Tuesday, January 7, 2020

பக்திரூபாபந்ந ஜ்ஞானம்

பார்வை பேச்சாகிறது. பேச்சு நினைவாகிறது. நினைவு இடைவிடாத தர்சனத்தை அவாவுகிறது. அவாவறச் சூழ் நிலை கிட்டாத போது அழிவு கூட ரசிக்கிறது. பிரிந்திருந்து ஒரு மாசம்தான் உயிர்செல்லும் என்று கெடு சொல்லும் உள்ளத்தின் நளினத்தை விட, பிரிந்து ஒரு க்ஷணம் உயிர் தரிக்க இயலாது என்று சொல்லும் ஆர்த்தி மேலெழுகிறது. எது ஞானம்? எது பக்தி? அப்படி ஓர் அழகு இருப்பது தெரிகிறதே அது ஞானமா? அல்லது பார்த்துப் பார்த்துப் பேசிப் பேசிப் பழகிப் பழகி ஈருடலுக்கு ஓருயிர் என்னும்படி ஆன நிலை அது ஞானமா?

பக்தி விருப்பம் என்றால் எங்கு அறிதல் முடிந்து விருப்பம் ஆரம்பம் ஆகிறது. இல்லை இந்த இரட்டைப் பார்வை நம் காட்சிக் கோளாறா ? ஒன்றாகக் காண்பதே காட்சி என்ற பாட்டி வைத்தியம் இங்கும் செல்லுபடியாகுமோ? சுட்டறிவும் சுண்ணாம்புமாக இருக்கும் உலக நடவடிக்கைகளில் உணர்ச்சிகளுக்கும் தகவல் அறிவுக்கும் வரப்புத் தகராறு எதுவும் ஏற்படுவதில்லை. கோடு பிரித்துக் கொள்முதல் ஆகிறது எல்லாம் சரியாக. ஆனால் தத்துவத்தில் இந்த வரப்புகள் பொருளற்றதாகின்றன.

'மண்ணிலே வேலி போடலாம் வானத்திலே வேலி போடலாமா' என்பது ஸ்ரீராமகிருஷ்ண வாணி. வேதாந்தம் கூறுகிறது, -- இச்சா க்ரியா எல்லாம் ஞான சிகீர்ஷா விசேஷங்கள் என்று. அதாவது எல்லாமே ஞானத்தின் வளர்நிலை படித்தரங்கள் என்று. இந்த நுட்பத்தைப் புரிந்துகொள்ளக் காமம் சார்ந்த உதாரணம் உதவும். காதல் புரிந்துகொள்ளும் நிலை என்பதா அல்லது உணர்ச்சியா? இரண்டையும் பிரித்துப் பார்க்கிறவனுக்கு முதலில் காதல் என்பதே விளங்காது. உதாரணம், உதாஹரிக்கப்படுவதற்குக் காட்டும் சுட்டு விரல்தானே ஒழிய அந்தப் புதுமையையே உதாரணம் நமக்கு வழங்குவதில்லை. அதாவது பக்தி ஞானத்துக்கு வழியா? ஞானம் வந்தபின் பக்தி இருக்குமா? என்னும் போது ஒன்றின் வளர்நிலையைத்தான் நாம் வேறுபடுத்திப் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவேதான் வேதாந்திகள் ஞானம் என்றால் பக்தியை விஞ்ஞானம் என்கிறார்கள். வெளிப்பொசிந்து பெருக்கெடுத்த ஞானம் பக்தி என்றபடி.

ஸ்ரீராமானுஜர் ஞானத்தினால்தான் மோக்ஷம் என்ற வேதாந்தக் கட்டளையை விளக்கி, எத்தகைய ஞானம் என்றால் 'பக்தி ரூப ஆபந்ந ஞானம்' பக்தியின் உருவை அடைந்துவிட்ட ஞானம். அதாவது நலம் வியந்துரைத்தல் என்பது மடலேறுவதில் சென்று மிக வேண்டும். ஸ்ரீகிருஷ்ணனும் கவனமாகத்தான் கூறுகிறான், 'ஞானத்தைத் தருகிறேன். முக்தியைத் தந்து விடுகிறேன். ஆனால் பக்தி..... என்றால் கொஞ்சம் வேறு வேலை இருக்கிறது. அப்புறம் பார்ப்போமே!' என்று சொல்லி விடுகிறான். ஸ்ரீராமகிருஷ்ணரின் வாக்கு: - ஞானம் என்பது பிரம்மத்தின் வாசல் திண்ணைவரை போகும். பக்தி பிரம்மத்தின் அந்தப்புரம் எல்லாம் போய் வளையவரும். வாசல், திண்ணை, அந்தப்புரம், வளையவருதல் எல்லாம் எனக்குப் புரிகிறது. ஆனால் இந்த பிரம்மம், ஞானம், பக்தி இங்கதான் கொஞ்சம் இழுபறி. உங்களுக்குப் புரிகிறதா? கொடுத்து வைத்தவரய்யா நீங்கள்!

***

No comments:

Post a Comment