’உலகத்தினரே! சொல்வதைக் கேளுங்கள்.
பிறப்பு இறப்பு என்னும் ஏற்பட்ட நோய்க்கு மருந்து இதுவாம்.
யோகத்தில் வல்லுநர்களான யாக்ஞவல்கியர் போன்ற யோகிகளால் காட்டப்பட்டது.
உங்களுக்குள்ளே ஒரு ஜோதி இருக்கிறது;
ஒன்றானதும், அளவற்றதும், இறப்பைக் கடிவதும்
ஆன அதற்குப் பெயர் கிருஷ்ணன்;
அதை வாயால் குடியுங்கள்!
பரம ஔஷதம் ஆன அதைக் குடித்த பின்
உங்களுக்கு முடிவற்ற பெருநிலையை அளிக்கும்.’
ஹே லோகாச்ருணுத! ப்ரஸூதிமரண வ்யாதே:
சிகித்ஸாம் இமாம்
யோகஜ்ஞா: ஸமுதாஹரந்தி முநயோ யாம்
யாக்ஞவல்க்யாதய: |
அந்தர்ஜ்யோதி: அமேயம் ஏகம் அம்ருதம்
க்ருஷ்ணாக்யம் ஆபீயதாம்
தத்பீதம் பரமௌஷதம் விதநுதே நிர்வாணம் ஆத்யந்திகம் ||
*
ராஜா குலசேகரர் விடுத்த அறைகூவலுக்கு யாரேனும் என்னை மாதிரியான ஆட்கள் பதில் சொல்லியிருப்பார்களோ? ‘அதெல்லாம் நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை. மரணம் என்ற பிரச்சனை எங்களுக்கு இல்லை.’ என்று சொல்லியிருப்பார்களோ? ஆமாம் அப்படித்தானே நடந்து கொள்கிறோம். ஏதோ மரணம் என்று ஒன்று நமக்கெல்லாம் கிடையவே கிடையாது. அது வேற யாரோ சம்பந்தப்பட்ட விஷயம். அதிலும் சிலபேர் அடேயப்பா... மரணம் பற்றி ஏதாவது சொன்னால் போதும்.. என்ன இது அச்சான்னியமா!... ஸ்மசானம் என்றாலே ஏதோ வாழ்விற்கே சம்பந்தமில்லாத ஒன்று போல்.. இந்த ஜிகினா வாழ்க்கையே நிலையானது போல்... இப்படிப் பட்டவர்கள் அதிகம் அல்லவா உலகத்தில்! அவர்கள் யாரேனும் சொல்லியிருப்பார்களோ தெரியவில்லை. கடைசி காலத்தில் முடியாம போனபொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று. அதனால் போலும் மிகவும் கௌரவமாக உலகத்தினரே என்று கூப்பிட்ட மஹாராஜா பச்சை உண்மைக்கு வந்துவிட்டார். சரி எதையும் உடைச்சு சொன்னாத்தான் இவர்களுக்குப் புரியும் என்று. அடுத்த சுலோகம் ஹே மரிக்கின்றவர்களே! என்று ஆரம்பிக்கின்றார்.
ஏ மரிக்கின்ற இயல்புடைய மக்களே!
மிக உயர்ந்த பரம ஹிதத்தை உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள்.
நீங்கள் நன்றாக உட்புகுந்து நிலைபெற்று இருக்கின்றீர்களே இந்த ஸம்ஸாரம் என்னும் கொடுங்கடல்
ஆபத்தான ஊர்மிகள் பல நிறைந்தது.
பலவகையான ஞானங்கள் அதெல்லாம் இருக்கட்டும் விடுங்கள்.
நமோ நாராயணாய என்னும் மந்திரம் இதையே
உணர்வில் ஏற்றுங்கள் பிரணவத்துடன்
பிரணாமம் என்னும் நமஸ்காரத்தோடு செய்யுங்கள்.
யோசிக்காமல் உடனே ஆரம்பியுங்கள்.
ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ச்ருணுத
வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவம் ஆபத் ஊர்மி பஹுலம்
ஸம்யக் ப்ரவிச்யஸ்திதா: |
நாநாஜ்ஞானம் அபாஸ்ய சேதஸி
நமோநாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாம ஸஹிதம்
ப்ராவர்த்யத்வம் முஹு: ||
*
ச.. வாழ்க்கையே இப்படி மாறி அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று அவனருள் நினைவேயாக, அவன் அருளின் காப்பையே வேண்டித் தலைமேல் குவித்த கைகள்! உள்ளாழ்ந்த தியானத்தால் தலை சிறிதே சாய்ந்து, பக்தி ஆவேசத்தால் உடல் புளகாங்கிதம் அடைந்து மயிர்க்கூச்செறிந்து, வெள்ளமெனப் பொங்கும் பக்தியால் வாய் தழுதழுத்து நாகுளறி, அவன் திருவடித் தாமரைகளை இதயத்தில் தியானிப்பதில் ஆழ்ந்துபோய் கண்கள் பெருகும் கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தபடி... இப்படிப்பட்ட ஜீவிதத்தை எங்களுக்குக் கொடுப்பாய் ஸரஸீருஹாக்ஷ (தாமரைக்கண்ணனே) !
என்று குலசேகரர் வேண்டும் போது உலகியல் புத்தி உள்ளவர் உள்ளமும் அன்றோ குழைகிறது!
பத்தேந அஞ்ஜலிநா நதேந சிரஸா காத்ரை: ஸரோமோத்கமை:
கண்டேந ஸ்வரகத்கதேந நயநேந உத்கீத பாஷ்பாம்புநா |
நித்யம் த்வச்சரணாரவிந்த யுகள த்யாநாம்ருதாஸ்வாதிநாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்யதாம் ஜீவிதம் ||
*
பாவம்! கேட்டாத்தானே? என்ன செய்வார்? இதோ வந்துவிட்டேன் என்று போனவர்கள் போனவர்கள்தாம். நம்பர் போட்டுக் கூப்பிட்டால் யாரையோ விட்டு செல்லை எடுக்கச் சொல்கிறார்கள். இந்த செல்லுக்கு வ்யவஸ்தையே கிடையாது. எதைக் காதில் விழவேண்டாம் என்று நினைத்துச் சன்னமாகப் பேசுகிறார்களோ அதை ஒலிபெருக்கிச் சரியாக விழச்செய்யும். ‘நான் இல்லை. அப்புறம் பண்றேன்னு சொல்லு’ என்று அழுத்திச் சொல்லும் ரகசியம் நமக்குக் கேட்கிறது இங்கு செல்லில். பாவம்.. அங்கு செல்லெடுத்த நபரோ ‘என்ன என்ன ‘ என்று கேட்டு அவர் மானத்தை வாங்குகிறார். பேசாமல் வைத்துவிடுவதுதானே நாகரிகம் என்று இவர்தான் வைக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்வார்! பேசாமல் தமது நாவிடம் பேச ஆரம்பித்து விட்டார்.
ஓ என் நாவே! இருகையும் கூப்பி உன்னை இறைஞ்சித் தொழுகிறேன். பகவந் நாமங்களைச் சொல். ஆரம்பி. நிறுத்தாதே சொல்லிகொண்டே இரு. அத்தனை நாமங்களும் நாராயணனைச் சொல்கின்றன அல்லவா? அத்தனையின் தத்வம் அவனே அல்லவா? பரம தத்வம் அவனை விட்டால் என்ன இருக்கிறது நிஜம் என்று? ஸத்துக்களுக்கு அதைவிடத் தேன் ஒழுகும் பழங்கள்தாம் வேறு என்ன? உனக்குத்தான் பழங்கள் இனிய பழங்கள் என்றால் கொள்ளை ஆசை ஆயிற்றே! உண்டவண்ணம் இரு. உத்தமன் நாமங்களை!
தத்வம் ப்ருவாணாநி பரம்பரஸ்மாத்
மதுக்ஷரந்தீவ ஸதாம்பலாநி |
ப்ராவர்த்தய ப்ராஞ்ஜலிர் அஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோசராணி ||
(முகுந்த மாலை)
*
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங் கரணே - முடிவுநாள் வந்து முன்னிற்கும் போது இலக்கண சூத்திரம் காப்பாற்றாது. எனவே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்கிறார் பகவத்பாத ஸ்ரீஆதிசங்கரர். ஆனால் படிக்கும் இலக்கணத்திலேயே பகவத் விஷயத்தைக் குழைத்துக் கொடுக்கத் தெரிந்த அபூர்வ மருத்துவர்கள் அன்றோ நம் ஞானிகள்! பார்த்தார் ராஜா குலசேகரர். எல்லாருக்கும் ஆரம்ப இலக்கணம் படிக்க வேஎண்டும் என்ற அக்கறை இருக்கும். அதில் முக்கியமானது விபக்திகள் என்னும் வேற்றுமை வாய்ப்பாடு. அதிலேயே பகவத் சிந்தனையை ஊட்டிவிட்டால் பின்னர் பகவந் நாமம் சொல்லு என்று கேட்க வேண்டாம். கேட்டால் இறாய்க்கும். ஆனால் ஏய் வேற்றுமை வாய்ப்பாடு சொல்லு! என்றால் போதும். எல்லாம் நான் முந்தி நீ முந்தி என்று சொல்லும். காரியம் ஆயிற்று!
