கழறேல் நம்பீ!
உன் கைதவம்
மண்ணும் விண்ணும் நன்கறியும்
திண்சக்கர
நிழறு தொல்படையாய்!
உனக்கொன்றுணர்த்துவன் நான்
மழறு தேன்மொழியார்கள்
நின்னருள் சூடுவார்
மனம்வாடி நிற்க
எம் குழறு பூவையொடும்
கிளியோடும்
குழகேலே!
(திருவாய்மொழி 6. 2. 5)
வியாக்யானங்களில் இந்தப் பாட்டில் பொதிந்திருக்கும் நாடகப் பண்பை நன்கு காட்டும் விதமாக உரைவரைந்திருக்கிறார்கள். இந்தப் பாட்டின் வரிகளும், சொற்கோவைகளும் பெரும் பனிப்பாறையின் நுனி முகடுகள்தாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது பாட்டின் ஒவ்வொரு அர்த்தப் பகுதிகளும் தனித்தனி சொற்களாகவோ சொற்கோவைகளாகவோ இடைவிட்டு இடைவிட்டு இருக்கும். அந்த இடைவெளிகளில் எல்லாம் கனத்த மௌனம் குடிகொண்டிருக்கும்.
நம்பீ! கழறேல் --- நம்பி என்றால் பூரணன் என்று பொருள். குணங்களால் நிறைந்தவரை நம்பி என்பது குணவான் என்பது நம்பி. நீ எதில் நம்பி? பொய்யில் நம்பி. போதும் போதும் நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்.
---- நீங்கள் என்னைப் பற்றிய வெறுப்பில் இருக்கிறீர்கள். உங்கள் நெஞ்சு நிறைய வெறுப்பு இருக்கிற படியாலே நீங்கள் என்னைப் பொய்யன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எங்கே உங்களைத் தவிர ஒரு சாக்ஷி பொதுவானதாகக் காட்டுங்கள் பார்ப்போம்.
'உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும்'
ஊரே அறியும். அந்த விண்ணே அறியும், ஏன் இந்த மண்ணே அறியும் ஆயிற்றே! விண் என்ற விசேஷஜ்ஞர்களும், மண் என்ற அவிசேஷஜ்ஞர்களும் ஒக்க அறிவர். அதுவும் அசலை பசலையாய் அறியும் என்றா நினைத்தாய்? நன்கு அறியும்.
[சூத்ரதாரியின் வாக்கு (அதாவது வ்யாக்யானம் நாடகத்தின் இடையில் வந்து சொல்லும் விளக்கம்] --
இங்கே ஆழ்வார் விண்ணும் மண்ணும் தன்பக்கம் சாக்ஷி சொல்லும் என்று உறுதியாக இருக்கிறார்.
"வாயும் திரையுகளும்" என்ற பாசுரத்தில் ஏற்பட்ட மனத்தின் வாஸனையாலே உலகத்தில் உள்ள பதார்த்தங்கள் எல்லாம் அடையத் தம்மைப் போலவே பகவானைப் பிரிந்து நோவு படுகின்றன. எனவே தம்மை ஒத்துத் தமக்கு நோவில் கூட்டாளியாய் இருக்கும் ஒருவனுக்கே பரிந்து பேசும் என்று உறுதியாய் இருக்கிறார். சேஷி ஒருவனுடைய சேஷ வஸ்துக்கள் எல்லாம் ஒரு வகையைச் சேர்ந்தனவாய் இருக்குமன்றோ! ஆண்டான் ஒருவனுக்குப் பல அடிமைகள் என்றால் அந்த அடிமைகளிடத்தில் ஒன்று போல ஒற்றுமை இருக்கும் அன்றோ! ]
--- என்னது! விண்ணும் மண்ணுமா? ஓஹோ சரி அவ்வளவு வேண்டாம். அதில் ஒருவரைச் சொல்லுங்கள்.
--- சொல்கிறோம். சொல்கிறோம். அதுவும் உன் கைமேலேயே சொல்லச் சொல்கிறோம்.!
'திண் சக்கர'
---- மஹாபாரதப் போரிலே ஜயத்ரத வதத்தின் போது பகலை இரவாக்க வேண்டும் என்று நீ துணிய, உனக்கு முன்னாலே ஓம் பறைந்து கொண்டு உன் க்ருத்ரிமத்துக்குக் கூட்டாளியாய்ப் பெருநிலை நின்றானே உன் கையில் எப்பொழுதும் நீங்காமல் திண்ணியதாக இருக்கும் சக்கரத்தாழ்வான் அவனே என்றும் உன்னை விட்டகலா சாட்சியன்றோ! நிழறு தொல் படையல்லவா? ’கைகழலா நேமியான்’
-- தனக்குள்---- அடடா! கடைசியில் சாக்ஷி நம்முடைய பக்ஷத்திலேயே ஒருவராகப் போய்விட்டதே? அதுவும் கைகழலா நேமியான் என்றபடி சாக்ஷியை ஒளித்து வைக்கவும் முடியாதே! என்ன பதில் சொல்வது? எப்படி இவர்களின் ஊடலைத் தணித்து உள்புகுவது? வார்த்தையே பேசமுடியாமல் அடித்து விட்டார்களே!
---- என்னப்பா! பேச்சைக் காணும்? எங்கள் முன்னிலையில் வந்ததனால் உனக்குப் பேச்சு போயிற்று என்று அபக்யாதி எங்களுக்கு வேண்டாம்பா! வாயைத் திறந்து பேசு. ஆனால் உனக்கு ஒன்று சொல்லி விடுகிறோம் தெள்ளத் தெளிவாக.
----- அடடா! இத்தனை திட்டிய பின்பாவது உங்களுக்கு என் மேல் கரிசனம் பிறந்ததே எதையோ எனக்கு உணர்த்த வேண்டும் என்று.
