Tuesday, January 7, 2020

ஆசைமுகம் மறந்து போச்சே! - பாரதி

ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியு தொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழு தில்லை
நண்ணு முக வடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்

ஓய்வு மொழிதலுமில் லாமல் -- அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் -- அந்த
மாயன் புகழினையெப் போதும்

கண்கள் புரிந்து விட்ட பாவம் -- உயிர்க்
கண்ண னுரு மறக்க லாச்சு
பெண்க ளினத்தி லிதுபோலே -- ஒரு
பேதையை முன்பு கண்ட துண்டோ?

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி.

கண்ணன் முக மறந்து போனால் - இந்த
கண்க ளிருந்து பய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?
(மகாகவி பாரதியார்)

ஆசைமுகம் மறந்து போச்சு.
நினைவு முகம் மறக்கலாமா?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்.

இதையே வரும் கண்ணிகளில் இன்னும் உறுதிப் படுத்துகிறாள் கண்ணனின் காதலி. ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் உள்ளம் அவன் உறவை நினைத்திருக்கிறது. வாயும் அவன் புகழையே எப்போதும் பாடுகிறது. ஆனால் கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர்க் கண்ணன் உரு மறக்கலாச்சு. உயிர்க் கண்ணன் என்றால் அவன் உருவை மறக்கலாகுமோ? அப்படி மறந்துவிட்ட தன்னைப் பெண்கள் இனத்தில் இதுபோலே ஒரு பேதை இருந்ததில்லை என்கிறாள். கண்ணன் உரு மறந்து போனால் இந்தக் கண்கள் இருந்து பயன் என்ன? என்று கேட்கிறாள். என்ன ஒரே saving factor உள்ளம் உறவை மறக்கவில்லை. வாய் அவன் புகழை மறக்கவில்லை. ஆனாலும் கண்கள் உயிர்க் கண்ணன் உருவை மறக்கலாகுமோ? மறந்துவிட்டதே.! கண்ணில் தெரியுது ஒரு தோற்றம். ஆனால் அதில் கண்ணன் அழகு முழுதும் இல்லை என்கிறாளே! அவன் முக வடிவு கண்டாலும் அந்த நல்ல மலர்ச் சிரிப்பு எங்கே? அப்பொழுது அந்த முகத்தில் இருப்பதுதானே இருக்கும். முக வடிவு காணில் அங்கு சிரிப்பு எங்கே? கண்ணன் அழகு எங்கே? என்றால் என்ன செய்வது? அப்பொழுது சிரித்த முகம், அழகான முகம் இதுதான் ஆசைமுகமா? அப்பொழுது உயிர்க்காதல் என்று சொல்லிவிட்டு, நேசம் மறக்கவில்லை நெஞ்சம் என்றும் சொல்லிவிட்டு, ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம் என்றும் சொல்லிவிட்டு, அவன் முகம் தெரிகிறது, ஆனால் என் ஆசைமுகம் என்பது இது இல்லை; அந்த அழகு, அந்தச் சிரிப்பு என்று கேட்டால் அது என்ன உயிர்க்காதல்?

இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியவை. ஆசைமுகம், நேசம் மறக்காத நெஞ்சம், நினைவு முகம். அடுத்து

கண்ணில் தெரியும் ஒரு தோற்றம்
அதில் கண்ணன் அழகு முழுதில்லை.
நண்ணும் முகவடிவு --- அதில்
நல்ல மலர்ச் சிரிப்பு காணோம்

ஆனால் நேசம், உறவு மறக்காத உள்ளம் என்று வரும்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரே மாதிரிதான் விவரணைகள் இருக்கின்றன.

கடைசியில் ஒரு அடி

வண்ணப்படமும் இல்லை கண்டாய்
இனி வாழும் வழி என்ன?

