராத எதிர்பார்ப்பு. இருந்தாலும் எல்லாம் மறந்து புதுசு போல் பழம் பஞ்சு வெடிக்கும் என்று தவம் கிடக்கும் மூடக் கிள்ளைகள். ஐம்புலன்கள் ஆட்டம் நினைவு தெரிவதற்கு முன்னிருந்தே ஆடி அயர்ந்து பெயர்ந்து வருகிறோம். ஆனாலும் ஐம்பொறிகளுக்கு இரை தேடுகின்றோம். தேடிக் கிடைக்கவில்லையா.. வாடுகின்றோம். மனம் மொழி மெய்யால் நாம் தேடுவது துய்த்துத் துய்த்து அலுத்துப் போயும் மீண்டும் நசையறாத அந்தப் புலன் விஷயங்களே. நாம் இந்தப் புலன் நுகர் யந்திரம் இவ்வளவுதானா?
மட நெஞ்சம் இதையெல்லாம் சற்றும் நினைக்காதா? வீடு என்று ஒன்று இருப்பது என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா? வீடு என்ற ஒன்று இல்லவே இல்லை என்று யாராவது இந்த மட நெஞ்சத்தை சந்தை சொல்லி வைத்துவிட்டார்களா?

வீடு பேறு என்று ஒன்றிருப்பதாய் இந்த நெஞ்சம் நினைத்தால் என்ன செய்யும்? முதலில் ஆழ்வார்களின் பாசுரங்களை நினைவில் பதித்துக் கொள்ளும். பின்னர் அதில் தோயும். தோய்ந்து ஆடும். அழும். அரங்கனைச் சென்று கரங்கூப்பித் தொழும். பரவசமாய்ப் பாடும். பாட்டு வெறியில் விழுந்தால் உள்ளே நினைத்துக்கொண்டிருக்கும் அந்தப் பாசுரப் பொருள்களை.

மட நெஞ்சமே ! நான் சொன்னேன் என்று வீம்பு பிடிக்காதே ! இங்கே வா. நீயே நினைத்துப் பார். மரணம் என்று ஒன்று உண்டு. என்று வரும் தெரியாது. எந்தக் கணம் ? தெரியாது. இந்த வயசுக்குப் பிறகுதான்... இந்த நாள் அன்றைக்குத்தான்... என்றெல்லாம் ஒன்றும் ஒரு நியதியும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் முதலையின் வாயில், அதன் நாவில் அமர்ந்து கொண்டு உள்ளே போய்க் கொண்டிருக்கும் குருவியின் நிலைதான் நமக்கும். மரணத்தின் வாய்க்குள் கணம் தோறும் போய்க்கொண்டே இருக்கிறோம். ஆனால் காபி குடித்துக் கொண்டே என்னவோ கதை பேசுகிறோம். என்ன நினைவு? மரணம் எல்லாம் பல காலம் கழித்து ஒரு நாள் வரும். இப்பொழுது என்ன அதைப் பற்றி என்று மிதப்பில் அமர்ந்து கொண்டு மரணத்துள் தினமும் போன வண்ணம் இருக்கிறோம். அந்தோ வீடு சென்று என்று இனி மருவுவை மட நெஞ்சமே?

தேடுகின்றனை ஐம்பொறிகளுக்கிரை
தேடியும் கிடையாமல்
வாடுகின்றனை.
வீடு சென்று என்று இனி மருவுவை
மடநெஞ்சே?
ஆடுகின்றிலை
அழுகிலை
தொழுகிலை அரங்கனைக்
கரம் கூப்பிப் பாடுகின்றிலை
நினைகிலை
பதின்மர்தம் பாடலின் படியாயே.
(திருவரங்கக் கலம்பகம்)

***

No comments:

Post a Comment