பிறந்ததும் தாயின் கண்கள், தந்தையின் கண்கள் நம்மை விடாது நோக்கி நமக்கு வேண்டியவற்றை நாம் அழுதோ அழாமலோ செய்து ஆளாக்கின.
ஆனால் அது ஒரு காலம் வரையில். பின்னர் எங்கோ நாம். அவர்கள் எங்கோ. இதில் யார் இருக்கின்றார், யார் போனார் என்பதும் உண்டு. ஒரு வேளை போனவர்களை படத்தின் உருவில் நாம் நோக்கி நோக்கி ஆறுதல் அடைகிறோம். சிறு குழந்தையாய் நாம் நடை பயிலும் போது காக்கும் கரங்கள் பல நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் புடை சூழும். அப்பொழுதெல்லாம் இப்படியே இருக்கும் என்று இருந்துவிட்டோம். இல்லை வாழ்க்கை அப்படி இல்லை. மாறுகிறது. மறைகிறது மறக்கிறது.
மாறாமல் மறையாமல் மறக்காமல் ஒரு நிலை.! அப்படி நினைப்பதே வீண் வேலை என்று நம்மைச் சுதாரித்துக் கொள்கிறோம்.
சிறுவயதிலிருந்து கணக்கெடுத்தால் நாமே எத்தனை நான்கள் எழுந்து மறைந்து போனது ! ஏதோ அத்தனை நான்களிடையேயும் ஒரு தொடர்ச்சி உணர்வில் இருக்கக்கொண்டு இன்று ஒற்றைக் கணக்காய் எழுதிவிட முடிகிறது. அந்தத் தொடர்ச்சியான உணர்வும் இருந்திருக்கவில்லையெனில் நான் தன்னிலை ஒருமை இல்லை, தன்னிலையற்ற பன்மையாகப் போயிருக்கும். ஆனால் அந்த உணர்வைச் சற்று பொறுமையாக ஆராய்ந்தால் அது 'தான் இந்த தேக மயமான வாழ்வே இல்லை' என்றல்லவா சொல்லுகிறது ! அவ்வப்பொழுது 'தேகமே தான்' என்று பொய்க் கையெழுத்திடும் வேலைக்கு அலுத்தபடிதான் உணர்வு சலித்துக்கொள்கிறது. அந்த அவஸ்தை அதற்கு இல்லாமல் ஆக்கி அதன் கதையைக் கேட்டால் அது ஒரு வித்யாசமான கதை.
தன்னை அநாதி காலமாக ஒரு நகைமுகம் நோக்கியபடியே தொடர்வதாய்ச் சொல்லுகிறது. நகைமுகம் மட்டுமன்று; தோளும், ஆளும் விழியும், திருத்துழாய் மணக்கும் தாள்களும், கரமும், கரங்களில் சங்கும் சக்கரமும், கதையும், வில்லும், வாளும் தான் நடைபயிலும் போதெல்லாம் சுற்றிப் பாதுகாப்பாக வந்துகொண்டே இருக்கின்றன என்று சொல்கிறது உணர்வு. அந்த உணர்வின் குரல் கேட்க நாம் சற்று உள்ளே செல்ல வேண்டும்.
நாளும்
பெரியபெருமாள் அரங்கர்
நகைமுகமும்
தோளும்
தொடர்ந்தென்னை ஆளும் விழியும் துழாய்மணக்கும் தாளும்
கரமும் கரத்தில் சங்காழியும்
தண்டும் வில்லும் வாளும்
துணைவருமே
தமியேனை வளைந்துகொண்டே.
(திருவரங்கத்துமாலை)
***
No comments:
Post a Comment