ஒரே வேலை. ஓயாத அலுப்பு. சரி காத்தாட மேல் மாடியில் போய் உட்காருவோம் என்று மூன்று நான்கு பேர் டீ, சிகரெட் இத்யாதியுடன் ஆளுக்கொரு இருக்கையையும் எடுத்துக்கொண்டு போய் உட்கார்ந்தோம். கடற்கரை காற்று வரக் கொஞ்சம் தாமதம். வழியெல்லாம் பெரும் மாடங்கள். காற்று கொஞ்சம் கிழடு. கண் முன் தெரியாமல் கொஞ்சம் தட்டுத் தடுமாறிதான் வரவேண்டும். 'நேற்று நல்ல காற்று சார்' என்ற கழிவேங்கல்கள். தென்கிழக்கு திசையிலிருந்து ஜிவ்வென்று ஒரு குருவி. விடுவிடு சிவ சிவ விடுவிடு சிவசிவ என்று கத்திக்கொண்டே அமர்ந்ததுதான். வெகுநேரம் மௌனமாய் இருக்கிறது என்று சிறிது நேரத்திற்குப் பின்னர்தான் எங்களுக்கு உறைத்தது. தூங்கி விட்டதோ, உயிர் இருக்கிறதா என்ற பல எண்ணங்களும், பல கோணப் பார்வைகளும். அதற்குள் எங்கள் செல் குருவிகள் ஒலிக்க, அந்தாதியாகப் பேச்சு, அதுவந்து இல்லை சார், ஹஹ பிரமாதம் சார் அது சரிப்படாது சார், ஒரு கூறில்லையா? இப்படியாகக் கைக்கிளைப் பதில்கள். ஏதேதோ பேச்சுகள். கமண்ட்டுகள். பதில் கமண்டுகள் இரைச்சலில் முதலில் கவனிக்கவில்லை. பிறகுதான் உறைத்தது கமெண்டிகளில் ஒன்றாகக் குருவி. கேட்டுக்கொண்டிருந்த நாங்கள் ஷாக்கடித்தாற்போல் பார்த்தோம். 'குருவி பேசுது!!' என்ற திகைப்பூண்டுப் பார்வைகள்.
நீ யார்????
மரியாதை தெரியாத மனிதர்கள் பாவம்.
மன்னிக்கவும். சாரி நீங்கள் யார்?
பார்வை தெரியாதோ? குருவி.
இல்லை பேசுகிறீர் அதிசயம்! எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இல்லை நாங்கள்தான் ஓயாது உழைத்த அலுப்பில் ஏதாவது மூளை கிறக்கமா?
அஞ்சற்க. எனக்குப் பேச வரும். எழுத்து... குருவி கிறுக்கல்தான். பல கண்டங்களுக்குப் போய் வருவேன். பருந்தை விட நெடுந்தொலைவும், மனோ வேகத்தைவிட அதி விரைவாகவும் பறக்க முடியும். அது மட்டுமல்ல. உலகச் செய்திகள் மட்டுமன்று. பரம் அபரம் ஆகிய அனைத்தும் பற்றி ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.
அது என்ன பரம் அபரம்?
abstract concrete
ஓ ஆங்கிலமும் பழக்கமா?
எங்களுடைய ஆரம்ப ஆச்சரியம் ஒருவாறு அமைதிப்பட்டு ஆளுக்கு ஒரு கேள்வி கேட்பது, ஒவ்வொரு துறை பற்றி என்று முடிவு செய்தோம். அதற்குள் நடுவானத்தையும் பக்கத் திசைகளையும் ஏதோ உற்றுப் பார்த்து, அலகை அப்படியும் இப்படியும் அசைத்து ஏதோ அந்தரத்தில் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தது பராபரக் குருவி. கனைத்தோம் திரும்பினபாடில்லை. என்ன சொல்லிக் கூப்பிடுவது? ஏதாவது சொல்லி எக்குத்தப்பாய் பதிலடித்தது என்றால்... தயக்கம்தான். நல்லவேளையாக அதுவே திரும்பியது.