இந்த இடத்தில்தான் நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளல் வேண்டும். இதைப் பாடியது யார்? பாரதி. பாடலில் வரும் வரிகள் யாருடைய வார்த்தைகளாக வருகின்றன? கண்ணனுடைய காதலி. அப்பொழுது பாரதி காதலியின் பாவத்தில் பாடும் பாடல் இது. எனவே பாரதியின் மனத்தில் நாயக நாயகி பாவத்தின் அடிப்படைகள் நன்கு படிந்துதான் இந்தப் பாடலைப் பாடுகிறார். இந்த இடத்தில் முக்கியமானது நாயக நாயகி பாவம். பாரதி கண்ணனின் காதலியாகத் தான் மாறிப் பாடுகிறாரே, யாரைப் பற்றிப் பாடுகிறாரோ அந்தக் கண்ணன் யார்? இது நம் விசாரத்தின் நாபியான அம்சம். அந்தக் கண்ணன் ஒரு மனிதன்தான், any man என்றால் பாடலில் பல இடங்கள் ஓட்டை. வைத்து அடைக்கவே முடியாது. காதலன் முகத்தை மறந்து போன பெண்ணின் காதல் என்பது சுயமுரண். ஒட்டவே ஒட்டாது. சரி கண்ணன் மனிதன் அன்று. பின் யார்? அப்பொழுது கண்ணன் யார் என்பதை நமக்கு ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் போன்ற புராணங்கள்தாம் சொல்லும். பாரதிக்கு முக்கியமாக ஆழ்வாரின் பாசுரங்கள், புராணங்களோடு சேர்த்து கண்ணனைப் பற்றித் தெரிவிக்கும் பனுவல்கள். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் கண்ணன் யார் என்ற நிச்சயம்தான் பாட்டில் கண்ணன் என்னென்ன செய்கிறார் செய்யவில்லை என்பதை நமக்கு விளக்கும். நாயகி கண்ணனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதும் அப்பொழுதுதான் நமக்குப் புலனாகும். பாரதி இவ்வளவும் யோசித்தா பாடியிருக்கப் போகிறார்? ஏதோ உணர்ச்சிகளில் பாடியிருப்பார். என்று சொன்னால் பாட்டு தொட்ட இடம் எல்லாம் முரண்பாடு ஆகும். எனவே இந்தப் பாட்டைப் பாடும் முன் பாரதியாருக்குப் பல விஷயங்கள் மனத்தில் ஓடியிருக்கின்றன என்பது நிச்சயம். நாயக நாயகி பாவம் பற்றிய இலக்கணங்கள். கண்ணன் பக்தி என்ற ஆன்மிகக் கோட்பாடு. கண்ணன் பரமாத்மா என்ற பக்தியும், புராண அறிவும். அதாவது உண்மையில் பாடல் மிக ஆழமானது. மேம்போக்கானது அன்று. அதற்கு என்று உரிய பின்புலங்களில் வைத்தேதான் பாடலை நாம் படிக்க வேண்டும். -- இந்த அக்கறையையும், உடன்படுதலையும் நம்மிடம் ஏற்படுத்துவது இந்த முன் தயாரிப்பான அறிவுதான். இப்பொழுது கவிதைக்குப் போவோம்.

ஆசைமுகம் என்பதை ஆசை + முகம் என்று பிரியுங்கள். ஆசையானது முகம் மறந்துவிட்டது. ஆசைக்கு ப்ரத்யக்ஷம் வேண்டும். ஆனால் புறவயமாகக் கைக்கு எட்டுபவனா கண்ணன்.? உள்ளத்தில் ஒளிரும் ஒளிமணிவண்ணன். ஆனால் ஒருகாலத்தில் கண்காண வந்த ப்ரத்யக்ஷம் போல் அத்தனை தீவிர பக்தியில் அவன் தோன்றினான். அது தூய மனத்தால் கண்ட காட்சி. புறக்கண்ணுக்கு புலப்படா மூர்த்தி. கண்ணன் நிலவுலகில் இருந்த போதும் எத்தனை பேர் அவனைக் கண்டனர்? மனிதன், இடையன், யதுகுலத்தான், நம்ம கிச்சினன் இப்படித்தான் அவனை மனிதரில் ஒன்றாகக் கண்டார்களே அன்றி, பூத உடல் எடுத்த பரந்தாமன் என்று ஞானக் கண்ணால் கண்டவர் மிகச்சிலரே. ஆனால் அவனைப் பற்றிய ஞானம் ஏற்பட ஏற்பட அவனைக் காண வேண்டும், தொட்டுப் பழக வேண்டும் என்று ஏக்கம் ஏற்படும். என்றோ பக்தி தீவிரத்தில் ஏற்பட்ட தரிசனம் மேலும் தாகத்தை அதிகரிக்கும். ஆசை முகம் மறந்து போச்சே என்று அலறும். ஆனால் நேசம் மட்டும் நெஞ்சம் மறக்காது. பெற்றாலும், இழந்தாலும் பரிதவிப்பு மாறாது. இருந்தாலும் ஒரு தடவையாவது கண்ணால் கண்டால்தானே நினைவில் நிறுத்தியாவது ஜீவிக்கலாம். தியானம் செய்தாவது மனத்தை அவனிடத்தில் நிறுத்த அவன் முக தரிசனம் வேண்டுமே.