கிருஷ்ணன் காப்பு
அவனே மூவுலகுக்கும் குருவாம். (முதல் வேற்றுமை)
கிருஷ்ணனை நான் வணங்குகிறேன். (இரண்டு)
கிருஷ்ணனால் அமரர்களின் பகைகள் ஒழிந்தன. (மூன்று)
அத்தகைய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம் (நான்கு)
கிருஷ்ணனிடமிருந்து இவ்வுலகம் நன்கு எழுந்தது. (ஐந்து)
கிருஷ்ணனுடைய தாஸன் நான் (ஆறு)
கிருஷ்ணனிடத்தில் இந்த அனைத்து உலகும் நிலைபெறுகிறது. (ஏழு)
ஹே கிருஷ்ணா! என்னைக் காப்பாற்று. (எட்டு)
ஒன்றாம் வேற்றுமை - பெயர்; இரண்டாம் வேற்றுமை - ஐ உருபு; மூன்றாம் வேற்றுமை - ஆல் உருபு; நான்காம் வேற்றுமை - கு உருபு; ஐந்தாம் வேற்றுமை - இருந்து உருபு; ஆறாம் வேற்றுமை - உடைய உருபு; ஏழாம் வேற்றுமை - இல் உருபு; எட்டாம் வேற்றுமை - விளி வேற்றுமை, ஸம்போதனம் கூப்பிடுதல்.
க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜகத்ரயகுரு:
க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருஷ்ணேந அமரசத்ரவோ விநிஹதா:
க்ருஷ்ணாய தஸ்மை நம: |
க்ருஷ்ணாதேவ ஸமுத்திதம் ஜகதிதம்
க்ருஷ்ணஸ்ய தாஸோSஸ்ம்யஹம்
க்ருஷ்ணே திஷ்டதி ஸர்வமேததகிலம்
ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம் ||
(க்ருஷ்ண: - முதல்; க்ருஷ்ணம் - இரண்டு; க்ருஷ்ணேந - மூன்று; க்ருஷ்ணாய - நான்கு; க்ருஷ்ணாத் - ஐந்து; க்ருஷ்ணஸ்ய - ஆறு; க்ருஷ்ணே - ஏழு; ஹே க்ருஷ்ண - எட்டு வேற்றுமைகள்)
*
ஹே அநந்தா! வைகுண்டா! முகுந்தா! கிருஷ்ணா! கோவிந்தா! தாமோதரா! மாதவா! இப்படிக் கூப்பிடத் தெரியாதோ? நம்ம ஆட்கள் எவ்வளவு கெட்டி! அந்து, வைகு, முகு, கிட்டு, கோவி, தாமு, மாது இப்படிச் சுருக்கித்தான் கூப்பிடுவோமே அன்றி நம் நண்பர்களின் பெயரையே ஒழுங்காக உச்சரிப்போமா? அப்பறம்தானே பகவந் நாமம் சொல்றது.
திருமாலையில் ’மருவிய பெரியகோயில் மதிள் திருவரங்கம் என்னா கருவிலே திருவிலாதீர்’ என்று சொல்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். அதற்கு வியாக்கியானம் அருளும் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அவர்கள் சொல்லும் ஒரு நகைக்குறிப்பு ஆழ்ந்த பொருளுடையது. கடைசி காலம். ஒரு பெரியவர் படுத்திருக்கிறார். அவருடைய நண்பர் வந்து அவரிடம் பார்த்து பேசிப் பின்னர் மெதுவாக திரு எட்டெழுத்து ஆகிய நாராயண மந்திரம் சொல்லுப்பா, சொல்லுப்பா என்றாராம். அவரோ மிகவும் சிரமப்பட்டு தன் பலத்தையெல்லாம் திரட்டி மீண்டும் மீண்டும் ‘ஆகட்டும்சொல்லிப்பார்க்கிறேன்’ என்ற இந்த எட்டு எழுத்துக்களையே பதிலாகத் திருப்பித் திருப்பிச் சொன்னாரே அன்றி திருஎட்டுஎழுத்தைச் சொல்லவே இல்லையாம். இரண்டும் எட்டெழுத்துதான். பிரயாசையும் ஒன்றுபோலத்தான். சொல்வதுதான் சொல்வோம் அஷ்டாக்ஷரியைச் சொல்வோம் என்று தோன்றாதோ?