ஆமாம் நீங்கள் பேசுவது உங்கள் குருவி இனத்திற்குப் புரியுமா?
இல்லை. அர்த்தமாகாது. அநர்த்தமே விளையும். குருவி ஒலிச்சில் சங்கிலிதான் அங்கு செல்லுபடியாகும்.
ஒரே மாதிரி ஒலிக்கோவையில் என்ன சொல்லமுடியும்?
ஏன்? உங்கள் பழைய இனங்களிலேயே கயிறுகளில் முடிச்சிட்டு முடிச்சிட்டே பல தகவல்களை சேமித்து வைத்ததாக சரித்திரம் சொல்லுமே ! க்ய்விபு !
சரி இது வெறும் நெல் குத்திக் குருவி அன்று. வித்தியாசமானது என எங்களுக்கு சுவை கூடியது. இது அடிக்கடி வருமேயானால் பல விஷயங்களைக் கேட்கலாமே, நல்ல பயன் மிக்க அரட்டையாக இருக்குமே என்று தோன்றியது.
ம் செய்யலாம். ஆனால் எதுவும் நிச்சயமில்லை. நான் வரும் பொழுது கேட்டால் சொல்கிறேன். தெரிந்தால் பதில் இல்லையேல் மௌனம். வீண்கேள்விகளுக்கும், விவகாரமான கேள்விகளுக்கும் பதில் நிஷ்டை. நெல் சாகுபடியிலிருந்து நொபொகோவின் கலைநிறம் வரையில் தெரிந்தது குந்துமணியாய் இருந்தாலும் கொத்தி எடுத்ததுபோல் பதில் வரும். சீறு பாறு என்று சண்டை தொடங்கினால் அப்படியே 'விசுக்'. குருவித் தலையில் கோடிவேலை. சரி ஒரு அவசர வேலையாக இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து இறந்த காலத்தில் போகவேண்டும். பார்ப்போம்.
காலத்தில் பின்னோக்கியா? சரிதான்...
போகும் முன் ஒரு வார்த்தை?
கல்லும் கனியாகும்.
விளக்கம்?
கால்நடைகள் முதுகுரசும் கல்போல் மரபில் கிடந்து இறுகிப் போய்விட்ட நித்திய விஷயங்கள், சிந்தனையில் சூடு பிறக்க, உயிர்ப்பொருளாகிப் பயன் தரும் கனியாய்க் குலுங்கும்.
சொன்னதை மனத்தில் வாங்கும் நேரத்தில் பறந்து போய்விட்டது. இல்லை அந்தர்தானமாய் விட்டது. வரும் பொழுது பறந்துதான் வந்தது. போகும் பொழுது பறக்கக் காணோம். மறைந்து விடுகிறது. விரைவா? புதிரா? தெரியவில்லை. எங்கள் அலுப்பு பறக்க ஒரு நல்ல வாய்ப்பு. மற்றபடி குருவியே எதுவும் வராமல் கூட, மனப்பிரமையாய் இருக்கக் கூடும்.
இல்லை சார்! அது வரும்போது பார்த்தீகளா? தென்கிழக்கு மூலையிலிருந்து வந்தது. வாஸ்துபடி தென்கிழக்கு மூலை அக்கினி மூலை. எனவே வந்தது அக்கினிக் குஞ்சு!
சரி சரி வாஸ்துவோ? வாஸ்தவமோ? வரவர மொட்டை மாடி விவகாரம் ஆகும்போல் தெரிகிறது.
சின்ன வயசில் எங்கள் பாட்டி கூறுவாள். மொட்டைமாடியில் மாலை வேளையில் வானம் பார்க்க உட்காராதே என்று. கந்தருவர், கின்னரர், வித்தியாதரர் இதுகள் எல்லாம் போகுமாம். அப்படி போற போக்குல இந்த மாதிரி ஏதாவது பிட்டை போட்டுட்டு போயிடுமாம். அப்பறம் மனுசன் பிராந்து பிடிச்சு அலையணும்பாக. வாங்க கீள போயி ஒரு டீயடிச்சாத்தான் சரிப்படும்.
***
No comments:
Post a Comment