சரி நாம்தான் அவனைக் காணாத ஏக்கத்தில் துடிக்கிறோம். அவனுக்கென்ன? பரம்பொருள். எத்தனை எத்தனையோ கோடி கோடி உயிர்களில் நான் ஒருத்தி, ஓர் அபலை எம்மாத்திரம்? அவனுக்கு நம்மை எங்கே நினைக்க நேரம்? நாம் அவனைப் பிரிந்து வருந்துவது போல் அவன் நம்மைப் பிரிந்து வருந்தவா போகிறான்?

அட! அதோ தோன்றுகிறதே அவன் தோற்றம்! அவன் மாதிரிதான் இருக்கிறது. இல்லை அவனாக இருக்காது. நாம் தான் அதீத எதிர்பார்ப்பு. இல்லை இல்லை அவன் தான் அவனேதான். இதோ அருகில் வந்து நண்ணி குனிகிறானே! ஐயோ! எங்கு போயிற்று அவன் அழகு? எங்கு போயிற்று அவன் சிரிப்பு? படுபாவி நான். என் வருத்தமே பெரிது என்று இருந்தேனே. ச அவன் எவ்வளவு பெரிய பரம்பொருள்! ஆனால் என்னைப் பார்க்காமல் அவனும் எவ்வளவு வருந்துகிறான்? நான் ஜீவன். கையாலாகாத் தன்மையால் அவனைக் காணும் பரிபக்குவம் இன்னும் பெறவில்லை. ஆனால் அவன் ஏன் வருந்த வேண்டும்? என்னை அவன் நினைத்தால் தன்னிடம் சேர்த்துக்கொள்ள முடியாதா? அவன் நினைத்தாலும் நாம் பரிபக்குவம் அடைந்த பின்னர்தானே அவனாலும் நம்மை அடைய முடியும். ஐயோ! என்ன பேதை நான்? என் அபக்குவத்தால் நான் இழந்து என்னை நையச் செய்வதுமின்றி அவனுடையவளான என்னை அவனுக்குக் கிடைக்காமல் ஆக்கி அவனையும் அல்லவா வருந்தச் செய்கிறேன்!

பிரஸன்ன வதனம் த்யாயேத் என்று இருக்கும் அவன் முகம், நண்ணு முகம் என் ஒருத்திக்காக அழகு மாறி, பெற்றதனால் பூரிக்கும் அந்த நல்ல சிரிப்பு மறைந்து,...அவனுக்குத்தான் என்ன ஸௌலப்யம்! ஒரு பிச்சைக் காரன் செல்வந்தனை நினைந்து ஏங்குவதா பெரிய விஷயம்? ஆனால் ஒரு செல்வப் பேரரசன் ஓர் ஏழையை நினைந்து வருந்துவான் என்றால் அந்த எளிமைக்குணம்! அதைவிடப் புகழ் என்ன இருக்கிறது? அவன் அகில அண்ட சராசரங்களுக்கும் நாதனாய் இருப்பினும் பல்லாயிரம் கோடானுகோடி ஜீவர்களில் ஒருத்தியான என் விஷயத்தையே தன் கவலையாய்க் கொண்டுள்ள அவன் மாயம், அவனுடைய ஆச்சரியமான தன்மை! அடடா! நான் தான் நேரம் கழித்து உணர்ந்திருக்கிறேன் போலும். வாயானது ஏற்கனவே அந்த மாயனுடைய நற்புகழைச் சதா சொல்லிய வண்ணமே உள்ளதே!