ஆத்ம ஞானம் ரொம்ப கஷ்டமோ என்று கேட்டார்கள் போலும்! அப்பளப்பாட்டில் வைத்து ஸ்ரீரமணர் பாடுகிறார். ‘ஐயே அதிசுலபம். ஆத்ம வித்தை ஐயே அதிசுலபம்’
ராஜா குலசேகரரின் வருத்தமும் இதுதான் -
’அநந்தா வைகுண்டா முகுந்தா கிருஷ்ணா
கோவிந்தா தாமோதரா மாதவா என்றே
சொல்ல முடிந்தாலும் அந்தோ யாரும் சொல்லுவதில்லையே
ஜனங்களுக்கோ துயரத்தின் வழியில்தான் நாட்டம்.’
அநந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி|
வக்தும் ஸமர்த்தோSபி ந வக்தி கச்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸனாபிமுக்யம் ||
*
அரும் பெரும் சுலோகம் இது. நித்யம் அநுசந்தானமாகவே பெரியோர் ஆக்கிவைத்தனர். சதா சிந்தனையிலும் ஒலிக்க வேண்டிய செய்யுள் இதுவாகும். இதுவும் ராஜா குலசேகரரின் முகுந்த மாலை:
உடலால் என்ன செய்கிறேனோ
வாக்கால் என்ன சொல்கிறேனோ
மனத்தால் என்ன நினைக்கிறேனோ
இந்திரியங்களால் என்ன செய்கிறேனோ
புத்தியால் ஜீவனாக என்ன செய்கிறேனோ
அல்லது பிரகிருதியால் ஸ்வபாவத்தில் என்ன நடக்கிறதோ
செய்வது என்ன என்னவோ அனைத்தையும்
பரம்பொருளாம் நாராயணனுக்கே என்று
ஸமர்ப்பிக்கின்றேன்.
காயேந வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
*
என்ன பிரயாணம் கிளம்பியாச்சா? ஒரே பேக்கிங் நடக்கிரது போல இருக்கே? ஆமாம். இது.. இது வேண்டாம் என்று பார்க்கிறேன். ஏனெனில் அவ்வளவு தூரம் தாங்காது. இது வேண்டாம். எடுத்துக்கொண்டு போக முடியாது. இதை அங்க விடமாட்டான். இது பரவாயில்லை. ஆனால் மெரிடியன் கிராஸ்,பகல் இரவு மாறும் போது இது என்னமோ தாங்கறது இல்லை. எல்லாம் சேர்த்து இவ்வளவுதான் பாரம் இருக்கணும். அதுக்கு மேல அலௌடு கிடையாது.
இங்க ஒரே உருண்டையில் இந்தக் கிண்ணி மேலிருந்து அந்தக் கிண்ணி மேலுக்குப் போவதற்கு இவ்வளவு கூத்து!
நீங்க ஃபாரினுக்குப் போய்ப் பாருங்கோ. இந்த அவஸ்தையெல்லாம் அப்பதான் தெரியும்.
அது தெரியாது. ஆனால் ஒரு ஃபாரினுக்குப் போவதற்கான தயாரிப்பு என்னவென்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கும் இந்தத் தொல்லையெல்லாம் உண்டு. ஆனால் லக்கேஜ் ஒன்றே ஒன்றுதான். அது இருந்தா ஒரு கஷ்டமும் இல்லை.
யாரிடமும் கெஞ்ச வேண்டியதில்லை.
விலைக்கு வாங்க வேண்டியதில்லை.
நேரம் கடந்தால் கெட்டுவிடுமோ என்ற பயம் இல்லை.
இதைச் சமைக்கக் கூட வேண்டாம்.
பயன்படுத்தினால் இருக்கிற இருப்பு குறையவும் செய்யாது.
சுமக்கும் பாரம் கஷ்டமும் இல்லை.
என் பயணத்தில் பாதேயம் இருக்கவே இருக்கிறது
ஸ்ரீகிருஷ்ண நாம அம்ருதம் என்னும் கட்டுச்சோறு பாக்கியம்.
அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம்
அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |
அஸ்த்யேவ பாதேயமித; ப்ரயாணே
ஸ்ரீக்ருஷ்ணநாமாம்ருத பாகதேயம் ||
(முகுந்த மாலை)
*
No comments:
Post a Comment