எவ்வளவு இனிமையாக இருக்கிறது அது கேட்பதற்கே!
'மழறுதேன் மொழியார்கள்'
--- எங்கள் பேச்சா இனிமை என்கிறாய்? பார்த்துப்பா. யாருடைய பேச்சையோ நினைத்துக்கொண்டு எங்கள் பேச்சைப் புகழ்கிறாய் போலும். எங்கள் பேச்சின் சுவையற்ற தன்மையைக் கேட்டவுடன் உனக்கு இளந்தேன் போல், கலங்கிய தேன் போல் பேசும் அவர்களின் நினைவு வந்துவிட்டது போலும்.!
'நின்னருள் சூடுவார்' 'ஐயங்கள் நீங்கப் பெற்றே நிலை பெற்றவன் ஆனேன்' ஸ்திதோஸ்மி கத சந்தேஹ: என்று அவர்கள் சொல்லும் படி மாசுச: வருந்தாதீர் நானிருக்கிறேன் என்று நீ ஒரு வார்த்தை அருளிச் செய்ய அதையே தங்கள் தலையிலும், நெஞ்சிலும் சூடுவார்........
----- அவர்கள் நீங்களே அன்றோ!
---- இல்லையப்பா! நீ எங்களோடு வார்த்தையாடி இங்கே இருந்தால் அவர்கள் அறிந்துவைத்தால் க்ஷண மாத்திரப் பிரிவும் சகிக்க வொண்ணாமல் நோவுபடுவர்கள் அவர்கள் ஆயிற்று.
---- (தனக்குள்--- சரி சமாதானம் செய்வோம் என்றால் ஊடல்தான் பெரிதாகிக் கொண்டே போகிறது. என் செய்வது? சில பேர்களை ஆதரவோடு பிரியத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றால் அவர்களுடைய பொருட்கள் எதையாவது எடுத்து, அவர்களுக்கு பிடித்தவை எதையாவது நன்கு புகழ்ந்து, சீராட்டி பாராட்டினால்தான் அவர்கள் மனம் குளிரும்).--
இந்த பூவையும், கிளியும் பேசுகின்ற பேச்சு இருக்கிறதே அடடா என்ன இனிமை! உங்கள் பேச்சைவிட எனக்கு அவற்றின் பேச்சு என்றால் அவ்வளவு உயிர்!
'எம் குழறு'
---- அய்யோ அப்பா! நீ அந்தப் பூவையும், கிளியும் யாருடையன என்று நினைத்துப் புகழ்கிறாய்? அவை எங்களுடையனவாக்கும்! என்ன செய்வது? நாங்கள் எப்படியோ அப்படித்தான் எங்கள் புவையும் கிளியும். அவை உன்னுடையவர்களின் பூவை கிளிகளைப்போல நன்கு திருத்தமாகப் பேசத் தெரியாது. அவைகளும் எங்களைப்போல் ஏதோ ஸ்வபாவத்தால் பிதற்றுகின்றன. நீ ஏதோ அவை உன்னிடம் பேசுவதாய் நினைத்துக்கொள்ளாதே. அவ்வாறு நினைத்து நீ அவற்றோடு விளையாடாதே.
*
என்றோ தொடங்கி சதா ஸர்வ காலமும் கடவுள் நம்மை அடைய என்ன என்னவோ செய்து பார்க்கிறது. அந்தக் கடவுளின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஜீவன் என்னென்ன போக்குகளோ செய்து ஓடியவண்ணம் இருக்கிறது. சரி தானாக இந்த ஜீவன் தன்னை நோக்கித் திரும்பாதா என்று ஏங்கியபடியே மறைவில் தொடர்கிறது கடவுள். என்றோ ஒரு கணத்தில் இந்த ஜீவன் கடவுளை நோக்கித் திரும்பிவிடுகிறது. அப்ப்பபா! அந்தக் கணத்தில் ஜீவன் கொள்கின்ற ஊடல் இருக்கிறதே கடவுளிடம்!! ஏன் இத்துணை நாள் என்னை இப்படி அலைய விட்டாய்? ஏன் முன்னமே என்னை நீ ஆட்கொள்ளவில்லை? உன் அருள் எங்கே போயிற்று? என்னை இத்தனை காலம் உன்னை இழக்க வைத்தாயே? அவர்க்கு அருள் செய்தாய், இவர்க்கு கிருபை புரிந்தாய் ஆனால் என்னை மட்டும் ஆதரவின்றி அலையவிட்டாய். பாவம் கடவுள் என்ன செய்யும்? ஒரு பக்கம் தப்பித்துக்கொண்டு ஓடாமல் தன்னைத் துண்டு போட்டு கேட்காத குறையாய் ஜீவன் சண்டை போடுவது, அதுவும் தன்னை ஆட்கொள்ளாததற்காக, எல்லா கருணையின்மை, குற்றம் எல்லாம் கடவுளின் மேல் சாட்டி ஊடல் கொள்கிறது என்பது கடவுள் மகிழும் ஒன்றுதான் என்றாலும், இந்த ஊடலின் புதிர்! ஆரம்பத்தில் பகவத் விஷயத்தில் நாட்டமின்றித் திரியும் ஜீவன் ஜிக்ஞாஸையும், முமுக்ஷுத்வமும் ஏற்பட்டு, பக்தி பரிணமித்து, பரமபக்தியாய் முற்றி அப்பொழுது சென்ற நாட்களில் தன்னை ஏன் முன்னரே அருள் செய்யவில்லை என்று பிணங்கும் கட்டம்தான் எவ்வளவு மங்களமானது!
கழறேல் நம்பீ...!
***
No comments:
Post a Comment