அடடா! ஏதேனும் மனம் புண்படும் வகையில் நினைத்துவிட்டேனா? ஏதேனும் பேசிவிட்டேனா? அவன் தோற்றம்? அவன் நண்ணு முக வடிவு? எங்கே? மீண்டும் மறைந்ததுவோ? கண்கள் செய்துவிட்ட பாவம் இது தோழி.! ஊனக்கண்ணுக்கு அவன் அகப்படான் என்பது இவை ஏதோ பாவம் செய்திருக்கின்றன அதுதான். என்னைப் போல் பெண்களில் பேதை யாராவது உண்டா? காதலித்தேன் யாரை? கண்ணுக்கு இலக்காகாத ஒருவரை. ஆனால் கற்பனை என்று கூற முடியாதே! வெறும் கற்பனையாக இருந்தால் என் நெஞ்சம் அவனை மறக்காமல் அவன உறவையே எப்படி நேசித்திருக்கும்? நிச்சயம் நான் கற்பனையைக் காதலித்தவள் இல்லை. இவர்தான் என் காதலன் என்று ஊரார் வாயடைக்கக் கொண்டு நிறுத்த முடியாத பரம்பொருளை அல்லவா காதலித்தேன். பிச்சி என்று உலகோர் கூறும் கூற்றை மறுக்கவியலாத பேதை!

அது மட்டுமா தோழி? எங்காவது தேனை மறந்து போன வண்டு பார்த்திருக்கிறாயா? சரி அதை விடு. ஒளிச் சிறப்பை மறந்திருக்கும் பூ? அதை வேண்டுமானால் சொல் ஒப்புக்கொள்கிறேன். ஒளிச்சிறப்பு பூவின் கூடப் பிறந்தது. பூ என்று ஒன்று இருந்தால் அதன் காந்தி என்பது கூடவே இருக்கும். அது போல் அவன் உறவை மறவாத நெஞ்சம், நேசம் மாறாத நெஞ்சம் அது ஒன்றுதான் எனக்கு உயிர்நாடி. வான் ஆகிய மழையை மறந்த பயிரைப் பார்த்திருக்கிறாயா? நான் தான் அது. அவன் நினைவு தான் வாடும் இந்தப் பயிர் வாழும் வகை. அந்த நினைவு முகமுமா மறக்கும்? ஏதோ இயல்பு மாறாத அவன்பாலதான காதல் நெஞ்சம் இதனால் என் உயிர் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறது.

ஒளிச்சிறப்பு மாறாத பூ நான். சரி நான் பூ என்றால் அந்தப் பூவின் தேன் நுகர வண்டாகிய அவன் வரத்தானே வேண்டும். தேனை மறந்திருக்கும் வண்டா அவன்? இல்லை. தான் வந்து நுகரும் தேன் என்னில் பரிபக்குவம் ஆகாத காரணமே அவன் வருந்தி எட்ட நின்று ரீங்காரமிட்டுத் திரிவது. என்ன பாக்யஹீனை நான்? பின்னர் அவன் அருள் மழை பொழியத் தயக்கம் ஏன்? நான் நினைத்தால்தான் அருள் என்று நிபந்தனையா? அப்படி நிபந்தனை இருந்திருந்தால் இவ்வளவு தூரம் நான் வந்திருக்க முடியாதே! இல்லை. சரியான பருவ காலம் பார்த்துப் பொழியக் காலம் நோக்கிக் கொண்டிருக்கிறான். அதுவரை எனக்கு வாழும் வழியே நேசம் மறக்காத நெஞ்சம். அதுதான். இருந்தாலும் நினைவுக்கு அவன் வன்ணப்படம் ஏதாவது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! எப்படி வண்ணப்படம் வரைவது? ஒரு கணம் அடைந்தது போல் இருக்கிறது. அடுத்த கணம் மறைந்து விடுகிறான். பின் எப்படி தத்ரூபமாகச் சித்திரம் தீட்டுவது? உள்ளத்தில் ஒழியாத உறவாய் நிலைத்தவன்பால் மாறாத நேசம். அதுதான் கதி.
வேறு என்ன வாழும் வழி சொல்வாய் தோழி?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment