எதைச் செய்தாலும் அது எங்கே கொண்டு போகுமோ யார் கண்டார்? நன்மை என்று சர்வ நிச்சயமாக நினைத்துத்தான் ஒன்றை முடிவு பண்ணினால் அதை முழுக்க முடிக்கும் போதுதான் தெரிகிறது எங்கேயோ தள்ளி வந்துவிட்டோம் என்று. இப்படி எவ்வளவு பிறவி! ’யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும், ஆப்பு அவிழ்ந்தும், மூது ஆவியில் தடுமாறும் உயிர், முன்னமே.’ இவ்வளவு பட்டும் இன்னும் அதே தப்பைப் பண்ணுவோமோ? எந்த பஸ்ஸில் ஏறினாலும் போக வேண்டிய இடத்துக்குத் தள்ளிக் கொண்டு போய் விட்டுவிடுகிறது. அப்புறம் முதலில் நின்ற இடத்துக்கே வருவதற்குக் கூடப் பெரும் பாடு ஆகிவிடுகிறது.
அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை..
ஆம் நடந்ததெல்லாம் பார்த்தால் அப்படித்தானே தோன்றுகிறது! ஏதோ எப்படியாவது தள்ளி நீங்கிப் போய்விட வேண்டும் என்று மெனக்கெட்டு விரதம் போல் போயிற்றுக் காலம்.
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும் மாதாவினை, பிதுவை, திருமாலை
வணங்குவனே!.
திருவிருத்தம் 95
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே, அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்யும்
மாதாவினை பிதுவை, திருமாலை வணங்குவனே.
இந்தப் பாட்டு வரும் போதெல்லாம் நஞ்ஜீயர் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுவராம். திருக்கோட்டியூரில் பராசர பட்டர் எழுந்தருளியிருந்த காலம். அங்கே ராமானுஜ தாஸர் என்பவர் பராசர பட்டரை அணுகி, ஓருரு திருவிருத்தம் பொருள் சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு பட்டர், ‘நம்பெருமாளைப் பிரிந்திருக்கும் துயரத்தால் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.’ என்று நஞ்ஜீயரைப் பொருள் சொல்லுமாறு பணித்தாராம். நஞ்ஜீயரும் சொல்லிக்கொண்டு வர இந்தப் பாட்டு வந்தவாறே, அங்கு கேட்டுக் கொண்டிருந்த வளவன் பல்லவதரையன் என்பார் திருக்கோட்டியூர் நம்பியின் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர், அவர் இந்தப் பாட்டைக் கேட்டவுடன் கண்ணும் கண்ணீருமாய் புளகிதகாத்ரராய் ஆகிநிற்பதைப் பார்த்து, நஞ்ஜீயர் அவரைக் கேட்டார்: ‘என்னது! பாட்டுக்குப் பொருள் சொல்லவில்லை. பாட்டை மட்டும் சந்தை சொன்னவுடனேயே இவ்வளவு கண்ணீரும், நெகிழ்வும் இப்படி உருகிப் போனீரே என்று அவரைக் கேட்டார். அந்த வளவன் பல்லவதரையன் என்பார் கூறினார்: ‘எனக்கு ஹிதம் அருளிச் செய்யும் போது திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்தார்: ‘எம்பெருமான் திருமுன்பே தினமும் இந்தப் பாட்டை விண்ணப்பம் செய்’ என்று. அது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. அதுதான் தாங்க முடியவில்லை என்றார். அதற்கு நஞ்ஜீயர், ‘நம்பி இதற்கு ஏதேனும் பொருள் உரைத்தது நினைவில் இருக்கிறதா?’ என்று கேட்க, ‘அதெல்லாம் எனக்கு நினைவில் தரிக்கும் அளவிற்கு எனக்குப் போகாது. இந்தப் பாசுரத்தை மட்டும் நினைத்திருப்பேன்’ என்றாராய் நாலைந்து தடவை அந்தப் பாட்டையே சொல்லிக் கொண்டு இருந்தாராம்.
நமது நிலையும் இந்தப் பாட்டில் சொல்லும் நிலைதானே! அது மட்டுமின்றி நம் நிலையும் பார்க்கப் போனால் வளவன் பல்லவதரையன் அவருடைய நிலை மாதிரிதானே இருக்கிறது அல்லவா.
***
No comments:
Post a Comment